திங்கள், 9 ஜனவரி, 2017

தொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை




- தந்தை பெரியார்

தலைவரவர்களே! தாய்மார்களே! தோழர்களே! மற்றும் முத்தையா முதலியார், தாவூத்ஷா முதலிய தலைவர்களே! இன்று இங்கு நீங்கள் லட்சக்கணக்காகக் கூடி, என்னை ஆடம்பரமாக வரவேற்று பல சங்கங்களின் சார்பில் வரவேற்பு அளித்து, நமது முயற்சிகள் ஈடேறத் தமிழ்நாட்டிற்கே வழிகாட்டியாக முதன் முதல் 1001 ரூபாய் பரிசளித்த உங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான  நன்றியைத் தெரிவிக் கின்றேன்.

என்னைப் பற்றிப் புகழ்ந்து பேசி, நான் ஏதோ செய்து விட்டதாக வரவேற்பு கள் அளித்தது எதற்கு என்பது எனக்கு நன்கு தெரியும். உண்மையில் அப்புகழ்ச்சி களுக்கெல்லாம் நான் தகுதியுடைய வனல்ல. ஆனால், எனது தொண்டின் கருத்தினிடமும், அவசியத்தினிடமும், நீங்கள் வைத்துள்ள உண்மை அன்பும், ஆசையுமே இதற்குக் காரணமென எண் ணுகிறேன். மேலும் எனக்கு ஊக்கத்தைத் தூண்டவே எனக் கருதுகிறேன். இந்த நன்றி, வார்த் தையால் மட்டும் போதாது.

எனினும் கருத்திற்கிணங்க நீங்கள் இட்ட பணியை நிறைவேற்ற எனது ஆயுள்வரை தயாராக இருக்கிறேன். (கை தட்டல்) நான் உங்களுக் காகப் பல தொண்டு கள்  செய்ததாக எனக்கு முன் பேசிய தலைவர்கள் கூறி னார்கள். ஆனால், நான் தமிழர்களுக்காகச் செய்ததை விட மற்றவர்களுக்காகச் செய்ததே மிக அதிகமாகும். நீதிக் கட்சி, தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள் ஆகிய வர்களுக்காகச் செய்ததைவிட, காங்கிர சிற்கு நான் உழைத்தது கணக்கு வழக் கில்லை.

எனது வாலிபப் பருவத்தையும், ஊக்கத்தையும் காங்கிரசிற்காகவே கழித் தேன். இன்று அதன் சக்கையைத்தான் உங்களுக் காகச் செலவிடுகிறேன். நான் முன்பு சென்றது தப்பு வழி என உணர்ந்து திருந்தி சென்ற 15 வருடங்களாக வேலை செய்து வருகிறேன். நான் கோரிய பலனில் நூற்றில் ஒன்றுகூட இன்னும் வரவில்லை. ஓரளவுக்குத் தமிழர்களுக்கு உண் மையைத் தெரிவித்து வருகிறேனே ஒழிய, இன்னும் காரியம் கைகூடவில்லை.

சுமார் முப்பதிற்கு மேற்பட்ட சங்கங்கள் இன்று எனக்கு வரவேற்பளித்தன. அவை களில் தொழிலாளர்கள் சார்பாகவும், முஸ்லிம்கள் சார்பாகவும், விசுவப் பிராமணர்கள் சார்பாகவும் அளித்த வரவேற்புப் பத்திரங் களையே மற்றவைகளைக் காட் டிலும் நான் பெருமையாகக் கொள்ளுகின்றேன். தொழிலாளர்கள் சம்பந்தமாக இன்று சில வற்றைக் கூற ஆசைப்படுகிறேன்.

அன்பும், பக்தியும், கவலையும் தொழிலாளரிடமே!

முன்பு இரண்டொரு சந்தர்ப்பங்களில் சென்னையில் நடைபெற்ற கடற்கரைக் கூட்டங்களில் தொழிலாளர்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லியுள்ளேன். எனக்குத் தொழிலாளர்களிடம் உண்மை யில் அன்பும், பக்தியும், கவலையும் வேறெதையும்விட அதிகம் என்பதை உண்மைத் தொழிலாளர்கள் 15, 16 வருட மாகத் தொழிலாளருடன் பழகுபவர் அறிவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு தொழி லாளர் சங்கத்தை அரசியல் கூட்டமும், சுயநலக் கூட்டமும் வேட்டையாடின.

அவைகளுக்குக் காட்டிக் கொடுத்தவன் நான் என்பதும் எனக்கு நன்கு தெரியும். ஆனால், பின்பு உண்மை உணர்ந்து தொழிலாளர்களை அரசியல் புரட்டுக் காரர்களிடத்திலிருந்தும், சுயநலக் கூட்டத் திலிருந்தும் விடுவிக்கப் பெரிதும் பாடுபட்டேன்; முடியவில்லை. காதினிக்கப் பேசுபவர்களைக் கண்டு தொழிலாளர்கள் மயங்குவது அறியப் பெரிதும் வருந்தி னேன்.

15 ஆண்டுகளுக்கு முன்பு நாகை யில் ரயில்வே வேலை நிறுத்தத்தை ஆரம் பிக்கக் கூடாதென்று அவர்களை எவ்வ ளவோ வேண்டியும் சில போலிகளை நம்பி வேலை நிறுத்தம் ஆரம்பித்ததால் தொழி லாளர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டனர். நான் வேண்டாமென்ற வேலை நிறுத் தத்தை மீறி நடத்துவது கண்டும் பின்னி டாது, தொழிலாளர்களுக்காக அதில் கலந்துகொண்டு பாடுபட்டு, அதற்காக நான் சிறை சென்றதை அக்காலத் தலைவர்கள் உணர்வார்கள்.

தொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை

எதனால் தொழிலாளர் நன்மை அடை வார் என்பதில் எனக்கும் அரசியலாளர் கள், தொழிலாளர்களுக்கும் அபிப்பிராய பேத மேற்பட்டதால் என்னால் தொழிலாள ருடன் அதிகமாகக் கலந்து கொள்ள முடியாது போயிற்று. எனினும் தொழிலாளர்களின் விடுதலையே தமிழர்களின் விடுதலை - பார்ப்பனரல்லாதாரின் விடுதலையாகும்.

பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமென்பது உண்மையில் தொழிலாளர் முன்னேற்றமே. இயந்திரத்தின் பக்கத்தில் நிற்பவனே தொழிலாளி என்று கருதுகிறார்களே ஒழிய, நிலத்தை உழுபவன் - உழவனும் தொழி லாளிதான் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் தான் அவ்வியக்கம் எத் தன்மையது என்பதை உணர்வர்.

இந்து மதக் கோட்பாட்டின்படி நாம் அத்தனை பேரும் தொழிலாளிகளே. பல வர்ணம், ஜாதிகள் சொல்லப்பட்டாலும் உலகத்தில் சூத் திரன், பிராமணன் என்ற இரண்டே ஜாதிதான் உண்டு என வருணாசிரமி கள் என்போரும், வைதிகர்கள் என்போரும் கூறி வரு கின்றனர். இவ்வாறு பார்க்கும்போது பார்ப்பனர்கள் அத்தனை பேரும் முதலாளி கள், நாம் அனைவரும் தொழிலாளிகள்.

பார்ப்பனர்கள் பாடுபடாமலேயே வயிறு வளர்க் கின்றனர். நாம் பாடுபட்டும் வயிறு கழுவ முடியாத நிலையிலிருக்கின்றோம். எனவே, இந்நிலை மாறினால்தான் நமது தொல்லைகள் நீங்குமே ஒழிய, ஆலையில் வேலை செய்பவனுக்கு ஒரு நாலணா கூலி அதிகமாகக் கிடைத்து விட்டதாலேயே தொழிலாளிப் பிரச்சினை முடிந்துவிடாது.

தொழிலாளரை ஆதரியுங்கள்

அந்த வழியில் எனக்கு விழிப்பேற்பட்ட காலம் முதல் சூத்திரன் என்று சில சோம்பேறிகளால் பேரிடப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வரு கிறேன். அவர்கள் வார்த்தைகளை நம்பி தொழிலாளிகள் இன்று எங்களைப் பரிகசித் தாலும், கேலி செய்தாலும் கடைசி வரை நாங்கள் தொழிலாளிகளுக்காகவே உழைப் போம். இன்று வேலை நிறுத்தத்தால் சூளை மில் முதலிய மில் தொழிலாளர்கள் கஷ்டப் படுகின்றனர்.

முன்னின்ற தொழிலாளர் தலைவர் பலர் அரசாங்கத் தலைவர் களுக்குக் கீழ்ப்படியாத காரணத் தாலேயே இன்று தொழிலாளிகள் கஷ்டப்படுத்தப் படுகின்றனர். எனவே, நாம் அத்தொழி லாளர்களுக்குச் சகாயம் செய்வதுடன், வேலையிழந்த பலருக்கும் நம்மால் ஆகும் வேலைகளைக் கொடுத்து ஆதரிக்க வேண்டுமென உங்களை வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன். இக் கூட்டத்தின் சார்பாகக்கூட தொழிலாளர்களுக்கு ஏதா வது நன்மை செய்ய வேண்டும்.

அடுத்த ஆண்டில் ரூ. 10001 பெறுவேன்!

1001 பேர் சிறை சென்றதன் அறி குறியாக நீங்கள் இன்று 1001 ரூபாய் கொடுத்தீர்கள். இது எனது சொந்தச் செலவிற்கல்ல. நமது தொண்டு, இயக்கம், எண்ணம் நிறைவேறு வதற்காகவே உதவினீர்கள். இதைப்போல் மற்ற ஜில்லாக்காரர்களும் செய்ய வேண்டுமென வழிகாட்டினர் சென்னைத் தோழர்கள்.

நாம் எண்ணுவது சரியாயிருக் குமானால், இனியும் ஒரு  வருடம் ஆச் சாரியார் நம்மீது கருணை வைத்தால் அடுத்த ஆண்டில் 10001 ரூபாய் பெறுவேன் எனக் கருதுகிறேன். முதன் மந்திரி யாரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ் வாண்டில் 10001 தொண்டர்களைப் பிடிப்பதன் மூலம் நமக்கு 10001 ரூபாய் நீங்கள் கொடுக்க வழிசெய்து  உதவ வேண்டுகிறேன்.

சிறை செல்வது பிரமாதமல்ல

சிறை சென்றதில் புகழோ, தியா கமோ ஒன்றுமில்லை. அதன் ரகசியம் எனக்குத் தெரியும். என்னுடைய வழக்கில்கூட  அய்க்கோர்ட்டு நீதிபதி முன்பு, 7 தடவை சிறை சென்றவருக்கு இது என்ன பிரமாதம்? என்று கூறிய தாகக் கேள்வியுற்றேன். ஒரு காரியத் திற்காகத்தான் தாங்கள் சிறையில் கஷ்டம் அனுபவித்ததாகச் சிலர் சொல்வது, வெளியில் வந்தால் என்ன கூலி என்ப தற்காகவே, இதை எதிரிகள்தான் சொல்லிக் கொடுத்தார்கள்.

மந்திரி வேலை முதலில் எனக்குத்தான் என உரிமை பாராட்டவே தாங்கள் கஷ்டமனுபவித்த தாகக் கூறுவ துண்டு. உண்மையில் நமது உணர்ச்சியை மாற்றக்கூடிய நிலையில் அவ்வளவு கஷ்டம் சிறையில் ஒன்றுமில்லை. சிறை செல்வதால் ஏற்படும் பலாபலனை உணர்ந்தே செல்லுகிறோம்.

இதில் என்ன தியாகம் இருக்கிறது? நான் சிறையில் அதிகம் கஷ்டப்படவில்லை. 3 சிறை அதி காரிகளும் என்னை நன்கு கவனித்தனர். ஆனால், அரசாங்கத்தின் பழிவாங்கும் எண்ணம் அங்கு தாண்ட வமாடுகிறது. உடல் நோயுற்றவர்களிடத்துச் சிறிதுகூட கருணை காட்டப்படவில்லை. அவர்களை ஒழிக்கவே டாக்டர்கள் நினைக்கின்றனர்.

சிறைச்சாலை டாக்டர்கள் போக்கு

முன்பு பேசியதுபோல இன்று நான் பேச முடியவில்லை. எனக்குச் சில பொறுப்புகள் இருக்கின்றதென சில தலைவர்கள் எனக் குப் புத்தி புகட்டுவதுண்டு. அது எனக்கு முடிவதில்லை. ஆனாலும் ஓரளவுக்கு அடக்கியே பேசுகிறேன். வெளியில் காயலா கண்ட ஒருவன் 6 மாதத்தில் செத்து விடுவான் என்றால், சிறையில் 15 நாட் களிலேயே இறந்து படுவான். இதற்கு அரசாங்கத்தாரோ, மற்ற யாரோ, யார் பொறுப்பாளி என்று என்னால் கூற முடி யாது.

அல்லது அந்த நிர்வாகத் தோர ணையோ என்னவோ தெரியவில்லை. ஒருவனுக்கு நோய் என்றால் அவன் பொய்  பேசுவதாகவே டாக்டர்கள் நினைக்கின் றனர். இன்னும் சொல்வேன்; ஒருவனுக்கு நோய் என்றால் காதிலி ருக்க வேண்டிய ஸ்டெதெஸ்கோப்பை கழுத்தில் போட்டுக் கொண்டே அவனை டாக்டர்கள் பரிட்சிக் கின்றனர். இதை ஏன் சொல்லுகிறேனென் றால் கைதிகளை அவ்வளவு மோசமாக நினைக்கின்றனர். இதைப் பற்றிச் சர்க்கார் சிறிதுகூடக் கவலை எடுத்ததாகத் தெரிய வில்லை.

சட்டம் மீறல் - சண்டித்தனம் நமது கொள்கையல்ல

இதனால் உங்களைச் சிறைக்குச் செல்லுங்கள் என நான் கூறவில்லை. ஏன்? மக்களிடம் ஒழுங்கு மீறும் எண்ணத்தையும், சட்டத்தை மறுக்கும் உணர்ச்சியையும் உண்டாக்கக் கூடாது  என்பதே எனது எண்ணம். காரணம்? அது பின்னர் நமக்கே திரும்பிவிடும். பலவற்றிற்கும் பட்டினி யிருந்த காந்தி இன்று பட்டினி இருப்பது கூடாதென் கிறார். ஏன்? பலர் சிறு காரியங் களுக்கும் அதைப் பின்பற்றுகின்றனர்.

அதேபோலச் சட்டம் மீறல், சிறை செல்லும் உணர்ச்சி, அடாவடி, சண்டித்தனம் ஆகிய வைகளை அவர்களே கற்றுக் கொடுத்தனர். இந்த 24 மாத ஆட்சியில் 100, 200 இடங் களில் சத்யாக்கிரகக் கூப்பாடு கேட்கின்றது கண்டு வருந்துகின்றனர் காங்கிரஸ்காரர் கள்.

இரண்டு பக்கங்களிலும் தொல்லை. என்ன செய்வது என்றே முடிவுக்கு வர முடியாது தவிக்கின்றனர்.  எனவேதான், காரணம் சொல்லாது இந்தி எதிர்ப்பாளர் களை வெளியில் விட்டனர்.  தொண்டர்கள் விடுதலைக்கு இதுவரை சரியான காரணம் சொல்லப்படவில்லை.

சட்டம் மீறக் கூடாதென்பதே எனது எண்ணம். ஆனால், மக்கள் உணர்ச் சியைத் தப்பாக எண்ணி அதனை அடக்க அரசாங்கத்தார் தப்பான முறைகளைப் பலவந்தமாக உபயோகித்தால் நியாயமான உரிமைகளை இழக்க எவனும் பின்னிட மாட்டான்.

மூச்சு விடுவதே சட்ட விரோதமா னால் அதற்காகத் தற்கொலை செய்து கொள்வது மேலா? சிறை செல்வது மேலா? எனவே, மக்கள் மீது அரசாங்கத்தார் மீண்டும் அடக்குமுறை உபயோகிக்க முன் வந்தால் அதனை வரவேற்பேனே ஒழிய, அதற்காகச் சிறிதும் பயப்பட மாட்டேன்.

ஏமாற்றப் பார்க்கின்றனர்!

இந்தி எதிர்ப்பைப் பற்றி ஏமாற்றிக் காரியம் செய்ய எண்ணுகின்றனர். நேற்று கூட இந்தியை எடுத்து விடுவதாக ஆச்சாரி யார் சொன்னார். எனவே, மறியல் செய்ய வேண்டாம் என இந்தி எதிர்ப்புச் சர்வாதி காரியாயிருந்த ஒரு அம்மையார் சொன்ன தாகப் பத்திரிகையில் பார்த்தேன். அது உண்மையானால் அன்று சென்ட்ரல் ஸ்டே ஷனில் காலில் விழுந்த மூர்த்தியாரிடமே ஆச்சாரியார் கூறியிருக்கலாமே இந்தியை எடுத்து விட்டேன் என்று.

அதை விட்டு யோசிக் கின்றேன் என்பானேன். எனவே, கட் டாயம் எடுபடவில்லை என்பது விளங்க வில்லையா? எனவே, மக்களை ஏமாற்றத்தானே இது. இந்தி சம்பந்தமான சர்க்கார் உத்தரவை நேற்று விடுதலை யில் நீங்கள் பார்த்திருக்கலாம். அது எல்லாப் பள்ளிக்கூட அதிகாரிகளுக்கும் அனுப்பப் பட்டிருக்கிறது. அதில் கட்டாயம் என்பது நன்றாக எழுதப்பட்டிருக்கின்றதே.

100 பள்ளிகளிலிருந்து இன்று 225 பள்ளிகளிலா யிற்று. இன்று 4, 5, 6ஆம் பாரங்களிலும் வைக்கப் போவதாகச் சொல்லுகின்றனர். இதில் தேசியம் ஒன்றுமில்லை. வேறெதையோ எண்ணி தமிழர்மீது கட்டாயமாகச் சுமத்து கின்றனர்.

அகராதி கூறுகிறதே!

இனி, நாங்கள் வேறு; ஆரியர்கள் வேறு என்பதைப் பல இடங்களில் கூறியுள்ளோம். பல பார்ப்பன நண்பர்கள் தனியே என்னிடத்தில் வந்து இதை மட்டும் விட்டு விடு; மந்திரிசபையை எவ்வளவு வேண்டு மானாலும் தாக்கு என்று கூறுகின்றனர். ஆனால், இந்தி என்றால் ஆரியர் மொழியென அகராதி  கூறு கின்றது. நீங்கள் எடுத்துப் பாருங்கள்.

அந்த ஆரிய மொழியைத் தமிழர் தலையில் ஏன் கட்டாயப் பாடமாகப் புகுத்த வேண் டும்? பல பத்திரிகைகள் இந்துஸ்தானி என்று கூறினாலும், சர்க்கார் உத்தரவு  இந்தி என்றுதான் கூறுகிறது; ஒரு இடத்தில் இந்தி என்பது; பின்னர் இந் துஸ்தானி என்பது; 200 வார்த்தைகள் படித்தால் போதும், கட்டாய மில்லை; பாசாகாவிட்டாலும்  பரவாயில்லை;

இப்பொழுது அசட்டை செய்தால் பின்னால் உத்தி யோகங்கள் கிடைக்காது வருந்த நேரிடும் என்று இடத்திற்குத் தக்கவாறு பேசுவதன் கருத்தென்ன? எனவே, இனி உண்மை கூறாது, சூழ்ச்சியாகச் செய்யும் தந்திரங் களை நினைக்கும் போது இதில் ஏதோ பின்னால் ஆபத்து இருக்கிறதென உணரு கிறோம். எனவே, எந்த விதத்திலும் ஆரிய பாஷை கட்டாயப் பாடமாகாமல் இருப்பதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்தால்தான், பின்னர் நீங்கள் தமிழர் என்று சொல்லிக் கொள்ள முடியும்.

தமிழ்க் கலையைக் காப்பது தமிழன் கடமை

ஒரு சிலர் கன்னட ராமசாமிக்குத் தமிழ் அபிமானம் ஏன் என்கின்றனர். அவர்கள் தமது தாய்மொழியை - கலையை விற்று, பிறருக்கு அடிமையாகி, தன்னையும் விற்றுப் பேசுகின்றனர்.

கன்னடன், தெலுங்கன், மலையாளி என்போர் யார்? எல்லோரும் தமிழர்களே - திராவிடர்களே. தமிழிலிருந்துதான் இவை கள் வந்தன. அம்மொழிகளில் கலந்துள்ள வடசொற்களை நீக்கிவிட்டால் எஞ்சுவது தனித் தமிழே. அப்பொழுது கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்ற பெயர் மறைந்துவிடும். எனவே, எங்கள் மொழியி லுள்ள சீரிய கலைகளை ஒழிக்க முயல்வ தாலேயே பலத்த கிளர்ச்சி செய்கிறோம்.

இது ஒரு அற்ப விஷயமல்ல. தமிழ்க்கலை ஒழியாதிருக்க நாம் வகை தேட வேண் டுவது உண்மைத் தமிழன் கடமையாகும். எல்லாப் பள்ளிகளிலும் இந்தி வைத்து விட்டால், இந்தி வேண்டாத மாணவர்கள் எங்கு சென்று படிப்பது என்று சிலர் கேட்கின்றனர். 3ஆம் பாரம் வரை தனிப் பள்ளிக்கூடங்களை ஆங் காங்கு ஏற்படுத்தி அதில் மாணவர்களைத் தயார் செய்து 4ஆம் பாரத்தில் கொண்டு சேர்த்துவிடலாம்.

இது ஒரு பெரிய காரியமல்ல. இதற்குச் சர்க்கார் உத்தரவு தேவையில்லை. இத்தகைய பள்ளிகளை விரைவில் சென்னையில் தொடங்கச் சிலர் முயல்கின்றனர். அதற்கு நீங்கள் ஆக்கம் அளியுங்கள்.

லட்ச ரூபாய் வேண்டும்

தென்னிந்திய நலவுரிமைச் சங்க மென்பது காங்கிரஸ்காரர்களால் 500, 1000 அடி ஆழத்தில் புதைப்பட்டதாகச் சொல் லப்படும் கட்சியாகும். அக்கட்சி புதைக்கப் பட்டதா? அன்றி நாட்டில் வேரூன்றி கிளை விட்டு ஓடுகின்றதா? என்பதைக் கண்ணுற்றவர் அறிவர். சென்னையிலும், வெளி ஜில்லாக்களிலும் காங்கிரசை விட அதிக உறுப்பினர்களைச் சேர்த்து ஆங்காங்கு கிளைச் சங்கங்கள் நிறுவ வேண்டும். இதைத் தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்துவதோடு அல்லாது இதைக் கொண்டு சமுதாய முன்னேற் றத்திற்கு வேலை செய்ய வேண்டும்.

நமக்கு பணத்தைப் பற்றிக் கவலை யில்லை. நமக்கு ஆள் பலம் அதிகம் என்பது காண மகிழ்ச்சியடைகிறேன். இன்று எனக்குக் கொடுத்த 1001 ரூபாய்களும் ஒவ்வொரு ரூபாயாக வந்தது என்பது எனக்குத் தெரியும். எப்படி இதைச் சேர்க்க முடிந் ததோ, அதேபோல் தலைவர் குமாரராஜா போன்றவர்கள் வெளியில் பிச்சைக்குப் போக வேண்டும்.

அவர் மேல் துண்டை எடுத்து நீட்டிப் பிச்சை கேட்டால் பதினாயிரம், லட்சக்கணக்கில் சேர்க்கலாம். 6 மாதத்தில் லட்ச ரூபாய் சேர்த்தால் ஒழிய நமக்கு வெற்றியில்லை. எனவே, ஒவ் வொரு ஜில்லாத் தோழர்களும் இம் முயற் சியில் ஈடுபட்டு உதவ வேண்டுகிறேன்.

(18.06.1939 அன்று சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 25.06.1939
-விடுதலை,29.6.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக