திங்கள், 27 ஜூன், 2016

சீர்திருத்தப் பிரசங்கம்



- தந்தை பெரியார்
தோழர்களே!
சுயமரியாதைக் கல்யாணம் என்பது சில புதிய முறைகளைக் கொண்ட ஒருவித சீர்திருத்த திருமணமேயாகும்.
சனாதன திருமணத்துக்கும், சீர்திருத்தத் திருமணத்துக்கும் என்ன பிரமாத வித்தியாசங் கள் இருக்கின்றன என்பதைச் சற்று யோசித் துப் பாருங்கள்.
சனாதனத் திருமணம் - வைதிகத் திருமணம் - சாஸ்திரியத் திருமணம் என்ப வைகள் எல்லாம், இப்போது எவருடைய முயற்சியும் விருப்பமும் இல்லாமலே நாளுக்கு நாள் தானாகவே மாறிக் கொண்டு வருகின்றன. ஒரு நாள் கல்யாணம் இப்பொ ழுது பெருத்த நாகரிகமாய்ப் போய்விட்டது.
கலப்பு மணம் என்பது பெரியதொரு சீர்திருத்தமாய் பாவிக்கப்பட்டு விட்டது. சட்டம், சமூகம், சாஸ்திரம், மதம் எல்லாம் வரவர நாகரிகத் திருமணத்தையும், சீர்திருத் தத் திருமணத்தையும் அனுமதித்து விட்டது. ஆதலால் அதைப் பற்றி இப்போது ஏதும் பேச வேண்டிய அவசியமிருப்பதாய்த் தெரியவில்லை.
நாயுடு மாப்பிள்ளையும், வேளாளப் பெண்ணுமாய் போய்ச் சேர்ந்து விவாகம் செய்து கொள்வது என்பது சர்வ சாதாரண விஷயம் என்பதில் சேர்ந்ததாகும். இதனால் மனுதர்ம சாஸ்திரம் பழக்கம் ஒன்றும் கெட்டுப் போகவில்லை.
ஆனால், பார்ப்பனப் பெண்ணும், வேளாள மாப்பிளையும், பார்ப்பனப் பெண்ணும் நாயுடு மாப்பிள்ளையும், பார்ப்பனப் பெண்ணும் துலுக்க மாப்பிள்ளையும், பார்ப்பனப் பெண்ணும், குஜராத்தி சேட் மாப்பிள்ளையும், பார்ப்பனப் பெண்ணும், வெள்ளைக்கார மாப்பிள்ளையும் இப்படி மதக் கலப்பின கீழ் மேல் ஜாதி கலப்புமான - மனுதர்ம சாஸ்திரத்துக்கு விரோதமான திருமணங்கள் பெரிய இடங்களில் எல்லாம் எவ்வளவோ நடந்தாகி விட்டது.
இந்தத் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகள் எந்தச் சாதியை சேர்ந்தவர்கள் என்று மனுதர்ம சாஸ்திரத்தையோ, வருணசங்கிரகத்தையோ பார்ப்போமானால் அவர்கள் சண்டாள ஜாதியைவிட கீழான ஜாதிகளாய் மதிக்கப் படுவதைக் காணலாம்.
அப்படிப்பட்ட தாழ்வான நிபந்தனை களையெல்லாம் லட்சியம் செய்யாமல் கற்றவர்கள் செல்வவான்கள். மேல்ஜாதிக் காரர்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியார்கள் என்கின்றவர்களே துணிந்து நடக்கிறார்கள் என்றால் சமஜாதி கல்யாணமாகிய வேளாளன்-நாயுடு, ரெட்டி-நாயுடு கலப்பு மணம் என்பதைப் பற்றி யாரும் கவலைப் பட வேண்டியதில்லை.
கல்யாணம் என்றால் என்ன?
திருமண விஷயங்களில் ஜாதி, மதம், சடங்கு, சாஸ்திரம் ஆகியவைகளைப் பார்க் கும் விஷயங்களைப் பற்றி பேசும் முன்பு, கல்யாணம் என்றால் என்ன என் பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பாமர ஜனங்கள் கல்யாணம் என்பதை வீட்டு வேலைக்கு ஒரு ஆள் (வேலைக் காரியை) வைப்பது போலவே கருது கிறார்கள். புருஷனும் அப்படியே கருது கிறான். புருஷன் வீட்டாரும் அதுபோலவே தங்கள் வீட்டு வேலைக்கு ஒரு பெண் கொண்டு வருவதாகவே கருதுகிறார்கள். இது மாத்திரமா! பெண் வீட்டாரும் தங்கள் பெண்ணை வீட்டு வேலைக்கே தயார் செய்து விற்றுக் கொடுக் கிறார்கள். பெண்ணும் தான் ஒரு வீட்டுக்கு வேலை செய்யப் போவதாக கருதுகிறாள்.
பெண்ணின் கடமையும், சமையல் செய்வது, பாத்திரம் விளக்குவது, வீடு வாசல் கூட்டி மெழுகி சுத்தம் செய்வது, இதுகளோடு பிள்ளையையும் பெற்றுக் கொண்டு அதையும் வளர்ப்பது ஆகியவைகளையே முக்கியமாகக் கொண்டதாக இருக்கிறது.
மதமும், சாஸ்திரங்களும் கல்யா ணத்தைப் பற்றி என்ன சொல்லுகின்றன என்று பார்த்தால் பெண் சுதந்திரமற்றவள், அவள் காவலில் வைக்கப்பட வேண்டிய வள் என்பது ஒருபுறமிருக்க, கல்யாணம் செய்வதானது மனிதன், புத் என்னும் நரகத்துக்கு போகாமல் இருப்பதற்கு ஆக ஒரு பெண்ணை பெறுவ தற்கு ஆகவும், பெற்றோர்களுக்கு இறுதிக் கடன் திதி முதலியவைகள் செய்ய ஒரு பிள் ளையைப் பெறவும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறு கின்றன.
ஆகவே, கல்யாணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இயற்கை இன் பத்தை நுகரவும், ஒருவரை ஒருவர் காதலித்து ஒருவருக்கொருவர் வாழ்க்கைப் போட்டியில் ஏற்படும் சிரமத்துக்கு இளைப் பாறவும், ஆயாசம் தீர்த்துக் கொள்ளவுமே ஆணுக்கு ஒரு பெண்ணும், பெண்ணுக்கு ஒரு ஆணும் வேண்டியிருக்கிறது என்பதை பெரும்பாலோர் சிந்திப்பதே இல்லை.
இக்கல்யாணம் பொருத்தம் பார்க்க வேண்டிய பொறுப்பு மணமக்களுக்கே உண்டு என்பதையும் கருதுவதே இல்லை. கல்யாணம் மணமக்கள் எத்தனத்தினா லேயே ஆக வேண்டியது என்பதையும் ஒப்புக் கொள்ளுவதே இல்லை.
கல்யாணம் என்றால் அது தெய்விக மானது. தெய்வ எத்தன மானது, தெய்வமே பொருத்தி வைக்க வேண்டியது என்று கருது வதும், கல்யாணத்தில் எப்படிப்பட்ட பொருத் தம் பொருந்தாப் பொருத்தமானாலும், அதனால் எப்படிப்பட்ட துன்பமும், தொல்லை யும் அனுபவமானதும் கண் கூடான பிரத்தி யட்ச அனுபவமாய் இருந்தாலும் அதைத் தெய்வ எத்தனம், தெய்வ சித்தம் என்கின்ற பெயரால் அனுபவிப்பதும் அந்தப்படி நினைத்து திருப்தியடைவது மாய் இருக் கின்றது.
இவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என்பதும், இப்படிப்பட்ட துன்பங்களுக்கும், தொல்லை களுக்கும் மணமக்கள் கல் யாணத்தினால் ஆளாகாமல் இருக்க வேண்டுமென்பதற்காகவே, கல்யாணத்தில் சீர்திருத்தம் அல்லது முறையில் மாறுதல் என்பது அவசியம் வேண்டும் என்கிறோம்.
கல்யாணம் என்றால் சுதந்திர வாழ்க்கை, சமத்துவ வாழ்க்கை என்று இருக்க வேண் டுமே ஒழிய, அடிமை வாழ்க்கை, மேல் கீழ் வாழ்க்கை என்று இருக்கக் கூடாதென்பதே எங்களது ஆசை.
நாம் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் பெண்ணை அடிமையாகவே, ஒருவனுடைய சொத் தாகவே கருதுகிறோம் என்பதோடு, பெண் ஜாதியை நமது போகப் பொருளாகவே கருதுகிறோம். அதற்கு ஒரு தனி உயிரும், மனமும் இருப்பதாகக் கருது வதில்லை. இது இன்று உலக சித்தாந்தமா யிருக்கிறது.
குறிப்பிட்ட ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு பெண் ஜாதியாய் இல்லாத கல்யாண மில்லாத பொண் ணுக்கு மாத்திரம் சுதந்திரம் என்பது சிறிதாவது உண்டு என்று சொல்ல லாமே தவிர, மற்றபடி கல்யாணமான பெண்கள் என்றால் அடிமைகளாகவே மதிக்கப் படுகிறார்கள்.
உதாரணமாக நமது சக்கரவர்த்தி திருமக னாரான இளவரசர் நேற்றைய தினம் தன்னை ஒருவர் ஏன் கல்யாணம் செய்து கொள்ள வில்லை என்று கேட்டதற்கு அவர், ஒரு பெண்ணை அடிமையாக்க எனக்கு இஷ்ட மில்லாததால் நான் கல்யாணத்தை விரும்ப வில்லை என்று சொல்லியிருக்கிறார். இதில் எவ்வளவு பெரிய உண்மை இருக்கிற தென்பதை சிந்தித்துப் பாருங்கள்.
பெண் அடிமை என்பது மனித சமுக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமுகம் பகுத்தறிவு இருந்தும் தேய்தல் அடைந்து கொண்டே வருகின்றது.
தாயின் குணம், தாயின் தன்மை பெரிதும் பிள்ளைக்கு பிறவியிலேயே வருகின்றது என்பதை யார் மறுக்க முடியும். மக்களின் குணம் 100க்கு 90 பாகம் சரீர அமைப்பை பொறுத்ததேயாகும். சரீர அமைப்புக்கு தாய் தகப்பன் சரீர அமைப்பை பெரும் பாகம் காரணமாகும். ஆகையால் இந்த அடிமைப் பெண், சுதந்திர உணர்ச்சியுள்ள பிள் ளையைப் பெறும் என்று எப்படி எதிர் பார்க்க முடியும்?
கல்வி, அறிவு, செல்வம் ஆகியவைகள் இல்லாத தாயானவள் நல்ல தாராள புத்தியும், சமத்துவ ஞானமும், திருப்தி ஆன மனமும் உள்ள பிள்ளைகளை எப்படி பெற முடியும்? என்பதை உணர்ந்தோமேயானால் மனித சமுகம் சுதந்திரமாக கவலையற்று திருப்தியாய் ஏன் வாழவில்லை என்ப தற்குத் தானாகவே காரணம் விளங்கும்.
ஒழுக்கம்
மற்றும் வாழ்க்கையில், ஒழுக்கத்தில் புருஷனுக்கு வேறு சட்டம், பெண்ணுக்கு வேறு சட்டம் வைத்திருக்கிறோம்.
ஆனால், ஒழுக்கத்தைப் பற்றி சதா பேசுகிறோம் - ஒழுக்கம் என்பதை எழுத்தில், சப்தத்தில் பார்க்கின்றோமே ஒழிய காரியத்தில் பார்ப்பதே இல்லை. விபசாரித்தனம் என்பதை எவ்வளவு கண்டிக்கிறோம் - அதற்கு எவ் வளவோ நிபந்தனைகள் நிர்ப்பந்தங்கள் சட்ட மூலமாய் - சமுக மூலமாய் - சாஸ்திர மூலமாய் - இயற்கை மூலமாய் எல்லாம் வைத்திருக் கிறோம். அப்படி எல்லாம் இருந்தும் அதை இருவருக்கும் சமமாய் வைக்கவில்லை.
ஆண் விபசாரத்தைப் பற்றி பேசுவோரே கிடையாது. அப்படி இருந்தாலும் அதற்குப் பெயர் பலக் குறைவு (றுநயமநேளள) என்று சொல்லி விடுகிறோம். பெண் விபசாரத்தை நாணயக் குறைவு, ஒழுக்கக் குறைவு, கெட்ட குணம், இகழத் தக்கது, கண்டிக்கத்தக்கது, வெறுக்கத் தக்கது என்றெல்லாம் சொல்லுகிறோம். ஆணும் பெண்ணும் சேர்ந்தால்தான் விபசார மாகுமே தவிர, ஒரு பெண்ணும் மற்றொரு பெண்ணும் சேர்ந்து விபசாரம் செய்துவிட முடியாது. அதை யாரும் விபசாரமென்று சொல்ல மாட்டார்கள்.
ஒருவருக்கொரு நீதி என்கின்ற முறை யாலே தான் உலகில் பெரிதும் விபசாரம் இருந்து வருகிறதே தவிர, பெண்களின் கெட்ட குணங்களால் இருந்து வருவதாகச் சொல்லிவிட முடியாது.
அன்றியும் இவ்வளவு தூரம் மதத்தாலும், சட்டத்தாலும், சமூகத்தாலும், நிபந்தனை யாலும் வெறுக்கப்பட்ட விபசாரம் என்பது ஏன் இன்று உலகில் சர்வசாதாரணமாய் இருந்து வருகின்றது? இதற்கு என்ன காரணம் என்பதை யாராவது யோசிக் கிறார்களா?
ஒவ்வொருவரும் விபசார தோஷத்துக்கு ஆளாகிவிட்டே மற்றவர்களை குறை கூறுகிறார்கள் என்பது அவரவர்கள் நெஞ்சில் கையை வைத்து குழந்தை பருவம் முதல் தாங்கள் நினைத்தது, செய்தது ஆகிய காரியங்களை ஞாபகப்படுத்திப் பார்த்தால் விளங்கும்.
நம்முடைய கடவுள்கள் என்று சொல்லப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலியவைகள்கூட விபசார தோஷத்தில் இருந்து விலக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வில்லை. அவர்களுடைய பெண்ஜாதிமார் களைக்கூட விபசார தோஷத்தில் இருந்து விலக்க வில்லை.
ஏன் இப்படி இருக்க வேண் டும்? விபசாரம் மக்களுக்கு இயற்கையா என்று பாருங்கள். ஒரு நாளும் அல்லவே அல்ல. செயற்கை குணங்களாலேயே விபசாரம் நடக்கின்றன அதாவது கல்யாணங்களே பெரி தும் விபசாரத்துக்கு சமானமானவையாகும்.
விபசாரம் என்றால் என்ன?
தனக்கு இஷ்டமில்லாமல், காதல் இல்லா மல், பணம், காசு, சொத்து, வேறுவித நிர்ப் பந்தம் ஆகியவைகளுக்கு ஆக இணங்கு வதே விபசாரம் ஆகும். நமது மணமக்கள் பெரும்பாலோர் தாய் தகப்பன்மார்கள் தங்களை ஜோடி சேர்த்து விட்டார்களே என்பதற்காகவே இணங்கி இருக்கின்றார்கள். மற்றும் பலர் தங்களுக் குள் வேற்றுமை உணர்ச்சியும், (அன்பு) ஆசை இன்மையும் ஏற்பட்டும் பிரிந்து கொள்ள முடியவில்லையே என்பதற்கு ஆகவே இணங்கி இருப்பது போல் இருக் கிறார்கள். இது போன்றவைகள் எல்லாம் நிர்ப்பந்த விபசாரங்களேயாகும்.
மற்றும் பலர் செல்வத்தையே பிரதானமாய்க் கருதி இன்ப உணர்ச்சியை பறி கொடுத்து இணங்கி இருக் கிறார்கள்.  இதுபோன்றவை காசு, பணம், சொத் துகளுக்காகச் செய்யப் படும் விபசாரங்களே யாகும். இவை ஒருபுறமிருக்க, இன்று உலக வழக்கில் இருக்கின்ற விபசாரத் தன்மைகள் தான் ஆகட்டும் ஏன் ஏற்பட வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.
பால்ய மணங்களை ஒழித்து காதல் மணம், கல்யாண ரத்து, விதவை மணம், சம உரிமை ஆகியவைகள் ஒரு சமூகத்தில் இருக்கு மானால் இன்றுள்ள விபசாரங்களில் 100-க்கு 90 பாகம் மறைந்து போகும் என்றே சொல் லுவேன். அதோடு பெண் மக்களை நன்றாக படிக்க வைத்து, அவர்களுக்கு சுதந்திர உணர்ச்சியை ஊட்டி, சொத்து உரிமையை யும் வழங்கி விடுவோமே யானால் விபசாரம் என்பது எப்படி நேரும் என்பதை யோசித் துப் பாருங்கள்.
விதவைத் தனம்
விதவைத்தன்மையே தான் விபசாரம் என்கின்ற பிள்ளையை பெறுகிறது. பிறகு ஆண் எப்படி வேண்டுமானாலும் திரிய லாம். எவ்வளவு பெண் ஜாதிகளை வேண்டு மானாலும் மணக்கலாம் என்கின்ற முறையே விபசாரம் என்னும் (அந்தப்) பிள்ளையை வளர்க்கின்றது.
கல்யாண ரத்து இல்லை என்கின்ற முறையானது விபசாரத்தை நீடுழி வாழச் செய்கின்றது.  இவற்றிற்கு எல்லாம் பரிகாரம் செய்யாமல் விபசாரத்தைப் பற்றிப் பேசுவது என்பது பயனற்ற காரியமேயாகும்.
விதவை தன்மை என்பது நமது நாட்டில் மிக்க கொடுமையான முறையில் இருந்து வருகின்றது. இதை எந்தச் சீர்த்திருத்த வாதியும் கவனிப்பதே இல்லை. விதவைகள் வாழ்க்கை ஒரு சிறைக் கூட வாழ்க்கையை ஒக்கும். ஒரு கைதிக்குள்ள நிர்ப்பந்தம் ஒவ் வொரு விதவைக்கும் இருந்து வருகின்றது.
எப்படி ஒரு கைதியானவன் சிறைக்கூட விதியை மீற வேண்டும் என்கின்ற ஆசைக் கும், அவசியத்துக்கும் உள்ளாகிறானோ, அதுபோலவே தான் ஒவ்வொரு விதவையும் விதவைச் சட்டத்தைமீற வேண்டிய நிர்ப் பந்தத்துக்கு ஆளாகிக் கஷ்டப்படுகிறாள். இந்தக் கொடுமை ஒரு நிரபராதியான பெண் ணுக்கு ஏன் ஏற்பட வேண்டும் என்று கேட் டால் இதற்கு என்ன மறுமொழி இருக்கிறது? இந்த 20ஆவது நூற்றாண்டில் தலைவிதி என்றும், கடவுள் செயல் என்றும் சொல்லி மக்களை ஏய்க்க முடியுமா?
விதவைத் தன்மை என்பது கடவுள் செயலாய் இருந்தால், பார்ப்பனர்கள் நிறைந்த பார்த்தசாரதி கோவில் தெரு தெப்பக்குளத்தில் தினம் ஒரு குழந்தை எப்படி மிதக்க முடியும்? ஊர்கள் தோறும் குப்பைத் தொட்டிகளும், ஓடை புறம் போக்குகளும், கள்ளி மேடும், சுள்ளி மேடும், ஊரணிகளும் எப்படிப் பிள்ளைகளை பெற முடியும்?
ஆகவே மனித சமுகத்துக்கு கடுகள வாவது புத்தியும், நேர்மையும் இருக்கின்றது என்று சொல்லப்பட வேண்டுமானால் இந்த விதவைக் கொடுமை முதலில் ஒழிக்க ப்பட்டாக வேண்டாமா? இந்தக் கொடுமை பகுத்தறிவுள்ள மனித சமுகத்தில் இருக் கிறது என்றால் பகுத்தறிவுக்கு இழிவு கற்பிக்க இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்று கேட்கின்றேன்.
அதோடு கல்யாண ரத்து என்கின்ற ஒரு முறையும் ஏற்படுத்தியாக வேண்டும். ஏனெனில், கல்யாணத்துக்கு இடமில்லாத காரணத்தினாலே ஆண்கள் மனைவிமார் களிடத்தில் மனிதத் தன்மையோடு நடந்து கொள்ளாமல் மிருகத்தனமாக நடக்கத் தூண்டப்படுகிறார்கள். ஆண்கள் மனைவி மார்கள் தங்களுக்கு பிடிக்கவில்லை யானால் மறுபடியும் மணம் செய்து கொள் ளுகிறார்கள்.
மணமில்லாமல் வைப்பு முறையிலும் வேறு ஸ்திரிகளை சேர்த்துக் கொள்ளவும் செய் கிறார்கள். மற்றும் தங்களுக்கு இஷ்ட மானபடி யெல்லாம் நடந்து கொண்டு பெண்களை இம்சிக்கிறார்கள்.
இவ்வளவுக்கும் தைரியம் வந்ததற்குக் காரணம் ஆண்கள் எப்படி நடந்து கொண் டாலும் மனைவிமார்களுக்கு ஜீவ னாம்சம் கேட்கும் பாத்தியம் தவிர, வேறு எவ்வித உரிமையும் இல்லாததேயாகும்.
பெண்களுக்கு தங்கள் புருஷன் பிடிக்கவில்லையானால் சகித்துக் கொண்டு தலைவிதி என்பதாகச் சொல்லி திருப்தி யுடன் இருக்க வேண்டியதைத் தவிர வேறு ஒரு கதியும் இல்லை. குரூர குணமுள்ள புருஷன், குடிகாரப் புருஷன், குஷ்டரோகி யான புருஷன் முதலிய எப்படிபட்டவனாய் இருந் தாலும் அவனுடைய கொடுமைகளை சகித்துக் கொண்டு அவனுடன்கூட வாழ வேண்டியி ருக்கிறது. இது ஜீவகாருண்யமாகுமா என்று கேட்கின்றேன்.
எனவே தோழர்களே!
சமுக வாழ்க்கையில் முக்கியமாக ஆண் பெண் தன்மையில் செய்ய வேண்டிய சீர்திருத் தம் எவ்வளவு இருக்கிறது என்று பாருங்கள். இவைகளைப் பற்றி எந்தத் தலைவர்களாவது, மகாத்மாக்களாவது, எந்த சர்க்காராவது கவனிக்கிறதா?
பெண்களுக்கு சொத்துரிமையும் இல்லை; கல்வி வசதியும்இல்லை - இதுவும் மிகவும் கொடுமையான காரியமேயாகும். பெண்கள் சொத்துரிமை விஷயத்தில் இந்து மதக் கொள்கை மிகவும் அக்கிரமமான தாகும். பெண்கள் எப்போதும் சொத்துரிமை சர்வ சுதந்திரமாய் அனுபவிக்க மார்க்க மில்லை. விபசாரியாய்ப் போன பெண், தேவடியாத் தொழில் செய்யும் பெண் ஆகியவர்களுக்கே இந்து சமுகத்தில் சொத்துரிமை இருக்கிறது என்றால் இந்து சமுகத்தின் ஈனத் தன்மைக்கு, மடத் தன்மைக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.
ஒரு விதவை விபச்சாரியாய் போய் விட்டால் தான் புருஷன் சொத்தை அனுப வித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்த விதவை மறுமணம் செய்து கொண்டால் புருஷன் சொத்துக்களில் ஒரு சிறு தம்பிடி கூட அனுபவிக்க உரிமை இல்லை. புரு ஷனுடைய வாரிசுகள் அவர்கள் எப்படிப் பட்டவர்களாய் இருந்தாலும் அனுபவிக்க லாம் என்பதாக இந்து லா கூறுகிறது.
கல்வி விஷயத்திலும் பெண்கள் கல்வியைப் பற்றி யாரும் கவலை எடுத்துக் கொள்ளுவதில்லை. ஏதோ பெயருக்கு மாத் திரம் தான் பெண் கல்வி விஷயம் நடைபெறு கின்றன.  100க்கு ஒரு பெண்கூட படித்த பெண் இல்லாமல் இருக்கிறது இந்து சமுகம்.
கிறிஸ்துவப் பெண்கள் அனேகமாய் 100-க்கு 10, 20 பேர்கள் படித்திருக்கிறார்கள். முகம் மதிய பெண்களும், அப்படியே. பார்ர்ப்பன பெண்களோ 100க்கு 60, 70 பேர்கள் படித்திருக் கிறார்கள். மற்றப்படி இந்துப் பெண்கள் என்கின்றவர்கள் சராசரி 100க்கு ஒருவர் வீதம் கூட இல்லை.
பெண்களுக்கு அய்ஸ்கூல், மிடில் ஸ்கூல் முதலியவை ஒரு ஜில்லாவுக்கு ஒன்று இரண்டு கூட அதிசயமாய் இருக் கிறது. பெண்களுக்கு மேல் படிப்புக்கு சம்பளமில்லாமல் சொல்லி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரும் பெண் களை நன்றாய் படிக்க வைக்க வேண்டும். சுதந்திரகாரனுக்கு பெண்களை தக்கவர் களாக இருக்கும்படியான தொழில் கல்வி ஆகியவைகள் தேடிக் கொடுக்க வேண்டி யது பெற்றோர் கடமையாகும்.
இம்மாதிரியான காரியங்கள் கல்யாண விஷயத்திலும் பெண்கள் விஷயத்திலும் முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டியி ருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள் ளுகிறேன். (கீழையூர், திருப்புவனம், திருச்சி ஆகிய இடங்களில் முறையே தோழர்கள் வேலு - தனபாக்கியம், நாராயணசாமி - அரங்கநாயகி, சக்கரபாணி - மீனாட்சி ஆகி யோருக்கு நடைபெற்ற திருமணங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளின் சுருக்கம்)
குடிஅரசு - சொற்பொழிவு - 16.06.1935
-விடுதலை,15.6.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக