தந்தை பெரியார்
பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! பெரியயோர்களே! தோழர்களே! நான் விருதுநகருக்கு வந்து இரண்டாண்டுகளாகின்றன. இந்தக் குறள் மாநாட்டுக்கு வந்த எங்களை இங்கே அழைத்து கழக தோழர்கள் பேசுமாறு கேட்டுக் கொண்டனர். நான் வந்து சென்ற இந்த இரண்டாண்டு இடைக் காலத்தில் திராவிடர் கழகம் சம் பந்தமான கூட்டங்கள் பல நடந்திருக்கக் கூடும். எனவே நான் திராவிடர் கழகத்தைப் பற்றியும், அதன் கொள்கை களைப் பற்றியும் புதிதாக ஒன்றும் கூறத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.
இந் நாட்டில் அநேக கட்சிகளிருக்கின்றன. கட்சி என்பது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற சில திட்டங்களை வகுத்துக் கொண்டு அதை மக்களிடம் சென்று, கூறி ஓட்டு கேட்டு மந்திரிகளாவதும், பட்டம் பதவிகள் வகிப்பதுமாகும். திராவிடர் கழகம் அவ்வித அரசியல் கட்சிகளில் சேர்ந்ததல்ல. அது ஒரு இயக்கமாகும். இயக்கமென்பது குறிப்பிட்ட அதிகாரத்துக்கோ, பட்டம் பதவிகளுக்கோ மட்டும் பணி யாற்றுவதென்பது இல்லாமல் மக்களிடம் சென்று பயனுள்ள காரியங்களை எடுத்துக்கூறி, அவர்களின் நல்வாழ்வுக்கு அடிகோலுவதும், அந்நிலைக்கு மக்களிடம் மனமாற்ற மடையும் வகையில் பிரச்சாரம் செய்வதுமாகும். மந்திரி களாவதோ அல்லது பட்டம் பதவி பெறுவதோ என்ற கொள்கை மட்டுமிருப்பவர்கள் மக்களுக்குச் சீக்கிரத்தில் நல்லவர்களாகி விடலாம்; தேச பக்தர்களாக, தியாகிகளாக, தீரர்களாக ஆகிவிடக்கூடும். ஏனெனில் மக்களை அந்த சந்தர்ப்பத்தில் அதாவது ஓட்டு வாங்கும் நேரத்தில், என்ன கூறினால் உற்சாகமடைந்து நம்பிவிடுவார்களோ அவை களை வாய் கூசாது பிரமாதமாக உறுதி கூறிவிட்டு, பின்னர் பதவியில் போய் அமர்ந்தவுடன் தாங்கள் கொடுத்த வாக் குறுதியில் ஒரு சிறிது கூட நடைமுறையில் செயலாற்ற முடியாமைக்குக் கொஞ்சமேனும் வெட்கமோ, நாணமோ கொள்ளா மல் பதவி மோகத்திலேயே உழன்று கிடப்பார்கள்.
ஆனால் இயக்கம் என்று சொல்லக் கூடிய தன்மை யிலுள்ள நாங்கள் அதாவது திராவிடர் கழகத்தார் மக்க ளிடம் குடிகொண்டுள்ள மேற்கண்ட மடமைகளை ஒழிக்க மனதில் ஒன்றும் மறைத்து வைக்காமல் வெளிப்படையாக நாங்கள் மனதில் எண்ணுவதைக் கூறி வருகிறோம். இதனால் மக்களின் முன்னிலையிலே நாங்கள் விரோதிகளாக "தேசத் துரோகிகளாக", "கடவுள் துரோகிகளாக"க் கருதப்பட்டு, கற் பிக்கப்பட்டு வருகிறோம். எந்த மக்கள் சமுதாயம், மனிதத் தன்மையடைய வேண்டுமென்று கருதி உழைக்கிறோமோ அதே மக்கள் எங்களைத் தவறாகக் கருதுமாறு சில வஞ்சகர்களால் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறோம். எனினும் நாங்கள் இதற்காக அஞ்சி ஒதுங்கிவிடவில்லை ஏன்? எங்களுக்கு மக்களின் "பொய்யான" ஆதரவு இன்றே கிடைத்து அதன்மூலம் அரசியல் ஆதிக்கம் பெற வேண்டு மென்ற எண்ணத்திலிருப் பவர்களல்ல. எனவேதான் எங்கள் மருந்து சற்று கடுமையாயினும் நிதானமாகவே அது நிரந்தரமான பலன் தரட்டும் என்று நானும் என்னைச் சார்ந்த தோழர்களும் பொதுப் பணியாற்றி வருகிறோம். இதுதான் திராவிட இயக்கத்திற்கு உள்ள முக்கிய பண்பாடாகும்.
திராவிட இயக்கமும் ஓர் அரசியல் கட்சியாக வேலை செய்திருந்து, மந்திரி பதவிகளில் அமர்ந்திருந்தால்கூட இன்றைய நிலையில் மக்களுக்கு ஒரு நன்மையும் பயக்க முடியாது. அஸ்திவார மில்லாத கட்டிடம் எப்படி சரிந்து விழுந்து விடுமோ அதே போன்று மக்கள் சமுதாயத்திலே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வேரூன்றி வளர்ந்து வந்துள்ள மடமைகளைப் பகுத்தறிவற்ற தன்மையை , மூடப்பழக்க வழக்கங்களை, வைதீக மனப்பான்மையை, ஜாதி மத வெறியை, அறவே ஒழித்து அனைவரையும் அறிவுள்ள வர்களாக்காதவரையில் எப்பேர்பட்ட ஆட்சியா யிருப்பினும் அது நீடித்து இருக்க முடியாது; நாட்டிலும் அமைதி நிலவ முடியாது. ஏன்? அமைதியில்லா விடத்தில் அறிவு நிலைத் திருக்க முடியாதல்லவா? இதற்கு ஆதாரமாக நாம் கண் கூடாகக் கண்டு விட்டோமே. சுயராஜ்யம் வந்த பின்னர் தானே, சுயராஜ்யம் வாங்கித் தந்தவர் என்று எந்த கூட்டம் புகழ் பாடிற்றோ, அதே கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் காந்தி யாரைச் சுட்டுக் கொன்று விட்டான். அரசியல் அதிகாரம் கைக்கு வந்து அதற்கு அடிப்படையாக வேண்டிய அறிவுடைமை இல்லாததின் பலனல்லவா இது? எனவே தான் நமக்கு உண்மையான சுயராஜ்யம் வர இன்னும் சில ஆண்டுகள் காலதாமதம் ஆனாலும், மக்கள் பகுத்தறிவு பெற வேண்டுவதே முதலாவதான முக்கிய கடமை என்பதைத் திராவிடர் கழகம் வலியுறுத்திக் கூறி பணியாற்றி வருகிறது.
திராவிடருக்கு முக்கியம் வேண்டுவது எது? திராவிடர் யார்? என்று கேட்கும் போது நாட்டை ஆண்ட நாகரிக மக்களாகிய திராவிடர்கள் இன்று சூத்திரர்களாய், பஞ்சமர்களாய், அடிமைகளாய் வாழும் நிலைக்கு வழி வகுத்துள்ள இதிகாசங் களும், கதைகளும், புராணங்களும் அறவே அழிக்கப்பட வேண்டும். மேல்ஜாதி கீழ் ஜாதி, ஏழை, பணக்காரன், மோட்சம், தலைவிதி, என்பன போன்ற மூடக் கற்பனைகள் மனித சமுதாயத்திலிருந்து மறைய வேண்டும். பொதுவாக பார்ப்பனீயத்துக்கு அடிமைப்பட்டு வாழும் இழி நிலை வெகு விரைவில் ஒழிக்கப்படவேண்டும்.
தவிர, திராவிடர் யார், ஆரியர் யார் என்பதை நான் ரத்தப் பரீட்சை அடிப்படையாகக் கொண்டு கூறவும் முன் வரவில்லை. ஆனால் திராவிட பெருமக்களாகிய நம்மை சூத்திரன், பஞ்சமன் என்றும், இங்கே பிழைப்புக்கு ஓடிவந்த அந்நியர்களான பார்ப்பனர்கள் மேல் ஜாதிக்காரர்கள் என்று சட்டமும் சாஸ்திரமும் கூறுகின்றன. இதனால் நமக்கென்ன. நஷ்டம் என்று சிலர் கேட்கக் கூடும் அந்த மேல்ஜாதிக்காரன் என்ற காரணத்தாலேயே பார்ப்பனர்களுக்குச் சமுதாயத்தில் தனிச் சலுகை. அவனுக்கும் உழைப்புக்கும் சம்பந்தமே யில்லை. ஆனால், அதே சமயத்தில் அவர்களுக்குத்தான் உல்லாச சல்லாப வாழ்வு. 100-க்கு 99 பேர் அவர்கள் கல்வி கற்றுள்ளார் கள். நம்மில் 100-க்கு 10 பேர் கூட சரிவரக் கல்வி கற்கும் வசதியில்லை. இவைகளுக்குக் காரணம் பார்ப் பனர்களின் உயர் ஜாதி என்று கூறப்படும் தன்மையல்லவா? இவ்வநீதியை எங்களைத் தவிர வேறு யார் இதுவரை தட்டிக் கேட்டனர். கேட்காவிட்டாலும் எங்களுக்கு ஆதரவாகிலும் கொடுத்த வர்கள் யார்? இன்னுங் கூறுவேன்; எங்களைக் காட்டிக் கொடுத்து விபீஷணர்கள் போன்று அரசியல் ஆதிக்க வேட்டையாடும் சுயநலமிகள் தானே நமது சமுதாயத்தில் காணப்படுகின்றனர். எனவே திராவிடர் இயக்கம் மேற்கொண் டுள்ள தொண்டு மிகவும் மகத்தான தாகும். நாயன்மார்கள், ஆழ்வார்கள், ரிஷிகள், மகான்கள் காலத்தில் கூட கவலைப்படாது விடுத்த பெரும் பிரச் னையைக் கழகம் மேற் கொண்டு பாடுபட்டு வருகிறது.
மக்கள் சமுதாயத்திலே யார் யார் தாழ்ந்திருக்கின்றனரோ அத்தனை பேருக்கும் பாடுபடுவதுதான் கழகக் கொள்கையே யன்றி, சர்க்காரைக் கவிழ்ப்பதோ, அன்றி அவர்களுடன் போட்டி போட்டு ஓட்டு வேட்டையாடுவதோ கழகக் கொள்கையல்ல. நான் இதைக் கட்சித் தலைவன் என்ற முறையில் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்திக் கூறி வந்துங் கூட சிலர் வேண்டுமென்றே எங்கள் மீது தவறான எண் ணத்தைப் பொய்யுரைகளைக் கூறி வருகின்றனர். இப்பேர்ப்பட்ட பித்தலாட்டக் காரர்களின் போக்கைக் கண்டு பரிதாபப் படுவதைத் தவிர வேறென்னதான் செய்வது?
1949ஆம் ஆண்டாகிய இந்த விஞ்ஞான காலத்திலுமா நாம் மடமைக்கு அடிமைப் பட்டிருப்பது என்று கேட்கிறேன். இதைப்பற்றி காங்கிரஸ் திராவிடருக்குச் சற்றேனும் கவலை வேண்டாமா? பார்ப்பானுக்கு நாம் இவ்வாறு அடிமைப் பட்டிருப்பது லாபமாகவும், கொண்டாட்டமாகவுமிருக்கலாம். சற்றேனும் தன்மானமுள்ள திராவிடர்கள் நாம் ஏன் மற்றவனுக்கு அடிமைப்பட்டிருக்க வேண்டும் என்று சிந்தித்துத் தானே தீருவார்கள். நாம் என்றைக்குத்தான் இந்த இழி நிலையிலிருந்து மீளுவது?
சுய ராஜ்யம் வந்த பின்னால் கூட பார்ப்பனர், பறையன், சூத்திரன், மேல் ஜாதி, என்பவை மேலும் மேலும் வளர்க்கப்படுவதா? எனவே நம் மக்கள் இன்ப வாழ்வு பெற வேண்டுமானால் மக்களை முதலில் மனிதத் தன்மையுள்ள வர்களாகச் செய்ய வேண்டும். அதற்கு வேண்டுவது நம்மைப் பிடித்துள்ள மடமைகள், சாஸ்திரங்கள், கடவுள் பேரால் சுரண்டும் தன்மைகள், புராணங்கள், வர்ணாஸ்ரம வைதீகக் கொடுமைகள், ஜாதி மத வெறிகள் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்.
அன்பர்களே! இக் காரியங்களில் நாம் வெற்றிபெற அதிக விலை கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஏனெனில் நமது எதிரிகள் இன்று மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்களாகயிருக்கிறார்கள். அச்செல்வாக்கு அவர் களுக்குக் கிடைத்ததற்குக் காரணம் நம்மிடையேயுள்ள சில ஆரிய அடிமைகளின் துரோகச் செயலென்றே கூறுவேன். எனினும் அச்செல்வாக்கைச் சிதறடிக்க நம்மால் முடியும். அந்த உறுதி எனக்குண்டு. குறைந்தது 5 அல்லது 10 ஆண்டு களில் அதைச் செய்து முடிப்பேன். எனினும் நான் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்று அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
அந்த அதிக விலை என்பது என்ன? திராவிடர்களாகிய நாம் இந்துக்களல்ல என்று பகிரங்கமாக பிரகடனம் செய்ய வேண்டுவதே யாகும். இந்து மதந்தான் ஜாதி மத பிரிவுகளை, வர்ணாஸ்ரமத்தை வலியுறுத்தி நிற்கச் செய்கிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வாழ்ந்த சமுதாயத்தில் பல ஜாதி, பல கடவுள்கள் மலிந்து மக்களை மாக்களாக்கி விட்டது. அதன் பேராலுள்ள ஆதாரங்களுக்கும் நமக்கும் இருந்து வரும் தொடர்பு அறவே அகற்றப்படவேண்டும். இவைகள் ஒழிந்த பின்னரே மக்கள் சமுதாயத்தில் மறுமலர்ச்சி என்னும் பகுத்தறிவு உதயமாகும். நல்லாட்சியும் நிறுவ முடியும். அந்நிலை உண்டாக்கப்படாதவரை நல்லாட்சி என்பது ஏட்டளவிலும், அதற்கு மாறான காட்டுமிராண்டித் தனமான ஆட்சியே நடைமுறையிலுமிருந்து வரும். இது உறுதி. எனது 35 ஆண்டின் பொதுநலத் தொண்டிலிருந்து காணப்படும் அனுபவம் வாயிலாக இதைக் கூறத் துணிந்தேனேயல்லாது கேவலம் வீம்புக்காக அல்ல என்பதை எனது காங்கிரஸ் திராவிடர்கள் இனியாவது கருத்தில் பதியவைத்துக் கொள்ள வேண்டும்.
தோழர்களே. திராவிடர் கழகம் மேற்கொண்டுள்ள பொறுப்பான இக் காரியங்களுக்குக் காங்கிரஸ் திராவிடர்கள் ஆதரவு ஆதிக்கத்தில் நாங்கள் பங்கா கேட்கிறோம்? அல்லது அதற்காகவா இயக்கத்தை நடத்துகிறோம்? பின் எதற்காக காங்கிரஸ் திராவிடர்களுக்கும் - திராவிடர் கழகத்தினருக்கும் மனக்கசப்போ வேற்றுமையோ சண் டையோ இருக்க வேண்டும்? அவர்கள் சூத்திர-பஞ்சம பட்டத்தை சர்-திவான் பகதூர் பட்டம் போல ஏற்று மகிழ்ச்சி யடைந்து வருகிறார்கள். நாம் அவ்விழிநிலையிலிருந்து உணர்வு பெறுங்கள் என்று கூறுகிறோம். இது ஒன்றைத் தவிர்த்து வேறு எந்த வகையில் காங்கிரசுக்குத் திராவிடர் கழகம் விரோதமாகும் என்று கேட்கிறேன்.
நான் கூறும் பஞ்சம-சூத்திரப் பட்டம் ஒழிந்தால், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல் காமராஜர், சிவசண்முகம், போன்றவர்களுக்கும் எங்களுக்கும் சேர்த்துத்தானே மனிதத் தன்மை உண்டாகப் போகிறது. நாங்கள் மட்டுமா சூத்திரப்பட்டமோ, பார்ப் பனீயமோ ஒழிவதால் பயனடையப் போகிறவர்கள்?
இன்னுங் கூறுவேன். பார்ப்பனர்கள் கூட ஓரளவுக்கு திருந்தி விடுவார்களே. மனிதத்தன்மையை மறைத்து, மடமையை வளர்த்து அதன் பேரால் வயிறு வளர்ப்பவர் களுக்குத் தவிர மற்றவர்களுக்குத் திராவிடர் கழகம் ஒரு போதும் விரோதமாயிருக்க முடியாதே. இதை இன்னும் தோழர் காமராஜர் போன்றவர்களே உணரவில்லையென்றால் நம்நாடு என்றுதான் உண்மையான விடுதலையடைய முடியும்? இப்படியே நாம் காலமெல்லாம் கட்சிச் சண்டை யிலேயே காலந்தள்ளவா பிறந்தோம்? நமது பிற்கால சந்ததியாகிலும் சற்று மான ரோஷமுடன் வாழவேண்டாமா? இதைச் சிந்தித்துப் பார்க்கச் சக்தியற்றவர்கள் எங்கள் மீதா பாய்வது? எங்களையா காட்டிக் கொடுப்பது? கொஞ்சமேனும் நன்றியிருக்க வேண்டாமா? இவ்வநீதிகள் ஒழியும்வரை திராவிடர் இயக்கமும் இருந்தே தீரும்.
எப்படி இந்து மதமும், அதைச் சார்ந்துள்ள ஆபாசங்களும் ஒழிய வேண்டுமென்று கூறுகிறோமோ, அதேபோன்று அரசியலிலும், நம் நாடு தனியாகப் பிரிந்தாக வேண்டும். இல்லையேல் நம் நாட்டுக்கும் மக்களுக்கும் ஒருக் காலும் நிம்மதியான வாழ்வு கிட்டாது.
நம் நாட்டு வாணிபம் வடநாட்டான் ஆதிக்கத்தி லிருப்பதா? வெள்ளையர் ஆதிக்கம் ஒழிந்தது என்றால் அந்த இடத்தில் வடநாட்டானும், பார்ப்பானுமா உட்கார்ந்து சவாரி செய்வது?
சென்ற மாதம் நம் நாட்டுக்கு வந்து சென்ற கனம் பட்டேல் அவர்கள் வெளிப்படையாகக் கூறிவிட்டாரே, தென் னாட்டை நம்பியே நாங்களிருக்கிறோம்; நாட்டைப் பிரிக்கும் எண்ணம் வேண்டாம் என்று. மற்றவர் நன்மைக்காக நாம் மடிவதா? இதற்குப் பெயர் தேச பக்தியா? அடிமைப்புத்தியா? நம் மந்திரிகளுக்கோ சிறிதேனும் அரசியல் ஞானமேயில்லை. தங்களுக்குக் கிடைத்துள்ள பட்டங்களையும், பதவிகளை யுமே பெரிதாகக் கருதி அதைக்காப்பாற்ற கோஷ்டி சண்டைகள் போட்டுக் கொள்வதற்கே காலமெல்லாம் சரியாய்விடுகிறது. அவர்கள் பகுத்தறிவு கொண்டு மக்க ளுக்கு நன்மைகளைச் செய்ய எப்படி அவகாசமிருக்கப் போகிறது?
நான் 1938ஆம் ஆண்டிலேயே கூறியிருக்கிறேன். நம் நாட்டின் இயற்கை வளம் மற்ற நாடுகளை விட எவ்வளவு அதிகம் என்பதையும், அதன் காரணமாக நாம் தனித்து நின்று ஆட்சி செய்ய முடியுமென்றும், அவ்வித உண்மையான சுயராஜ்யம் கிடைத்தால், மேல்ஜாதி, கீழ்ஜாதி முதல் ஏழை, பணக்காரத்தன்மை வரை அடியோடு ஒழிக்கப்பட்ட சமதர்ம ஆட்சியாக செய்து விட முடியுமென்று. நமக்கு 1500 மைல் கடலோரமிருக்கிறது. நாம் பரம்பரை பரம்பரையாக கடல் கடந்து வாணிபம் செய்திருக் கிறோம். பேரறிஞர்களைப் பெற்றிருக்கிறோம். வீரமுடன் வாழ்ந்திருக் கிறோம். நீதி, நேர்மை, ஒழுக்கம், அறிவு, அன்பு ஆகியவை களை அடிப்படையாகக் கொண்டு நம் நாடு சீரும் சிறப்புடனுமிருந்திருக்கிறது. இவ்வித இயற்கை வளங் கொண்ட நாடு இன்று கஞ்சிக்கு, சோற்றுக்குக் காற்றாய்ப் பறப்பதா?
திரைகடலோடியும் திரவியந்தேடு என்று கூறியது நம் மூதாதையர்களா? அல்லது வடநாட்டவர்களும் பார்ப்பனர் களுமா என்று கேட்கிறேன். அவன் கடலில் பிரயாணம் செய்வதையே, பாபம் என்று தானே கூறியிருக்கிறான். அவர் களுக்குக் கடல் ஏது? மேல் நாடுகளிலிருந்து வரும் சாமான் கள் வட நாட்டு வழியாக வரும்வகையில் ஏற்பாடு செய்து கொண்டதால் இன்று எல்லா ஆதிக்கமும் அவர்களுக்கு?
நேராக நம் நாட்டுக்கு வரும் நிலையை உண்டாக்கி விட்டால் அவர்கள் ஆதிக்கத்துக்கு நாம் உட்பட்டிருப்பது ஒரு விநாடியில் ஒழிந்து விடாதா? இதைத்தானே திராவிடர் கழகம் கூறுகிறது? இதைத் தேசத்துரோகம் என்று சிறிதேனும் அரசியல் ஞானம் இருப்பவன் கூற முடியுமா? இதற்காக காங்கிரஸ் திராவிடர்கள் ஏன் பாடுபடக்கூடாது? ஏன் நம் நாடு அந்நியர்களால் சுரண்டப்பட வேண்டும்? இதை இளைஞர்களாவது கவனிக்க வேண்டாமா? இவைகளைச் சிந்திக்காமல் எங்களை விரோதிகளாகக் கருதுவது சரியா?
நான் இன்று இம் மேடையில் மீண்டும் கூறுகிறேன். நாளைக்கே காங்கிரசில் தீர்மானம் போடட்டும், "இனி இந் நாட்டில் பார்ப்பான், பறையன், சூத்திரன், ஏழை, பணக்காரன் வித்தியாசங்களிருக்காது; நம் நாடு எந்த அந்நியர்களின் ஆதிக்கத்துக்கும் உட்பட்டு இருக்காது; திராவிட நாடு என்று கூற மனமில்லா விட்டாலும் தென்னாடு தனித்து நின்று அதன் அரசியலை நடத்தும்" என்று. அதற்கடுத்த நாளே திராவிடர் கழகத்தைக் கலைத்துவிடுகிறேன். எங்களுக்கு மேற்கூறிய கொள்கை தவிர வேறு எந்த எண்ணமும் கிடையாது என்று உறுதி கூறுகிறேன்.
3.4.1949 அன்று விருதுநகரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு
-விடுதலை,27.11.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக