ஞாயிறு, 7 ஜூலை, 2024

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உயரிய தீர்ப்பும்

 

தலையங்கம் : உண்மை

செப்டம்பர் 16-30 2019

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பும்

சென்னை உயர்நீதிமன்றத்தின் உயரிய தீர்ப்பும்

தந்தை பெரியார் சிலைகளின் பீடங்களில் அவர் தந்த கடவுள் மறுப்பு வாசகங்களான,

“கடவுள் இல்லை! கடவுள் இல்லை!

கடவுள் இல்லவே இல்லை.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்;

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி.

கடவுள் இல்லை; கடவுள் இல்லை’’

இந்த வாசகங்களைப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே 1967 முதல் திறக்கப்பட்ட பல சிலைகளின் கீழே பீடத்திலோ, பக்கத்தில் தனிக் கல்வெட்டுகளாகவோ போட ஆணையிட்டார் _ தனது தொண்டர்களுக்கும் சிலை அமைப்பாளர்களுக்கும்.

அவ்வாசகங்களைக் கொண்ட சிலைகள் திறப்பு விழாவில் தந்தை பெரியார் அவர்களே கலந்துகொண்டு, சிலை திறக்க வேண்டும் ஏன்? _ என்பது பற்றி மிக விளக்கமாகவும் உரையாற்றியுள்ளார்கள். அவ்வுரைகள் பதிவு செய்யப்பட்டும் (ஒலி நாடாக்களில்) உள்ளன.

திடீரென்று தெய்வநாயகம் என்கிற ஒருவரால் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது _ இச்சிலை பீட வாசகங்களை அகற்றக் கோரி. அதைத் தமிழக அரசு பொருட்படுத்தி பதில் அனுப்பவில்லையாம்! அதன்மீது பொது நல வழக்கு என்ற தலைப்பில் அழிவழக்கொன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை (என்னை) எதிர் மனுதாரராகக் கொண்டு போட்டார்.

அதில் தந்தை பெரியார் நாத்திகர் அல்ல. அப்படி கடவுள் மறுப்பு வாசகங்களை அவர் சொல்லவில்லை. அவருக்குப் பின்னர் தலைமையேற்ற வீரமணிதான் இந்தக் கடவுள் மறுப்பு வாசகங்களைப் போட்டு, கடவுள் பக்தர்களை மனம் புண்படும்படிச் செய்துள்ளார்; எனவே, பெரியார் சிலை பீடங்களில் உள்ள வாசகங்களை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டார்!

நமது கழக சார்பில், மூத்த வழக்குரைஞர் டாக்டர் தியாகராஜன், வீரசேகரன் ஆகியோர் வாதிட்டனர்.

தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய காலத்திலிருந்தே, கடவுள் மறுப்பாளர். காரணம், ‘ஜாதியை _ தீண்டாமையை கடவுள்தான் உருவாக்கியதாக மதமும் சாஸ்திரங்களும் கூறுகின்றன! எனவே, கடவுளை ஒழிக்காமல் எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்?

ஜாதி ஒழிப்புக்கு, கடவுள் மூடநம்பிக்கை ஒழிப்பு தேவையாக உள்ளதால் கடவுள் கற்பனை எப்படி அறியாமையால் _ முட்டாள்தனத்தில் முளைத்து, அதை வைத்து சுரண்டிப் பிழைக்கும் அயோக்கியத்தனத்தால் (அண்மையில் அத்திவரதர் படுத்தார், எழுந்து நின்றார் என்று 40 நாள்களில், எத்தனை கோடி கொள்ளை, எவ்வளவு வி.அய்.பி பாஸ் ஊழல்? தெரிந்ததே) பரப்பப்பட்டு, காட்டுமிராண்டிப் பருவ அறிவு நிலை உள்ளவர்களால் (Primitive) வணங்கப்படுகிறது என்பதை விளக்கும் அறிவியல் ரீதியாக _ விளக்கப்படும் காரண காரிய விளக்கமேயாகும் என்பதை தந்தை பெரியார் அவர்களே பல மேடைகளில் விளக்கியுள்ளார்! “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’’ என்ற தலைப்பில்,  சர்வ வல்லமை உள்ள கடவுள், தானே தோன்றியவன் என்பது உன் நம்பிக்கையானால் கற்பிக்கப்பட்டவன் என்று நான் சொல்லும்போது நீங்கள் ஏன் கோபப்பட வேண்டும்? கோபப்படுவது உங்கள் நம்பிக்கைக்கே விரோதமானது அல்லவா? என்பது போன்ற கேள்வியைக் கேட்டு மடக்கியதோடு, நல்ல அறிவு விளக்கமும் தந்துள்ளார்.

இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் அடாவடித்தனமாக வீரமணிதான் அவர் காலத்தில் இப்படி பெரியார் கருத்துக்கு மாறாக இந்த வாசகங்களைப் போட்டார் என்று வழக்குப் போட்டதை, மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இரு தரப்பு வாதங்கள், ஆவணங்களை அலசி விவரித்து 68 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில்,

1.            தந்தை பெரியார் கூறியதே கடவுள் மறுப்பு வாசகங்கள். கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்றபின் உருவாக்கி இணைத்தது அல்ல.

2.            கடவுள் உண்டு என்று கூற உரிமை ஒருவருக்கு உள்ளபோது, அதை மறுத்துக் கூறும் கருத்துச் சுதந்தரம் மற்றவருக்கும் உண்டு. இந்திய அரசியல் சட்டத்தின் கருத்துரிமை _ 19ஆவது பிரிவு _ அடிப்படை ஜீவாதார உரிமையாகும். அதைப் பறிக்க முடியாது. (இந்தத் தீர்ப்பு வழங்கிய நாள்: 4.9.2019)

தந்தை பெரியாரின் கொள்கைகளை ஒவ்வொருவரும் நன்கு அறிவர். அவர் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கி, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி _ இவைகளுக்காகப் பாடுபட்டு வந்தார்; திராவிடர் கழக இயக்கம் அதையே தொடருகிறது.

கடவுளும் மூடநம்பிக்கைகளும் ஜாதியும் பெண்ணடிமையும் சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும்   எதிராக இருப்பதால் கடவுள் மறுப்பையும் சொல்ல அவர்களுக்கு அந்த உரிமை உண்டு.

தந்தை பெரியார் கொள்கைகளைத்தான், வீரமணி தலைமையில் இயங்கிவரும் திராவிடர் கழகம் இன்றும் தொடர்ந்து செய்து வருகிறது எனத் தீர்ப்பில் தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளனர்!

இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்த நடுநிலைத் தீர்ப்பும் ஆகும்!

இப்படி ஒரு வழக்குப் போட்டு இக்கொள்கையை வருங்காலத்தில் திரிபுவாதம் செய்ய முடியாதபடி, சென்னை உயர்நீதிமன்றமே கூறி, ஆணியடித்துள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த வழக்குப் போட்டவருக்கு நமது நன்றி! வாதாடிய வழக்குரைஞர்களுக்கும் அதற்குப் பிறகே நம் நன்றி!

‘உண்மை ஒரு நாள் வெளியாகும் – அதில்

பொய்யும் புரட்டும் பலியாகும்’ – பட்டுக்கோட்டையார்

– கி.வீரமணி,

ஆசிரியர்,

‘உண்மை’

******

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நான் கூறிவருவது கண்டு பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பது போல் துள்ளுகிறார்கள், துள்ளிக் குதிக்கிறார்கள். அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து நம்மீது ஏவிவிடுகிறார்கள்.

பெரும் பெரும் போராட்டங்கள் நடத்தப் போவதாகப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கின்றேன்; எதிர்பார்க்கின்றேன் – போராட்டம் துவங்கினால் எனது மேற்கண்ட பிரசார வேலைக்கு உதவியாகும் என்பதோடு மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவதுதான்.

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான் கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ள வேண்டும்? *உண்டாக்கியவன் முட்டாள்’ என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கிறவனே நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்கிறாயா? உனது முட்டாள்தனத்தைக் காட்டத்தான் கோபிக்கிறாய், ஆத்திரப்படுகிறாய். நிற்க, உன் ஆத்திரத்திற்குக் காரணம்’ ஆதாரம் என்ன?

முண்டமே! நீ நினைக்கும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்கிறாயா? அல்லது, அது ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது, கடவுள் யாராலும் உண்டாக்கப்படாமல், யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் தானாக, இயற்கையாக, கடவுள் இஷ்டப்படி கடவுளே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்வதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால், எதற்காக வரும்? நான் சொல்வதை, கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால்தானே உண்டாக்கியவனை நான் முட்டாள் என்கிறேன் என்று நீ கோபிக்க வேண்டும்?

மற்றும், கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத் தானே கோபம், ஆத்திரம் வரவேண்டும்? நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீ ஒப்புக் கொள்கிறாய் என்றுதானே அர்த்தம்?

அது மாத்திரமல்லாமல், நீ கோபிப்பதால் கடவுளையும்

அவமதிக்கிறாய் என்றுதானே கருத்தாகிறது?

இப்போது நீ நினைத்துப் பார்! கடவுள் உண்டாக்கப்பட்டதா! (கிரியேஷனா?)  (Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா?)  (Invention) அல்லது கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? (நேச்சர?)(Nature) இதை முதலில் முடிவு செய்து கொள்.

நான் சொல்வதன் கருத்து – கடவுள் கண்டு பிடிக்கப்பட்டதுமல்ல; தானாகத் தோன்றியதுமல்ல; முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை, அதாவது கடவுளை, ஒரு மனிதன் உண்டாக்கினான் என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக்கொண்டாலோதானே கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக் கொள்ள வேண்டும்?

நீ இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் ‘கடவுள்’ ஒருவராலும் உண்டாக்கப்பட்டதல்ல; “தானாக சுயம்புவாகத் தோன்றியிருக்கிறது’ என்பதுதான் இன்று கடவுள் நம்பிக்கைக்காரர்களின் கருத்து ஆக இருக்கிறது.

ஆகையால், நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு அதற்காகக் கோபிப்பவனை ‘இரட்டை முட்டாள்’ என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.

இப்படி நான் சொல்வதால், கடவுளால் எவன் பெரிய ஜாதியாய் இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறானோ அவனுக்கும், கடவுள் பேரால் பொறுக்கித் தின்ன வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறவனுக்கும், கடவுளால் தனது அயோக்கியதனங்களை மறைத்துக் கொள்ள வேண்டியவனுக்கும்தான் கோபம் வரவேண்டும் – அதை நான் சமாளித்துக் கொள்கிறேன்.

– ஈ.வெ.ரா

‘உண்மை’, 14.3.1970

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக