புதன், 22 ஆகஸ்ட், 2018

நாம் இந்து என்றால்...... தந்தை பெரியார் கருத்து

நாம் ஒரு இந்து என்றால், நமக்கு நாம் கண்ணால்கூட பார்க்க முடியாத, காதால்கூட கேட்கமுடியாத வேதம், சாஸ்திரம் ஆகியவைகளையும் - நம்மை இழி மகனாக்கும் தர்மங்களையும் பிர்மா, விஷ்ணு-சிவன் இவர்கள் மனைவிகளாக சரஸ்வதி, லட்சுமி, பார்வதிகளையும் மகான்களையும், அவதாரங்களாகிய கந்தன், கணபதி, இராமன், கிருஷ்ணன்களையும், தேவர்களாகிய இந்திரன் முதலியவர்களையும் இவர்களது நடத்தைகளையும், இவற்றைக் குறிக்கும் புராணங்கள், இதிகாசங்கள், நெற்றிக் குறிகள் முதலியவைகளையும் நம்பியாக வேண்டும்.

இவற்றில் எதை நம்பாவிட்டாலும் நாம் இந்துவாக மாட்டோம். இந்த நிலையில் உள்ள இந்துவும் சூத்திரனாகிய நாம் தீண்டாமை ஒழிய வேண்டுமென்று சொன்னால் அதில் ஜாதியோ, சாத்திர அறிவோ இருக்கிறது என்று எப்படிச் சொல்லமுடியும்?

ஆகவே மானமுள்ள அருமைத் தமிழ்மக்களே! நமக்கு உண்மையில் தீண்டாமையென்றும் ஜாதிக்கேடும், இழிவும் நீங்கவேண்டுமானால் இந்து மதத்தை விட்டு நீங்கியாக வேண்டும். இந்துமதம் என்பதாக ஒருமதம் இல்லை என்பதோடு அதற்கு ஆதாரமும் இல்லை . இந்துமதம் இந்து சட்டம் (இந்து லா) இந்து ஆட்சி (காங்கிரஸ் ஆட்சி) என்பவை எல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பன சட்டம், பார்ப்பன ஆட்சி ஆகுமே அல்லாமல் - தமிழ்நாட்டில் தமிழுக்கு என்று சூத்திரன், தீண்டப்படாதவன் என்பதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது மாற்றமடையவும் முடியாது.

ஆகவே தமிழன் தனக்கு இந்துமதம் வேண்டுமா சூத்திரப் பட்டமும், தீண்டாமையும் ஒழிய வேண்டுமா? என்பதைப் பற்றி அறிவோடு, மானத்தோடு நல்லவண்ணம் சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மானம் பெறவும்-இழிவுகள் நீங்கவும் வழி:

மானம் பெறுவதும், ஈன சாதித்தனம் ஒழிவதும் அவசியம் என்று பட்டால் முதலாவது நெற்றிக் குறியினை ஒழித்துத் தள்ளுங்கள். இரண்டாவதாக கோவிலுக்குப் போவதை நிறுத்திக் கொள்ளுங்கள். மூன்றாவதாக எந்த இந்துமதப் பண்டிகையையும் கொண்டாடாதீர்கள். பார்ப்பானை பிராமணன் என்று சொல்லாதீர்கள்!
- ஈ.வெ.ரா. ‘விடுதலை' 11.8.1973

- விடுதலை ஞாயிறு மலர், 11.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக