வெள்ளி, 27 ஜனவரி, 2017

ஜமீன்தாரல்லாதார்மகாநாட்டில் பணநாயகம்பற்றி தந்தை பெரியார் உரை




தோழர்களே! மொத்த விஸ்தீரணத்தில் மூன்றிலொரு பாக பரப்புக்குமேல் ஜமீன் முறை ஆட்சியிலிருக்கும் இந்த சேலம் ஜில்லாவில் முதல் முதலாக இன்று இங்கு ஜமீன்தாரல்லாதார் மகாநாடு ஒன்று கூட்டப்பட்டதானது எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும்.

நாம் உலக பொது ஜனங்களுக்குச் செய்ய வேண்டிய வேலைகளின் முக்கியத்துவம் எல்லாம் இம்மாதிரியாக பல அல்லாதார்கள் மகாநாடுகள் கூட்டி அவர்களது ஆதிக்கங்களையும், தன்மைகளையும் ஒழிப்பதில்தான் பெரிதும் அடங்கியிருக்கின்றது. இன்னும் இதுபோலவே பல மகாநாடுகள் கூட்டவேண்டியிருக்கிறது. சுயமரியாதை மகாநாடுகள் கூட்டப்படும் இடங்களில் இம்மாதிரி மகா நாடுகள் அடிக்கடி கூட்டப்படுமென்று எதிர்ப்பார்க்கிறேன்.

உதாரணமாக லேவாதேவிக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, முதலாளிகள் அல்லாதார் மகாநாடு, தொழிற்சாலை சொந்தக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, வீடுகளின் சொந்தக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, நிலச்சுவான்தார் அல்லாதார் மகாநாடு மேல்ஜாதிக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, பணக்காரர்கள் அல்லாதார் மகாநாடு என்பது போன்ற பல மகாநாடுகள் கூட்டி இவர்களின் அக்கிர மங்களையும், கொடுமைகளையும், மோசங்களையும், பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டி அவைகளை ஒழிக்கச் செய்யவேண்டியது நமது கடமையாகும்.

உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த தன்மைகளால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும் சமத்துவத்திற்கும், முற் போக்குகளுக்கும் தடைகளும், சாந்திக்கும் சமாதானத் துக்கும் முட்டுக் கட்டைகளும் இருக்கின்றனவோ.

அவைகளெல்லாம் அழிந்தொழித்து என்றும் தலை தூக்காமலும், இல்லாமலும் போகும்படி செய்யவேண்டியது தான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய லட்சியமாகும். மனித சமூகத்துக்கு உள்ள தரித்திரத்திற்குக் காரணம் செல்வவான்களேயாகும். செல்வவான்கள் இல்லாவிட்டால்  தரித்திரவான்களே  இருக்க மாட்டார்கள், மேல் வகுப்பார் இல்லாவிட்டால் கீழ்வகுப்பார் இருக்கவே மாட்டார்கள். ஆதலால்தான் இம்மாதிரி அல்லாதவர்கள் மகாநாடு கூட்டவேண்டுமென்கின்றோம்.

இன்று ஏன் முதன் முதலாக ஜமீன்தார் அல்லாதார் மகாநாடு கூட்டினோமென்றால் இன்றைய உலக ஆதிக்கம் அவர்கள் கையிலேயே இருந்து வருகின்றது. இதற்குமுன் இந்நாட்டு ஆதிக்கம் பார்ப்பனர்கள் கையிலேயே இருந்தது.  அதற்காகவே நமது இயக்கம் பல பார்ப்பனர் அல்லாதார் ஸ்தாபனங்களும், மகாநாடுகளும், வாலிபசங் கங்களும், புதியமுறையில் தோற்றுவித்தும் கூட்டுவித்தும் பார்ப்பனக் கொடுமைகளையும் மோசங்களையும் ஒருவாறு பாமரமக்களுக்கு விளக்குவதில் முனைந்து நின்று வேலைசெய்ததின் பயனாய் ஒரு அளவுக்குப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதில் வெற்றி பெற்றோம்.

ஆனால், அந்தப் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது என்கின்ற சந்தோஷத்தை அடைவதற்குள் அதற்குப்பதிலாக அதுபோன்ற கொடுமையும் மோசமுமான ஜமீன்தார் ஆதிக்கம் தலைதூக்கி தாண்டவமாட ஏற்பட்டுவிட்டது. முன்பிருந்தகெடுதியும் தொல்லையுமே பார்ப்பன ஆதிக்கம் என்னும் பேரால் இல்லாமல் ஜமீன்தார் ஆதிக்கம் என்னும் பேரால் இருந்துவருகின்றன.

பார்ப்பனர்களைப்போலவே ஜமீன்தார்கள் பிறவியின் காரணமாகவே பரம்பரை உயர்வுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் இன்றைய ஆட்சி முறைக்கு தூண்கள் போலவும் இருந்து வருகின்றவர் களாவார்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் என்பவர்கள் உலகத்துக்கு வேண்டாதவர்களும், உலக மக்கள் கஷ்டங்களுக்கெல்லாம் காரணமாயிருப்பவர்களு மாவார்கள்.

இந்த ஜமீன்தார்கள் எப்படி ஏற்பட்டார்கள்? எப்படி யிருந்து வருகின்றார்கள்? இவர்களது செல்வமும், மேன்மையும் எதற்குப் பயன்படுகின்றன? என்பவைகளை யோசித்துப் பார்த்தால் இவர்கள் உலகுக்கு வேண்டாத வர்கள் என்பதும், ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் நன்றாய் விளங்கும்.

இன்றைய தினம் சாதாரணமாய் ஜமீன்தார்கள் என்றால் என்ன? என்று பார்ப்போமானால் ஒரு விஸ்தீரணமுள்ள பிரதேசத்தை சொந்தமாக உடையவர்கள் என்றும், அந்த விஸ்தீரணத்திலுள்ள பூமிகளுக்கு உள்ள வரி (கிஸ்தி) இந்த ஜமீன்தார்களுக்கே சேர்ந்தது என்றும் அதில் ஏதோ ஒரு பாகம் சர்க்காருக்குச் செலுத்திவிட்டு பாக்கியை தாங்களே அனுபவிப்பவர்கள் என்றும் தான் அருத்தமாய் இருந்து வருகின்றது.

பொதுவாக பூமிகளுக்குக் கிஸ்தி அதாவது நிலவரி கொடுப்பது என்பது எதற்காக வழக்கத்திலிருந்து வருகின்றது என்றால் பயிரிடும் மக்களின் நன்மைக்கும் பத்திரத்திற்குமான காரியங்களைச் செய்யவே பயிரில் ஒரு பங்கு கொடுக்கப்படுவதாகும். அது போலவே சர்க்கார் வாங்கும் நிலவரிகளுக்கும் மற்றபடியான வரிகளுக்கும் சரியாகவோ, தப்பாகவோ ஒரு வரவு செலவுத்திட்டம் காட்டி அதன்படி படிப்பு, சுகாதாரம், நீதி, பத்திரம், போக்குவரவு சாதனம் முதலிய காரியங்களுக்குப் பயன்படுத்தி வருவதாய்ச் சொல்லியும், கணக்கு காட்டியும் வருகிறார்கள், ஆனால் இந்த ஜமீன் தார்களால் குடிகளிடமிருந்து வாங்கும் நில வரிக்கும், வாரத்துக்கும் இது போல் குடிஜனங்களுக்கு என்ன பிரதிபிரயோஜனம்  இருந்து வருகின்றது? என்பதை நாம் முக்கியமாய் கவனிக்க வேண்டும்.

ஜமீன்தார்கள் தங்கள் வரும்படியில் சர்காருக்கு ஏதோ ஒரு சிறு பாகம் கொடுப்பதாய்ச் சொல்லப்படுவதெல் லாம் குடிகளிடமிருந்து வரியை எப்படியாவது வசூலிப்ப தற்கும், ஜமீன்தார்கள் என்ன அக்கிரமம் செய்தாலும் குடிகளால் ஜமீன்தாரர்களுக்கு ஆபத்து இல்லாமல் இருப்பதற்கும் கூலியாகவே ஒழிய மற்றபடி ஜமீன் குடிகளுடைய நன்மைக்கு என்பதாக எண்ணங் கொண் டல்ல என்பதே எனதபிப்பிராயம்.

இந்த ஜமீன்தார்களுக்கு இந்தப்பதவி வந்ததற்கு காரணம் எல்லாம் ஆதியில் அந்நிய சர்க்கார் இத்தேசத்துக்கு வந்தபோது அவர்களுக்கு வேண்டிய சவுகரியம் செய்து கொடுத்தும், இங்குள்ள எதிர்ப்புகளை அடக்கி ஒடுக்க உதவி செய்ததுமான காட்டிக் கொடுத்த காரியங்களுக்குத்தான் சன்மானமாய் (லஞ்சமாய்) கொடுக்கப்பட்டதேயொழிய வேறில்லை.

இப்படிப்பட்ட இந்த ஜமீன்தார்களின் யோக்கியதையை நான் உங்களுக்கு அதிகமாய் சொல்லிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய அருங்குணங்களில் எல்லாம் குடிப்பதும், கூத்திமார்கள் வைப்பதும், பந்தயம் சூது ஆடுவதும் தலை சிறந்த குணங்களாகும். மேலும் இப்பொழுது சிறிதுகாலமாய் அதாவது பார்ப்பன ஆதிக்கம் ஒடுங்க ஆரம்பித்த பின்பு அரசியல் தேர்தல்களை பணத்தின் மூலம் வியாபார முறையில் நடத்தி வெற்றி பெற்று ஆதிக்கமடைந்து பெருமை அடைவதையும், பணம் சம்பாதிப்பதையும் மற்றொரு அருங்குணமாய் கொண்டி ருக்கிறார்கள்.

மற்றபடி இவர்களிடம் என்னயோக்கியதை இருக்கிறது? இவர்களால் தேசத்துக்கோ, மனித சமூகத்துக்கோ என்ன பயன்? என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்பது தெற்றென விளங்கும். இன்றைய ஜமீன்முறை நாளடைவில் எல்லா பூமியும் அவர்கள் கைக்கே போய்ச்சேரும் படியானதாகவும், எல்லா அதிகாரமும், பதவியும் அவர்கள் கைக்கேபோய்ச் சேரும்படியான மாதிரியிலும் தான் இருந்து வருகின்றது.

ஏனெனில் வரி கொடுக்க முடியாத பூமிகளும், வரி கொடுக்கவும், செலவுக்கும் வரும்படி போதாமல் இருந்துவரும் குடியானவனுடைய பூமிகள் முழுவதும் பணக்காரர்களாயிருக்கின்ற ஜமீன்தாரர்களுக்குத் தான் நாளாவட்டத்தில் போய்ச் சேருகின்றதாய் இருக்கிறது. இந்தக் காரணத்தால்தான் ஒவ்வொரு ஜமீன்தார் களுக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் பூமிகள் இருந்து வருகின்றன.

இதுபோலவே தேர்தல்களிலும், அது எப்படிப்பட்ட தேர்தலாய் இருந்தாலும் ஜமீன்தாரர்கள் தாராளமாய் 40,000, 50,000, ஒரு லட்சம், இரண்டு லட்சம், என்கின்ற கணக்கில் ரூபாய்களை வாரி இறைத்து எலக்ஷன்களில் வெற்றி பெற் றும், மற்றும் வேறு இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு 1000, 5000 என்கின்ற கணக்கில் ரூபாய்களை கொடுத்து அவர்களை தங்கள் அடிமையாக்கியும் சகல பதவி களையும் அதிகாரங்களையும் சுவாதீனப்படுத்திக் கொள்ளவும் முடிகின்றது.

இந்த மாதிரி விலை கொடுத்து தங்களின் செல்வத்தின் பயனாயும் செல்வாக்கின் பயனாயும் பெற்ற பதவியும் அதிகாரமும் ஆதிக்கமும் எந்தவழியில் உபயோகப்படுத்தினாலும் கேள்வி கேட்பாடு இல்லாமல் செலாவாணியாகி வருகின்றதைப் பார்க்கின்றோம்.

ஜமீன்தாரர்களின் நடவடிக்கைகளை நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இன்று யாரும் இல்லை என்றே நினைக்கின்றேன். சில ஜமீன்தாரர்கள் அவர்கள் எல்லைக்குள்பட்ட விஸ்தீரணத்தில் எந்தப் பெண் ருதுவானாலும் அவர்களே தான் முதலில் சாந்தி முகூர்த்தம் செய்யவேண்டும் என்கின்ற (எழுதாத) சட்டம் அமலில் இருந்து வருவது எனக்குத் தெரியும். இதில் ஒன்றும் அதிசயம் இருப்பதாக யாரும் நினைக்க வேண்டிய தில்லை.

இந்தச் சட்டம் சில மதகுருக்கள்மாருக்கும் இருந்துவருவது எனக்குத் தெரியும். இது தவிர தனது குடிஜனங்களிடம் இருக்கும் நல்லபெண், நல்லமாடு, குதிரை முதலியவைகள் ஜமீன்தார்களுக்கே சொந்தமானது என்கின்ற முறையும் சில இடங்களில் இருந்து வருவது எனக்குத் தெரியும்.

மற்றும் பல ஜமீன்தாரர்கள் சுகவாசமும், வெளிநாடு சுற்றுப்பிராயணமும், 100, 200 கணக்கான மனைவிகளும், வைப்பாட்டிகளும், ஆயிரம் இரண்டாயிரக்கணக்கான தாசிகள் விபச்சாரிகள் ஆகியவர்கள் சம்பந்தமும் வைத்துக் கொண்டிருப்பதுடன் 40, 50, 100, 200 குதிரைகளும் 10, 20, 30, மோட்டார்கார்களும், 10, 20, அய்யர்கள் என்று பெயர்வழங்கும் மாமாக்களையும் உடையவர்களாக இருந்துகொண்டு நெல், மரத்தில் காய்க்கின்றதா? கொடியில் காய்க்கின்றதா? செடியில் காய்க்கின்றதா? என்றுக்கூட தெரியாதவர்களும் வேஷ்டிகள் செடியில் காய்க்கின்றதா? அல்லது தறியில் நெய்யப் படுகின்றதா? என்று தெரியாதவர்களும் ஏராளமாய் இருக்கிறார்கள்.

இவர்கள் வாழ்க்கை நிலையை அவர்களது பள்ளிக்கூட வாழ்வில் இருந்தே கவனித்தால் பெரும்பாலும் ஒவ்வொருவர் களுடைய யோக்கியதையும் விளங்கும். சாதாரணமாக சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டோமேயானால் வருஷமொன்றுக்கு ஜமீன்தாரர்களுக்கு குடிகளிடமிருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் வரையில் கிஸ்தி (நிலவரி) கிடைக்கின்றது.

இதில் அரைக்கோடி ரூபாய் மாத்திரமே இவர்கள் சர்க்காருக்குச் செலுத்திவிட்டு பாக்கி இரண்டு கோடி ரூபாய்களை இந்த ஜமீன்தார்கள் அனுபவித்து வருகின்றார்கள், இந்த  இரண்டு கோடி ரூபாயில் 100க்கு 90 பாகம் ரூபாய்கள்  நான் மேல் குறிப்பிட்ட வழியிலேயே பாழாக்கப்படுகின்றன.

இந்த நிலவரியானது சென்னை அரசாங்கத்தாருக்கு மாகாணம் பூராவிலும் கிடைக்கும் நிலவரிக்கு 3இல் ஒரு பங்குக்கு மேலானதென்றே சொல்லுவேன் இந்தப்படி விளைவின் பயனாய் உண்டான செல்வம் அதுவும் எத்தனை ஏழைக்குடியானவன், விவசாயக்கூலிக்காரன் ஆகியவர்கள் பெண்டு பிள்ளைகள் சகிதம் தங்கள் சரீரங்களை தினம் 8 மணி முதல் 15 மணிவரையில் வியர்வைப் பிழிந்து சொட்டு சொட்டாய் சேர்த்த ரத்தத்திற்கு சமானமான செல்வத்தை, ஒரு கஷ்டமும், ஒரு விபரமும் அறியாதவர்களும், ஒரு பொறுப்பும் இல்லாதவர்களுமான ஜமீன்தார்கள் சர்க்காரில் லைசென்சு பெற்ற கொள்ளைக் கூட்டத்தார்கள் போல் இருந்து கொண்டு மக்கள் பதறப்பதற வயிறு, வாய் எரிய எரிய, கைப்பற்றி பாழாக்குவதென்றால் இப்படிப்பட்ட ஒரு கூட்டம் உலகில் இருக்க வேண்டுமா? என்றும் இவர்களின்  தன்மையையும், ஆதிக்கத்தையும் இன்னும் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜனசமுகம் சுயமரியாதையை உணர்ந்த  ஜன சமூகமாகுமா? என்பதைப்பற்றியும் யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

சாதாரணமாக ஜமீன் என்கின்ற மேற்கண்ட தன்மை, நாட்டில் அடியோடு இல்லாமல் இந்த லாபங்களையும் அதாவது இந்த 2 கோடி ரூபாய்களையும் சர்க்காரே நேராய் அடைவதாய் இருந்தால் அதனால் மக்களுக்கு எவ்வளவு பயன் ஏற்படுத்தலாம் என்பதையும் யோசிக்க வேண்டுகின்றேன்.

ஆதலால் மேல்ஜாதி, கீழ்ஜாதி முறை கூடாதென்றும், குருக்கள் முறைக் கூடாதென்றும் எப்படி நாம் பல துறைகளில் வேலை செய்கின்றோமோ அதுபோலவேதான் ஜமீன்தாரன் குடிகள் என்கின்றத் தன்மையும், முறையும் கூடாதென்று வேலை செய்ய நாம் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றோம் என்று இச்சிறு வார்த்தைகளோடு இந்தத் தீர்மானத்தை நான் பிரேரேபிக்கின்றேன் என்று பேசினார்.

தீர்மானங்கள்

1. உலக செல்வத்தை ஒரே பக்கம் சேர்க்கும் முறையை ஒழிப்பதற்கும், உலகப் பொருளாதார சமத்துவத்துக்கும்,  பாடுபடுகிற மக்கள் அதன் பயனை சரிவர அடைய வேண்டும் என்பதற்கும், ஜமீன்தார் முறையானது பெருத்த கெடுதியாகவும், தடையாகவும் இருந்துவருவதால் ஜமீன்தார் தன்மையை அடியோடு ஒழிக்கப் பகுத்தறிவுக்கு  ஏற்றவழியிலும், பொருளாதார சமத்துவ நியாயவழியிலும் சுயமரியாதை இயக்கம் பாடுபடவேண்டுமென்று இம் மகாநாடு தீர்மானிக்கிறது. பிரேரேபித்தவர்:-ஈ. வெ. ராமசாமி, ஆமோதித்தவர்: கே.வி.அழகர்சாமி.

2. இந்திய நாட்டு தேசியக் கிளர்ச்சி என்பதானது சுயராஜ்யம், சுயஆட்சி, ஜனநாயக ஆட்சி என்பவைகளின் பெயரால் சுமார் 50 வருஷகாலமாச் செய்து வந்த வேலைகளின் பயனெல்லாம் ஜமீன்தாரர்களுக்கே அனுகூலமாயிருப்பதால்.இந்திய ஸ்தல ஸ்தாபனம், சுயஆட்சி அரசாங்கம்  ஜனநாயக ஆட்சி ஆகிய நிர்வாகமெல்லாம் பொது ஜன விரோதிகளான ஜமீன் தாரர்கள் வசமும் அவர்கள் போன்ற செல்வ வான்களிடமே போய்ச்சேருவதாயிருப்பதாலும் இனி அந்தப்படி நேராமல் அதாவது ஜமீன்தாரர்களும் செல்வவான்களும் பொறுப்பற்றவர்களாகிய படித்த கூட்டத்தார் என்பவர்களும் கைப்பற்றாமல் இருக்கும்படி சகல முயற்சிகளும் செய்து அவை ஏழைப் பாட்டாளி மக்கள் கைக்கே வரும்படியான மார்க்கத்துக்கு சுயமரியாதை இயக்கம் மும்முரமாய் உழைக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறது. பிரேரே பித்தவர்: ப. ஜீவானந்தம், ஆமோதித்தவர்: நடேசன்

3. ஜமீன்தார்கள் நிலைத்திருப்பதற்கும், அதிகரிப் பதற்கும் அனுகூலமாயிருந்து வரும் சட்டங்களையும் முறைகளையும் ரத்து செய்துவிட வேணுமாய் கிளர்ச்சி செய்யச் சட்டசபைகளின்  மூலம்  அச்சட்டங்கள் ரத்தாக வேலை செய்யவேண்டும் என்றும் இம்மகாநாடு தீர் மானிக்கிறது. (எ) இக்காரியங்களை நடைபெறச் செய்யவும் ஜமீன் குடிகள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்ற தீவிர முயற்சிகள் செய்யவும் கீழ்க்கண்டவர்களடங்கிய கமிட்டி ஒன்றை நியமிக்கிறது.

தோழர்கள்: ஈ.வெ. ராமசாமி, சி. நடராஜன், கே.எம். பாலசுப்பிரமணியம்  பி.ஏ., பி.எல்., கே.வி. அழகர்சாமி, வி. பார்த்தசாரதி, பிரேரேபித்தவர்:  எஸ்.வி. லிங்கம், ஆமோதித்தவர்: கோவை கிஸன் முதலிய சுமார் 20, 30 தோழர்களாகும்.

குடிஅரசு - சொற்பொழிவு - 27.08.1933

-விடுதலை,18.5.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக