சனி, 22 செப்டம்பர், 2018

பெரியாரின் முற்போக்கு(அய்ரோப்பிய) பயணம்

அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ‘டெய்லி ஒர்க்கர்’ ஏட்டில் பெரியாரின் சித்திரத்தோடு இடம் பெற்ற கட்டுரை.

பெரியாரையும் முற்போக்குக் கருத்துக்களையும் யாராலும் பிரிக்க முடியாது. இத்தகைய கருத்துக்களுக்கு விதையாய் 1931-32ம் ஆண்டு அவர் மேற்கொண்ட ஐரோப்பிய சுற்றுப் பயணம் அமைந்தது. இப்பயணத்தின் போது சோவியத் ஒன்றியம், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரியார் சென்றார். இப்பயணம் பல்வேறு முற்போக்கு இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தந்திருந்தது. சோவியத் யூனியனில் அவர் இருந்த மூன்று மாதங்களும் அவருக்கு தொழிற்சாலைகளிலும் பொறியியல் துறையிலும் சோஷலிசம் ஏற்படுத்தியிருந்த சாதனைகளை உணர்த்தியது. இக்காலக் கட்டம் பொருளாதார முறையில் ஏற்பட்ட ‘பெரு மந்தம்‘ எனக் குறிக்கப்பட்ட காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் அகிலத்தால் தூண்டப்பட்ட குழு என்னும் ஏகாதிபத்திய எதிர்ப்புக் குழு உலகெங்கிலுமுள்ள, நேரு உள்ளிட்ட, காலனியாதிக்க எதிர்ப்பு தேசியவாதிகளை உற்சாகப்படுத்தியது. மேலும் இப்பயணத்தில் நிர்வாணவாதிகள், சுதந்திர சிந்தனையாளர்கள், நாத்திகவாதிகள், எமிக்ரெ புரட்சியாளர்கள், கம்யூனிஸ்டுகள், சோஷலிசவாதிகள் என பல அமைப்பினரை பெரியார் சந்தித்தார். எவ்வித ஐயமுமின்றி இவை பரபரப்பான நாட்கள்தான்.இத்தருணத்தில் தான் முதன்முறையாக இனச் சிக்கலோடு அவருக்கு பிணைப்பு ஏற்பட்டது.

1932-ஆம் ஆண்டின் கோடைக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி பிரிட்டனில் இருந்தபோது பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முதல் கம்யூனிஸ்ட்டான ஷாபுர்ஜி சக்லத்வாலா, பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்ககால உறுப்பினரான கிளெமன்ஸ் பாமி தத் போன்ற பலரை சந்தித்தார்.இதில் கிளெமன்ஸ் பால்மே தத் என்பவர் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்ட உதவிய ரஜனி பாமி தத்தின் சகோதரராவார். இவை தவிர பெரியார் பல்வேறு கம்யூனிஸ்ட் முன்னணிகளையும் அதன் உறுப்பினர்களையும் சந்தித்தார்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குழு, தொழிலாளர் சர்வதேச நிவாரணம், பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ் அலுவலகம் ஆகியன குறிப்பிடத்தகுந்தவை. பெரியார் பிரிட்டனில் இருந்தபோது, கம்யூனிஸ்ட் தலைவர் சக்லத்வாலாவுடனேயே இருந்தார். மேலும் அங்கேயிருந்தபோது மாபெரும் தொழிலாளர் பேரணியில் உரையாற்றியதோடு பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர் ஜார்ஜ் லான்ஸ்பரியை விமர்சனம் செய்தார்.பிரிட்டனில் இருந்தபோதுதான் புகழ்பெற்ற ஸ்காட்ஸ்பரோ வழக்குடன் பெரியாருக்கு பரிச்சயம் ஏற்பட்டது. இவ்வழக்கின் விளைவாகத்தான் ‘டு கில் எ மாக்கிங் பிர்ட்’ (கேலி செய்யும் பறவையை கொல்லுதல்) என்ற பிரபலமான நாவல் 1960இல்வெளிவந்தது.

அது என்ன ஸ்காட்ஸ்பரோ வழக்கு?

1931 மார்ச் மாதம் 25-ஆம் தேதி, ஆப்பிரிக்க-அமெரிக்க இளைஞர்கள் 9 பேர், டென்னிஸ்ஸி (அமெரிக்கா) என்னும் இடத்தில் தொடர் வண்டியில் ஏறினர். விரைவில் அவர்கள் புலம் பெயர்ந்த ஏழைத் தொழிலாளி போல வேடமணிந்து இரண்டு வெள்ளை இனப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். வெள்ளை இன நீதிபதிகளால் நடத்தப்பட்ட இவ்வழக்கு நேர்மையான முறையில் நடத்தப்படவில்லை. ஒருவரைத் தவிர அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி குறுக்கிட்டு அவ்விளைஞர்களைக் காப்பாற்ற சிறப்பான பங்கை ஆற்றியது.அடா ரைட் என்னும் ராய்(14), ஆன்டி(17) ஆகிய குற்றம்சாட்டப்பட்ட இரு இளைஞர்களின் தாய், கம்யூனிஸ்ட் கட்சியை அணுகி சட்ட ரீதியான போராட்டத்தைத் தொடருமாறு வேண்டினார். ஒரு சர்வதேச பிரச்சார இயக்கம் இதற்காக துவக்கப்பட்டது. இதைப் பற்றி சூஸன் டி.பென்னிபேக்கர் என்பவர் ஆய்வு செய்து ஆய்வுக் கட்டுரை வெளியிட்டார். இந்த இயக்கத்தின் எதிர்பாராத நட்சத்திரமாக அடா ரைட்டின் தாய் விளங்கினார். அதுவரையில் மதக் குழுவில் இருந்த அவர் அரசியல் அனுபவமே இல்லாதவர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த அவர் அதுவரையில் தேசத்தின் எல்லைகளைத் தாண்டியதில்லை. ஆனால் இந்த பிரச்சாரத்திற்காக ஐரோப்பா சென்றார்.

பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டுகளும் இதற்காக பல்வேறு அமைப்புகளின் ஆதரவைத் திரட்டினர். டெய்லி வொர்க்கர் ஸ்காட்ஸ்பரோ தினம், மே 7,1932-இல் பின்பற்றப்படுவதாக செய்தி வெளியிட்டது. ஆனால் அடா ரைட்டால் எளிதாக பிரிட்டனுக்குள் நுழைய இயலவில்லை. முதலில் பிரிட்டிஷ் வெளியுறவு அதிகாரிகள் அடா ரைட், பிரிட்டனுக்கு உள்ளே நுழையக் கூடாது என்றனர். ஆனால் அவர்களே பின்னர் போராட்டத்தின் அழுத்தத்தினால் அடாவை பிரிட்டனுக்குள் அனுமதிக்க வேண்டியதாயிற்று. ஆனால் அடாவுக்கு பத்து நாள் மட்டுமே விசா தரப்பட்டது.பெரியார் பிரிட்டனில் இந்த பத்து நாட்களும் இருந்தார். ஜூன் 28, 1932 அன்று அடாவின் வருகைக்கு பிறகு ஸ்காட்ஸ்பரோ இளைஞர்களுடனான தொழிலாளர் கூட்டம் லண்டனில் நடைபெற்றது.

டெய்லி வொர்க்கர் நாளிதழ் இது பற்றி 1932, ஜூன் 30 அன்று ‘உற்சாகமூட்டும் காட்சிகள் அரங்கேறியதாக’ தெரிவிக்கின்றது.500 பேர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் தாடி வைத்த 53 வயது பெரியாரும் கம்யூனிஸ்ட் தலைவர் சக்லத்வாலாவும் இருந்தனர். மென்மையான குரலில் பேசிய அடா ரைட் “எனது இரண்டு பையன்களையும் இன்னும் ஏழு பையன்களையும் விடுவிக்கப் போராடும்போது உலகெங்கிலுமுள்ள சிறையிலுள்ள வர்க்க கைதிகளுக்காகவும் போராடுகின்றீர்கள்” எனத் தெரிவித்தார். இது கூட்டத்தினரை நெகிழவைத்தது.

இந்தியாவில் தீண்டாமை

சக்லத்வாலா கூட்டத்தில் பேசும்போது, இந்தியாவில் பல ‘ஸ்காட்ஸ்பரோக்கள்’ நடப்பதாகக் கூறினார். ஆப்பிரிக்க-அமெரிக்க தொழிலாளர்களைச் சேர்க்காத அமெரிக்க தொழிற்சங்கங்களை கண்டித்தார். உலகெங்கிலும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களே எந்த இனபேதமும் பார்க்காமல் தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்க்கின்றன என்றும் சக்லத்வாலா கூறினார்.

அமெரிக்கத் தூதரகத்திற்கு தீர்மானத்தைத் தெரிவிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் இஸாபெல் பிரவுன் ஆற்றிய பேச்சு பெரியாரை மிகவும் கவர்ந்தது. இவர் தொழிற் சங்கங்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை உத்திகளை கோடிட்டுக் காட்டினார்.ஜிம் ஹெட்லி என்னும் நீக்ரோ மீனவர் அமைப்பைச் சேர்ந்தவர் நிதி திரட்டுவதைப் பற்றித் தெரிவித்தார். அதன் பிறகு ஏலம் நடைபெற்றது. வழக்கமாக சிக்கனத்தைக் கடைபிடிக்கும் பெரியார் ஈ.வெ.ரா அன்று அரை பவுண்டுக்கு ஜெர்மனி வெள்ளிச் சங்கிலியை வாங்கினார்.பெரியாரின் இந்த பயணம் முற்போக்கு அமைப்புகளோடு தொடர்பு ஏற்படுத்தியதோடு அவரிடமிருந்த முற்போக்கு சிந்தனையை வலுப்படுத்தியது. அடா ரைட் மற்றும் ஸ்காட்ஸ்பரோ வழக்கின் பரிச்சயம் பெரியாருக்கு உலகை முடமாக்கிக்கொண்டிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய புரிதலை அதிகமாக்கியது

.தமிழில் : பேரா.ச.இராமசுந்தரம்(நன்றி : தி இந்து (ஆங்கிலம்) 22.8.2015)
   Veldurai Rajkumar

- இசை இன்பன், முகநூல் பக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக