வியாழன், 8 நவம்பர், 2018

தீபாவளி பகுத்தறிவுக்கு ஏற்றதா?

வருஷா வருஷம் கடவுளுக்கு (சாமிகளுக்கு) கல்யாண உற்சவம் வருவது போல வருஷா வருஷம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டி ருக்கின்றன.

நம்மக்களும் பெரும்பான்மையோர்கள், கடவுளுக்கு எங்காவது கல்யாணம் செய்வாருண்டா? கடவுள்தானாகட்டும் கல்யாணம் செய்து கொள்ளுமா? என்கின்ற அறிவே இல்லாமல் எப்படி கோயில்களில் வருஷா வருஷம் கல்யாணம் செய்கிறார்களோ அதே போல் இந்தத் தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம்பேர் கொண்டாடி வருகிறார்கள்; இவற்றுள் அண்மையில் வரப்போகும் இந்த தீபாவளிப் பண்டிகையின் உண்மை என்ன? அதன் தத்துவம் என்ன? என்பது பற்றி நம் மக்களுக்குக் கவலை இருப்பதே இல்லை; ஏதாவது ஒரு சாக்கு வைத்துக் கொண்டு கொண்டாட்டங்கள் கொண்டாட வேண்டும். ஏதாவது ஒரு சாக்கில் கடவுள் மத பக்தி காட்டிக் கொள்ள வேண்டும் என்கின்ற கருத்தைத் தவிர நம் மக்களுக்கு அவற்றின் உள்கருத்தை அறிவது என்கின்ற உணர்ச்சியோ கவலையோ இருப்பதில்லை.

நமக்குக் கேடும் இழிவும் ஏற்பட்டதான போராட்டத்தில் வரும் உற்சவம், பண்டிகைகள் ஆகியவற்றை நாம் திராவிடர்கள் அதாவது சூத்திரர்கள் என்று இழித்துக் கூறப்படு பவர்களாக்கிய நாம் கொண்டாடலாமா என்பதுதான் இன்றைய பிரச்சினையாகும்.

தீபாவளி பண்டிகை பற்றி, இப்படிப் பட்ட தத்துவம் கொண்ட பண்டிகைகளில் தீபாவளி என்கின்ற பண்டிகையும் ஒன்று. முதலாவது இந்தப் பண்டிகைக்கும் அதன் பெயருக்கும் சம்பந்தமே இல்லை எனலாம். தீபாவளி என்ற சொல்லுக்கு தீப வரிசை (விளக்கு வரிசை) என்றுதான் பெயர். இந்த தீபவரிசை விழாவை கார்த்திகை மாதத்தில் தனியாகக் கொண்டாடு கிறோம். அப்படி இருக்க இந்தப் பெயர் குறிப்பிட்ட பண்டிகைக்குப் பொருத்தமில்லை. இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாட வேண்டிய அவசியம் என்னவென்றால், நரகாசுரன்  என்ற ஒரு அசுரன்; இவன் ஒரு தெய்வப் பெண்ணை சிறை பிடித்துக் கொண்டான். கந்தபுராணம் இந்திரன் மனைவியை சூரன் சிறைப்பிடித்த கதை, தீபாவளி நரகாசுரன் கசேரு என்ற பெண்ணை சிறைபிடித்த கதை மற்றும் மற்றொரு தெய்வப் பெண்ணாகிய அதிதி என்பவள் காதணியைக் கவர்ந்து கொண்டவன். இதுதவிர இவனது பிறப்பு வளர்ப்பு மிகவும் அதிசயமானது.

உலகத்தையே பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் சமுத்திரத்தில் ஒளிந்து கொண்ட இரண்யாட்சன் என்றும், ராட்சதனைக் கொல்ல மகாவிஷ்ணு பன்றியாக அவதரித்து ராட்சதனைக் கொன்ற பின்பு, அந்தப் பன்றி உருவே பூமியைப் புணர்ந்து அதில் பூமிக்குக் கர்ப்பம் ஏற்பட்டு, அந்தக் கர்ப்பத்தில் உண்டானவன் இந்த நரகாசுரன். சாட்சாத் கடவுளுக்கும் கடவுள் பத்தினியாகிய பூமாதேவிக்கும் பிறந்த இவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான். அதனால் தேவர்கள் முறையிட்டார்கள். மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதரித்து கிருஷ்ணனும் அவன் மனைவியுமாய், இந்த நரகா சுரனைக் கொன்றுவிட்டார்கள். மகிழ்ச்சியடைய வேண்டும்.

அப்படிக் கொன்றதால் தேவர்கள் சுகம் அடைந் தார்கள். அந்த சுகத்துக்கு ஆகத்தான் நாம் மகிழ்ச்சிக்கு ஆகவே தீபாவளி கொண் டாட வேண்டும்.

இதுதான் தீபாவளி தத்துவம். இது சம்பந்தமான கதையை கவனித்தால் இது சிறிதாவது மனிதத் தன்மைக்கோ கடுகளவு பகுத்தறிவுக்கோ ஏற்றதாக இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? எவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் கொண்ட கதையை, அதுவும் நமக்குக் கேடான கருத்துக் கொண்ட கதையை, நாம் நம் தெய்வீக மதக் கதையாக, ஏன்? கதையாகக் கூட அல்லாமல் உண் மையில் நடந்த தெய்வக் கதையாகக் கொண்டு கொண்டாடுவதா? என்பது யோசிக்கத் தக்கதாகும்.

நரகாசுரன் ஒரு திராவிட நாட்டு அரச னாகவும் திராவிடத்தை(வங்காளத்தை)ச் சேர்ந்த ஒரு பிராக் ஜோதிஷம் என்னும் நகரை ஆண்டவனாகவும் அதே புராணங் களில் காணப்படுகிறான். கதை எப்படி இருந்தாலும் இவனும், இந்த நரகாசுரனும் இரண்யாட்சன், இரணியன் சூரபத்மன் முதலிய திராவிடத் தோன்றல்களோடு ஒருவனாக மதிக்கப்பட வேண்டியவனாவான். இவன் தன்னைப் பெற்ற தகப்பனால், தாயால் கொல்லப்பட்டதாகக் கதை கூறுகிறது. காரணம் தேவர்களுக்குத் தொல்லை  கொடுத்ததால் என்கிறது புராணம்.

ஆகவே, இன்று நாம் (திராவிடர்கள்) இரண்யனையும், இராவணனையும் எப்படிப் போற்றிப் புகழ்ந்து மரியாதை செய்கிறோமோ அதுபோலவே நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட அவனை தேவர் கூட்டம் கொன்றதற்கு ஆக நாம் துக்கப்பட வேண்டுமே யொழிய, மகிழ்ச்சி அடைவது மடமையும், இழிவும், ஈனமுமாகும். ஆதலால் திராவிட மக்கள் எவரும் தீபாவளி பண்டிகைக் கொண்டாடக் கூடாது என்று வேண்டிக் கொள்வதோடு, திராவிடர்கள் கண்டிப்பாகக் கொண்டாடக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தீபாவளியன்று கருப்புச் சட்டையுடன் நரகா சுரனுக்கு வாழ்த்துக் கூறிக் கொண்டு ஊர்வலம் வந்து அவனது கொலைக்காகத் துக்கப்படும் துக்க நாளாகக் கொள்ள வேண்டும் அல்லவா?

-  விடுதலை நாளேடு, 4.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக