ஆங்கிலேயருக்குவக்காலத்தா?
வழக்கமாக ஒரு பல்லவியைப் பாடுவது
பார்ப்பனர்களின் வழக்கம்! ஆங்கிலேயருக்கு வக்காலத்து வாங்கிய ஈ.வெ.ரா. என்று ஒரு சுப்பு எழுதுகிறது (துக்ளக் 16.1.2013 பக்கம் 9)
எங்கே வாங்கினார்? எப்பொழுது வாங்கினார்? எப்படி வாங்கினார்?
என்ற கேள்விகளையெல்லாம் கேட்கக் கூடாது. அக்னியைக் கையில் வைத்துக் கொண்டல்லவா எழுதுகின்றனர்? எதிர்க்கேள்வி கேட்கலாமா?
இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? என்று குடிஅரசில் (29.12.1933) தலையங்கம் தீட்டியதற்காக வெள்ளையர் ஆட்சியால் 124ஆ அரச வெறுப்புக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் தந்தை பெரியார்; வழக்கின் முடிவில் ரூ.300 அபராதமும் 9 மாதத் தண்டனையும் அளிக்கப்பட்டார் பெரியார் கோவை மாவட்ட ஆட்சியர் (வெள்ளைக்காரர்) ஜீ. டபுள்யூ வெல்ஸ் அய்.சி.எஸ். என்பவரால் என்ற வரலாறு எல்லாம் தெரியாமல் பார்ப்பனக் கொழுப்பெடுத்து எழுதலாமா?
தந்தை பெரியாரின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களும் தண்டனைக்கு உள்ளானாரே!
அதே நேரத்தில் அவாளின் ஆச்சாரியார் (ராஜாஜி) 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது அண்டர் கிரவுண்ட் ஆனாரே அதையெல்லாம் வசதியாக மறந்து விடுவார்கள். மறையவர்கள் அல்லவா!
இந்தியரில் முதல் நீதிபதி என்று ஏற்றிப் போற்றுகின்றனரே, அந்த ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர் சென்னை பட்டதாரிகளுக்குக் கூறிய அறிவுரையையும் அய்யன்மார்களே கேண்மின் கேண்மின்!!
நமது மாட்சிமை மிக்க அரசுக்கும், பிரிட்டானியா நாட்டிற்கும் ஆழ்ந்த விசுவாசம் காட்டும் வகையில் உங்கள் எண்ணமும், செயலும் அமையட்டும். எக்காலத்தும் போதிய அளவில் திரும்பச் செலுத்த முடியாத வகையில் நாம் அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆரிய இனத்தில் இரு பிரிவுகளும் கடவுளின் விதிப்படி இந்தியாவில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. அதனுடைய பெருங் கடமையை இந்தியாவிற்கு ஆற்ற பிரிட்டானிய ஆட்சிக்குத் திறமை இருக்கிறது என்று துக்ளக்கின் முன்னோரான அக்ரகாரத்து நீதிபதி முத்துசாமி அய்யர் பேசினாரா இல்லையா? (Politics and Nationalist Awakening in South India) தமிழில் மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம் பக்கம் 44 -_ பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்).
ஆரியர்களும் வெள்ளைக்காரர்களும் ஓரினத்தவர்களாம்; கடவுளின் விதிப்படி அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்களாம். இந்த யோக்கிய சிகாமணிகள் தான் தியாகத் திருவுருவமாம் தந்தை பெரியார்மீது சேற்றைவாரி இறைக்கத் துடிக்கிறார்கள்! வெட்கக் கேடு!
பார்ப்பனரைப் புரிந்து கொள்வீர்!
------------------- மின்சாரம் அவர்கள் 19-1-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக