ஞாயிறு, 22 ஜனவரி, 2017

உயர் எண்ணங்கள் மலரும் சோலை தந்தை பெரியார்

தந்தை பெரியார் நினைவு நாளினை யொட்டி (24.12.2016) திராவிடர் கழகத் துணைத் தலைவர்  கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சென்னை வானொலியில் உரையாற்றினார்

அவரது உரை வருமாறு:

உயர் எண்ணங்கள் மலரும் சோலை தந்தை பெரியார்

அறிவில் வயதில் முதியார் - நாட்டின்

வாய்மைப் போருக்கு என்றும் இளையார்

உயர் எண்ணங்கள் மலரும் சோலை

ஓதும் ராமசாமிப் பெரியார் வாழியவே!

என்று தந்தை பெரியாரின் சீடரான புரட்சிக்கவிஞர் பாடினார்.

வெறும் வார்த்தை அழகுக்காக அப்படிப் பாடிடவில்லை; ஒவ்வொரு சொல்லிலும் பொருள் பொதிந்திருக்கிறது என்பதுதான் உண்மை - உண்மையிலும் உண்மை.

தந்தை பெரியார் 94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாள்கள் வாழ்ந்தார். மக்கள் மறுமலர்ச்சிக்காக அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டதை நாள்கணக்கில் சொல்லவேண்டும் என்றால் 8,200 நாட்கள். இது பூமியின் சுற்று அளவைவிட 33 மடங்கு அதிகம். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தொலைவைவிட மூன்று மடங்கு.

கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் 10,700, கருத்துரை ஆற்றிய காலம் 21,400 மணிகள், நாள்கணக்கில் சொன் னால் 891 நாட்கள். அவர் ஆற்றிய அரும்பெரும் சொற் பொழிவுகளை ஒலிப்பேழையில் பதிவு செய்தால் இரண் டாண்டுகள் 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.

உலகளவில் இத்தகு சாதனைக்கு உரிய சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் ஒருவரே!

அவருடைய களம் சமுதாயம், அரசியல் தொடர் புடையது என்றாலும் பெரும்பாலும் பிறவிப் பேதத்தால் பாழடைந்து போன சமுதாயத்தைத் தலைகீழாக மாற்றி அமைக்கும் மாபெரும் புரட்சிப் பணியேயாகும். இல்லறம், துறவறம் என்பதைத்தான் நாம் அறிவோம். தந்தை பெரியார் மூன்றாவதாக தொண்டறம் என்ற ஒன்றை  தம் வாழ்வின் மூலம் மனித சமூகத்திற்குக் கொடையாக அளித்துச் சென்றுள்ளார்.

தொடக்கத்தில் அவர் அரசியலில் பயணித்திருந்தாலும், அதுகூட சமுதாயத் துறையில் மாற்றம் காண்பதற்கான வாய்ப்பு இருந்தது என்ற எண்ணத்தினால்தான்.

அனுபவத்தில் அது கை கூடாது என்று கண்ட மாத்திரத்தில் அரசியலுக்கு முழுக்குப் போட்டு, சமு தாயத் துறையில் மாற்றத்தை உருவாக்கும் உயரிய நோக்கத்தோடு சுயமரியாதை இயக்கம் கண்டார்; தன் கருத்துப் பிரச்சாரத்திற்காக ‘குடிஅரசு', ‘ரிவோல்ட்', ‘பகுத்தறிவு‘, ‘புரட்சி', ‘விடுதலை', ‘உண்மை', ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்' போன்ற ஏடுகளை நடத்தினார். தன்னால் தொடங்கப்பட்ட ‘குடிஅரசு' வார இதழின் முதல் தலை யங்கத்திலேயே தன் நிலைப்பாட்டை - தத்துவத் சொற் களால் வெளிப்படுத்தினார்.

‘‘மக்களுக்குச்சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர்தல் வேண்டும். உயர்வு, தாழ்வு என்று இருக்கக் கூடிய உணர்ச்சியினை ஒழித்து, அனைத்துயிரும் ஒன்றென்ற உண்மை அறிவு மக்களிடம் பரவ வேண்டும். சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும்.

இந்நோக்கங்கள் நிறைவேற உண்மை நெறிபற்றி, இவர் எனக்கு இனியர், இவர் நமக்கு மாற்றார் என்ற விருப்பு வெறுப்பு இன்றி, நண்பனேயாயினும் ஆகுக, அவரது சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாமல் கண்டித்து ஒதுக்கப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

உவமை கூறமுடியாத இந்த உயர் எண்ணமும், அணுகுமுறையும் கடைசி மூச்சு அடங்கும் வரை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் ஊனோடு, உதிரத்தோடு, உயிரோடு ஒட்டி உறவாடியது. நாணயத்திலேயே அறிவு நாணயம் என்பது அவர் மதித்துப் போற்றி வந்த ஒழுகலாறு!

பிறப்பின்அடிப்படையிலே வருண தருமம்,ஜாதி முறை,அவற்றின்அடிப்படையிலேஉயர்வுதாழ்வு, தீண்டாமை என்னும் நோய் - இவற்றைக் கட்டிக்காக் கும் காவல் அரண்களாக கடவுளும், மதமும், வேத மும், சாத்திரமும், இதிகாசமும், புராணங்களும் இருக் கும்பொழுது, இவற்றை ஒழித்தாலன்றி, பிறப்பின் அடிப்படையிலே உயர்வு - தாழ்வு கற்பிக்கப்படுகிற, மனித சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் எதிரான ஜாதியை, வருணாசிரமத்தை ஒழிக்க முடியாது என்ற உயர்ந்த சிந்தனையின் அடிப்படையிலேதான் தனது தொண்டினை வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டார்.

தந்தை பெரியார்பற்றி அவரது தலைமகனான அறிஞர் அண்ணா கூறுவது இந்த இடத்தில் பொருத்தமானது.

‘‘மூலபலத்தோடு போர் புரிவதுதான் தந்தை பெரியாரின் போர்முறை'' என்று அறிஞர் அண்ணா அவர்கள் அய்யா அவர்களை மிகத் துல்லியமாகக் கணித்துக் கூறியதுதான் சரியானதாகும்.

தான் சொன்னது என்பதற்காக எதனையும் ஏற்க வேண்டும் என்று நினைக்கிற, விரும்புகிற எதேச்சதிகார சிந்தனை உள்ளவரல்ல - அந்த உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார்.

‘‘கடவுள் சொன்னது, மகான் சொன்னது, ரிஷி சொன்னது, அவதார புருஷர்கள் சொன்னது என்று பார்க்கிறானே ஒழிய, தன் புத்தி என்ன சொல்கிறது என்று பார்ப்பதே இல்லை'' (‘விடுதலை', 3.4.1961) என்று வேதனைப்படுகிறார்.

தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை என்பது அவர்தம் சுயசிந்தனையே! அவர் சொன்னார், இவர் சொன்னார், அதனாலே நான் சொல்லுகிறேன் என்று சொல்லுபவர் அல்லர்.

தீண்டாமை, ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று எந்த அளவுக்குத் தந்தை பெரியார் பாடுபட்டாரோ அதற்குச் சற்றும் குறையாத அளவுக்குப் பெண்ணடிமைத் தன்மைபற்றி உதிர்த்த அவரது உயர் எண்ணங்கள் ஒப்பரியவை.

பெண் அடிமை என்பது மனித சமுதாய அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம், பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது.

(‘குடிஅரசு', 16.6.1935) என்று குறிப்பிடுகிறார். தந்தை பெரியார் அவர்களின் ‘பெண் ஏன் அடிமையானாள்?' என்ற நூல் பெண்ணுரிமை, மனித உரிமை கோரும் ஒவ்வொருவரும் படித்தாக வேண்டிய அறிவுக் களஞ்சியமாகும்.

‘‘பெண் உரிமை என்று நினைக்கும்போது, நீங்கள் உங்கள் மனைவியை நினைத்துச் சிந்திக்காதீர். உங்கள் மகளை நினைத்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லும் தந்தை பெரியாரின் வேண்டுகோள் ஆண் ஆதிக்க கல்நெஞ்சம் உடையவரின் நெஞ்சையும் கரைக்கவே செய்யும்.

ஒவ்வொரு துறையிலும் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை தனித்தன்மை உடையதாகவே இருக்கும்.

தொழிலாளர்களைப்பற்றிச் சொல்லும்பொழுது, ‘‘எந்தக் காரணத்தைக் கொண்டும், பாடுபடும் மக்கள் நிலை தாழ்த்திருக்கவும், பாடுபடாத மக்கள் உயர்ந்திருக்கவும் ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர் கிளர்ச்சியின் முக்கிய தத்துவமாக இருக்கவேண்டும்'' (‘குடிஅரசு', 1.10.1933) என்கிறார்.

தொழிலாளி என்பவன் ஒரு நிறுவனத்தின் பங்காளியாக இருக்க வேண்டும் என்ற அவரின் கருத்து - அதற்கு முன் யாரும் கூறிடாத ஒன்றே.

சுருக்கமாகச் சொன்னால் அவர்தம் கொள்கையின் சாரம்தான் என்ன?

‘‘ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கிற நான்கு தத்துவமும் அழிந்தாக வேண்டும். அவை ஒழியாமல் மனித சமூகத்திற்கு சாந்தியும், திருப்தியும், சுகமும் கிடையாது. அந்த நிலை அடைந்துதான் ஆகவேண்டும். அதுவே என் கொள்கை!'' என்று அறுதியிட்டுக் சொல்கிறார் அய்யா. (‘குடிஅரசு', 10.5.1936, பக்கம் 12)

பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடமாகும். (‘குடிஅரசு', 11.11.1944) என்பது அவர்தம் இலக்கு!

1938ஆம் ஆண்டிலேயே சோதனைக் குழாய்க் குழந்தை பற்றி தொலைநோக்கோடு சொன்னார். வீட்டுக்கு வீடு சமையலறை ஏன் என்று கேட்டார். பொது சமையற் கூடங்கள் வரவேண்டும் என்றார். வருங்காலத்தில் திருமணம்கூட கிரிமினல் குற்றமாகும் என்று குறிப்பிட்டார்.

உலகின் பல நாடுகளில் கணவன் மனைவியாக இல்லாமல் லிவீஸ்வீஸீரீ ஜிஷீரீமீtலீமீக்ஷீ என்ற முறையில் வாழத் தலைப்பட்டுவிட்டனர். ஆண்-பெண் உடையில் மாற்றம் தேவையில்லை. பெயர் சூட்டுவதிலும்கூட. ஆணா பெண்ணா என்று பெயரை வைத்துத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி கேட்டார். கர்ப்பத் தடையைப் பற்றி யாரும் நினைத்துப் பார்க்காத காலகட்டத்திலேயே 1925 ஆம் ஆண்டுகளில் பேச ஆரம்பித்தார்.

தந்தை பெரியார், ‘உயர் எண்ணங்கள் மலரும் சோலை' என்பதற்கான அடையாளம் அவர் கூறும் ஒவ்வொரு கருத்திலும் கருக்கொண்டிருக்கிறது. பகுத்தறிவைச் சொன்ன பெரியார், ‘‘பக்தி தனிச் சொத்து, ஒழுக்கம் பொதுச்சொத்து'' என்று அழுத்தமாகச் சொன்னதையும் நினைவு கூர்வோம்! மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற புரட்சிக்கவிஞரின் தொலைநோக்கு வரிகள் இன்று மெய்யாகி வருகின்றன. அவர் காண விரும்பிய சமுதாயத்தைப் படைப்போம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

-விடுதலை,22.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக