வெள்ளி, 27 ஜனவரி, 2017

கல்வி




10.08.1930, 17.08.1930- குடிஅரசிலிருந்து...

கல்வியை எடுத்துக் கொள்ளுங்கள். உலகத்தில் மேனாட்டா ரெல்லாம் 100க்கு 100பேர் கல்வியறிவுடையவராக இருக் கிறார்கள். ஆனால் நம் நாட்டில் 100க்கு 7 பேர்தான். அடுத்த கணக்கில் அது 10 ஆகலாம். ஆனால் இந்த 100க்கு 7 பேர் என்றதும் பொய் கணக்கே. எப்படி என்றால் தீண்டாத வகுப்பாரில் 1000க்கு 5 பேர்தான். நாயுடு செட்டியார், முதலியார், கவுண்டர் முதலியதாகிய ஜாதிப்படி பார்த்தால் 100க்கு ஒன்றரை, 2 அல்லது இரண்டரையாகத்தான் இருக்கும். இன்னும் நம் சகோதரிகள் கணக்கு 1000க்கு 1 அல்லது ஒன்றரை தான் இருக்கும், இதெல்லாம் எப்படி 100க்கு 7 வீதம் சராசரி கணக்கானது என்றால், அது 100க்கு 100 வீதம் படித்த பார்ப்பனர் கணக்கை நம்முடன் சேர்த்து கணக்குப் போட்டதால் வந்த விகிதமாகும். வண்ணார், பரியாரியார், இன்னும் மற்ற வகுப்பாரில் படித்தவர்கள் 100க்கு 2 பேர் கூட இருக்க முடியாது. இம்மாதிரி 100க்கு 7 பேர் படித்திருக்கும் நம்மிடை கல்வி பரவாததற்கு வெள்ளைக்காரர்கள்தான் காரணம் என்று நமது தேசியவாதிகள் சொல்லுகிறார்கள். ஆனால் பார்ப்பனர் மட்டும் 100க்கு 100பேர் படித்ததற்கு யார் காரணம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. பஞ்சாங்கப் பார்ப்பனர்கள் படித்து வாழவே நம்நாட்டில் தேசியமும் பொது நல சௌகரியங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்

10.08.1930, 17.08.1930- குடிஅரசிலிருந்து...

உங்களுடைய தெய்வமும், மதமும் விடப்பட்டொழிந்தாகவே வேண்டும். நான் கடவுளை உண்டு என்றோ இல்லை என்றோ சொல்ல வரவில்லை. கடவுள் இருந்தால் அது இருக்கட்டும். அது இந்த ராமசாமிக்காக ஓடிப்போய் விடாது. அதற்கு எவனும் வக்கீலாக இருக்க வேண்டியதில்லை. ராமசாமி கடவுள் இல்லை என்கிறான். பூசை வேண்டாம் என்கிறான் என்றெல்லாம் பேசுகிறார்கள். நல்ல கடவுளாக இருந்தால் அது உங்களது பணச் செலவை எதிர்பார்க்குமா? அல்லது உங்கள் எண்ணெயையும், பாலையும் பஞ்சாமிர்தத்தையும் குளிப்பாட்டுதலையும் எதிர்பார்க்குமா? கடவுள் உண்டு, இல்லை என்ற சண்டை உலகம் தோன்றிய நாள் முதல் நடக்கிறது. நமக்கு அதை முடிவு செய்ய அவசியமில்லை. உன் அறிவையும் முயற்சி யையும் உன் வாழ்க்கைக்கு உபயோகப்படுத்து. உன் செல்வத்தை வீனாக கடவுளுக்கென்று அழிக்காதே என்றே சுயமரியாதை இயக்கம் சொல்லுகிறதே தவிர வேறில்லை. உங்கள் தெய்வங்களது நிலை மையில் நான் இருக்க சம்மதிக்கமாட்டேன். ஏனெனில் நீ குளிப்பாட்டும் போது தான் குளிக்கவேண்டும். நீ வேஷ்டி கட்டிவிடும் போது தான் கட்டிக் கொள்ள வேண்டும். நீ எண்ணெய் தேய்த்து விடும்போது தான் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு யார் சம்மதிப்பார்கள்? கடவுள் உன் பூசையையும் உற்சவத்தையும் நகைகளையும் விரும்புகிறது என்று சொல்லுவது வெட்கக்கேடு.
-விடுதலை,27.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக