தந்தை பெரியார்
தலைவர் அவர்கள் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்கு தகுதி இல்லை என்று குறிப்பிட்டார்கள். இதற்குத் தனித் தகுதி ஒன்றும் தேவையில்லை. கூட்டத்தில் ஒழுங்கு முறை தவறாமல் அடக்கி ஆள வேண்டும். அது தவிர, தலைமை தாங்க தகுதி தேவை இல்லை.
தலைவர் அவர்கள் நல்ல ஆராய்ச்சிக் கருத்துகளை எடுத்துரைத்தார்கள். முதலில் நீங்கள் பகுத்தறிவாளர் கழகம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். சிலர் சாமி இல்லாதவன் என்பார்கள். பகுத்தறிவாளர்களில் ஒரு பகுதியினருக்குத்தான் கடவுள் இல்லை. பகுத்தறிவு என்பது மனிதன் ஒருவனுக்குத்தான் உண்டு. பகுத்தறிவு என்றால் எதையும் சிந்தித்து அறிவைக் கொண்டு ஆராய்ந்து ஏற்பதாகும். அறிவைப் பிரித்தவர்கள் பகுத்தறிவிற்கு ஆறாவது அறிவு என்று பிரித்திருக்கிறார்கள்.
ஒரு கடையில் போய் ஒரு பொருள் வாங்கினால் அதன் தரம், விலை, மதிப்பு யாவற்றையும் சிந்தித்து, அதன் பின்தான் வாங்குகின்றோம். இப்படி ஒவ்வொரு காரியத்தையும் சிந்தித்து செய்கிற மனிதன் சில காரியங்களில் முன்னோர் சாஸ்திரம், புராணம், வழக்கம், கடவுள் என்று சொல்லி சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டு இருக்கிறான். அதன் காரணமாக மனிதன் தன் அறிவினால் அடைய வேண்டிய அளவு பலன் அடையவில்லை.
மற்ற நாடுகளில் மனிதன் சந்திர மண்டலத்தில் கார் ஓட்டுகிறான் என்றால், அது அவனுடைய அறிவின் பலனாலேயே யாகும். இங்கு நமது மக்கள் அடிப்படையிலேயே அறிவற்று இருக்கிறார்கள். சிந்திக்காமல் எனது மதம், எனது இலக்கியம், எனது சாஸ்திரம், முன்னோர் சொன்னது என்று எதை எதையோ ஏற்றுக் கொண்டிருக்கின்றான்.
பகுத்தறிவாளர் கழகம் என்பது மிருகப் பிராயத்திலிருக்கிற மக்களை மனிதப் பிராயத்திற்குக் கொண்டு வருவதேயாகும். அதற்கு முன் நாம் (சுமார் 100, 150 ஆண்டுகளுக்கு முன்) கட்டை வண்டியில் பிரயாணம் சென்று கொண்டிருந்தோம். இப்போது எங்கள் முன்னோர் சென்றது, கடவுள் சென்றது, நீண்ட காலமாக இருந்து வந்தது என்பதற்காக எவரும் கட்டை வண்டியில் செல்வது கிடையாது.
மற்ற மதக்காரனைவிட்டு நம் மதத்தை எடுத்துக் கொண்டால் உலக மக்களுக்கு அறிமுகமாகிற வகையில் நம்மை அவனுக்கு விளக்க வேண்டுமானால், சுருக்க-மாக திராவிடன் என்று சொன்னாலும் இங்குள்ள முஸ்லிம்கள், கிறித்துவர்கள் யாவரும் திராவிடர்களே ஆவார்கள்.
நம்மைத் தனித்துக் காட்டிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? இந்து என்று சொன்னால், இந்து மதம் என்று சொன்னால் அதன் ஆதி அடிப்படை என்ன? ஒரு கிறித்துவனையோ, துலுக்கனையோ கேட்டால் அவன் தன் மதத் தலைவனையும், மத நூலையும், மதம் ஏற்பட்ட காலத்தையும் கூறுகின்றான். நீ இந்து என்று சொல்வதற்கு உனக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? யார் உன் மதத்திற்குத் தலைவன்? உன் மதத்திற்குரிய வேத நூல் என்ன? உன் மதம் தோன்றிய காலம் என்ன? என்பதற்கு எந்தப் பதிலை சொல்ல முடியும்?
இந்து மதம் என்பது ஒரு கற்பனையே தவிர, உண்மையில் அப்படி ஒரு மதம் இல்லை. இதைப் பற்றி காந்தியிடமே சொல்லி இருக்கிறேன். அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்து மதம் என்று ஒன்று இருந்தது என்பதற்கு நமது இலக்கியங்கள் எதிலும் ஆதாரம் இல்லை. நாம் எந்தக் கடவுளையோ, மதத்தையோ, சாஸ்திரத்தையோ திட்டுகிறோ மென்றால், அதில் நம்மை திட்டுகிற அளவிற்கு நாம் திட்டவில்லையே! இந்து மதப்படி எடுத்துக் கொண்டால், நீ நாலாம் ஜாதி, இழிஜாதி, சூத்திரன்தானே! பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிற முட்டாள்தானே! நீ முட்டாளாக இருப்பதால்தானே கோயிலுக்குப் போகிறாய், முட்டாளாக இருப்பதால் தானே சாம்பலையும், மண்ணையும் பூசிக் கொள்கின்றாய். அறிவு இருந்தால் இதனைச் செய்வாயா?
கோயிலுக்குப் போகிறவன் முட்டாள் என்று சொல்கிறேன். நீயே சிந்தித்துப் பாரேன். நீ மிக சுத்தமாக குளித்து முழுகிவிட்டு பயபக்தியோடு கோயிலுக்குப் போகிறாய். அங்கு பார்ப்பான் இருந்து கொண்டு கர்ப்பக்கிரகம் இருக்கிற இடத்திற்கு நீ வரக்கூடாது, நீ சூத்திரன். வெளியே நில் என்கின்றான். அதைக் கேட்டு நீ வெளியே நின்று கன்னத்திலடித்துக் கொள்கின்றாயே தவிர, நான் ஏன் உள்ளே வரக்கூடாது என்று எவனும் கேட்பதில்லையே. இப்படி செய்கிறவன் முட்டாள் இல்லாமல் அறிவாளியா என்று சிந்தியுங்கள். கோபப்படாமல் சிந்தியுங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு இனம் சூத்திரனாக, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக இருந்து கொண்டிருக்கிறதென்றால் அறிவும், சிந்தனையும் இல்லாததால்தானே!
மாறுதல் முன் இருந்ததை விட வசதியளித்துள்ளது, சிறப்புடையதாக இருக்கிறது. வளர்ச்சிக்குரியதாக இருக்கிறது, அதனால் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.
பகுத்தறிவுக்காரனுக்குக் கடவுள் - மதம் - சாஸ்திரம் - புராணம் - தலைவன் எதுவும் தேவையில்லை. அறிவு இருக்கும்போது இன்னொருவன் தயவு எதற்கு? முட்டாளுக்கு வேண்டும் வேதமும் சாஸ்திரமும்! அறிவாளிக்கு எதற்கு? வேதம் உண்டாக்கினவன், புராணம், இதிகாசங்களை உண்டாக்கினவன் யார்? அவன் அறிவு எவ்வளவு? அவன் வாழ்ந்த காலம் என்ன?
குறைந்தது 2,000, 3,000 வருடங்களுக்கு முன் இருந்தவன் எழுதியதுதானே வேதமும், சாஸ்திரமும், புராணமும். அப்போது அவன் அறிவு எப்படி இருந்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்களேன்.
உலகில் கடவுள் இல்லாத காலம் இருந்தது. பின் ஒரு சிலர் தங்கள் சுயநலத்திற்காகக் கடவுளை ஏற்படுத்தினார்கள். மனிதர்களை மடையர்களாக்குவதற்காக உண்டாக்கப்பட்டது தான் கடவுளாகும். மக்களிடம் பயமிருந்தால் தான் அரசனுக்கு அடங்கி நடப்பார்கள். மக்களிடம் பயம் ஏற்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்டதுதான் புராணம், இதிகாசங்களும், சாஸ்திரங்களுமாகும். எந்தக் கடவுளும் - எந்த மதமும் - எந்த மத சாஸ்திரங்களும் மனிதனை வளரச் செய்யவில்லை, உருப்பட விடவில்லை.
மதவாதிகளின் வேலை என்ன? மதத்தையும், கடவுளையும் காப்பாற்றுவதுதானே! அவர்கள் கடவுள் இப்படிச் சொன்னார், இதைச் சொன்னார் என்று சொல்லி மக்களை நம்பும்படிச் செய்து மடையர்களாக்கு கின்றார்கள். இந்த மதத் தலைவர்களிடம் சொல்லி மக்களிடையே பரப்பும்படியாகச் சொன்ன கடவுள் ஏன் நேரிடையாக மக்களிடம் சொல்லவில்லை. கடவுள்தான் சர்வ வல்லமையுள்ளவராயிற்றே. மதத் தலைவர்கள் சொல்கிற கருத்தினை எல்லா மக்கள் மனத்திலும் ஏற்படும்படிச் செய்ய அவரால் முடியுமே. பின் எதற்காக மதத் தலைவரிடம் மட்டும் சொல்ல வேண்டும் என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.
கடவுள் இருக்கிறார், நம்பு என்று சொல்கின்ற எந்த மனிதனாவது உண்மையில் கடவுளின் சக்தியை, கடவுளை நம்புகின்றானா என்று பார்த்தால் எந்த ஒரு மனிதனும் நம்புவது கிடையாது. எந்தக் கடவுள் பக்தனும், நம்பிக்கைக்காரனும் தனக்கு நோவு வந்தால் கடவுளிடம் முறையிடுவது கிடையாது. கடவுளால்தான் நமக்கு நோவு கொடுக்கப்பட்டது, அதனை அவரே தீர்த்து வைப்பார் என்று கருதிக் கொண்டு எந்தக் கடவுள் நம்பிக்கைக்காரரும் தன் நோவிற்குச் சிகிச்சை செய்து கொள்ளாமலிருப்பது கிடையாது. கடவுள் சர்வசக்தியுள்ளவர், அவர் கவனித்துக் கொள்வார் என்று கருதி எந்தக் காரியத்தையும் அவருக்காக ஒதுக்கி வைப்பது கிடையாது. இதிலிருந்து என்ன தெரிகிற-தென்றால், மனிதன் சடங்கிற்காக கடவுளை நம்புகின்றானே தவிர, உண்மையில் நம்புவதில்லை என்பது விளங்குகின்றது.
அந்தக் காலத்தில் எவனெவன் வளர்ந்தானோ, அவனெல்லாம் மற்றவன் வளராமல் தடுக்க ஏற்பாடு செய்ததுதான் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் என்பவைகள் யாவுமாகும். இன்று இந்த 1970-ஆம் ஆண்டில் நாமெல்லாம் சாஸ்திரப்படி, சம்பிரதாயப்படி, சட்டப்படி சூத்திரர்கள்; நாலாம் ஜாதி மக்கள் தானே!
இந்த நாலாம் ஜாதி சூத்திரத் தன்மைக்குக் காரணம் கடவுள் தானே, மதம், சாஸ்திரம் தானே. நீ உன் அறிவைக் கொண்டு கடவுள், மதம் ஆகியவைகளைப் பற்றியெல்லாம் சிந்தித்தால் தானே உன் சூத்திரத் தன்மையை விட்டுவிலக முடியும். உலகம் மாற வேண்டும், மாற்றியாக வேண்டும், அதற்குத் துணிவு வேண்டும். பார்ப்பான் 100-க்கு 3 பேர், நாம் 100க்கு 97 பேர் இருக்கிறோம். பார்ப்பான் நம்மில் மூன்று பேரை அழித்து, நாம் பார்ப்பான் மூன்று பேரை அழித்தோமானால், நம்மில் 94 பேர் மிச்சம் இருப்போம். பார்ப்பான் ஒருவன்கூட மிஞ்சமாட்டானே.
கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பினவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நாங்கள் சொல்கிறோமென்றால் உயிருக்குத் துணிந்துதான் இருக்கின்றோம்.
கடவுளுக்குக் கருணையோ, அன்போ இருந்தால் இன்னொரு ஜீவனை இன்னொரு ஜீவன் அடித்துத் தின்கின்றபடி எதற்காக உண்டாக்கப்பட வேண்டும்?
சாஸ்திரங்கள், புராணங்கள் என்பவை என்ன? நம்மைவிட கேவலமான - இழிவான குணங்-களைக் கடவுளுக்குக் கற்பித்து எழுதப்பட்டவைகள்தானே? வெள்ளைக்காரன் வந்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் வைத்து படிப்பு சொல்லிக் கொடுத்தான் என்றாலும் எம்.ஏ., பி.ஏ., படித்த முட்டாளெல்லாம் சாம்பலையும், மண்ணையும் பூசிக் கொண்டிருக்-கின்றான் என்றால் அவன் அறிவைச் சொல்லிக் கொடுக்காததாலே யேயாகும்.
நமது நாட்டுக் கல்வி முறை அறிவைச் சொல்லிக் கொடுப்பதாக இல்லை. மூட நம்பிக்கையை, முட்டாள்தனத்தை வளர்ப்ப தாகவே உள்ளது. இந்தக் கல்வி முறையானது மாற்றப்பட வேண்டும். அறிவிற்கேற்ற முறையில் பகுத்தறிவை வளர்க்கக் கூடியதாக அமைய வேண்டும். இப்போது படிப்பிற்கும், அறிவிற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது.
பகுத்தறிவு என்றால் - மடமை, இழிவு, மானமற்ற தன்மை ஒழிய வேண்டுமென்பதற் காகத்தான். பகுத்தறிவுவாதியென்றால் அவன் உள்ளம் துய்மையானதாக இருக்க வேண்டும். எந்தப் பற்றுக்கும் மனதில் இடம் இருக்கக் கூடாது. எதையும் தன் அறிவைக் கொண்டு சிந்தித்து ஏற்க வேண்டும். அறிவிற்கு பொருந்தாதது எதுவாக இருந்தாலும் அதனைத் தள்ளிவிட வேண்டும்.
ஒருவன் கடவுளைக் கும்பிடுகிறானென்றால் உருவத்தோடு கும்பிட்டால் என்ன? உருவமில்லாமல் கும்பிட்டால் என்ன? கும்பிடுகிறவன் முட்டாள்தானே? இந்த இயக்கத்தில் மத சம்பந்தமான உணர்ச்சியோ, சின்னமோ உள்ளவர்கள் சேரக் கூடாது. எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சேரலாம். ஆனால், கட்சிக் கொள்கையை இதில் வலியுறுத்தக் கூடாது. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் யாவரும் சேரலாம். அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது.
(6.12.1970 அன்று கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் பகுத்தறிவாளர் மன்ற நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை.)
- ‘விடுதலை’ 23, 28.1.1971
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக