வியாழன், 29 நவம்பர், 2018

உரிமைக் கிளர்ச்சியை ஒடுக்க அடக்குமுறையா?

***தந்தை பெரியார்***




கொடி எரிக்க வேண்டியகாலம் வரும்; அப்போது எல்லோரும் முன்வந்து கொளுத்தத் தயாராக இருக்க வேண்டும். கட்டாய நிலை ஏற்படுகையில் எல்லோரும் முன் வந்து கொளுத்த வேண்டும் என்றேன்.

ஆச்சாரியார் (முதலமைச்சராக ஆண்ட) காலத்தி லிருந்தே "கத்தி வைத்துக் கொள்ளுங்கள்;" "பெட்ரோல் வைத்துக் கொள்ளுங்கள்" என்று  சொல்லி வருகிறேன். ராஜாஜி (ஆச்சாரியார்) முதன் மந்திரியாக இருந்த போதுதான் ஆத்தூர் மாநாட்டில் 1958-ல் கத்திவைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் போட்டோம். அவர் காலத்திலேயே ஈரோட்டில் நடந்த மாநாட்டில் கத்தி, நெருப்பு வைத்துக் கொளுத்தத் தயாராக இருங்கள் என்றேன்; இதே மந்திரி எட்டு நாளைக்கு முன்பு இது ஒன்றும் சட்டத்தை மீறியதல்ல என்று சொல்லியிருக்கிறார்.

அப்படியெல்லாம் சொன்னவர்கள் இன்று பார்ப்பான் பலமாகக் கூப்பாடு போட ஆரம்பித்ததும் வழக்குப் போடுகிறார்கள்.

யாராவது ஏதாவது ஒரு சமாதானம் சொல்ல வேண்டுமே! யார் சொன்னார்கள்? சட்டத்தைக் கொளுத் துவது தவறு என்றால் வேறு என்ன செய்யலாம்? அதைச் சொல்ல வேண்டாமா? சட்டத்தைக் கொளுத்துவதால் யாருக்கு என்ன நஷ்டம் (இழப்பு)? நமக்கு  இன்னும் ஆத்திரம் வருகிறமாதிரிதானே காரியம் செய்துகொண்டு போகிறார்கள்?

கட்டாயம் இதற்கு எல்லை கண்டே தீர வேண்டும்! இந்நிலை உண்டான தன்மைப்பற்றிச் சிந்திக்காமல் அடக்கு முறைதான் வழி என்றால் 2000 வருடமாக இருந்துவரும் கீழ் நிலைமை அப்படியே இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள் என்பதைத் தவிர வேறு என்ன? ஒரு உணர்ச்சி வளர்ந்திருக்கிறது; அந்த வளர்ச்சிக்கு ஏற்ப தயாராகவேண்டும் என்ற எண்ணம் வேண்டாமா?

ஜாதிப்பெயராலேயே ஓர் இனம் உயர்வது; மற்றோர் இனம் கேவலம், இழிவு இவைகளுடன், படிப்பில்லாமல் வாழ்வது என்ன நியாயம்? ஜாதிபற்றி பேசவே கூடாது என்கிறார்களே?

ஜாதியினால் எவ்வளவோ கேடு பாருங்கள்! எந்த உத்தியோகமாக இருந்தாலும் சிபாரிசுதான்! மக்கள் நிலையை உத்தேசித்துச் சிபார்சுக்குத் தக்கபடி அயோக் கியனைத் தூக்கி உயர்த்துகிறார்கள். இவற்றையெல்லாம் யார் கவனிக்கிறார்கள்?

தோழர்களே! சட்டத்தைக் கொளுத்துவது என்பது ஜாதிப்பிரச்சினையை மட்டும் வைத்துத்தான் என்பது அல்ல; உத்தியோகம், மத்திய அரசாங்கம் எந்தத் தகுதியும் நியாயமும் இல்லாமல் அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் நடத்தும் கொடுமையான அநீதிகள், அத்தனையும் வைத்தே அதைக் கொளுத்தவேண்டும் என்கிறோம்.

இந்த மந்திரிகள் (அமைச்சர்கள்) தான் என்ன யோக்கியர்கள்? நாம் நாட்டு நலம் முக்கியம் என்று கருதிக் கொள்கையைக் கூட தளர்த்தி ஆதரித் தோம்! சாதாரணமாகச் சொல்கிறேன்; டி.டி. கிருஷ்ணமாச்சாரி பக்கா (சரியான) பார்ப்பனர்; ஏன் ஆதரித்தோம்? நம் நாட்டுக்கு என்று மத்திய அரசாங்கத்தில் ஒரு மந்திரிகூட இல்லையானால் என்ன ஆவது? எல்லோரும் வடநாட் டுக்காரனாக உட்கார்ந்து கொண்டால் என்ன ஆகும்? தமிழ்நாட்டிலிருந்து சென்றவர் என்ற முறையில் தமிழ் நாட்டுக்கு ஏதாவது அனுகூலம்  (நன்மை) நடக்கும் என்று கருதினோம்; அந்த  எண்ணத்தில்தான் நம்மைவிட நாட்டு நலம்  முக்கியமென்று பார்ப் பானாக இருந்தும்கூட உதவி செய் கிறோம்.

மத்திய சர்க்கார் (அரசு) பெயரால் அரசமைப்புச் சட்டத்தின் பெயரைச் சொல்லி எவ்வளவு கொள்ளைகள்? தபால் (அஞ்சல்), சுங்கம் முதலிய வருமானமுள்ள சங்கதி பூராவும் அங்கு! இந்த ஆதிக்கத்திற்கு அரசமைப்புச் சட்டம் தானே இடம் தருகிறது? நீங்கள் சரியாகப் படித்துப் பார்த்தால் ஏன் கொளுத்த வேண்டும் என்பது விளங்கும்.

நாம் எவ்வளவு கீழ்மக்களாக ஆக்கப் பட்டிருந்தாலும் அதுபற்றி யாருக்கும் கவலையில்லை. எதிர்த்துப்பேசி மத்திய சர்க்காரின் (அரசின்) கொடுமைகளைக் கூறவும் ஆளில்லை. கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் எவராக இருந்தாலும் அரசமைப்புச் சட்டத்தைப்பற்றிப் பேசவே கூடாது என்பார். எல்லோரும் இந்தக் கொடுமையான சட்டத்தை ஒப்புக்கொண்டு அதன்படி சட்டசபையில் போய் உட்காருகிறவர். நாம்தான் இதைச் (சட்ட எரிப்பை) செய்ய முடியும்.

ஆகவே, காலணாவுக்கு அரசமைப்புச் சட்டத்தின் தொகுப்புக் கிடைக்கும். அதை வாங்கி வைத்து நெருப் புக்குச்சியைக் கிழித்து வைத்துக் கொளுத்த வேண்டும். 3 வருடமோ 6 வருடமோ நீங்கள் தண்டனையைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? இது கடமை; செய்ய வேண் டியது. அவ்வளவு தான்; தாய்மார்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்; ஜோடி ஜோடியாக (இணை இணையாகக்)  கொளுத்துங்கள்; அங்கே போய் குடும்பம் நடத்தினால் போகிறது; 26 ஆம் தேதிவரை வெளியில் இருந்தால் என் பங்குக்கு நானும் கொளுத்துவேன்.

நாம் வெளியில் இருக்கிறோமோ, இல்லையோ; ஆகவே இன்றே கொளுத்திவிடலாம் என்றே கருதிக் கொண்டு வந்தேன். நாம் சர்க்காருக்கு (அரசுக்கு)  15 நாள் வாய்தா கொடுத்துள்ளோம். அதற்குள் கொளுத் துவது மரியாதை இல்லை என்று நினைத்து இப்போது கொளுத்தவில்லை. 15ஆம் தேதியே என்னை (சிறை யின்) உள்ளே போட்டாலும் போடலாம். ஏனென்றால் எனக்குப் போட்டிருக்கும் செக்ஷன்களுக்கு (சட்டப் பரிவுகள்) என்னை ஜாமீனில் (பிணையில்) கூட விட முடியாது. ஆகவே அன்றே கைது செய்து வழக்குக்குக் கொண்டு போய் ஆஜர் (வருகைப்) படுத்தலாம்.

ஆனதால் போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் போலீஸ்காரரிடமோ (காவல்துறையினரிடமோ), அதி காரிகளிடமோ முரண்பட்டு நடந்து கொள்ளாமல் காரியம் செய்யவேண்டும். கட்டுப்பாடாக நடந்து கொள்ள வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை.

குத்துவதாக இருந்தால் கூட, எப்படிக் குத்துவோம், எங்குக் குத்துவோம் என்று சொல்லிவிட்டுத்தான் செய்வோமே தவிர திடீரென செய்து விட மாட்டோம்.

ஆகவே கலவரமில்லாமல் இராமன் படம் எரித்தமாதிரி அவ்வளவு கட்டுப்பாடாக நடந்து கொள்ள வேண்டும்

ஆண்பெண் எல்லோரும் கொளுத்த வேண்டும். போலீஸ்காரர்கள் (காவல்துறையினர்) முன்கூட்டியே மிரட்டுவார்கள். நடக்காமல் செய்யத் தந்திரம் செய் வார்கள். ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். தப்பித்துக் கொள்வோம் என்று எதிர்பார்த்து எதையும் செய்யக்கூடாது. வீட்டிலிருந்து  கொளுத்தினாலும் போதும். கொளுத்திக் கையில் பிடித்துக் கொண்டு போலீஸின் எதிரில் நில்லுங்கள். கைது செய்திருக்கிறேன் என்றதும் பேசாமல் போய்விடுங்கள். முன்கூட்டியே கைது செய்தாலும் செய்வார்கள். கூப்பிட்டால் போய்விடுங்கள். அரசமைப்புச் சட்டம் கொளுத்தும் காரியத்திற்காக இத்தனை பேர் கைதாகி இருக்கிறார்கள் என்ற கணக்கேபோதும். மூன்று வருடம் போடட்டும். குடும்பத்தோடு இருக்கலாம்.

கொளுத்தவேண்டாம் என்பவர்கள் இன்னவழி - இன்ன பரிகாரம் என்று சொல்லட்டும்; கேட்டுக் கொள்கிறேன். இதற்குப் பரிகாரம் சொன்னால் மரியாதை குறைந்துவிடும்; சட்டம் செய்கிறோம்; செக்ஷன் (சட்டப்பிரிவு) இருக்கிறது என்று கருதி அடக்கப் பார்க்கிறார்களே தவிர எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதைக்கூட யோசிப்பதில்லை. நான் ஏன் தாழ்ந்த ஜாதி என்று கேட்க  உரிமையில்லை யென்றால் இது என்ன சுயராஜ்ஜியம் (விடுதலை)?

இந்த உணர்ச்சியை உரிமையை மதிக்கவேண்டும் என்ற எண்ணமே வரவில்லையே! நாங்களும் மனிதர்கள்; இந்த நாட்டு மக்கள் - எங்களுக்கும் உரிமையுண்டு என்பதைக்கூட கருதாமல் அடக்கு முறைதான் பதில் என்றால் என்ன நியாயம்? உள்ளபடியே ஆத்திரப்பட்டே கேட்கிறோம். நாங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு, விளம் பரத்திற்காகவா இந்தக் காரியம் செய்கிறோம்? இல்லை தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காக (கலவரம்) ரகளை செய்கிறோமா? ஆட்சியில் இருப்பவர்களுக்குக் கஷ்டம் (துன்பம்) தரக்கூடாது என்பதற்காகத் தானே கவலை!

இன்று காமராசரும், பக்தவத்சலமும் இருக்கும் இடத்தில் 2 பார்ப்பான் இருந்தால் என்ன ஆகியிருக்கும்? தொல்லை தரக்கூடாது. என்பதைத் தவிர வேறு எங்க ளுக்கு என்ன பயமா? செய்ய முடியாதா? ஏமாற்றுகிற மாதிரி செய்யலாம், பிரயோசனப்படாத (பயன்படாத) மாதிரி பலகாரியம் செய்து கொண்டேயிருக்கலாம்.

பார்ப்பான் சட்டம் போடு என்றதும் போடுவதா? இந்த நாட்டு மக்கள் உணர்ச்சி இப்படியிருக்கிறது! ஏன் இந்த மந்திரிகள் அங்கு (மத்திய அரசில்) போய்ச் சொல்லிக் கேட்கக்கூடாது? ஏதாவது பதில் சொல்லித்தான் தீரவேண்டும் என்று ஏன் சொல்லக்கூடாது?

கேரளாவில் கம்யூனிஸ்ட்காரன் இங்கு உள்ள உணர்ச்சியைப் பார்த்து அவன் நாட்டில் மரியாதையாக ஜாதிப் பெயரை எடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டானே! யோக்கியமாக நடந்து கொள்ள வேண்டு மென்று கருதுவதற்கு இடமில்லையென்றால் என்ன நியாயம்? நாமும் வியாபாரி ஆகிவிட்டால் என்ன ஆவது?

ஆகவே, தோழர்களே! குத்துவெட்டு என்கிற பேச்சுக்கு இப்போது இடமில்லை. அவசியம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம், அவசியம் வந்து விட்டால் கட்டாயம் நடக்கும். ஆகவே 26ஆம் தேதி கட்டுப்பாட்டுடன் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற ஆணும் பெண் ணும் பெயர் கொடுத்துக் காரியம் செய்ய வேண்டும்.

10-11-1957 அன்று சென்னை எழும்பூர்

ட்ராம்ஷெட் கூட்டத்தில் தந்தை பெரியார்

சொற்பொழிவு: ('விடுதலை' 13-11-1957)

-  விடுதலை நாளேடு, 26.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக