கிருஷ்ணன், அர்ஜுனன் சம்பாஷணை
- சித்திரபுத்திரன் -
21-12-1930 - குடிஅரசிலிருந்து....
அர்ஜுனன் : சரி, இந்த சந்தேகமும் ஒருவாறு விளங்கிற்று. இன்னமும் ஒரு சந்தேகம் இருக்கின்றது. அதை இப்போது விளக்குகின்றாயா?
கிருஷ்ணன் : என்ன அது, சொல்லு பார்ப்போம்.
அர்ஜுனன் : அதாவது புராணங்களில் அக்கிரமமான, வஞ்சகமான, புரட்டான காரியங்கள் செய்ய வேண்டிய பொழுதெல்லாம் கடவுள் பார்ப்பன வடிவமாகவே வந்ததாக காணப்படுகின்றதே, இதன் தத்துவமென்ன?
கிருஷ்ணன்: இந்த மாதிரி காரியங்கள் செய்வதற்கு அவனே (பார்ப்பனனே) தகுந்தவன் என்பதும், அது அவன் சுபாவம் என்பதும், அப்படிச் செய்வதினால் வேறு எவ்விதமான பாவமோ, நரகமோ ஏற்படுமென்று எழுதி இருக்கும் சாத்திரங்கள் எல்லாம் பொய் புரட்டு சுயநலத்திற்காக எழுதப்பட்டவை என்பதை அவன் தெரிந்தவன் என்றும், இப்போதும் யாருக்காவது இந்த மாதிரி அக்கிரமமான காரியங்கள் செய்து ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் அவற்றிற்குப் பார்ப்பனர்களே தகுந்தவர்கள் என்றும் அவர்கள் எவ்வித பாதகமான, அவமானமான காரியங்களையும் செய்யப் பயப்பட மாட்டார்கள் என்றும், அவற்றில் கைதேர்ந்தவர்கள் என்றும் காட்டுவதற்காகவே அந்தப்படி எழுதப்பட்டதாகும். இதை அறிந்தே அநேக புராண மரியாதைக்காரர்கள் இப்படி காரியங்கள் செய்வதற்காக பார்ப்பனர்களைத் தங்கள் காரியதராகவோ, மற்ற காரியங்களுக்குப் பொறுப்பாளிகளாகவோ வைத்துக் கொண்டும் இருக்கின்றார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொள்ள சக்தி இல்லாதவர்கள் சிநேகிதர் களாகவாவது வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கவனித்துப்பார்த்தால் இது நன்றாய் விளங்கும்.
அர்ஜுனன் : இன்னம் ஒரு சந்தேகம்
கிருஷ்ணன் : என்ன சொல்லு.
அர்ஜுனன் : கடவுளைப் படைத்தார்களல்லவா மனிதர்கள்.
கிரு : ஆம்!
அர்ஜுனன் : அப்படிப் படைத்தவர்கள் கடவுள் மனிதனுக்குள் இருப்பதாகவோ அல்லது மனிதனுக்குள் இருக்கும்படியாக ஆவாகனம், கும்பாபிஷேகம் முதலியவைகள் செய்து மனிதனுக்குக் கொடுப்பதும், மனிதனுக்குச் செய்வதும், கடவுளுக்குச் செய்தது, கடவுளுக்குக் கொடுத்தது என்று கருதும்படி செய்யாமல் கல்லுக்குள் கடவுளை ஆவாகனம் செய்து, அதற்குக் கும்பாபிஷேகம் செய்து கல்லைக் கும்பிடும்படி ஏன் செய்தார்கள்?
கிரு: அதன் இரகசியம் என்னவென்றால் மனிதனுக்குள் கடவுளை ஆவா கனம் செய்தால் நைவேத்தியம் செய்யும் சாமானையெல்லாம் மனிதன் சாப் பிட்டுவிடுவான்; அணிந்து கொள்வான். அப்புறம் நடுவில் இருப்பவனுக்கு ஒன்றும் கிடைக்காமல் போய்விடும். ஆதலால் தான் கல்லிலும், செம்பிலும் ஆவாகனம் செய்து அதற்கு தனக்கு வேண்டியதை யெல்லாம் நைவேத்தியம் செய்யச்செய்து தான் எடுத்துக் கொள்வது. ஆகவே இந்த மாதிரி செய்ய வேண்டியது குறுக்கே இருப்பவர்களுக்கு அதாவது பூசாரிகளுக்கு அவசிய மாயிற்று அந்த பூசாரிகளுக்கே இந்த மாதிரி கடவுளை உண்டாக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது. ஆகவே பூசாரி ஆதிக்கம் குறைந்தால் கடவுள்கள் உற்பத்தியும் குறைந்து விடும். கடவுள் மஹிமைகளும் ஒழிந்து விடும்.
அர்ஜுனன் : சரி இவைகள் எல்லாம் எனக்கு ஒரு மாதிரி விளக்க மாயிற்று. இன்னும் சில விஷயங்கள் தெரிய வேண்டியிருக்கின்றன. ஆனால் அவை களை சாவகாசமாய் பேசுவோம்.
கிரு: சரி
இவர்களில் யார் பதிவிரதைகள்?
1. சீதா, புருஷன் பந்தோபதினால் வேறு புருஷன் சாவகாசம் செய்ய முடியவில்லை.
2. மீனாட்சி, புருஷன் உதைத்து விடுவானே என்று உதைக்குப் பயந்து சோரம் செய்ய வில்லை.
3. நாமகிரி ஜனங்கள் கேவலமாய் பேசுவார்களே என்று மானத்திற்குப் பயந்து வேறு புருஷனை இச்சிக்கவில்லை.
4. இரஞ்சிதம், தன் மனதிற்குப் பிடித்த கணவன் கிடைக்கவில்லை என்று கருதி யாருக்கும் இணங்கவில்லை.
5. சரஸ்வதி, மேல் லோகத்தில் செக்கில் போட்டு ஆட்டுவாரென்ற கஷ்டத்திற்குப் பயந்து யாருக்கும் இணங்கவில்லை.
6. மேனகை, தான் கேட்டளவு பணம் கொடுக்கவில்லை என்று கருதி யாருக்கும் சம்மதிக்கவில்லை.
7. கோகிலா தன் காதலனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு விரோதமே என்று கருதி வேறு யாருக்கும் ஒப்பவில்லை. இவர்களில் யார் பதிவிரதைகள்.
- விடுதலை நாளேடு, 28.12.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக