வெள்ளி, 27 ஜனவரி, 2017

கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்

10.08.1930, 17.08.1930- குடிஅரசிலிருந்து...

உங்களுடைய தெய்வமும், மதமும் விடப்பட்டொழிந்தாகவே வேண்டும். நான் கடவுளை உண்டு என்றோ இல்லை என்றோ சொல்ல வரவில்லை. கடவுள் இருந்தால் அது இருக்கட்டும். அது இந்த ராமசாமிக்காக ஓடிப்போய் விடாது. அதற்கு எவனும் வக்கீலாக இருக்க வேண்டியதில்லை. ராமசாமி கடவுள் இல்லை என்கிறான். பூசை வேண்டாம் என்கிறான் என்றெல்லாம் பேசுகிறார்கள். நல்ல கடவுளாக இருந்தால் அது உங்களது பணச் செலவை எதிர்பார்க்குமா? அல்லது உங்கள் எண்ணெயையும், பாலையும் பஞ்சாமிர்தத்தையும் குளிப்பாட்டுதலையும் எதிர்பார்க்குமா? கடவுள் உண்டு, இல்லை என்ற சண்டை உலகம் தோன்றிய நாள் முதல் நடக்கிறது. நமக்கு அதை முடிவு செய்ய அவசியமில்லை. உன் அறிவையும் முயற்சி யையும் உன் வாழ்க்கைக்கு உபயோகப்படுத்து. உன் செல்வத்தை வீனாக கடவுளுக்கென்று அழிக்காதே என்றே சுயமரியாதை இயக்கம் சொல்லுகிறதே தவிர வேறில்லை. உங்கள் தெய்வங்களது நிலை மையில் நான் இருக்க சம்மதிக்கமாட்டேன். ஏனெனில் நீ குளிப்பாட்டும் போது தான் குளிக்கவேண்டும். நீ வேஷ்டி கட்டிவிடும் போது தான் கட்டிக் கொள்ள வேண்டும். நீ எண்ணெய் தேய்த்து விடும்போது தான் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு யார் சம்மதிப்பார்கள்? கடவுள் உன் பூசையையும் உற்சவத்தையும் நகைகளையும் விரும்புகிறது என்று சொல்லுவது வெட்கக்கேடு.
-விடுதலை,27.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக