வியாழன், 27 டிசம்பர், 2018

கடவுளின் நடவடிக்கை



 


19.10.1930-  குடிஅரசிலிருந்து...

உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதில் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் ஒரு சர்வசக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரால் தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு) கின்றது என்று சொல்லப்படுமானால் அவரை நடுநிலை யுடையவரென்று சொல்லுவதைவிட பாரபட்ச முடையவரென்று சொல்வதற்கே மிக மிக இடமிருக் கின்றன.

அவரை கருணையுடையவரென்று  சொல்லு வதைவிட கருணையற்ற வரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரதியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே  தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன.

அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட அவரால் அதிக தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது.

அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜுவு இருக்கின்றது.

(அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்ட வரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந் தங்கள் பல இருக்கின்றன.

அவர் ஜீவன்களுக்கு நன்மையை செய்கின்றா ரென்பதைவிட தீமையைச் செய்கின்றார் என்ப தற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன.

அவரால் நன்மையடைந்தவர்களைவிட தீமை யடைந்தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று சொல்லத்தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக் கின்றன.

அவர் நாகரிகமுடையவரென்று சொல்லுவதை விட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன.

அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதை விட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அனேக காரணங்கள் இருக்கின்றன.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட  அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு  வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.

அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள்.

தந்தைபெரியார் பொன்மொழிகள்


* இன்று, நம் நாட்டில் முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சி செய்யப்பட வேண்டியிருக்கிறது. ஜாதி பேதம் பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமுக வாழ்க்கையில் மனிதன் சமதர்மமாய் வாழமுடியும்.

* தமிழுக்காக வேண்டுமானால் தமிழ் படிக்கலாம். இலக்கிய நயம், கவி நயம் என்பதற்காக வேண்டுமானால் தமிழ் கற்கலாம். மற்றபடிப் புதுமையான கருத்துக்களை அறிந்து கொள்வதற்குத் தமிழில் எதுவுமே கிடையாது.

* மக்கள் இயற்கையிலேயே மூடநம்பிக்கை, காட்டு மிராண்டித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஓரளவுக்காவது மாற்றிப் பகுத்தறிவு, சமதர்மம் இவைகளுக்குப் பக்குவப்படுத்த வேண்டும்.

- விடுதலை நாளேடு, 21.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக