செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

ஆலயங் கட்டியவர்கள் கதி

10.08.1930, 17.08.1930- குடிஅரசிலிருந்து...

தஞ்சாவூர் ராஜாக்களை விட உலகத்தில் இன்னொருவன் கோயில் கட்டியிருக்கிறானா? சத்திரங்கள் கட்டியிருக்கிறானா? மான்யங்கள் விட்டிருக்கிறானா? அந்த கடவுள் தர்மம் அந்த ராஜாக்களுக்கு என்ன செய்தது? வம்சம் இருந்ததா? அவர்கள் வாரிசு தாரர்களுக்குக் கடவுள் தர்மம் ஒன்றும் செய்யவில்லை. வெள்ளைக் காரன் தான் சொத்துக்கு கொடுக்கிறான். அந்த சாதிரங்களுக்கு மதிப்பு இருந்தால் அந்த தஞ்சாவூர் முதலிய அரசர்கள் இப்படி அழிந்து போயிருப்பார்களா?

பழனியில் குடம் குடமாய்ப் பாலைக் கொட்டுகிறார்கள். அது தொட்டியில் விழுந்து துர்நாற்றம் எடுத்துப் போய் காலரா ஏற்பட வழியாகிறது. ஏழைகளின் குழந்தைகள்பால் இல்லாமல் குரங்குக் குட்டிப்போல் மெலிந்து தவிக்கையில் குழவிக்கல்லின் தலையில் அதைக் கொட்டி வீணாக்குகிறார்கள்.

அந்த குழந்தைகளின் வாயில் கொட்டு என் தலையில் கொட்டாதே என்று தான் யோக்கியமான கடவுள் சொல்லுமே யொழிய எந்த கடவுளும் அதில்லை என்று கோபித்துக் கொள்ளாது. அப்படி கோபித்துக் கொண்டால் கோபித்துக் கொள்ளட்டுமே. அது நம்மை என்ன செய்யமுடியும்? இப்படி இருந்தால் மக்களுக்கு ஜீவகாருண்யம், பரோபகார சிந்தை, இரக்கம் இவை எப்படி ஏற்படும்? கைலாசம், வைகுண்டம், சொர்க்கம் என்ற இவை கற்பிக்கப்பட்டது.

முதல் மனிதன் அயோக்கியனானான். இவற்றின் பெயரால் மனிதனை மனிதன் இம்சித்தான். கொடுமை செய்தான். ஒரு சிம்டா விபூதிக்காக எல்லாப் பாவமும் போக்கி மோட்சம் கொடுத்ததால் மனிதனது அறிவு மயங்கிப்போயிற்று. இந்த மோட்ச நம்பிக்கைகள் ஒரே அடியாய் ஒழிய வேண்டும். இவ்வுலக அனுபவங்கள் லட்சியம் செய்யாமல் நாம் எப்பொழுது மேல் உலகமே பெரிது என்று கருதினோமோ அப்பொழுதே ஜீவகாருண்யத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடமில்லாமற் போய் விட்டது.

தான் மோட்ச மார்க்க்கத்தை நாடுவதற்காக ஒருவன் அயோக்கியனாகவும், கொடுமை செய்பவனாகவும் இருக்க வேண்டியதாயிற்று. இது ஒருகாலும் உண்மையான நாகரிகம் அல்ல. அன்பு அல்ல, இரக்கம் அல்ல, பரோபகாரம் அல்ல.

இந்தியாவில் ஏழை மக்களுக்காகத் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும் மதத் தன்மையையும் ஒழிக்கச் சம்மதிக்கவில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. -தந்தை பெரியார்
-விடுதலை,3.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக