செவ்வாய், 10 ஜனவரி, 2017

நாஸ்திகர்களே சமதர்மவாதிகள்!

தந்தை பெரியார்



 


கடவுளுக்காக இலட்சம், பத்து இலட்சம் பணம் போட்டுக் கோவிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து, அய்ந்து வேளை, ஆறு வேளை பூஜை செய்து, மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்கமாய்- யோக்கியமாய் நடக்கிறார்களா? கடவுளுக்காகவே சன்னியாசியாய், குருவாய், சங்கராச்சாரியாராய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய், பாதிரியாய், பெரிய குருவாய் இருக்கிறவர்களிலாவது எல்லோரும் ஒழுக்கமானவர்கள் என்று சந்தேகமறச் சொல்லத்தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் நிலையே இப்படி இருக்க, கடவுள் நம்பிக்கையுள்ள சாதாரண பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம்- யோக்கியதை எதிர்பார்க்க முடியும்?

சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. - இது ஆங்கிலத்தில் உள்ள சோஷியலிசம் என்னும் வார்த்தைக் குத் தமிழ் மொழி பெயர்ப்பாகக் கையாளப் படுகிறது என்றாலும், சோஷியலிசம் என்ற வார்த்தையே தேசத்துக்கு ஒரு விதமான அர்த்தத்தில்  பிரயோகிக்கப்படுகிறது.

அநேகமாக அவ்வார்த்தை அந்தந்தத் தேச நிலைமைக்கும், தகுதிக்கும், சவுகரியத் துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக்கப்படுகிறது. சில இடங்களில் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறின வாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்கின்ற வார்த்தை பிரயோகிக்கப் படுகிறது.

ஆகவே, சோஷியலிசத்துக்கு, இதுதான் அர்த்தம் என்று வரையறுக்க, அவ்வார்த் தையில் எவ்விதக் குறிப்பும் இல்லை.
சில இடங்களில் சோஷியலிசத்துக்கும், பொது உடைமை என்பதற்கும் பேதமே இல்லாமல் அர்த்தம் இருந்து வருகிறது. சில இடங்களில் ஒரு சாதாரண விஷயத்துக்கும் அப்பெயர் இருந்து வருகிறது. சில இடங்களில் பொதுவுடைமை வேறாகவும், சமதர்மம் வேறாகவும் இருந்து வருகின்றன.

இங்குச் சமதர்மம் என்கின்ற வார்த் தைக்குச் சமூகத் துறையிலும், பொருளா தாரத் துறையிலும் மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் (பேதமின்றி) வாழ வேண்டும் என்பதையே, சமதர்மம் என்று நான் கருத்துக் கொண்டு, சமதர்மம் என் கின்ற வார்த்தையை இங்குப் பிரயோகிக் கின்றேன்.

ஏனெனில் மற்ற நாடுகளில் சமூகத் துறையில் நம் நாட்டில் உள்ள போன்ற உயர்வு, தாழ்வு, பேதா பேதம் இல்லை.
பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றது.

நம் நாட்டுச் சமுதாய உயர்வு தாழ்வானது, பிறவியி லேயே வகுக்கப்பட்டு, அதை மதத்தோடு பொருத்தி, அதற்கு அரசியல் பாதுகாப்பளிக் கப்பட்டு இருந்து வருகிறது. அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால், அதற்கு நம் நாட்டு மக்கள், அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்கள் சிறிதுகூட ஒப்ப மாட்டார்கள்.

ஒப்பமாட்டார்கள் என்ப தோடு மாத்திரமல்லாமல் அவர்களே நமக்கு எதிரிகளாயும் இருப்பார்கள். ஏனெனில், பிறவி காரணமாய் உள்ள உயர்வு- தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு, அம் மதம் பாமர மக்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிற படியாலும், அதுவே அரசியலுக்கு ஆதார மாய் இருப்பதாலும், அதை மாற்றாமல் அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல், மேல் நாட்டுச் சமதர்மம் பேசுவது, பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவே யாகும்.

முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டுச் சமதர்மத் துக்கு முதற்படியாகும். அதனாலேயே பொருளாதார சமதர்மமே மனித சமூக சாந்திக்கு, மருந்து என்று கருதி இருக்கும் நான், சமுதாயத்தில்- வாழ்க்கையில் சமதர்மத்தை - அபேதவாதத்தை முக்கிய மாய் வலியுறுத்தி வருகிறேன்.

நிற்க, பொதுவாகவே சமதருமம் என்பது எந்த அர்த்தத்தில் இருந்தாலும், சமுதாயம் முக்கியமானாலும், பொருளாதாரம் முக்கிய மானாலும் அதற்குக் கடவுள் உணர்ச்சி, மத நம்பிக்கை என்பவை எதிராகவே இருந்து வந்திருக்கின்றன.

சர்வதேச சமதரும வாதிகளும், பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மத நம்பிக்கையும், சமதர்மத்திற்கு விரோத மானவை என்று தான் சொல்லி இருக் கிறார்கள். ஆதலால் எந்தச் சமதர்ம வாதிக்கும் இதைப் பொறுத்தவரையில் அபிப்பிராய  பேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப் பிராய பேதமில்லாமல் நடந்து தான் தீரும்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து, மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாய் இருக்கிறது. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால் தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும், சமூக ஜாதி பேதமுறை தான் பெரிதும் காரணமாய் - காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு, ஜாதி- பேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக் கூட இடம் தராமல் அடக்கி வரு கின்றதுடன், பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது.

எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களை எல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும், நம் ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத் தான் உண்டுபண்ணி விடும். மற்ற நாட்டு மக்களுக்குப் பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணமெல்லாம், அவர்களில் பிறவியில் கீழ்- மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும்.

நம் மக்களுக்கு வெறும் பொரு ளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது, ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி, பொருளாதார சமதர்மம், சொன்னால் தான், உண்மையாகக் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.

ஆகவே சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம்- ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம் பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கின்றது என்றும், பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு, அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம்.

மதத்தைப் பற்றியோ, மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப்பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால் தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப் பாய் நாஸ்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.

நாஸ்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூடச் சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப்பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது.

ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட் டனவாக - கடவுளால் கற்பிக்கப்பட்டன வாக - கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றனவாகவும் கருதப்படு கின்றன. உதாரணமாகப் பகவத்கீதை என்பது இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதமானதும் மேலானதுமான புஸ்தகம் என்று கருதப்படுகிறது.

மகம்மதியர்கள் குரானை மதிப் பதைவிட, கிறிஸ்தவர்கள் பைபிளை மதிப்பதைவிட, கீதையை அதிக, பக்தியாய் அநேக இந்துக்கள் மதித்திருக்கிறார்கள். ஆனால், அப்புஸ்தகத்தில் நான்கு ஜாதி களும், நான்கு பிரிவான ஜாதிப் பெயர் களும், அததற்குத் தனித்தனி வேலைக் கிரமங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. கீதை என்றாலே பகவான் வாக்கு என்று அர்த்தம்.

ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசு கிறவர்களில் கூட 100-க்குத் 99வு பேர்கள், கீதையைப் பகவான் வாக்கு என்று நம்பிக் கொண்டு தாம் இருக்கிறார்கள்.

ஜாதி வித்தியாசம், உயர்வு - தாழ்வு ஆகியவற்றைப் பற்றிக் கண்ணீர் விட்ட காந்தியார் கூட, கீதைக்குத் தம்மை ஆட் படுத்திக் கொண்டிருப்பதாய்ச் சொல்லியி ருக்கிறார்.

இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல்- கீழ் நிலைகளை எப்படி ஒழிக்க முடியும்! கீதை முறை தவறு என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும், அதைப் பற்றிக் கவலை இல்லை என்றோ சொல்லத் துணியாவிட்டால் -, சொல்லத் தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படிச் சொல்லத் தயார் செய்யாவிட்டால், ஜாதிப்பிரிவு, ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே  இந்தப்படிச் சொல்லும்படியான ஒருவன் கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும்  மக்களால் நாஸ்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.

ஆதலால் நாஸ்திகனாகவோ, நாஸ்தி கனாவதற்குத் தயாராகவோ, நாஸ்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காத வனாகவோ இருந்தால் ஒழிய, ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.

இதுமாத்திரம் அல்லாமல், சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும், வாழ்வு மூலமாகவும் இன்று இருந்துவரும் பிரிவுக்கும், பேதத் துக்கும், உயர்வு தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி என்றும், கடவுள் சித்தத் தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படு மானால் - அதை நம்பாமல் இருப்பது நாஸ்திகமானால் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாஸ்திகனாகத் தான் வேண்டும்.

ஏனெனில், செல்வவான்களிடம் இருக் கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும் கடவுள் கொடுத்தவை என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டவை என்றும் சொல்லப் படுமானால், அந்தக் கடவுளை யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

அதை யார் தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக்கடவுளும், எந்த மாதிரியான அயோக் கியக் கடவுளும், மனிதரில் ஒருவரை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படிக்கும், மற்றொருவனைக் கீழ் ஜாதி யாக்கிப் பாடுபட்டுப் பாடுபட்டுச் சோம்பேறி களுக்கு அழுதுவிட்டுப் பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தை அற்று, இருக்க இடமற்றுத் திரியும்படிக்கும் சொல்லி இருக்கவே இருக்காது.

இந்தக் காரியங்களுக்குக் கடவுளைப் பொருத்துகின்றவர்களை யோக்கியர்கள் என்றோ, அறிவாளிகள் என்றோ யாராலும் சொல்ல முடியாது.
ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள் ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.

நாட்டுக்கோட்டையார்களில் 10 லட்சம், 20 லட்சம், கோடிக்கணக்கான ரூபாய்ச் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர் களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும் பாட்டிற்கும், இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும், இவர்கள் நடந்துகொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா?

ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத் தனத்தினால், தொழில் முறையினால், மன வலிமையினால், சம்பவங்களால் ஏற்பட்ட தென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?

இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேரு வதற்கு ஆதாரமாய் இருந்த முறையை யார்தான் சரியான முறை என்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர் களுக்குக் கொடுத்தவர்களில் பெரும் பான்மை மக்கள் இன்று இருக்கும்  நிலையை யார் தான் நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டுவந்து குறுக்கே போட்டால், அக் கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?

மற்றும் கடன்பட்டு வட்டி கொடுத்த மக்களுடையவும், பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய, அப்பணங்களைக் கோவில் கட்ட, வாகனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கலி யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம், வாண வேடிக்கை செய்யப் பாழ்படுத்தப்படுமா னால், யார்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள் தான் இருக்க முடியும்?

அப்படியும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொல்லப்படுமானால், அப்படிப் பட்டக் கடவுளை அழித்து ஒழித்து விடுவ தில் யாருக்கு என்ன நஷ்டம் வரும்?
அப்படிப்பட்டக் கடவுளை யாரும் ஒழிக்க முடியாது என்று சொல்லப்படு மானால், அது ஒழிந்து போகுமே என்று ஒருவராவது ஏன் வருத்தப்பட வேண்டும்?

இதையெல்லாம் பார்க்கும் போது கடவுளைக் கற்பித்தது நல்ல எண்ணம் கொண்டு என்பதாக நம்ப நம்மால் முடிய வில்லை.
சோம்பேறிக் கொள்ளைக் கூட்டங்கள், கொடுங்கோன்மைக்காரன், பேராசைக் காரன் முதலிய கூட்டத்தாரின் சுயநலத் துக்குத்தான் பயன்படுகின்றதே ஒழிய, வேறு காரியத்துக்குக் கடவுள் பயன்படுவதே இல்லை.

மனித சமூக வாழ்க்கை ஒழுக்கத் திற்கு ஆக என்று கடவுள் சிருஷ்டிக்கப் பட்டு இருக்குமானால், அப்படிப்பட்ட கடவுளைப் பற்றி அது இருந்தாலும், அது இல்லாவிட்டாலும் நமக்குக் கவலை யில்லை.

இதுவரை எந்தக் கடவுளால் யாருக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம் ஏற்பட்டது என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கிறேன்.
கடவுளைச் சதாகாலமும் கட்டி அழுது, அதனாலேயே ஜீவனம் நடத்தும் அர்ச்ச கர்கள், குருக்கள் ஆகியவர்கள் முதலில் ஒழுக்கமாய் இருக்கிறார்களா? இவர்களு டைய ஒழுக்கக் காரியங்கள் நமக்குத் தெரியாதா?

கடவுளுக்காக இலட்சம், பத்து இலட்சம் பணம் போட்டுக் கோவிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து, அய்ந்து வேளை, ஆறு வேளை பூஜை செய்து, மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்கமாய்- யோக்கியமாய் நடக் கிறார்களா? கடவுளுக்காகவே சன்னியா சியாய், குருவாய், சங்கராச்சாரியாராய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய், பாதிரியாய், பெரிய குருவாய் இருக் கிறவர்களிலாவது எல்லோரும் ஒழுக்க மானவர்கள் என்று சந்தேகமறச் சொல்லத் தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் நிலையே இப்படி இருக்க, கடவுள் நம்பிக்கையுள்ள சாதாரண பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம்- யோக்கியதை எதிர்பார்க்க முடியும்?
எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக் கூடாது என்பதற்காக நான் கூறவில்லை. மனித சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய், எந்தக் கடவுளும் இருக்கக்கூடாது என்றும், அப்படிப்பட்டக் கடவுளை இருக்க விடக்கூடாது என்றும் தான் வற்புறுத்திக் கூறுகின்றேன்.

மனித வாழ்க்கைக்கும், பேதா பேதங்களுக்கும் கடவுள் சம்பந்தமில்லை என்று சொல்லும் பட்சத்தில் அக் கட வுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?
14.7.1970. உண்மை இதழில் தந்தை பெரியார்கட்டுரை,

-விடுதலை,7.9.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக