புதன், 28 நவம்பர், 2018

இந்திய அரசமைப்புச் சட்டம் ஏன் எரிக்கப்பட வேண்டும்?

ஜாதி ஒழிப்புப் போராட்டம் : தந்தை பெரியார் அன்று சொன்னது


இந்திய அரசமைப்புச் சட்டம் ஏன் எரிக்கப்பட வேண்டும்?


***தந்தை பெரியார்***




இந்திய அரசமைப்புச்  சட்டக்குழு உறுப்பினர்கள்!


1. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் (பார்ப்பனர்)


2. டி.டி. கிருஷ்ணமாச்சாரி (பார்ப்பனர்)


3. என். கோபாலசாமி  அய்யங்கார் (பார்ப்பனர்)


4.  கே. எம். முன்ஷி  (பார்ப்பனர்)


5.  டாக்டர் அம்பேத்கர் (ஆதி திராவிடர்)


6.     முகமது சாலுல்லா (முஸ்லிம்)


1077 நாள் செலவு செய்து உருவாக்கிய இந்த அரசமைப் புச்  சட்டத்தில் வெகு எச்சரிக்கையாகப் பார்ப்பனர் (ஆரிய பிராமணர்) உயர்வும், பார்ப்பனரல்லாத மக்கள் (திராவிடர் - சூத்திரர்) இழிவும் சாஸ்திரப்படிக்குக் கொண்ட இந்து மதத்தைக் காப்பது, உரிமை அளிப்பது, என்கிற தன்மையில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் தகுந்தபடி பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.

2. மேலும், சூத்திரர் என்று கூறப்படுகின்ற மக்களின் பிரதிநிதிகள் அறவே இல்லாமல், 6 பேர்களில் 4 பேர் பார்ப்பனர் களாகவே கொண்டு மற்றும்  இரு இனத்தின் பிரதிநிதிகளுக்கும் கூட விலை கொடுத்துவிட்டு செய்து கொண்டதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் என்ற இந்த அரசியலமைப்பாகும்.

3.     இந்த நாட்டு வாக்காளர்களின் உண்மையான பிரதிநிதிகளைக் கொண்டல்ல, இந்தச் சட்டம் செய்யப் பட்டது. எவ்வாறெனில், 1946 இல் நடைபெற்ற தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண  சட்டசபை அங்கத் தினர்களால் ஓட் (வாக்களிப்பு) செய்யப் பெற்று, அரசியல் நிருணயசபை அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், பிரிட்டிஷார் அளித்த இந்திய சுதந்திரச் சட்டமே (Independence Act) 1947 ல் தான் நமக்குக்கிடைத்தது! நாடு இரண்டாகப் பிரிந்த பிற்பாடு எஞ்சியிருந்த உறுப்பினர்களால், மாகாணங்களிலிருந்து 235 பேர்களும். சமஸ்தானங்களி லிருந்து 72 பேர்களுமாக மொத்தம் 397 பேர்கள்தான் அப்போது இருந்தார்கள். அப்போது ஓட்டு (வாக்கு) உரிமை பெற்றிருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை இன்றைய வாக்காளர்களின் எண்ணிக்கையில் பன்னிரண்டு சதவிகிதத் தினரேயாவர். எனவே, இது எப்படி மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்டதாகும்? நாடு சுதந்திர மடையாத காலத்தில் நடந்த எலெக்ஷன் (தேர்தல்) பிரதிநிதிகளால்-உருவாக்கப் பட்டதாகும்? நாடு சுதந்திர மடையாத காலத்தில் நடந்த எலெக்ஷன் பிரதிநிதிகளால் - காங்கிரஸ் பார்ப்பன பிரதிநிதிகளால் - ஏற்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் நம்மை அதாவது பார்ப்பன ஆதிக்கத்தினின்று விடுதலை பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்ற நம்மை எப்படிக் கட்டுப்படுத்தும்?

4.     மற்றும் மொழி சம்பந்தமாகவும், வரி சம்பந்த மாகவும், பொருளாதார உரிமை சம்பந்தமாகவும், வெளி நாட்டார் சுரண்டுதல் சம்பந்தமாகவும், அதிகாரங்களைத் தங்களுக்கே வைத்துக்கொண்டு எந்த வகையிலும் மாற்ற முடியாத அளவுக்கு இரும்புக் கூட்டுப் பாதுகாப்பை இந்த சட்டத்தின் மூலம் பார்ப்பனர்களும், வட நாட்டார்களும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். அதிலிருந்து விடுபட ஆசைப்படுகிறோம் என்பதைக் காட்டுவதற்காகத்தான் அரசியல் சட்ட எரிப்பு என்பதாகும். இந்தியாவின் மக்களா கிய நாம், இந்தியாவை ஒரு சம்பூர்ண (முழுமையான) அதிகார ஜனநாயகக் குடியரசாக அமைத்து அதன் குடிகள் அனைவருக்கும். சமூகம், பொருளாதாரம், ராஜீயம் - இவற்றில் நீதியும். எண்ணம், வெளியீடு, கோட்பாடு, மதம், வழிபாடு இவற்றில் சுதந்திரம், அந்தஸ்து, வாய்ப்பு - இவற்றில் சமத்துவம் கிடைக்குமாறு செய்யவும், தனியொரு வரின் கண்ணியமும், தேச சமுதாயத்தின் ஒருமைப்பாடும் நிலைபெறும் வண்ணம் அவர்கள் அனைவரிடமும் சகோதரத்துவம் ஓங்குமாறு செய்யவும், மனப்பூர்வமாகச் சங்கற்பம் செய்து கொண்ட மையால், நமது அரசியல் நிர்ணய சபையிலே 1949ஆம் வருஷம் நவம்பர் மாதம் இருப்பத்தோராம் தேதியாகிய இன்று இதனால் இந்த அரசியலமைப்பை  ஏற்றுக்கொண்டு, சட்டம்  இயற்றி நமக்கு நாமே வழங்கி கொள்கிறோம்.

13 (2) இப்பாகத்தால் அளிக்கப்பட்ட உரிமைகளைப் பறிக்கும் அல்லது சுருக்கும் சட்டம் எதையும் ஒரு ராஜ்யம் இயற்றலாகாது. இப்பகுதியை மீறி இயற்றப்படும் சட்டம் எதுவும் அப்படி மீறிய அளவிற்குப் பயனற்றதாகும்.

25 (1) பொது அமைதி, நல்லொழுக்கம், ஆரோக்கியம், இவற்றிற்கும் இந்தப் பாகத்திலுள்ள மற்றைய ஷரத்துக்களும் (விதிப்பிரிவுகளும்) உட்பட்டு, மக்கள் அனைவரும், மனச்சாட்சி சுதந்திரத்திற்கும் தடையின்றி, எம்மதத்தையும் தழுவுதல், கடைப்பிடித்தல், பரவச்செய்தல் இவை பற்றிய உரிமைக்கும் சமமானப் பாத்தியதை உடையவர் ஆவார்.

29 (1) தனிப்பட்ட மொழி லிபி(எழுத்து). அல்லது பண் பாடு இவற்றை  ஏற்கனவே உடையவராய், இந்தியாவின் ஆட்சிப் பரப்பில் அல்லது அதன் ஒரு பாகத்தில் வசிக்கும் குடிகளின் எப்பிரிவினரும், அவற்றைச் சிதையாமல் காக்க உரிமை உள்ளவர் ஆவார்.

(2) மதம், இனம், ஜாதி, மொழி இவை காரணமாக அல்லது இவற்றுள் எவையேனும் காரணமாக ராஜ்ஜியத் தினால் பராமரிக்கப் பட்ட அல்லது ராஜ்ஜிய நிதிகளிலிருந்து உதவி பெறுகின்ற எந்தக் கல்வி நிறுவனத்திலும் சேர்வதற்கு எக்குடியும் மறுக்கப்படலாகாது.

368 இந்த அரசியலமைப்பின் திருத்தம் அதற்கெனப் பார்லிமெண்ட் (நாடாளுமன்றம்) சபை ஒன்றில் ஒரு மசோ தாவைக் கொண்டு வந்தால் மட்டுமே ஆரம்பிக்கப்படலாம். அச்சபை ஒவ்வொன்றிலும் அம்மசோதா அச்சபையின் மொத்த உறுப்பினர் களின் பெரும்பான்மையோராலும் வந்திருந்து  வோட்டு (வாக்களிப்பு) செய்யும் அச்சபையின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாத பெரும் பான்மையோராலும் நிறைவேற்றப்பட்டால், அது  குடியரசுத்தலைவரிடம் அவர் அனுமதிக்காகச் சமர்ப்பிக் கப்பட வேண்டும்; அம்மசோதாவிற்கு அவ்வாறு அனுமதி அளிக்கப் பட்டதும், இந்த அரசியலமைப்பு அம் மசோதா ஷரத்துக்களின் (பிரிவுகளின்) படி திருத்தம் பெற்றதாகும். இவைபோன்ற இன்னும் பல அநீதிகள் உள்ளன.

நான் எதற்காகச் சிறை செல்கிறேன்?


சூதாடிய குற்றத்துக்காகவா?


கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்காகவா?


கொள்ளைக் குற்றத்துக்காகவா?


கொலைக் குற்றத்துக்காகவா?


மோசடிக் குற்றத்துக்காகவா?


பலவந்தப் புணர்ச்சிக் குற்றத்திற்காகவா?


பதுக்கல் - கலப்படம் குற்றத்துக்காகவா?


ஜாதி வெறியின் கலவரக் குற்றத்துக்காகவா?


என்ன குற்றத்துக்காக நான் சிறை செல்கிறேன்?


ஜாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன்! சிறை சென்றேன்! சர்க்கார் கண் விழிக்கவில்லை. ஆகவே, சாதிக்கு ஆதார மான சட்டத்தைக் கிழித்துத் தீயிலிட்டாவது இந்திய சர்க்காரின் (அரசின்) மனதை மாற்றலாமா, என்று கருதி அதைச் செய்தேன்.


இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா? எந்தப் பொருளுக்கேனும் நாசமுண்டா?


இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால், இதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டாமா?


ஜாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறை வாசஞ் செய்தான், என்பதை விடப் பெரும் பேறு, முக்கியக்கடமை,  வேறென்ன இருக்கிறது?


- இந்த விதமாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.


பெரியார் ஈ.வெ.ரா. அறிக்கை

(விடுதலை 9-11-1957)

குறிப்பு:- இந்த அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கின ஆறுபேரில் நான்கு பேர் பார்ப்பனர்; இதை நிறைவேற்றிய அரசியல் நிர்ணயசபை என்பது வயது வந்தோரின் வாக்குரிமை பெறாதவர்களைப் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களையே கொண்டதாகும்.

இந்தச் சட்டத்தில் இந்து மதத்துக்குப் பாதுகாப்பு அளிக் கப்பட்டிருக்கிறது; இந்து மதத்தில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது; சாதியை ஒழிப்பதற்கு இதில் இடமில்லை; சாதியைக் காப்பாற்றத்தான் இடமிருக்கிறது. இதை எளிதில் திருத்தியமைப்பதற்கும் சாதி ஒழிப்புகாரருக்கு வசதியில்லை; வாய்ப்புமில்லை (368வது பிரிவைப் படியுங்கள்.)

ஆதலால் சாதியை ஒழிக்க விரும்புகிறவர்கள், தனித் திராவிட நாடு பெறவிரும்புபவர்கள், தமிழ் நாடு சுரண்டப் படுவதைத் தடுக்க விரும்புபவர்கள், என்ன செய்வது?

இதை எரிப்பதன் மூலம் நம் எதிர்ப்பைக் காட்டிக் கொள்வதைத் தவிர வேறு வழி என்ன?

குறிப்பு: இதே மாதிரி வேண்டியவர்கள் அச்சடித்துக் கொள்ளலாம். இயலாவிடில் கையால் எழுதிக்கொண்டு கொளுத்தலாம்.

பெரியார் ஈ.வெ.ரா. முகவுரை: (விடுதலை 17-11-1957)

-  விடுதலை நாளேடு, 25.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக