வியாழன், 23 பிப்ரவரி, 2017

மதம் எதற்கு?

தந்தை பெரியார்



மதம் என்றாலே பழைய கொள்கை என்றுதான் பொருள். நமது நாட்டில் இந்து மதம், கிறிஸ்து மதம், முகம்மதிய (இஸ்லாம்) மதம் என்பதாக மூன்று மதங்கள் இருக்கின்றன.

இவற்றுள் இந்து மதம் என்பது அடியோடு இல்லாத மதம். பார்ப்பன ஆதிக்கத்தால் பார்ப்பனர் உயர் ஜாதி என்பதற்கு ஏற்பச் சைவம், வைணவம், சாக்தம், கணாதம் என்பன போன்ற பல மதங்கள் (பிரிவுகள்), பல கடவுள்கள், அவற்றிற்காக உண்டாக்கப்பட்ட பல கதைகள் புராணங்கள், இதிகாசங்கள், அவற்றிற்கு ஏற்பட்ட நடப்புகள் இருந்து வருகின்றன. இவற்றின் தத்துவம் என்ன வென்றால், ஒன்றுகூட உண்மை அல்லாதது, நடக்காதது என்பதோடு, எல்லாமுமே கற்பனை களாகவும் முட்டாள் தன்மையனவாகவும், பல ஒன்றுக் கொன்று முரண் பட்டனவாகவும், மாறுபட்டனவாகவும், எதிர்ப்பானவையாகவும், பார்ப்பனரின் சுயநலத்திற்கு - சுயவசதிக்கு ஏற்றனவாகவும், இந்து மதத்தில் இருந்து வரும் பார்ப்பனரல்லாதாருக்குப் பெரும் இழிவும் தொல்லையு முடையனவாகவுமே கற்பிக்கப் பட்டவையாகும் என்பதே.

மற்றப்படியான கிறிஸ்து மதம், முகம்மதிய மதம் என்பவை இந்து மதம் என்பதைக் கண்டிக்கும் தன்மையில், மதத்திற்கு ஒரே கடவுள், அதுவும் உருவமற்ற சர்வ சக்தி உள்ள ஒரே கடவுள் என்கின்ற தன்மையில் மனிதராலேயே உண்டாக்கப் பட்ட மதங்களாகும். இவற்றிற்குக் காலம், தலைவர், ஆதாரம் (வேதம்) உண்டு; சரித்திரத்திற்குட் பட்டனவுமாகும்; எண்ணிக்கையிலும் ஏராளமான மக்களைக் கொண்டனவாகும்.

இந்து மதம் என்பதற்குக் கிறிஸ்து மதம், முகம்மதிய மதம் என்பவற்றிற்கு உள்ளவைபோல் காலம், தலைவர், ஆதாரம், சரித்திரம் எதுவுமே இல்லை. காலம் என்றால், கோடி கோடி வருடங்கள் வரை சொல்லப்படுகிறது. தலைவர் என்றால் மனிதர்கள் அல்லாதவர்-களாகவே சொல்லப்படுகிறார்கள். ஆதாரங்கள் ஒன்றல்ல; பத்து - நூறு அல்லாமல் ஆயிரக்கணக்கான மத ஆதாரங்கள். அவைகளை உண்டாக்கியவர்கள் பல கோடி பேர்கள் -ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள், அவதார புருஷர்கள் என்பதாகப் பல பிரிவினர்கள்.

கிறிஸ்தவர்களும், முகமதியர்களும் மதத்தைத் தங்கள் சமுதாயத்தை ஒன்றுபடுத்தவே பயன்படுத்துகிறார்கள். இந்துக்கள் என்பவர்கள் தங்கள் சமுதாயத்தை வேறுபடுத்தவும் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிரிவினை செய்யவுமே பயன்படுத்துகிறார்கள். பொதுவாகச் சொல்லப் போனால், இந்துமதம் என்பது மனிதர்களில் ஜாதிப் பிரிவு - உயர்வு தாழ்வுத் தன்மையை ஏற்படுத்தவும் நிலைக்கச் செய்யவுமே தான் பயன்படுத்தப்-படுகிறது; இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட இந்த மதங்களால் அந்தந்த மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஏதாவது பயன் உண்டா என்றால், எந்த மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் யாதொரு பயனும் ஏற்படுவதற்கு இடமில்லை. எந்தத் தனிப்பட்ட மனிதனுக்காவது ஏதாவது பலன் உண்டா என்றால், அதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
-_ ‘உண்மை’, 14.11.1971

-_ ‘உண்மை’, 16-28.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக