வெள்ளி, 28 டிசம்பர், 2018

யந்திரங்கள் (1)

14.12.1930-  குடிஅரசிலிருந்து... மனித வர்க்கத்திற்கு யந்திரங்கள் விரோதி என்று நாம் கருதியிருந்த காலமும் அந்தப்படியே யந்திரங் களை எல்லாம் பிசாசு என்று பிரச்சாரம்  செய்த காலமும் உண்டு. மனிதனின் இயற்கை முற் போக்கினு டையவும், அறிவு ஆராய்ச்சி வளர்ச்சியினுடையவும், தத்துவத்தை அறிந்த பிறகும் அவ்வளர்ச்சியை மேலும் மேலும் விரும்புகின்ற நிலையிலும் மக்களின் சரீர கஷ்டத்தை உணர்ந்து அதை குறைக்க  வேண்டும் என்கின்ற ஆசையில் முயற்சி கொண்ட போதும் எந்த மனிதனும் யந்தி ரத்தை வெறுக்க முடியவே முடியாது. அன்றியும் வரவேற்றே ஆக வேண்டும்.

ஏன் என்றால் மனித அறிவின் சுபாவ அனுபவத் தைக் கொண்டும் ஆராய்ச்சியைக் கொண்டும் நாளுக்கு நாள் சுருக்க வழியை கண்டுபிடிப்பதே இயற் கையாகும். அது மாத்திரமல்லாமல் சரீரப் பிரயா சையைக் குறைத்துக் கொள்ள ஆசைப் படுவதும் இயற்கையாகும். இந்த இரண்டு சுபாவ குணங்களும் யந்திரங்களைக் கண்டு பிடித்து கையாடித்தான் தீரும். ஆகவே அறிவும், ஆராய்ச் சியும் இல்லாத இடங்களில் தான் இயந்திரங்கள் அருமையாய் இருப்பதும் அலட் சியமாய் கருதுவதுமாய் இருக்குமே தவிர மற்ற இடங் களில் அதாவது அறிவு ஆராய்ச்சி முன்னேற்றமுள்ள இடங்களில் யந்திரத்தாண்டவமே அதிகமாயிருக்கும்.

வியாச ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டதாகிய மனித வர்க்கத்திற்கு யந்திரங்கள் விரோதி; யந்தி ரங்கள் பிசாசு என்று நாம் கருதியதாக குறிப்பிட்ட தானது அறிவும் ஆராய்ச்சியும் கூடாது என்கின்ற எண்ணத்தின் மீதோ இயற்கையோடு போராட வேண்டுமென்றோ அல்லது மனிதன் சரீரத்தால் கஷ்டப்பட்டு, இம்சைப்பட்டுதான் ஆகவேண்டும் என்றோ கருதியல்ல. ஆனால்  மற்றெதைக் கருதி அவ்வபிப்பிராயம் கொண்டோம் என்றால் யந்தி ரங்கள் பலபேர், பலநாள் செய்யும் காரியத்தை வெகு சிலபேர் சில நாளில் செய்து விட்டால் மற்ற ஆள்களுக்கும் மற்ற நாள்களுக்கும் ஜீவனத்திற்கு கூலிக்கு மார்க்கம் எங்கே? அதன் மூலமாய் ஏற்படும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு என்ன சமா தானம்? என்று சொன்னவர்களின் வார்த்தைகளை நம்பினதாலேயே தவிர வேறில்லை.

இந்தப்படியே இன்றும் இன்னும் அநேகர் நினைத்துக் கொண்டும், நம்பிக் கொண்டும் யந்திரங் களை ஆட்சேபித்து வெறுத்துப் பேசிக் கொண்டு மிருக்கின்றார்கள். ஆனால் இந்தப்படி எண்ணிக் கொண்டிருந்த நாம் அந்தக் காலத்திலும், இந்தப்படி இப்பொழுது எண்ணிக் கொண்டிருக்கின்ற அநேகர் இப்போதும் தங்கள் தங்களைப் பொறுத்தவரை தங்கள் தங்கள் காரியத்திற்கு மனித சரீர வேலை யை விட யந்திர வேலையையே விரும்பி அதை உபயோ கித்தே தான் வந்தோம். வந்தார்கள், வருகிறார்கள்.

உதாரணமாக, கால்கள் இருக்க கட்டை வண்டிகள் இருக்க (கட்டை வண்டியும் இயந்திரம் தான் இருந் தாலும்) இயந்திரத்தின் மூலமாகத் தான் அதாவது ரயிலில் பிரயாணம் செய்தோம். யந்திர மூலமாய்தான் மோட்டாரில் பிரயாணம் செய்தோம். யந்திர மூல மாய்த் தான் கப்பலிலும் பிரயாணம் செய்தோம். யந்திர மூலமாகவேதான் ஆகாயக் கப்பலிலும் பிரயாணம் செய்தோம். அதையே எல்லா மக்களுடைய போக்குவரத்து சாதனமாக ஆக்கவும் ஆசைப் படுகின்றோம். மற்றவர்களும் ஆசைப்படுகின்றார்கள். ஆகவே  இதை மனிதத் தன்மையுடன் கூடிய குற்றமற்ற இயற்கை உணர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர இது எவ்வித குற்றமுள்ளதும் அநியாயமானதும் என்று சொல்லி இதற்காக யாரையும் கண்டிக்கவும் முடியாது. ஜீவ சுபாவமே ஆசையின் உருவமாகும்.

ஆகவே யந்திரம் வேண்டாம் என்பது இயற்கை யோடும் முற்போக் கோடும் போராடும் ஒரு அறிவீனமான - பிற்போக்கான வேலையாகுமே தவிர மற்றபடி பயனுள்ள வேலையாகாது. உதாரணமாக 10 மூட்டைகளை ஒரு வண்டியில் ஏற்றி முன்னே நான்கு பேர் இழுத்துக் கொண்டும் பின்னே நான்கு பேர் தள்ளிக் கொண்டும் உடல் வேர்க்க நெஞ்சொடிய மணிக்கு மூன்று மைல் தள்ளாடித் தள்ளாடி இழுத்துக் கொண்டு போவதும், அதே மாதிரியான 25 மூட்டை களை ஒரு மோட்டார் லாரியில் ஏற்றி ஒரு மனிதன் நோகாமல் நாற்காலியில் உட்கார்ந்து இருப்பதுபோல் உட்கார்ந்து கொண்டு சுக்கானை மாத்திரம் பிடித்துத் திருப்பிக் கொண்டு மணிக்கு 25 மைல் போவதுமான இரண்டு வேலைகளையும் எடுத்துக் கொண்டால் இவற்றுள் சுயமரியாதைக்கு, ஜீவகாருண்யத்திற்கு - மனித சமுகத்திற்கு - முற்போக்கிற்கு மற்ற ஜீவன்களை விட மனிதனுக்குப் பகுத்தறிவு என்பதாக ஒரு குணம் அதிகமாக உண்டு என்கின்ற உயர் குணத்திற்கு எது ஏற்றது என்று கேட்கின்றோம்.

தொடரும்...

- விடுதலை நாளேடு, 28.12.18

மதங்கள் எல்லாம் செத்துப்போனவைகளே! (2)

கிருஷ்ணன், அர்ஜுனன் சம்பாஷணை


- சித்திரபுத்திரன் -


21-12-1930 - குடிஅரசிலிருந்து....

அர்ஜுனன் : சரி, இந்த சந்தேகமும் ஒருவாறு விளங்கிற்று. இன்னமும் ஒரு சந்தேகம் இருக்கின்றது. அதை இப்போது விளக்குகின்றாயா?

கிருஷ்ணன் : என்ன அது, சொல்லு பார்ப்போம்.

அர்ஜுனன் : அதாவது புராணங்களில் அக்கிரமமான, வஞ்சகமான, புரட்டான காரியங்கள் செய்ய வேண்டிய பொழுதெல்லாம் கடவுள் பார்ப்பன வடிவமாகவே வந்ததாக காணப்படுகின்றதே, இதன் தத்துவமென்ன?

கிருஷ்ணன்: இந்த மாதிரி காரியங்கள் செய்வதற்கு அவனே (பார்ப்பனனே) தகுந்தவன் என்பதும், அது அவன் சுபாவம் என்பதும், அப்படிச் செய்வதினால் வேறு எவ்விதமான பாவமோ, நரகமோ ஏற்படுமென்று எழுதி இருக்கும் சாத்திரங்கள் எல்லாம் பொய் புரட்டு சுயநலத்திற்காக எழுதப்பட்டவை என்பதை அவன் தெரிந்தவன் என்றும், இப்போதும் யாருக்காவது இந்த மாதிரி அக்கிரமமான காரியங்கள் செய்து ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் அவற்றிற்குப் பார்ப்பனர்களே தகுந்தவர்கள் என்றும் அவர்கள் எவ்வித பாதகமான, அவமானமான காரியங்களையும் செய்யப் பயப்பட மாட்டார்கள் என்றும், அவற்றில் கைதேர்ந்தவர்கள் என்றும் காட்டுவதற்காகவே அந்தப்படி எழுதப்பட்டதாகும். இதை அறிந்தே அநேக புராண மரியாதைக்காரர்கள் இப்படி காரியங்கள் செய்வதற்காக பார்ப்பனர்களைத் தங்கள் காரியதராகவோ, மற்ற காரியங்களுக்குப் பொறுப்பாளிகளாகவோ வைத்துக் கொண்டும் இருக்கின்றார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொள்ள சக்தி இல்லாதவர்கள் சிநேகிதர் களாகவாவது வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கவனித்துப்பார்த்தால் இது நன்றாய் விளங்கும்.

அர்ஜுனன் : இன்னம் ஒரு சந்தேகம்

கிருஷ்ணன் : என்ன சொல்லு.

அர்ஜுனன் :  கடவுளைப் படைத்தார்களல்லவா மனிதர்கள்.

கிரு : ஆம்!

அர்ஜுனன் : அப்படிப் படைத்தவர்கள் கடவுள் மனிதனுக்குள் இருப்பதாகவோ அல்லது மனிதனுக்குள் இருக்கும்படியாக ஆவாகனம், கும்பாபிஷேகம் முதலியவைகள் செய்து மனிதனுக்குக் கொடுப்பதும், மனிதனுக்குச் செய்வதும், கடவுளுக்குச் செய்தது, கடவுளுக்குக் கொடுத்தது என்று கருதும்படி செய்யாமல் கல்லுக்குள் கடவுளை ஆவாகனம் செய்து, அதற்குக் கும்பாபிஷேகம் செய்து கல்லைக் கும்பிடும்படி ஏன் செய்தார்கள்?

கிரு: அதன் இரகசியம் என்னவென்றால் மனிதனுக்குள் கடவுளை ஆவா கனம் செய்தால் நைவேத்தியம் செய்யும் சாமானையெல்லாம் மனிதன் சாப் பிட்டுவிடுவான்; அணிந்து கொள்வான். அப்புறம் நடுவில் இருப்பவனுக்கு ஒன்றும் கிடைக்காமல் போய்விடும். ஆதலால் தான் கல்லிலும், செம்பிலும் ஆவாகனம் செய்து அதற்கு தனக்கு வேண்டியதை யெல்லாம் நைவேத்தியம் செய்யச்செய்து தான் எடுத்துக் கொள்வது. ஆகவே இந்த மாதிரி செய்ய வேண்டியது குறுக்கே இருப்பவர்களுக்கு அதாவது பூசாரிகளுக்கு அவசிய மாயிற்று அந்த பூசாரிகளுக்கே இந்த மாதிரி கடவுளை உண்டாக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது. ஆகவே பூசாரி ஆதிக்கம் குறைந்தால் கடவுள்கள் உற்பத்தியும் குறைந்து விடும். கடவுள் மஹிமைகளும் ஒழிந்து விடும்.

அர்ஜுனன் : சரி இவைகள் எல்லாம் எனக்கு ஒரு மாதிரி விளக்க மாயிற்று. இன்னும் சில விஷயங்கள் தெரிய வேண்டியிருக்கின்றன. ஆனால் அவை களை சாவகாசமாய் பேசுவோம்.

கிரு: சரி

இவர்களில் யார் பதிவிரதைகள்?


1. சீதா, புருஷன் பந்தோபதினால் வேறு புருஷன் சாவகாசம் செய்ய முடியவில்லை.

2. மீனாட்சி, புருஷன் உதைத்து விடுவானே என்று உதைக்குப் பயந்து சோரம் செய்ய வில்லை.

3. நாமகிரி ஜனங்கள் கேவலமாய் பேசுவார்களே என்று மானத்திற்குப் பயந்து வேறு புருஷனை இச்சிக்கவில்லை.

4. இரஞ்சிதம், தன் மனதிற்குப் பிடித்த கணவன் கிடைக்கவில்லை என்று கருதி யாருக்கும் இணங்கவில்லை.

5. சரஸ்வதி, மேல் லோகத்தில் செக்கில் போட்டு ஆட்டுவாரென்ற கஷ்டத்திற்குப் பயந்து யாருக்கும் இணங்கவில்லை.

6. மேனகை, தான் கேட்டளவு பணம் கொடுக்கவில்லை என்று கருதி யாருக்கும் சம்மதிக்கவில்லை.

7. கோகிலா தன் காதலனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு விரோதமே என்று கருதி வேறு யாருக்கும் ஒப்பவில்லை. இவர்களில் யார் பதிவிரதைகள்.

- விடுதலை நாளேடு, 28.12.18

இணையத்தைக் கலக்கும் பெரியார் பற்றிய பதிவுகள்

#நக்கீரன்

நேற்று திருச்சியில் நடைபெற்ற கருஞ்சட்டைப் பேரணி, இன்று பெரியார் நினைவு தினம் ஆகியவற்றை முன்னிட்டு நேற்றும், இன்றும் பெரியார் பற்றிய பதிவுகள் ட்விட்டரில் ட்ரென்டிங்கில் உள்ளன. ட்விட்டரில் மட்டுமில்லை. பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பெரியார் பற்றிய பதிவுகள் தெறிக்க விடப்படுகின்றன.

பொதுவாக சினிமா, விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகியவை மட்டுமே அதிகமாக ட்ரென்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும். #தோனியின் 14 வருடங்கள், #விஸ்வாசம், #பேட்ட ஆகியவற்றிற்கு மத்தியில் #பெரியார் ஹேஸ்டேக் நேற்று அதிகமாக பேசப்பட்டது. 16,000-க்கும் மேற்பட்ட ட்விட்கள், 13,300+ ரீ - ட்விட்கள் என இரண்டு நாட்களாக இணையதளங்களை ஆக்கிரமித்து வருகின்றது. பெரியார் ஹேஸ்டேக்குகள். பெரியார் பற்றிய ட்விட்டர் உரையாடல்களில் பங்குபெற்றோரில் 15% பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

92% பெரியார் பற்றிய பதிவுகள் இந்தியாவில் உள்ள நபர்களால் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 8% பதிவுகள் வெளிநாட்டில் இருந்து ட்விட் செய்யப்பட்டது என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. மொத்த பதிவுகளில் 38% பதிவுகள் சென்னையில் இருந்து போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. 9% கோயம்புத்தூரில் இருந்து போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. பதிவுகளில் 70% தமிழிலும், 30% ஆங்கிலத்திலும் உள்ளன. #PeriyarRally, #Periyar, #periyarkutthu, #trichy, #பெரியார் போன்ற ஹேஸ்டேக்குகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

’கடவுள் மறுப்பாளர்கள் எல்லோருமே ரொம்ப மனிதாபிமான மிக்கவர்களாக இருப்பார்கள், ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு பெரியார், ஒருவருடைய வாழ்க்கை சரித்திரம் முடிந்த பிறகும் அவருடைய மறைவு பாசிசத்தை நடுங்க வைக்கும் என்றால்... அவர்தான் தந்தை பெரியார்...’ ஆகிய பதிவுகள் அதிகமாக மேற்கோள்களாக ட்விட்டரில் உள்ளன.

“பெண் ஏன் அடிமையானாள்” என்ற நூலை சுமார் 90 வருடங்களுக்கு முன்பு பெரியார் எழுதினார். பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் அவரின் நினைவு நாளான டிசம்பர் 24-க்குள் ஒரு லட்சம் பிரதிகளை விற்க வேண்டும் என்ற இலக்குடன் செப்டம்பரில் களமிறங்கியது நன்செய் பதிப்பகம். கிட்டத்தட்ட 100 நாட்களில் பதிப்பகம் இந்த இலக்கை அடைந்தது. “லட்சியப் பெரியார் லட்சம் கைகளில்” என்ற தனது இலட்சியத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த நூலைப் பத்து ரூபாய்க்குப் பதிப்பித்தது நன்செய் பதிப்பகம்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், இன்றைய இளம் தலைமுறையினர்கள் மத்தியில் கொண்டுசேர்ப்பதை முதன்மையாகக் கருதி தொடங்கிய இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது பதிப்பகம். இன்னும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், சில வன்முறைகள் முற்றிலுமாக ஒழியாத நிலையில் இந்த புத்தகம் இன்றைய தலைமுறை பெண்களுக்கு அவசியமாக தேவைப்படுகிறது. 90 வருடங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அவருடைய கொள்கைகள் இன்றும், இன்றைய    தலைமுறையால் போற்றப்படுகின்றன. அவர் பெயர் மற்றும் கொள்கைகள் இன்றி அரசியல் செய்ய முடியாது என்ற நிலை நிலவுகிறது என்பதே உண்மை.

திருச்சியில் ஒருபுறம் கி.வீரமணி, திருமுருகன் காந்தி, விடுதலை ராஜேந்திரன், கொளத்தூர் மணி, கோபி நயினார் போன்ற முக்கிய பிரமுகர்கள்; மறுபுறம் தமிழ்நாடு மாநிலமே திரும்பி பார்க்கும் அளவிற்கு, பேரணியில் இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர்கள். இந்த பேரணியும், இணையத்தை கலக்கிய பெரியார் பதிவுகளும் ஒன்றை தெளிவாக தெரிவிக்கின்றன. இந்த தலைமுறையிலும் பெரியாரும், அவருடைய கொள்கைகளும் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைக்  காட்டுகின்றன.

Source link:👇🏿
https://nakkheeran.in/special-articles/special-article/periyar

வியாழன், 27 டிசம்பர், 2018

கடவுளின் நடவடிக்கை



 


19.10.1930-  குடிஅரசிலிருந்து...

உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதில் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் ஒரு சர்வசக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரால் தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு) கின்றது என்று சொல்லப்படுமானால் அவரை நடுநிலை யுடையவரென்று சொல்லுவதைவிட பாரபட்ச முடையவரென்று சொல்வதற்கே மிக மிக இடமிருக் கின்றன.

அவரை கருணையுடையவரென்று  சொல்லு வதைவிட கருணையற்ற வரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரதியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே  தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன.

அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட அவரால் அதிக தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது.

அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜுவு இருக்கின்றது.

(அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்ட வரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந் தங்கள் பல இருக்கின்றன.

அவர் ஜீவன்களுக்கு நன்மையை செய்கின்றா ரென்பதைவிட தீமையைச் செய்கின்றார் என்ப தற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன.

அவரால் நன்மையடைந்தவர்களைவிட தீமை யடைந்தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று சொல்லத்தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக் கின்றன.

அவர் நாகரிகமுடையவரென்று சொல்லுவதை விட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன.

அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதை விட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அனேக காரணங்கள் இருக்கின்றன.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட  அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு  வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.

அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள்.

தந்தைபெரியார் பொன்மொழிகள்


* இன்று, நம் நாட்டில் முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சி செய்யப்பட வேண்டியிருக்கிறது. ஜாதி பேதம் பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமுக வாழ்க்கையில் மனிதன் சமதர்மமாய் வாழமுடியும்.

* தமிழுக்காக வேண்டுமானால் தமிழ் படிக்கலாம். இலக்கிய நயம், கவி நயம் என்பதற்காக வேண்டுமானால் தமிழ் கற்கலாம். மற்றபடிப் புதுமையான கருத்துக்களை அறிந்து கொள்வதற்குத் தமிழில் எதுவுமே கிடையாது.

* மக்கள் இயற்கையிலேயே மூடநம்பிக்கை, காட்டு மிராண்டித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஓரளவுக்காவது மாற்றிப் பகுத்தறிவு, சமதர்மம் இவைகளுக்குப் பக்குவப்படுத்த வேண்டும்.

- விடுதலை நாளேடு, 21.12.18

மதங்கள் எல்லாம் செத்துப்போனவைகளே! (1)

கிருஷ்ணன், அர்ஜுனன் சம்பாஷணை


- சித்திரபுத்திரன் -


21-12-1930 - குடிஅரசிலிருந்து....

அர்ஜுனன் : ஹே! கிருஷ்ணா! புராணங்களில் தேவர்களுக்கோ, இந்திரனுக்கோ, பரமசிவனுக்கோ கஷ்டமும் ஆபத்தும் வந்த காலங்களில் எல்லாம் நீ (அதாவது விஷ்ணு) பெண் வேஷம் போட்டுக் கொண்டு போய் அவர்களின் எதிரிகளை மயக்கி, வஞ்சித்து வசப்படுத்தினதாகவே காணப்படுகின்றனவே; அதுமாத்திரமல்லாமல் அந்த பெண் வேஷத் தோடேயே நீ ஆண்களிடம் சம்போகம் செய்ததாகவும் அதனால் உனக்குப் பிள்ளைகள் கூடப் பிறந்ததாகவும் காணப்படுகின்றதே இது உண்மையா? அல்லது இதற்கு ஏதாவது தத்துவார்த்தம் உண்டா? தயவு செய்து சொல் பார்ப்போம்.

கிருஷ்ணன் : ஓ! அர்ஜுனா! நீ சொல்லுகிறபடி புராணங்களில் இருப்பது உண்மையே. ஆனால் நான் அந்தப்படி ஒருநாளும் செய்ததே இல்லை. அன்றியும் நானே பொய்யாக இருக்கும்போது பிறகு நான் பெண் வேஷம் எப்படிப் போடமுடியும். அப்படிப் போட்டாலும் எப்படி கலவி செய்ய முடியும். ஒரு சமயம் திரு அ. இராகவன் சொல்லுவது போல் ஆண், ஆண் கலவி செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் பிள்ளை எப்படி பெற முடியும்? கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால் கேட்ப்பவருக்கு மதி வேண்டாமா? சொல்லுகிறவன் சொன்னால் கேட்பவனுக்குப் புத்தி வேண்டாமா? பின்னை ஏன் புராணங்களில் அந்தப்படி எல்லாம் சொல்லப்பட்டு இருக்கின்றது என்று கேட்டால் அதற்குத் தத்துவார்த்தம் உண்டு.

அர்ஜுனன் : அந்த தத்துவார்த்தம் என்ன? எனக்குச் சற்று சொல்லு பார்ப்போம்.

கிருஷ்ணன் : அந்தமாதிரி எழுதின தத்துவார்த்தம் என்னவென்றால் மனிதன் பெண் இச்சையில் கட்டுப்பட்டவன் என்பது நிச்சயம். நேர்வழியில் வேலை செய்து வெற்றி பெற முடியாத காரியங்களிலும் எதிரியை ஜெயிக்க போதிய சக்தி இல்லாத காலங்களிலும் ஒருவன் வெற்றி பெற வேண்டுமானால் இந்த வழி மிக சுலபமான வழி என்பது பெரியோரின் கருத்து. அதாவது ஒரு நல்ல அழகிய பெண்ணைக் கூட்டிப்போய் காட்டியோ, அல்லது அவனுக்கு கூட்டி விட்டோ அதன் மூலம் எவ்வித வெற்றியையும் பெறலாம் என்பதே இதன் தத்துவார்த்தமாகும். இது முக்தி அல்லது வெற்றி பெறும் இரகசியங்களில் ஒன்று என்பதைக் காட்டுவதற்காக எழுதப்பட்டதாகும். இப்பவும் உலக வழக்கில் சகதியில்லாதவன், தகுதி இல்லாதவன் ஏதாவது ஒரு பதவியையோ, பொருளையோ அடைந்திருந்தால் அதற்குப் பொதுஜனங்கள் திடீரென்று கற்பிக்கும், அல்லது நம்பியே சொல்லும் வழக்கச் சொல்லைப் பார்த்தால் நன்றாய் விளங்கும். அதாவது சக்கரத்தின் மகிமையினால் சம்பாதித்துதான் வெற்றிப் பெற்றான்; பதவி பெற்றான் என்று சாதாரண பாமர மக்கள் கூடச் சொல்லுவதைப் பார்க்கிறோம். சக்கரம் என்றால் என்(விஷ்ணு) ஆயுதத்திற்குப் பெயர். பெண்கள். . . . க்கும் பெயர். எவ்வளவோ பேருக்கு இந்தத் தத்துவார்த்தம் இப்போது உண்மையிலேயே பயன்படுவதையும் பார்க்கின்றோம். ஆதலால் வெற்றி பெறுவதற்கு ஒருவழி என்பதைக்காட்டும் தத்துவப் பொரு ளுக்காகவே பெரியோர்கள் இப்படி எழுதி வைத்தார்கள். புராணங்களில் உள்ள ஒவ்வொரு வரிக்கும், எழுத்துக்கும் இது போலவே தத்து வார்த்தங்கள் உண்டு. அது தெரியாமல் நமது சுயமரியாதைக்காரர்கள் அவற்றைப் பரிகாசம் செய்கின்றார்கள். ஆனால் அந்த பழக்கமும் வழக்கமும் தத்துவார்த்தத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமு மாகியவைகளெல்லாம் சுயமரியாதைக்காரருக்கு அல்ல. புராண மரியாதைக்காரருக்கு என்பதை மறந்துவிடாதே.

அர்ஜுனன் : சரி சரி. இப்போது எனக்கு விளங்கிற்று. ஆனால் இது போலவே இன்னும் ஒரு சந்தேகம். சற்று தயவு செய்து அதையும் விளக்கினால் உனக்கு புண்ணியம் உண்டு.

கிருஷ்ணன் : அதென்ன சொல்லு பார்ப்போம்

அர்ஜுனன் : அதே மாதிரி மற்றும் பல புராணங்களில் சிவன் ஒரு சன்யாசி ரூபமாக, பக்தன் ரூபமாக வந்து ஒருவனின் பெண்ஜாதியை கேட்டான் என்றும் அந்தப் படியே அவன் கொடுத்தானென்றும் சொல்லப்படுகின்றதே அதன் ரகசியம் என்ன?

கிருஷ்ணன் : இது தெரியவில்லையா?

அர்ஜுனன் : தெரியவில்லையே

கிருஷ்ணன் : சன்யாசிகளுக்குச் சாப்பாடு போட வேண்டியது கிரகதன் கடமை. பிறகு பெண் வேண்டுமானால் சப்ளை செய்ய வேண்டியதும் கிரகதன் கடமையாகத்தானே இருக்க வேண்டும். அதனால்தானே 32 தர்மங்களில் பெண் போகமும் ஒன்று என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகவே அந்தப்படி சன்யாசிக்குப் பெண் களைக் கொடுக்கும்போது மனதில் சங்கடம் இல்லாமல் தாராள மனதுடன் உதவுவதற்காகவே சிவன் சன்யாசி ரூபமாய், ஒரு சிவனடியார் ரூபமாய் வந்து கேட்டார் என்று அதாவது சன்யாசியாகவோ, சிவனடியாராகவோ ஒருவன் வீட்டிற்கு வந்தால், அவன் கேட்டவுடனேயே கொடுக்க வேண்டும் என்பதற்காகவே. அதாவது இந்த சன்யாசி சிவனடியார் ஒரு சமயம் சிவபிரானே இந்த வேடம் தரித்து வந்தானோ என்று எண்ணிக் கொண்டு பேசாமல் கொடுத்துவிடட்டும் என்றும், அதற்காக மனதில் எவ்வித விகல்ப புத்தியும் இருக்கக் கூடாது என்றும் கருதியே இந்தப்படி சொல்லப் பட்டிருக்கிறது. இது இப்போதும் சில புராண மரியாதைக்காரர்கள் வீடுகளில் நடைபெற்று வருகிறதை நான் அடிக்கடி பார்க்கின்றேன்.

தவிரவும், குரு, சாமியார், பாகவதாள், பரதேசி, அடியார்கள் இப்படிப் பட்டவர்கள் அநேக வீடுகளில் இருந்துக் கொண்டு நன்றாய் சாப்பிட்டுக் கொண்டு அந்த அந்த வீட்டுக்காரருக்கு இந்த புண்ணியமும் கொடுத்துக் கொண்டு வருவதைப் பார்க்கின்றேன். சிலர் தெரிந்தே விட்டுக்கொண்டிருக் கின்றார்கள். சிலர் தெரியாதது போலவே காட்டிக் கொண்டுமிருக்கிறார்கள். இதெல்லாம் அவரவர்கள் புராணங்களில் வைத்திருக்கும் பக்திக்கும் மரியாதைக்கும் தகுந்தபடி இருக்கும்.

- தொடரும்

 - விடுதலை நாளேடு, 21.12.18

 


திங்கள், 17 டிசம்பர், 2018

கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்



10 & 17.08.1930 - குடிஅரசிலிருந்து...

உங்களுடைய தெய்வமும், மதமும் விடப்பட் டொழிந்தாகவே வேண்டும். நான் கடவுளை உண்டு என்றோ இல்லை என்றோ சொல்ல வரவில்லை. கடவுள் இருந்தால் அது இருக்கட்டும். அது இந்த ராமசாமிக்காக ஓடிப்போய் விடாது. அதற்கு எவனும் வக்கீலாக இருக்க வேண்டியதில்லை. ராமசாமி கடவுள் இல்லை என்கிறான்.

பூசை வேண்டாம் என்கிறான் என்றெல்லாம் பேசுகிறார்கள். நல்ல கடவுளாக இருந்தால் அது உங்களது பணச் செலவை எதிர்பார்க்குமா? அல்லது உங்கள் எண்ணெயையும், பாலையும் பஞ்சாமிர்தத் தையும் குளிப்பாட்டுதலையும் எதிர்பார்க்குமா? கடவுள் உண்டு, இல்லை என்ற சண்டை உலகம் தோன்றிய நாள் முதல் நடக்கிறது. நமக்கு அதை முடிவு செய்ய அவசியமில்லை. உன் அறிவையும் முயற்சியையும் உன் வாழ்க்கைக்கு உபயோகப் படுத்து.

உன் செல்வத்தை வீணாக கடவுளுக்கென்று அழிக்காதே என்றே சுயமரியாதை இயக்கம் சொல்லு கிறதே தவிர வேறில்லை. உங்கள் தெய்வங்களது நிலைமையில் நான் இருக்க சம்மதிக்கமாட்டேன். ஏனெனில் நீ குளிப்பாட்டும் போது தான் குளிக்க வேண்டும். நீ வேஷ்டி கட்டிவிடும் போது தான் கட்டிக் கொள்ள வேண்டும்.

நீ எண்ணெய் தேய்த்து விடும்போது தான் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு யார் சம்மதிப்பார்கள்? கடவுள் உன் பூசையையும் உற்சவத்தையும் நகைகளையும் விரும்புகிறது என்று சொல்லுவது வெட்கக்கேடு.

- விடுதலை நாளேடு, 14.12.18

ஆலயங் கட்டியவர்கள் கதி

10 & 17.08.1930 - குடிஅரசிலிருந்து...

தஞ்சாவூர் ராஜாக்களை விட உலகத்தில் இன் னொருவன் கோயில் கட்டியிருக்கிறானா? சத்தி ரங்கள் கட்டியிருக்கிறானா? மான்யங்கள் விட்டிருக் கிறானா? அந்த கடவுள் தர்மம் அந்த ராஜாக்களுக்கு என்ன செய்தது? வம்சம் இருந்ததா? அவர்கள் வாரிசு தாரர்களுக்குக் கடவுள் தர்மம் ஒன்றும் செய்யவில்லை. வெள்ளைக்காரன் தான் சொத்துக்கு கொடுக்கிறான். அந்த சாஸ்திரங்களுக்கு மதிப்பு இருந்தால் அந்த தஞ்சாவூர் முதலிய அரசர்கள் இப்படி அழிந்து போயிருப்பார்களா?

பழனியில் குடம் குடமாய்ப் பாலைக் கொட்டு கிறார்கள். அது தொட்டியில் விழுந்து துர்நாற்றம் எடுத்துப் போய் காலரா ஏற்பட வழியாகிறது. ஏழைகளின் குழந்தைகள்பால் இல்லாமல் குரங்குக் குட்டிப்போல் மெலிந்து தவிக்கையில் குழவிக் கல்லின் தலையில் அதைக் கொட்டி வீணாக்கு கிறார்கள். அந்த குழந்தைகளின் வாயில் கொட்டு என் தலையில் கொட்டாதே என்று தான் யோக் கியமான கடவுள் சொல்லுமே யொழிய எந்த கடவுளும் அதில்லை என்று கோபித்துக் கொள்ளாது. அப்படி கோபித்துக் கொண்டால் கோபித்துக் கொள்ளட்டுமே. அது நம்மை என்ன செய்யமுடியும்? (சிரிப்பு) இப்படி இருந்தால் மக்களுக்கு ஜீவகாருண் யம், பரோபகார சிந்தை, இரக்கம் இவை எப்படி ஏற்படும்? கைலாசம், வைகுண்டம், சொர்க்கம் என்ற இவை கற்பிக்கப்பட்டது. முதல் மனிதன் அயோக்கி யனானான். இவற்றின் பெயரால் மனிதனை மனிதன் இம்சித்தான். கொடுமை செய்தான். ஒரு சிம்டா விபூதிக்காக எல்லாப் பாவமும் போக்கி மோட்சம் கொடுத்ததால் மனிதனது அறிவு மயங்கிப்போயிற்று.

இந்த மோட்ச நம்பிக் கைகள் ஒரே அடியாய் ஒழிய வேண்டும். இவ்வுலக அனுபவங்கள் லட்சியம் செய்யாமல் நாம் எப் பொழுது மேல் உலகமே பெரிது என்று கருதி னோமோ அப்பொழுதே ஜீவகாருண்யத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடமில் லாமற் போய் விட்டது.

தான் மோட்ச மார்க்க்கத்தை நாடுவதற்காக ஒருவன் அயோக்கியனாகவும், கொடுமை செய்ப வனாகவும் இருக்க வேண்டியதாயிற்று. இது ஒருகாலும் உண்மையான நாகரிகம் அல்ல. அன்பு அல்ல, இரக்கம் அல்ல, பரோபகாரம் அல்ல.

- விடுதலை நாளேடு, 14.12.18