திங்கள், 7 நவம்பர், 2016

எல்லா மதக் கடவுளும்...

29.6.1930 - குடிஅரசிலிருந்து....

உலக சிருஷ்டிக்கு கடவுளைப் பொறுப்பாக்கி அதனோடு கடவுளைப் பொருத்துகிறபோது எல்லாக் கடவுள்களின் யோக்கியதைகளும் ஒரே மாதிரியாகத்தானிருக்கின்றன.

உதாரணமாக, இந்துமதத்தில் உலக சிருஷ்டிக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் சொல்லுகிறபோது கடவுள் முதலில் தண்ணீரை உண்டாக்கி, அதன்மீது இருந்துகொண்டு அதில் ஒரு விதையைப் போட்டு, அந்த வித்திலிருந்து உலகத்தை உண்டாக்கி, அவ்வுலகத்திலிருந்து பிர்மாவைச் சிருஷ்டித்து,

அந்தப் பிர்மா அந்த  உலகத்தை இரண்டாக்கி ஒன்றை சுவர்க்கமாகவும், மற்றொன்றை பூலோகமாகவும் செய்து, அந்த பூலோகத்தில் பஞ்சபூதங்களையுண்டாக்கி பிறகு மனிதர், மிருகம், பட்சி முதலிய ஜாதிகளைச் சிருஷ்டித்து என்று ஆரம்பித்து மற்றும் இவைபோல அடுக் கடுக்காக எப்படி சொல்லிக்கொண்டே போகின்றதோ, அதுபோலவேதான் கிறிஸ்து முதலிய இதர மதங்களிலும், கடவுள் முதலில் ஒன்றை சிருஷ்டித்தார், இரண்டாவது நாள் மற்றொன்றை சிருஷ்டித்தார், மூன்றாவது நாள் வேறொன்றைச் சிருஷ்டித்தார் என்பது போலவே சொல்லிக் கொண்டு போகப்படுகின்றன.

ஆகவே, அஸ்திவாரத்தில் கடவுள் சிருஷ்டியைப் பற்றி சொல்லுகிற விஷயம் எல்லா மதத்திலும் ஒன்றுபோலவே தானிருக்கின்றன. இவை ஏன் இப்படியிருக்கின்றன என்று பார்ப்போமேயானால் கடவுள் உண்டு என்பதற்குச் சமாதானம் சொல்லும்போது உலக உற்பத்திக்கு ஒரு ஆதாரம் வேண்டாமா? என்று கேட்டுவிட்டு அதற்காகக் கடவுள் உலகத்தை உண்டாக்கினார் என்று ஆரம்பித்து, அந்த உண்டாக்கப்பட்டவை களென்பதை முதலில் இன்னதை உண்டாக்கினார்.

இன்னார் என்பதாக சில மதமும், முதல் நாள் இன்னதை உண்டாக்கினார்; இரண்டாவது நாள் இன்னதை உண்டாக்கினார் என்பதாக சில மதமும் சொல்லுகின்றன. ஆகவே, இந்த இடம் மாத்திரம் எல்லாம் ஒன்று போலாகவேதானிருக் கின்றன. இதில் ஏதாவது தகராறு ஏற்படுமானால் எல்லா மதக் கடவுளுக்கும் ஒரே கதிதான் நேரும்.

கடவுள் ஸ்தாபனத்திற்கு ஒரே மாதிரி அஸ்திவாரம் ஏற்படு வதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால், முதல்முதலாக ஆரிய மதத்திலிருந்தே சீர்திருத்தமாக கிறிஸ்துவ மதம் ஏற்பட்டதும், அதிலிருந்து சீர்திருத்தமாக மகமதிய மதம் ஏற்பட்டதும் நமக்குக் காணப்படுகிறபடியால் எல்லா மதமும் அதையே பின்பற்றிக் கொண்டு வருவதாயிற்றே தவிர வேறில்லை என்றே தோன்றுகிறது.

ஓரிடத்தில் ஓர் உப்புக் கிணறும் மற்றொரு நல்ல தண்ணீர்க் கிணறும் இருக்கிறது என்றால் நல்ல தண்ணீரை ஒரு பகுதி மக்கள் மட்டும் அனுபவிக்க வேண்டும்; உப்புத் தண்ணீரை மற்ற பகுதி மக்கள் அனுபவிக்க வேண்டும்;

 

இவர்கள் நல்ல தண்ணீரை உபயோகிக்க லாயக்கற்றவர்கள் என்றிருக்குமானால் அக்கொடுமை எவ்வளவு வேதனை தரக்கூடியது என்பதைச் சிந்திக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட வேதனை தரும் அளவுக்கு ஜாதி முறைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு சிலர் மட்டும் சுகம் அனுபவிப்பதற் கென்றும் மற்ற பலர் வேதனைப்படுவதற் கென்றுமே அமைக்கப்பட்ட  ஜாதி முறைகள் இந்நாட்டை விட்டு அகலும் வரை நமக்குள்ளே கொடுமைகள் நீங்கா தென்பது திண்ணம்.

நமது நாட்டில் உயர்ந்த ஜாதி என்கிற கொள்கை ஒழிந்து, தாழ்ந்த ஜாதி என்கிற கொள்கை அழிந்துபட்ட பின்தான் சுயமரி யாதையை நினைப்பதற்கு யோக்கியதை யுண்டு.

- தந்தை பெரியார்

உதிர்ந்த மலர்கள்

16. 02.1930- குடிஅரசிலிருந்து...

1.  எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப்பற்றிச் சொல்லும் மதக்கொள்கைகளிடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவைகளுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதம் வாயினால் உச்சரிக்கக்கூட யோக்கியதை அற்றவனாவான்.

2. புராணங்களின் ஆபாசங்களை நன்றாய் உணர்ந்தவர்கள் எல்லாம் அவற்றை வெளியில் சொல்லு வதற்குப் பயப்பட்டுக் கொண்டிருந்ததற்குக் காரணம் என்னவென்றால் பார்ப்பனர்கள் தனக்கு நாத்திகன் என்று பட்டம் கட்டி ஒழித்து விடுவார்கள் என்கின்ற பயம்தான்.

ஜாதி மத வித்தியாசங்களும், அவற்றின் உயர்வு தாழ்வு நிலைகளும், சிறிதும் அழியாமல் அப்படியே இருக்கவேண்டும் என்று சொல்லு கின்றவர்கள் ஜாதிகளின் பேராலும், மதங்களின் பேராலும் கேட்கப்படும் விகிதாச்சார உரிமைகளை ஏன் ஆட்சேபிக்கின்றார்கள் என்றும் அப்படி ஆட்சேபிப்பதில் ஏதாவது நல்ல எண்ணமோ, நாணயமோ, நியாயமோ இருக்க முடியுமா என்றும்தான் கேட்கின்றேன்.
-விடுதலை,5.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக