வெள்ளி, 28 டிசம்பர், 2018

இணையத்தைக் கலக்கும் பெரியார் பற்றிய பதிவுகள்

#நக்கீரன்

நேற்று திருச்சியில் நடைபெற்ற கருஞ்சட்டைப் பேரணி, இன்று பெரியார் நினைவு தினம் ஆகியவற்றை முன்னிட்டு நேற்றும், இன்றும் பெரியார் பற்றிய பதிவுகள் ட்விட்டரில் ட்ரென்டிங்கில் உள்ளன. ட்விட்டரில் மட்டுமில்லை. பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பெரியார் பற்றிய பதிவுகள் தெறிக்க விடப்படுகின்றன.

பொதுவாக சினிமா, விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகியவை மட்டுமே அதிகமாக ட்ரென்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும். #தோனியின் 14 வருடங்கள், #விஸ்வாசம், #பேட்ட ஆகியவற்றிற்கு மத்தியில் #பெரியார் ஹேஸ்டேக் நேற்று அதிகமாக பேசப்பட்டது. 16,000-க்கும் மேற்பட்ட ட்விட்கள், 13,300+ ரீ - ட்விட்கள் என இரண்டு நாட்களாக இணையதளங்களை ஆக்கிரமித்து வருகின்றது. பெரியார் ஹேஸ்டேக்குகள். பெரியார் பற்றிய ட்விட்டர் உரையாடல்களில் பங்குபெற்றோரில் 15% பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

92% பெரியார் பற்றிய பதிவுகள் இந்தியாவில் உள்ள நபர்களால் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 8% பதிவுகள் வெளிநாட்டில் இருந்து ட்விட் செய்யப்பட்டது என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. மொத்த பதிவுகளில் 38% பதிவுகள் சென்னையில் இருந்து போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. 9% கோயம்புத்தூரில் இருந்து போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. பதிவுகளில் 70% தமிழிலும், 30% ஆங்கிலத்திலும் உள்ளன. #PeriyarRally, #Periyar, #periyarkutthu, #trichy, #பெரியார் போன்ற ஹேஸ்டேக்குகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

’கடவுள் மறுப்பாளர்கள் எல்லோருமே ரொம்ப மனிதாபிமான மிக்கவர்களாக இருப்பார்கள், ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு பெரியார், ஒருவருடைய வாழ்க்கை சரித்திரம் முடிந்த பிறகும் அவருடைய மறைவு பாசிசத்தை நடுங்க வைக்கும் என்றால்... அவர்தான் தந்தை பெரியார்...’ ஆகிய பதிவுகள் அதிகமாக மேற்கோள்களாக ட்விட்டரில் உள்ளன.

“பெண் ஏன் அடிமையானாள்” என்ற நூலை சுமார் 90 வருடங்களுக்கு முன்பு பெரியார் எழுதினார். பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் அவரின் நினைவு நாளான டிசம்பர் 24-க்குள் ஒரு லட்சம் பிரதிகளை விற்க வேண்டும் என்ற இலக்குடன் செப்டம்பரில் களமிறங்கியது நன்செய் பதிப்பகம். கிட்டத்தட்ட 100 நாட்களில் பதிப்பகம் இந்த இலக்கை அடைந்தது. “லட்சியப் பெரியார் லட்சம் கைகளில்” என்ற தனது இலட்சியத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த நூலைப் பத்து ரூபாய்க்குப் பதிப்பித்தது நன்செய் பதிப்பகம்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், இன்றைய இளம் தலைமுறையினர்கள் மத்தியில் கொண்டுசேர்ப்பதை முதன்மையாகக் கருதி தொடங்கிய இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது பதிப்பகம். இன்னும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், சில வன்முறைகள் முற்றிலுமாக ஒழியாத நிலையில் இந்த புத்தகம் இன்றைய தலைமுறை பெண்களுக்கு அவசியமாக தேவைப்படுகிறது. 90 வருடங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அவருடைய கொள்கைகள் இன்றும், இன்றைய    தலைமுறையால் போற்றப்படுகின்றன. அவர் பெயர் மற்றும் கொள்கைகள் இன்றி அரசியல் செய்ய முடியாது என்ற நிலை நிலவுகிறது என்பதே உண்மை.

திருச்சியில் ஒருபுறம் கி.வீரமணி, திருமுருகன் காந்தி, விடுதலை ராஜேந்திரன், கொளத்தூர் மணி, கோபி நயினார் போன்ற முக்கிய பிரமுகர்கள்; மறுபுறம் தமிழ்நாடு மாநிலமே திரும்பி பார்க்கும் அளவிற்கு, பேரணியில் இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர்கள். இந்த பேரணியும், இணையத்தை கலக்கிய பெரியார் பதிவுகளும் ஒன்றை தெளிவாக தெரிவிக்கின்றன. இந்த தலைமுறையிலும் பெரியாரும், அவருடைய கொள்கைகளும் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைக்  காட்டுகின்றன.

Source link:👇🏿
https://nakkheeran.in/special-articles/special-article/periyar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக