செவ்வாய், 28 ஜூன், 2016

தோழர்களே! சாகத் துணிவு கொள்ளுங்கள்


- தந்தை பெரியார்
இந்தத் திராவிட வாலிபர் சங்க ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்து தலைமை முன்னுரை நிகழ்த்துவது என்கின்ற சம்பிரதாய நிகழ்ச்சிப்படி நான் ஏதாவது பேசவேண்டும். அப்படிப் பேசுவதில் திராவிடர் என்பதுபற்றியும், நீங்கள் பெரிதும் இளைஞர்கள் ஆனதால் நானும் முதியோனாய் இருப்பதால் உங்களுக்குச் சிறிது அறிவுரை வழங்குவது என்கின்ற தன்மையிலும் சில வாக்கியங்கள் சொல்வது பொருந்துமெனக் கருதுகிறேன்.
நாம் திராவிடர்
நாம் நம்மைத் திராவிடர் என்று ஏன் சொல்லுகிறோம்?
இந்த நாடு திராவிட நாடு, நாம் இந்நாட்டு மக்கள், இந்நாட்டுப் பழங்குடி மக்கள், இந்நாட்டில் மேன்மையாய் நாகரிகத்தில் சிறந்து மானிகளாய் வீரர்களாய் வாழ்ந்த வர்கள், வீரத் திராவிடர்கள் என்ற பெய ரைச் சரித்திர காலத்திற்கு முன்னிருந்து உடைத்ததாய் இருந்தவர்கள், ஆதலால் திராவிடர்கள் என்கிறோம், இதை நானாக அல்லது நானே சொல்லவில்லை. இது இன்று மாத்திரம் சொல்லப்படவில்லை.
இந்த நாட்டுச் சரித்திரம் , ஏன்? உலகச் சரித்திரம் தெரிந்த காலம் முதலாய் ஆராய்ச்சி நிபுணர்களான பல அறி வாளிகளால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை யும் இன்றும் பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கும் சரித்திர நூல்கள் முதல் புராணங்களில் குறிப்பிட்டு இருக்கும் கற்பனை, பழிச்சொற்கள் என்பவைகள் வரையில் காணப்படும் சேதிகளுமாகும்.
பழமைகள், பழமை சம்பவங்கள், காட்சி சாலைகளுக்கும், நேரப் போக்குப் பரிகாசத் துக்கும் சென்று கொண்டிருக்கும் இந்தப் புத்துலகில் பழங்காலச் சரித்திரத்தையும் பரிகசிக்கும் புராணத்தைப் பற்றியும் கூட ஏன் சொல்லுகிறேன் என்று கேட்பீர்கள். அந்தமாதிரி அதாவது, நம்மைப் பற்றி நம் முன்னைய நிலையைப் பற்றி மேலே நான் சொன்னமாதிரியாய் இருந்து நாம் இன்று எந்தமாதிரியில் இருக்கிறோம்?
பழமை நிலைமையும் இயற்கையும் முற்போக்கில் மாற்றப்பட்டு இருக்கிறதா பிற்போக்கில் பின்னும் மோசமான நிலைமையில் கொண்டுபோய்த் தள்ளி இருக்கிறதா என்பதைச் சிந்திக்கவும், நாம் அதைவிடச் சிறிதாவது மேன்மையும், மனிதத்தன்மையும் அடைந்திருக்கிறோமா அல்லது கீழ்மையும், இழிநிலையும், மானமற்ற தன்மையும் அடைந்திருக்கிறோமா என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து மேலால் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்ப தற்கும் ஆகவேயாகும்.
நாம் சூத்திரர்களா?
நாம் பிறவியிலோ தன்மையிலோ தகுதியிலோ சூத்திரர்களாக இருந்தவர்கள் அல்ல; உண்மையில் அல்ல. பின்நாம் யார்? என்றால் வீரத்திராவிடர்கள் ஆவோம். எப்பொழுது முதல் என்றால் முன் நான் சொன்னபடி உலக சரித்திரம் மனிதநூல் ஆகியவை எட்டியகாலம் முதல் என்பேன். இவை வெறும் வார்த்தையால் மாத்திரம் அல்ல. நாடு, இனம், பண்பு, நடைமுறை ஆகியவைகளால் இயற்கையைத் தழுவி திராவிடர்களானவர்கள்.
நமது இந்த முடிவு இதுவரை யாராலும் மறுக்கப்படவில்லை, நம் எதிரிகளாலும் மறுக்கப்படவில்லை. இந்த உணர்ச்சி நமக்குக் கூடாது என்று சொல்லும் சுயநல சமயசஞ்சீவிகளாலும் கூட மறுக்கப்படவில்லை ஆனால் நாம் தான் நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ள, நம்நாடு திராவிடம் என்று சொல்லிக்கொள்ள, நாம் சூத்திரர்கள் அல்ல என்று சொல்லிக்கொள்ள வெட்கப் படுகிறோம்.
எப்படி மானமும் சுதந்திர உணர்ச்சியும் அற்ற ஒரு பெண் மற்றொரு ஆண் மகனைக் கண்ணால் பார்ப்பதால் கற்புப் போய்விடுமென்று கருதிப் பயப்படு கிறாளோ, பார்க்க வெட்கப்படுகிறாளோ அதுபோல் நாம் திராவிடர் என்று சொல் லிக்கொண்டால் நமது மதம் போய்விடும், தேசியம் போய்விடும், செல்வாக்குப் போய்விடும் என்று பயப்படுகிறோம், வெட்கப்படுகிறோம்.
எந்தக் காரணத் தாலேயோ நாம் சூத்திரர்கள் என்பதாக ஆக்கப்பட்டிருந்தாலும் இன்றும் சூத்திரர் களாக அதுவும் நாம் மாத்திரமல்லாமல் நம் இன்றைய ராஜாக்களும், மகாராஜாக்களும், பண்டார சன்னதிகளும், ஜமீன்தாரர்களும், ஆயிரக்கணக்கான வேலி நிலமுள்ள மிராசுதாரர்களும், பல கோடி ரூபாய் செல்வமுள்ள ராஜா, சர் முதலியவர்களும் சூத்திரர்களாக இருக்கவும் நடத்தப்படவும் இதுதான் (நாம் திராவிடர் என்று உணராத தும், உணர்ந்தாலும் சொல்லிக்கொள்ளப் பயப்படுவதும்) காரணமாகும்.
ஆனால் இந்த இழிவு அவர்களுக்கு (அப்படிப்பட்ட பெரியவர்களுக்கு) மிக சகஜமாகிவிட்டது. எப்படியோ அவர்களை அவர்களது ஆசா பாசம் அவர்களுக்குச் சகிப்புத்தன்மையை உண்டாக்கிவிட்டது. நமக்குப் பட்டம் இல்லை, பதவி இல்லை, செல்வம் இல்லை இவை பற்றிய மானமற்ற பேராசை இல்லை. எனவே நாம் ஏன் திராவிடன் என்பதை மறந்து மறைத்துக்கொண்டு நம்மைச் சூத்திரன் என்பதாகக் காரியத்தில் ஆதாரத் தில் ஒப்புக்கொள்ள வேண்டும்?
சூத்திரன் என்றால் என்ன?
சூத்திரன் என்பது தாசிமகன், ஆரியர் களின் அடிமை; ஆரியநலத்துக்கு ஆக, ஆரியர்களின் மேன்மை வாழ்வுக்காக இருப்பவன், இருக்க வேண்டியவன், இருந் தும் வருகிறவன் என்பதாகும். இதுதான் அந்த வார்த்தையின் அருத்தம். சாஸ்திரம் கடவுள் என்பவற்றின் வாக்குமாகும். ஆனால் உண்மையில் நாம் அப்படிப்பட்ட வர்கள் அல்லாதவர்களாக இருக்கும்போது அந்தப் பெயரை ஏன் நமக்கு இருக்க விடவேண்டும்? என்று கேட்கிறேன்.
தோழர்களே, இக்காலத்தில் உண்மை யான ஒரு தாசிமகனையே பாருங்கள். தனது தாய் தாசி என்றும், தனது வீடு வாசல் செல்வம் தாசித்தனத்தால் வந்ததென்றும் தெரிந்தவன்கூட அவனது சுயமரியாதைக் கொதிப்பால் தாசியே உலகில் இருக்கக் கூடாது சட்டத்தில் இருக்கக் கூடாது, தன் தாய் வீட்டிற்குள்ளும் வேறொரு பயல் அவன் ஜமீன்தாரரானாலும், அவன் குருவானாலும், ஆச்சாரியானாலும், கோடீஸ்வரன் ஆனாலும் வரக்கூடாது என்று தன் தாயைச் சகோதரியைக் கண்டிக்கிறான். வருகிறவனையும், ஏன்? வந்து கொண்டிருக்கிறவனையும் விரட்டி அடிக்கிறான், அநேகமாய் அடித்துத் துரத்தியே விட்டான்.
இத்தனைக்கும் அவர்களுக்குத் தேவ அடியார்கள், தேவதாசிகள் என்று பெயர் இருந்தும்கூட. ஆனால் நம் சுயமரியாதை என்ன என்று பாருங்கள், நாம் வேசி மக்கள், அடிமை (சூத்திரர்) என்று அழைக்கப்படுகிறோம். அப்படி நம்மை அழைப்பவர்களைச் சாமி என்கிறோம். அப்படிப்பட்டவர்களை நம்மிலும் மேலானவர்களாகக் கருதி வைதிகக் கருமங்களை (முட்டாள்தனமான, இழிவுதரும்படியான காரியங்களை) அவர் களைக்கொண்டு செய்வித்துக் கொள் கிறோம்.
அதையே வலியுறுத்தும் மார்க்கத்தை, சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்மை சொல்லிக்கொள்ளுகிறோம் வாயால் சொல்லிக்கொள்ளுவது மாத்திரமல்லாமல் மற்றவர்களுக்கும் தெரியும்படியான குறி களையும் (ஏதாவது ஒரு அடையாளத்தை யும்) அணிந்துகொள்ளுகிறோம். இந்த பேதத்தையும், இழிவையும் மானமற்ற உணர்ச்சியையும் நிலைநிறுத்துவதும், பெருக்கிக் கொள்வதுமான காரியங்களை நமது ஆத்மீக, லவுகீக காரியமாய்க் கருதிச் செய்து வருகிறோம். இது நியாயமா? நமக்கு இது தகுதியா? அதுவும் இந்த 20ஆம் நூற்றாண்டில் தகுமா? இதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழலாமா? என்று யோசித்துப் பாருங்கள்.
உன் சொந்த இழிவை ஈனத்தை நீக்கிக் கொள்ளாத நீ, நாட்டுக்குச் சுதந்திரம், மனித சமுதாயத்திற்கு விடுதலை ஏழைகளுக்குச் செல்வம், உண்டாக்கப் பாடுபடுகிறேன் என்றால் உன்னைவிட மடையனோ அல்லாவிட்டால் அயோக்கியனோ அல்லா விட்டால் பித்தலாட்டக்காரனோ வேறு யார் இருக்கமுடியும்? திராவிடனுடைய சரித் திரத்தில் இந்த இழி தன்மை என்றும் இருந்ததாகக் காணப்படவில்லையே!
எது தேசியம்? எது விடுதலை?
ஆயிரக்கணக்கான எச்சிலிலை கழியும் ஓட்டலுக்குள் சென்று சமமாய் இருக்க அனுமதியில்லை. நீ பத்து லட்சக்கணக்காக செலவழித்துக் கட்டி வருஷம் லட்சக்கணக் கான செலவு செய்து பூஜை உற்சவம் செய்துவரும் கோவிலுக்குள் சென்று பிச்சை எடுத்துப் பிழைக்கும் உச்சிக்குடுமி மக்களுடன் சரிசமமாய் நின்று பிரார்த்திக்க உரிமை இல்லை என்பதாக இருந்துவரும், நடத்தப்பட்டு வரும் மக்களுக்குத் தேசியமா? சுயராஜ்ஜியமா?
உண்மைத் திராவிடன் இப்படிப்பட்ட எச்சிலிலை மண்டபங்களையும், கோவில் களையும் நிர்துளியாக்குவதையல்லவா தேசியம் சுயராஜ்ஜியம் என்று எண்ண வேண்டும்?
இன்றைய தினம் இந்த நிலையைப் பொறுத்துக்கொண்டு, இதை மாற்ற வேலை செய்பவர்களையும் எதிர்த்துத் தொல்லை விளைவித்துக்கொண்டு தேசியம், சுய ராஜ்ஜியம், விடுதலை, சுதந்திரம் பேசும் திராவிடன் எவனானாலும், தம்மைச் சிறிதாவது திராவிட ரத்தம் ஊசலாடும் திராவிடன் என்று கருதுகிற எவனானாலும் அவன் எல்லாம் நம் எதிரிகளின், அதாவது வெள்ளை ஆரியர், தவிட்டு நிற ஆரியர் ஆகிய இரு கூட்டத்தினரின் லைசென்சு பெற்ற அடிமைகள் அல்லது நம்மைக் காட் டிக்கொடுக்கும் ஒற்றர்கள் என்று தூக்கு மேடையில் இருந்துகொண்டு கூறுவேன்.
எது பொதுவுடைமை இன்றைய பொது உடைமைக்காரர்கள் என்பவர்களின் யோக் கியதைதான் என்ன? வெங்கடாசலபதிக்கு (ஒரு கருங்கல் பொம்மைக்கு) பத்து லட்ச (10,00,000) ரூபாயில் கிரீடமா? மற்றும் பல குழவிக்கல், தாமிர பொம்மை ஆகியவை களின் பேரால் நடக்கும் அட்டூழியங்களைப் பாருங்கள். ஊர்தோறும் கோவில், மணி தோறும் பூஜை, மாதந்தோறும் உற்சவம், வருஷந்தோறும் சாமி திருமணமா? இவைகளுக்குப் பண்டு எவ்வளவு? பண்டம் எவ்வளவு? பூசாரி பண்டார சன்னதி எவ்வளவு?
எனவே நம் நாட்டு, இனத்தின் அறிவு, செல்வம், முயற்சி எதில் மண்டிக் கிடக்கின்றன? நம்மவர்களே ஆன கிருபானந்தவாரிகள், திருநாவுக்கரசுகள் ஆகியவர்கள் காலட்சேபமும், இசை அரசுகள் சங்கீதங்களும், நாடக மணிகள் நாடகங்களும், சினிமாக்களும், பண்டித மணிகள் வித்துவத் தன்மைகளும் இன்று எதற்காகப் பயன்படுகின்றன? இவைகள் பொதுவுடைமையின் எதிரிகள் அல்லவா?
இவர்கள் எல்லோரும் தனி உடைமைக் காரர்களின் நிபந்தனை இல்லாத அடி மைகள் அல்லவா? இவைகளை அச்சுக் குலையாமல் அசைய விடாமல் காப்பாற்ற இடம் கொடுத்துக்கொண்டு பணக்காரனைப் பார்த்து ஆத்திரப்பட்டால், குரைத்தால், பாமரத் தொழிலாளிகளை ஏமாற்றினால் பொது உடைமை ஆகிவிடுமா?
காங்கிரஸ்
காங்கிரஸ், தேசிய விடுதலைக்காரன் யோக்கியதைதான் என்ன இதைவிட மேலானதாகிவிட்டது. எந்தத் தேசியவாதி இந்தப்பக்கம் திரும்பினான், எந்தப் பொதுஉடைமை மாநாட்டில் எந்தத் தேசிய மாநாட்டில் இந்தத் தன்மைகளைப் பொசுக் கிப் பொங்கல் வைக்கவேண்டுமென்று பேசப்பட்டது? தீர்மானங்கள் செய்யப்பட் டது? நினைக்கப்பட்டது?
இந்த மகா உத்த மர்கள் எங்களைக் குறை சொல்லுவ தெதற்கு? அரசாங்கத்தைத்தான் குறை சொல்லுவதெதற்கு? அரசாங்கம் இப்படியெல்லாம் செய்யச் சொல்லுகிறதா? அல்லது இவைகளைப் பற்றிப் பேசுவது ராஜத்துரோகமா? காப்பிக் கடைக்குள், கோவிலுக்குள் முன் மண்டபத்தில் பறை யனை, சூத்திரனை விடக்கூடாது என்று எந்த அந்நிய ஆட்சி சட்டம் செலுத்தியது?
கோவிலுக்குக் கூத்தியை வைக்கச் சொல்லி, கடவுளைத் தாசிவீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லி, கல்லுக்குத் தங்கத்தில் கவசம் போட்டு வைரத்தில் கிரீடம் வைக்கச் சொல்லி எந்த அடக்குமுறை சுரண்டல் அந்நிய ஆட்சி சொல்லிற்று?
எங்கள் கோபம்
இன்று எது ஒழிய வேண்டும்,யார் வெளியேற வேண்டும், எது மாற வேண்டும்? இவை அறியாத மக்களும், சுயநலவாதிகளும், சமயசஞ்சீவிகளும், வயிற்றுப்பிழைப்பு, பொதுஉடைமை, தேசபக்தர் குழாங்களும் எங்களை ஏன் கடிய வேண்டும். எங்களுக்கு எந்தப் பார்ப்பான் மீது கோபம்? எந்தக் கடவுள் மீது கோபம்? எந்தத் தலைவன் மீது கோபம்? எந்த ஜாதி மீது கோபம்? எந்த வெள்ளையனிடம் அன்பு? தோழர்களே! பித்தலாட்டத்தின் மீது கோபம், முட்டாள் தனத்தின் மீது கோபம், ஏமாற்றுகிறதன்மை மீது கோபம், எங்களை இழிவுபடுத்தியும், முன்னேற வொட்டாமலும் செய்து வைத்து இருக்கும் சகலத்தின் மீதும் கோபம், இவைகளுக்கு ஆதரவளிப்பதால் வெள் ளையன் மீதும் கோபம்.
ஆகவே, எங்களை காங்கிரஸ்காரர் களும், பொதுஉடைமைக்காரர்களும் மற்றவர்களும் ஏன் கோபிக்க வேண்டும். ஏன் தொல்லை கொடுக்க வேண்டும்?
எங்களைத் தொல்லை கொடுப்பவர்கள் சுரண்டல்கார எங்கள் எதிரிகள் அல்லது அவர்களது நிபந்தனை அற்ற அடிமைகள் என்பவர்கள் அல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்?
இளைஞர்களே! நடப்பது நடக்கட்டும் என்று நீங்கள் எதற்கும் துணிவு பெற்றுத் தொண்டாற்றவேண்டிய காலம் இது.
நீங்கள் அடிபட வேண்டும். காயப்பட வேண்டும். கும்பல் கும்பலாகச் சிறைப்பட நேரிட்டாலும் மனம் கலங்காமல் நிற்கும் துணிவு பெற வேண்டும். இதற்குத்தான் திராவிட இளைஞர் கழகம் இருக்க வேண்டும்.
நாடானது விடுதலை, சமதர்மம், முன்னேற்றம், சீர்திருத்தம், கலை, கல்வி, தேசியம் என்னும் பேர்களால் மிக்க அடிமைத்தனத்திற்கும், காட்டுமிராண்டி தனத்துக்கும் போய்க்கொண்டு இருக்கிறது. வேசிக்கும் விபசாரிக்கும் தேவர் அடியாள் என்று பெயர் இருப்பதுபோல் நாட்டின் மனித சமுதாயத்தின் இழிவுக்கும், கீழ் மைக்கும், ஏழ்மைக்கும், அடிமைக்கும் அயோக்கியர்கள் ஆதிக்கத்திற்கும் மேற் கண்ட விடுதலை முதலிய பெயர்கள், ஸ்தாபனங்கள் இருந்து வருகின்றன.
தோழர்களே! துணிவு கொள் ளுங்கள், சாகத் துணிவு கொள்ளுங்கள். உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும், மானத்தையும் விட்டுத் தொண்டாற்றத் துணிவு கொள்ளுங்கள். இதுதான் இன்றைய திராவிட வாலிபர் கழக ஆண்டு விழாவில், இனி வெகுகாலம் வாழப்போகும் மக்களாகிய உங்களுக் குச் சாகப்போகும் கிழவனாகிய நான் வைத்துவிட்டு போகும் செல்வமாகும்.
உன் சொந்த மானத்தை விட்டாகிலும், உன் இன ஈனத்தை ஒழிப்பதற்குத் தொண்டு ஆற்று.
உன் இனத்தின் இழிவை, ஈனத்தைப் போக்க உன் சொந்த மானத்தையும் பலிகொடு.
இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றத்தக்க குடி மகன் இல்லாத இனம் வேர்ப்பற் றில்லாத மரம்போல்,  கோடரிகொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல்  தானாகவே விழுந்துவிடும் தன் இனத்திற்கு உண்மையான தொண் டாற்றுபவனுக்கு அடையாளம் என்ன வென்றால் அத் தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற்குமே அவனது வாழ்வையும், உடலையும் ஒப்புவித்து விட்டவனாக இருக்க வேண்டும்.
இது நான் சொல்வதல்ல, குறள் வாக்கிய மாகும்.
(23.08.1945 அன்று திருச்சி டவுன் ஹாலில், திராவிட வாலிபர்கள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமை ஏற்று பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற் பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 01.09.1945

விடுதலை,1.6.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக