புதன், 27 பிப்ரவரி, 2019

பெண்கள் சுதந்திரம்

24.01.1948 - குடிஅரசிலிருந்து....

கேள்வி: பெண்களுக்குப் புருஷர்கள் என் றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்?

விடை : கற்பு என்கிற வார்த்தையும், விபசார தோஷம் என்கிற வார்த்தையும் என்று ஒழிக்கப் படுகின்றதோ, அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடு தலையும் பெற்றிருப்பதற்குக் காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்ட தாலேயே சட்டப்படி முழு விடுதலை பெற்றிருக் கின்றார்கள். ஆதலால் பெண்கள் விடுதலை பெறவேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்க வேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல், புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன் என்றோ; ஆண்கள் தங்கப்பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூட வேண்டியதில்லை, துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண் பாத்திரம், அதை யாராவது தொட்டால், கழுவினால் கூடத் தீட்டுப் போகாது, அதை உடைத்து குப்பைத் தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்தரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல், தாங்கள் தங்கப் பாத்திரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். - பெரியார்

- விடுதலை நாளேடு, 22.2.19

கடவுள் தர்பார்



31.01.1948 - குடிஅரசிலிருந்து...

கடவுள்: (தனது மனைவிகள், பரிவாரங்கள் சகிதம் பரமண்டலத்தில் உள்ள தர்பார் மண்ட பத்தில் வந்து சிம்மாசனத்தில் உட்கார்ந்ததும் கனைத்துக் கொண்டு) வேண்டும்! இந்த நாதிக ஆணவம் பிடித்த அயோக்கியப் பய்யன் களுக்கு இதுதானா? இன்னும் என்ன செய்யப் போகிறேன் பார்! அதற்குள் ஆகி விட்டதா உங்களுக்கு, உஹூம், உஹூம் என்று ஆத்திர மூச்சு விடுகிறார்.

அம்மன்: (கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருக்கும் மனைவியாகிய பாலகுஜலாம் பாள்) (இளமுலையம்மன்) நாதா! என்ன தாங்களே எதையோ பேசிக்கொண்டு ஆத்திரப்படுகிறீர்களே! எனக்கு ஒன்றும் புரியவில்லையே! தங்களுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் வரவேண்டும்? தாங்கள் தான் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும் உள்ள சர்வக்ஞன் ஆயிற்றே! இப்படி ஆத்திரத்துடன் துடிக்கலாமா?

கடவுள்: அதெல்லாம் பாட்டி கதையாகி விட்டது. நீ சொல்லும் நம்முடைய இந்தச் சக்தியை இந்தக் காலத்துப் பய்யன்கள் எவனும் நம்புவதில்லை, ஒப்புக்கொள்ளுவ தில்லை. அதற்கேற்றப் படி நடந்து கொள் வதுதான். அந்தப்பயல்களுக்குப் புத்திவரட் டும் என்று சில காரியம் செய்தேன். அவர்கள் இப்போது ஓடிவருகிறார்கள் நாயோட்டமாய் எனது ஞானதிருஷ்டியால் அவர்கள் வருகிறது தெரிந்தது. அதோ வருகிறார்கள்.  ஆதலால் எனக்கு ஆத்திரம் வந்தது.

அம்மன்: தாங்கள் மகா கருணாநிதியாயிற்றே! மக்கள் மடையர்கள் தானே! அவர் களுக்குத் தங்கள் சக்தியை அறிந்துகொள்ள யோக்கியதை உண்டா? சுவாமி! அவர்கள் மீது உங்களுக்குக் கோபம் வேண்டாம்! கருணை பாலியுங்கள்!

கடவுள்: சீச் சீசீ! பொட்டச்சியே! வாயை மூடு! இந்த விஷயத்தில் நீ ஒன்றுக்கும் குறுக்கே வரக்கூடாது. உனக்கு ஒன்றுமே தெரியாது. உன் அளவில் உன் வேலையைப் பார். இது பூலோகம் அல்ல, பெண்கள் சுதந்திரம் கொண்டாடுவதற்கு. இது தெய்வலோகம் என்பது உன் மனதில் இருக்கட்டும்.

அம்மன்: சுவாமி! மன்னிக்க வேண்டும். தெரியாமல் பேசிவிட்டேன். தப்பு, தப்பு. போதும் என்கிறவரையில் தோப்புக்கரணம் போட்டு விடுகிறேன், (என்று சொல்லி உட்கார்ந்து விடுகிறாள்)

மகா ஜனங்கள்: (கூட்டமாக வந்து) சுவாமி பகவானே! கேள்வி கேட்பாடு இல்லையா? சோறு இல்லை! துணி இல்லை! பெண்டு பிள்ளை, வீடுவாசல் சொத்துக்கும் பாதுகாப்பு என்பதே இல்லை! அடியும், உதையும், குத்தும், வெட்டும் கொண்ட அதிகாரத்துக்கு மாத்திரம் கணக்கில்லை!!! எங்களால் சகிக்க முடியவில்லையே. பூலோகத்தில் நாங்கள் படும்பாடு கொஞ்சம் கூடத் தங்களுக்குத் தெரியவில்லையா? நாங்கள் இந்தப் பாடு படும்போது நீங்கள் பெண்டு, பிள்ளைகள், பரிவாரங்கள் சகிதம் சுகமாக இருந்து கொண்டு தர்பார் நடத்துகிறீர்களே! இது தானா ஆபத்பாந்தவன், அனாதைரட்சகன், சர்வலோக தரண்யன் ஆன தங்களுக்குத் தகுதி. அய்யோ! அய்யோ! எங்கள் நிலைக்குப் பரிகாரம் இல்லையா?

கடவுள்: சீச்சீ! பகுத்தறிவற்ற நாய்களே! வாயை மூடுங்கள். உங்கள் யோக்கியதைக்கு இங்கு வந்து பேசத் துணிந்து விட்டீர்களே! நாதிகப் பயல்களே! ஆணவம் பிடித்த அகங் காரிகளே! உங்கள் வினைப்பயனை நீங்களே அனுபவிக்கிறீர்கள், உங்கள் நினைப்பின் பயனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் பாருங்கள்! பாருங்கள்! இவ்வளவு தானா? இன்னமும் பாருங்கள் என்ன நடக்கிறதென்று? என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களே! அயோக்கிய சிகாமணிகளே!

மகாஜனங்கள்: சுவாமி! தாங்கள் இப்படிப் கோபிக்கலாமா? நாங்கள் ஒரு அபராதமும் செய்யவில்லையே. ஒரு கெட்ட நினைப்பும் நினைக்கவில்லையே! தங்களுக்கு அதிருப்தி ஏற்படும்படி ஒரு காரியமும் செய்யவில்லையே!

கடவுள்: சீச்சீ! ஆணவம் பிடித்த அறிவிலிகளே! வாயை மூடுங்கள். என் ஆத்திரத்தைக் கிளப்பாதீர்கள்.

மகாஜனங்கள்: சுவாமி கோபிக்கலாகாது. நாங்கள் மட ஜென்மங்கள். தாங்களால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகள் நாங்கள், தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும் மன்னித்தருள வேண்டும். தாங்கள் கோபிப் பதின் காரணமும், ஆத்திரப்படுவதன் காரண மும் எங்களுக்குப் புரியவில்லை. சத்தியமாய் தங்கள் மீது ஆணையாய், அம்மன் மீது ஆணையாய்ச் சொல்லுகிறோம். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கடாட்சித்தருள வேண்டும்.

கடவுள் : கடாட்சமா கடாட்சம், இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

மகாஜனங்கள்: பூலோகத்தில் இருக்கிறோம்.

கடவுள்: பூலோகத்தில் யாருடைய ராஜ்யத்தில் இருக்கிறீர்கள்?

மகாஜனங்கள்: சுவாமி நாங்கள் சுயராஜ்யத்தில் இருக்கிறோம்.

கடவுள்: (அம்மனைப் பார்த்து) கேட்டா யாடி! இந்தப் பசங்கள் சொல்லுவதை, எவ்வளவு அகங்காரமாக, ஆணவமாகப் பேசுகிறார்கள், பார்த்தாயா?

அம்மன்: அவர்கள் என்ன பேசுகிறார்கள், தாங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு கிறார்கள். அதில் ஆணவமோ, அகங்காரமோ ஒன்றும் எனக்குத் தெரியவில்லையே!

கடவுள்: தெரியவில்லையா? நீயும் அவர்களோடு சேர்ந்தவளாகி விட்டாய்.

அம்மன்: நாதா! தாங்கள் இப்படி ஆத்திரப்பட்டுக் கோபித்துக் கொள்ளாதீர்கள். தாங்கள் பொறுமை ரூபி, கருணை ரூபி, அப்படி இருக்க இப்படிச் சொல்லலாமா?

தொடரும்...

-  விடுதலை நாளேடு, 22.2.19

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

நமது இயக்கமும் திராவிட மாணவத் தொண்டர்களும்!

தந்தை பெரியார்
பணவசதியும் சிபாரிசு வசதியும் உடையவர்களே, இன்றையப் படிப்புத் துறையில் முன்னேற்றமடைய வேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் இப்போதையக் கல்வித் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை தான் திராவிடர்கள் 100க்கு 90 பேருக்குமேல் படியாதவர்களாய் இருப்பதற்குக் காரணமாகுமென்றால், இதை அவினா சிலிங்கம் அவர்களோ, மற்றவர்களோ மறுத்துச் சொல்ல முடியாது.
திராவிட சமுதாயத்தில் நூற்றுக்குப் பத்துப் பேராவது படித்திருக்கின்றார்கள் என்று சொல்லப்படுகிற கணக்கு, தன்பெயரிலே கூட இரண்டொரு எழுத்துக்களை விட்டு விட்டு, கையெழுத்துப் போடும் நபர்களையும் சேர்த்துக் கூறுவதாகும் என்கிற உண்மையைத் தெரிந்தால், "பார்ப்பனர்கள் அளவில் படித்தவர்கள்" என்கிற எடை போடும் போது 100க்கு 5 பேர்கூட படித்தவர்கள் என்று சொல்லுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆகமாட்டார்கள் என்பதும், இந்த அய்ந்து பேர்கூட திராவிடர் கழக (நீதிக்கட்சிக் கிளர்ச்சியின் பயனால் படித்தவர்கள் ஆனார்கள் என்பதும், திராவிட சமுதாயம் என்கிற உரிமையினால் இந்த அய்ந்து பேரும் படிக்கவும், படித்து உத்தியோகமோ மற்ற தொழில்களோ கைக்கொண்டு வாழவும் ஆனநிலை ஏற்பட்டிருந்தாலும், இந்த அய்ந்து பேர்களில் அரைக்கால் பேர்வழிகூட திராவிட சமுதாயத்தின் நன்மைக்கான காரியங்களில் கருத்தைச் செலுத்துவோர் இல்லை என்பதும், அதற்கு மாறாகத் தன் சமுதாயத்தை காட்டிக் கொடுத்து, அடமானம் வைத்து, "கிரையம் செய்து" கொடுத்துவிட்டுத் தங்கள் சொந்த வாழ்வுக்கு, வயிற்றுச் சோற்றுக்கு வழி செய்து கொண்டவர்களே ஏராளம் என்பதும், இந்த மாதிரியான போக்கிலே படித்தவர்கள் என்பவர்கள் போய்க் கொண்டி ருப்பதினால்தான்  திராவிட சமுதாயம் சூத்திரச் சமுதாயமாக, சண்டாளச் சமுதாயமாக, வேசி மக்கள் சமுதாயமாக இருந்து வரும் நிலைமை இருக்கிறது என்பதும் எவரும் இல்லை என்று சொல்லிவிடமுடியாத சங்கதிகளாகும்.
திராவிட மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டிய இந்த படித்தவர்கள் கூட்டம், அவ்வாறு செய்ய வில்லை என்பதை அக்கூட்டம் உணருவதற்கு மறுத்த போதிலும், நாளைக்குப் படித்தவர்கள் கூட்டத்தில் சேர விருக்கின்ற மாணவர்கள், இந்த நிலைமையைத் தெளிவாக உணர்ந்து கொள்ளவேண்டும்.
திராவிட மாணவர்கள், அதாவது திராவிட மாணவர்கள் என்கிற பெயரினால் தங்களை அழைத்துக்கொள்ள முன் வந்து, திராவிட மாணவருலகின் முற்போக்குக்கும், திராவிட மக்களின் நல்வாழ்வுக்கும் பாடுபடச் சபதம் புரியும் மாணவத் தோழர்கள், படித்தவர்களின் வஞ்சகப் போக்கை மற்றவர்களைக் காட்டிலும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
விறுவிறுப்பான பேச்சு! சுறுசுறுப்பான நடவடிக்கை! உண்மைக்குப் பரியும் உள்ளம்! உலுத்தரை ஒழிக்கும் தீவிரம்! எடுப்பான தோற்றம்! எதற்கும் அஞ்சாத நோக்கு! இத் தனையும் உண்டு வாலிபத்துக்கு. இன்னும் பல நல்ல இயல்பு களுமுண்டு.
இந்த நல்லியல்புகளை மட்டுமே எடுத்துக்கூறி, பாராட் டுக்குமேல் பாராட்டு என்று சுமத்தி, இளைஞர்களே எதிர் கால மன்னவர்கள் என்று சரணம்பாடி முடிப்பதுதான் மாணவர்களுக் கிடையே பேசும் அறிஞர்கள், தலைவர்கள் என்பவர்களின் வழக்கம்.
இத்தகைய பாராட்டுரை பயனைத் தரும்! எந்த அள வுக்கு? தன் வேலையை நிறை வேற்றிக் கொள்ளவிரும்பும் ஒருவர், ஒரு சிறுவனைத் தட்டிக் கொடுத்துத் தன் வேலையைச் சாதித்துக் கொள்ளும் அளவில் புகழ்ந்து கெடுத்தல் என்று இதனைச் சொல்வதை எல்லோரும் ஒப்புக் கொள்ள மறுத்தாலும்கூட, புகழ்ந்து பேசி மற்றவர்களின் சக்தியைத் திரட்டித் தன் சொந்தக் காரியத்தைச் சாதித்துக் கொள் வதுதான் இதன்  பயன் என்றால், இதனால்  புகழப்பட்ட வருக்குப் பயன் சிறிதும் இல்லை என்றால் யாரேனும் மறுத்துவிட முடியுமா?
வேலைக்கு முன் கூலி! செயலுக்கு முன் பாராட்டு! வேண்டப்படலாம்! ஆனால் நிரந்தரமானதாய் இருக்கலாமா? இதுவே நிரந்தரமானால் ஏமாற்றமும் தோல்வியுமே பெருகும் அல்லவா? இதனை மாணவத் தோழர்கள் நன்கு சிந்தித்துத் தெளிவடைய வேண்டும்.
திராவிட மாணவர்கள் என்பவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பும், நிறைவேற்ற வேண்டிய செயலும் மிக மிகக் கடினமானவை. பல தலைமுறை தலைமுறையாகப் பகுத்தறிவுக்கு வேலையின்றி வாழ்ந்த சமுதாயத்தை அழித்து, பகுத்தறிவு ஒளி வீசும் புது சமுதாயத்தை நிர்மானிக் கும் பொறுப்பு! தலை கீழ் மாற்றமான இப்பொறுப்பைத் தத்தம் வாழ்வையே ஈடுகட்டி விட்டு, உயிரைப்பணயம் வைத்து, உண்மையும் அன்புமே ஆயுதமாகக் கொண்டு போராடி வெற்றிகாண வேண்டிய செயல்! இச்செயல் பலரால் பல முறை முயற்சிக்கப்பட்டதுதான்; ஆனால் எவரும் இதுவரை வெற்றி காணாதது! என்கிற இலட்சியத்தின் பொறுப்பை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்!
மிகமிகக் கடினமான இந்த லட்சியத்தையும், செயலுக்கு முன் பாராட்டு என்கிற போக்கையும் சேர்த்து எண்ணினால், இந்தப் போக்கு லட்சியப் பாதையைக் காண்பியாது என்பது உறுதி.
சென்ற மாதம் திருச்சியில் நடைபெற்ற திராவிட மாணவர் மாநாட்டில், நம்மியக்கத்தைப் பின்பற்றும் திராவிட மாணவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்கிற கருத்தை விளக்கிப் பெரியாரவர்கள் பேசிய பேச்சின் ஒரு பகுதி மற்றொரு பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. அதனை ஒவ்வொரு மாணவத் தோழரும், கழகத் தொண்டரும் கட்டாயம் படித்துப் பார்த்துத் தங்கள் தங்கள் நிலைமையோடு ஒப்பிட்டு, தங்களைத் தாங்களே சோதனை செய்து கொள்வது நல்லது என்று சொல்ல ஆசைப்படுகிறோம்.
பெரியாரவர்கள் விளக்கியிருக்கும் ஒரு உண்மை, அதாவது மாணவர்கள் என்பவர்கள் சரியான சோல்ஜர்கள், நல்ல ஜெனரல்கள் அல்ல. நல்ல சிப்பாய்கள் ஆனால் நல்ல கமாண்டர்களல்ல என்று கூறியிருக்கும் கருத்து மாணவர்கள் மனதில் நல்ல முறையில் பதிவு பெற வேண்டிய ஒன்றாகும்.
தாய் என்றால் அது மற்றொரு சொல்லையும், கணவன் என்றால் அது மற்றொரு சொல்லையும் எதிர்பார்க்கும் இயல்புடைய, ஒவ்வொரு முறைச்சொல் என்பது போலவே, மாணவர்கள் என்பதும் ஆசிரியர் என்பதையோ, கற்பித்துக் கொடுப்பவர் என்பதையோ காட்டும் மற்றொரு சொல்லை, எதிர்பார்த்து வழங்கும் ஒரு முறைச்சொல் என்கிற உண்மை தமிழ் மொழி பேசும் எவரும் அறிந்த ஒன்றாகும்.
உலகையே ஏடாகக் கொண்டு, மனிதன் ஒவ்வொருவனும் சாகும் வரைக்கும் கற்றுக் கொண்டேயிருக்கிற பேருண் மையை எண்ணி, உலகிலுள்ள ஒவ்வொருவரையும் மாணவர் என்றே குறிப்பிடுவது ஒருவகையில் பொருந்து மென்றாலும், குடும்பப் பொறுப்போ, பணக்கவலையோ, உழைப்பின் திறமோ உட்கொள்ளாத, அனுபவக் கல்வியைக் கற்க வாய்ப்பில்லாத இளம் பருவத்தையுடையவர்களையே இங்கு மாணவர்கள் என்று குறிப்பிடுகின்றோம்.
மாணவர்கள் என்று சொல்லும்போதே, அந்தச் சொல் இளமைப் பருவத்தையும், உலக அனுபவமில்லாமையையும் உணர்த்துவதாகும் என்கிற உண்மை மாணவர்கள் மனதில் இடம் பெறுவதே, சோல்ஜர்கள்! சிப்பாய்கள்! என்கிற கருத்தைப் பதிவு செய்து கொள்ளுவதற்கு வழியாயிருக்க முடியும்.
"திராவிடர் இயக்கத்தில் மாணவர்கள் பங்குகொள்வதை நாங்கள் பெருஞ்செல்வமாக மதிக்கின்றோம், அவர்களைப் பெரிய சொத்தாகக் கொண்டு போற்றுகின்றோம்" என்று கூறியிருக்கிறார்கள் பெரியார் அவர்கள். ஆம்! நைந்தழுகி முடை நாற்றம் நாறும் ஒரு சமுதாயத்தின் நிலைமையை மாற்றப் போராடும் ஒரு பெருவீரன், அச்செயலுக்கு உதவி யாக முன்வரும் கட்டிளங்காளைகளைக் காணும்போது உவந்து கூறும் உள்ளக் களிப்பிற்பிறந்த சொல்லே இது.
மத நம்பிக்கையுடைய கிறிஸ்துவப் பாதிரிமார்களையும், கன்னிப் பெண்களையும் மாணவத் தோழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களுடைய ஒழுக்கத்தின் உயர்வை இங்கு நாம் குறிப்பிடவில்லை. காணாத கடவுளின் பேரால், இல்லாத மோட்ச ஆசையைத் தூண்டி, புரியாத புண்ணிய பாவம் பேசி, இவ்வுலகத்தையே தாங்கள் நம்பிய "சிறந்த மார்க்கத்தில்" செலுத்திவிட வேண்டுமென்று, தங்கள் வாழ் வின் சுகபோகத்தைத் துறந்தவர்களாய்க் காண்பித்து, மக்களுக்காவே வாழுகிறோம் என்கிற நிலைமையை எப்படி உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் எண்ணிப்பார்க்க வேண்டுகிறோம். இந்த மதவாதிகள், மதத்தொண்டர்கள்  எவ்வாறு உலகை ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்குத் தெரிவது போலவே, அவர்களுடைய தன்னலம் பேணாத உழைப்பையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அழிவிற்கே காரணமாக இருந்து வந்த மதவெறியைப் பரப்பும் ஒரு மதத்திற்கே, அது உயிர் வாழ்வதற்கு இப்பேர்ப்பட்ட தொண்டர்கள் வேண்டுமென்றால், அழிந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயம் புத்துணர்வு பெற்றுப் புது வாழ்வு பெறவேண்டுமானால், அந்தச் செயலுக்கு எப்படிப் பட்ட தொண்டர்கள் வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.
உலக இயற்கைக்கு மாறுபட்டு ஆண் பெண் கூட் டுறவைத் தள்ளி, பெண்களைப் பேய்கள் என வெறுத்து, நிலையான நித்திய இன்பத்தையடைய முயலுகிறோம் என்று கூறி, கானல் நீருக்கு அலைந்த உண்மையான துறவிகள் போக்கை நாம் வெறுத்தாலும்கூட, அந்த லட்சியம் நிறை வேறுவதற்காக அவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்று விதித்திருக்கும் கடுமையான முறைகளை, எந்த லட்சிய வாதிதான் வெறுத்துவிட முடியும் என்று கேட்கிறோம்.
தனி ஒரு மனிதன் அடையலாம் என்று எதிர்பார்த்த ஒரு இன்பத்திற்கே இப்பேர்பட்ட கடுமையான நெறிகளைக் கைக்கொள்ள வேண்டுமென்றால், ஒரு மனித சமுதாயமே தன் நைந்த நிலைமாறி இன்ப வாழ்வைப் பெற, எப்பேர்ப்பட்ட நெறிகளைக் கைக்கொள்ள வேண்டும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.
பொதுநலத் தொண்டில் ஈடுபடுகிறவர்கள், முதலில் பொதுநல சேவைக்கும், தங்களுக்கும் என்ன பொருத்தம்? எந்தெந்த வகையில் இருக்கிறது? என்கிற தங்களின் தகுதியைத் தாங்களே தெரிந்து கொள்ளவேண்டும். எழுதும் தகுதி, பேசும் தகுதி ஆகிய இரண்டு தகுதியைக் காட்டிலும் சிறப்புடையது நடந்து காட்டும் தகுதி என்றாலும், இம் மூன்றினும் சிறப்பாகப் பொதுநலத் தொண்டர்களுக்குரிய குணத்தகுதி தங்களுக்கு இருக்கிறதா என்பதையே மாண வத் தோழர்கள் கருதவேண்டும். இதைத்தான் பெரியார வர்கள் தம் சொற்பொழிவில் வற்புறுத்தியிருக்கின்றார்கள்.
எளிய வாழ்க்கையைக் கைக்கொள்ளல், தன்னைத் தானே காத்துக்கொள்ளுதல், தன்னலம் பேணாது வாழ்தல், தற் பெருமை பேசாத அடக்கம், உயர்ந்தவன் என்ற மமதைக்கு இடங்கொடாமை, வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப் படாத வீர இயல்பு, தலைவனின் ஆணைக்கு அடங்கல் போன்ற நற்குணங்களே தொண்டர்களுக்கு, சிறப்பாகத் திராவிட மாணவர்களுக்கு வேண்டிய குணத் தகுதிகள் என்று பெரியாரவர்கள் வற்புறுத்தியிருப் பதைக் கருத்தூன்றிப் படித்துக் கைக் கொள்ள வேண்டுகிறோம்.
இவைகளை வாழுகிற ஒவ்வொரு மனிதனும் கடை பிடித்து ஒழுகுவதே வாழ்வில் ஒழுங்கையும், அமைதி யையும் உண்டுபண்ணும் என்று பொதுவாகச் சொல்லலாம் ஆனாலும், எதிர் நீச்சலில் சென்று வெற்றிக் கொடியை நாட்ட வேண்டிய பொறுப்புடைய தொண்டர்களுக்கு இவைகள் அவசியத்திலும் அவசியமல்லவா?
பொதுநல சேவையில் அதுவும் திராவிடர் இயக்கத்தில் எத்தனை தொண்டர்களுக்கு வேண்டுமானாலும் இட முண்டு! தொண்டர்களின் வாழ்வு நல்ல முறையில் அமை வதற்கும் வழியுண்டு! உண்மையாகவே இயக்கத்திற்குத் தம்மை அர்ப்பணம் செய்து கொள்ளுபவர், தம் ஒழுங்கான சொந்த வாழ்வைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றே சொல்லிவிடலாம்! இந்த நல்ல நிலைமை பெரியார வர்களுடைய அரும்பெரும் உழைப்பினால் உண்டாக்கப் பட்டிருக்கிறது! இதைப் பயனின்றிப் போகுமாறு செய்யலாமா? இதை மாணவத் தொண்டர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
வழக்கம்போல இந்த வருஷத்திலும் மாணவர் கோடை விடுமுறைப் பிரசாரத்திற்கு ஏற்பாடாகி அது சம்பந்தமான அறிக்கை மற்றொரு பக்கத்தில் வெளியாகியிருக்கிறது. வகுப்பு நடைபெறும் காலம் மாற்றவேண்டியதாகவும் ஏற்பட லாம். அது பின்னர் அறிவிக்கப்படும். இப்பிரசாரத்திற்குச் சென்ற ஆண்டு வந்தவர்களும்,  புதிதாக இவ்வாண்டில் வருகிறவர்களும் வந்து கலக்கலாம். பிரசாரத்திற்கு வரு கின்றவர்கள், தங்கள் பிரசாரத்தினால் மற்றவர்களை நல்வழியில் அழைத்துப் போகிறோம் என்று எண்ணுவதைக் காட்டிலும், தாங்கள் நல்ல வழியில் பாதையைப் பின்பற்றிப் போகின்றோம் என்று எண்ணுவார்களானால், அது உண் மையும் பயனுமுடையதாயிருக்கும் என்று சொல்ல ஆசைப் படுகின்றோம்.
பெரியாரவர்கள் வற்புறுத்தியிருப்பதைப் போல, கட்டுப் பாடற்ற காலித்தனத்தைப் பழக்கமாக உடைய மைனர் களாயிருக்க ஆசைப்படுகின்றவர்களோ, வாழ்க்கையில் தங்கள் நிலைமைக்கு மேலான போக போக்கியத்தை அடைய வேண்டும் என்று ஆசைப்படுகின்றவர்களோ, பிரசாரம் செய்வது போன்ற பொதுநலப் பணிக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்ளலாமா? அவ்வாறு செய்வதால் இயக் கத்திற்கு ஏற்படும் நன்மை என்ன? தாங்கள் அடையும் நன்மை என்ன? என்பவைகளை முதலிலேயே முடிவு கட்டிக் கொண்டு விடுவது நல்லதல்லவா என்பதையும், யோசித்துத் தீர்ப்புக்கூறிக் கொள்ளும்படி வேண்டிக் கொள் கின்றோம்.
மாணவர்கள் கைக்கொள்ள வேண்டிய அகிம்சையில் நம்பிக்கையைப் பற்றி, பெரியாரவர்கள் வலியுறுத்தியிருப் பதையும் திராவிட மாணவர்கள் சிந்தித்து தெளிவடைய வேண்டும்.
அகிம்சை என்பது புண்ணியம் என்பதினாலோ, அல்லது அது மோட்சலோகக் கதவைத் திறந்து விடும் என்பதினாலோ அல்லது அந்தராத்மாவோடு தொடர்புடையது என்ப தினாலோ, நான் அகிம்சையைக் கைக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை; மனிதனுக்கு அறிவு இருப்பதினாலேயே - சிந்தனைத் திறம் பெற்றிருப்பதினாலேயே, அவன் அகிம்சையைத்தான் கைக்கொள்ள வேண்டுமென்கின்றேன் என்று கூறியிருப்பதை அறிவு பெற்றிருக்கிறோம் என எண் ணும் ஒவ்வொரு மனிதனும் எண்ணிப் பார்க்க வேண் டியதாகும்.
மற்ற ஜீவப் பிராணிகளைப் பார்க்கின்றோம். அவை களுள் பெரும்பான்மையானவை ஒன்றையொன்று இம்சை செய்து உயிர் வாழ்வதையும், அதனால் அந்த இம்சைக்கு உள்ளானது மட்டுமல்லாமல், துன்பத்தை உள்ளாக்கியதும்  தொல்லையை அடைவதையும், அவைகள் மனிதனுக்கே உள்ள ஆறாவது அறிவை, சிந்தனை செய்யும் திறமையைப் பெறவில்லை என்பதையும் பார்க்கிறோம்.   மேலும் அந்த அய்ந்தறிவு படைத்த மிருகங்களிலும்கூட ஆடு, மாடு, மான் போலச் சில மிருகங்கள், இம்சை முறையைக் கைக் கொள்ளாமல் வாழ்வதையும் பார்க்கின்றோம்.
இம்சை செய்யப்பட்டவனுக்கேயன்றி, செய்தவனுக்கும் துயரத்தை, தொல்லையைத் தருமென்றால், அய்ந்தறிவு படைத்த சில மிருகங்கள் கூட அந்த இம்சை முறையைக் கைக்கொள்ளவில்லை என்றால், ஆறறிவு படைத்தவன் என்றும், ஆராய்ந்து பார்க்கும் திறனுடையவன் என்றும் சொல்லிக் கொள்ளும் மனிதன், இருவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும் இன்னாச் செயலை, இம்சையை மேற்கொள்ளல் அறிவுடைமையாகுமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.
பொழுது போக்குவதற்கான வேலை! பல ஊர்களைச் சுற்றிப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம்! விளம்பரத்தினால் பெரிய மனிதர்களாகும் வாய்ப்பு! சிகரெட் குடிக்கவும், சினிமாப் பார்ப்பதற்குமான கம்பெனி! என்பது போன்ற எண்ணங் களால் திராவிட இயக்கப் பிரசார வேலையிலே தயவுசெய்து இளம் மாணவர்களே! நீங்கள் இறங்கக்கூடாது என்பதுதான் நமது வேண்டுகோள்! சமுதாய இழிவை உணர்ந்து, இழிவை நீக்கும் பொறுப்பு நமக்குத்தானே ஒழிய, மற்றவர்களுக்கில்லை என்பதை அறிந்து, வாழ்வோம் அல்லது வீழ்வோம் என்ற துணிவு கொண்டு, கட்டுப்பாட்டுக்கு அடங்கித் தன்னலம் வெறுத்து தன் கையே தனக்கு உதவி என்ற தன்னம்பிக்கை வாய்ந்த, இளம் மாணவத் தொண்டர்கள் பெருகவேண்டும் என்பதுதான் நமது ஆசை!
இந்த நமது ஆசையும், வேண்டுகோளும் திராவிட சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கே என்பதை உணர்ந்து, திராவிட மாணவர்கள் பெருவாரியாகச் செயலில் ஈடுபடத் துணிவு பெற்று வாகை மாலை சூடுவார்களாக!
'குடிஅரசு' - தலையங்கம் - 03.04.1948
(இத்தலையங்கம் பெரியார் மூன்றாம் நிலையிலிருந்து அறிவுறுத்துவதுபோல
அவர்களால் எழுதப்பட்டதே. நடை அதை உணர்த்துகிறது நமக்கு. - பதிப்பாசிரியர்)
- விடுதலை நாளேடு, 17.2.19

சனி, 16 பிப்ரவரி, 2019

கார்த்திகை தீபம்- தந்தை பெரியார்



கார்த்திகை தீபம் என்ற பண்டிகை வரப் போகின்றது. இதற்காக அருணாசலமென்னும் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களில் பெரும் பெரும் உற்சவங்கள் நடைபெறும். அதற்காக பதினாயிரக்கணக்கான மக்கள் யாத்திரை போவார்கள்.

இது மாத்திரமல்லாமல் பல பல குடங்கள் நெய்களை டின் டின்னாய் கல்பூரத்தைக் கலந்து நெருப்பில் கொட்டி எறிப்பார்கள். சில இடங்களில் கட்டைகளை அடுக்கி அல்லது தட்டுகளைப் போராகப் போட்டு நெருப்பு வைத்து சட்டிசட்டியாக வெண்ணைகளை அந்த நெருப்பில் கொட்டுவார்கள்.

இவைகள் தவிர வீடுகளிலும், கோவில்-களிலும் 10, 50, 100, 1000, 10000, 100000 என்கின்ற கணக்கில் விளக்குகள் போட்டு நெய், தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், இலுப்பை எண்ணெய் முதலியவைகளை ஊற்றியும், எள்ளு பொட்டணம், பருத்தி விதை பொட்டணம் ஆகியவைகளை கட்டியும், பெரும் பெரும் திரிகள் போட்டும் விளக்குகள் எரிப்பார்கள். இந்தச் சடங்குகள் செய்வதே மேற்படி பண்டிகையின் முக்கிய சடங்காகும். ஆகவே இந்தச் சடங்குகளுக்கு எத்தனை லட்சம் ரூபாய் செலவு என்பதையும் இதற்காக செல்லும் மக்களின் ரயில் செலவு, மற்ற வீண் செலவு, நேரச்செலவு ஆகியவைகளால் எத்தனை லட்சம் ரூபாய் செலவாகும் என்பதையும் கவனித்துப் பார்த்து பிறகு இப்படிப்பட்ட இந்தப் பெருந்தொகைச் செலவில் நாட்டுக்கோ, மக்களுக்கோ, அல்லது மதத்திற்கோ, மக்களின் அறிவிற்கோ சுகாதாரத்திற்கோ அல்லது வேறு எதற்காவது ஒரு அம்மன் காசு பெறுமான பிரயோஜனமாவதுமுண்டா என்பதையும் யோசித்துப் பார்த்தால் நமது மக்களின் பாரம்பரியமான முட்டாள்தனம் விளங்காமற் போகாது. அர்த்தமற்ற தன்மையில் நமது செல்வம், கொள்ளை போகின்றதே, கொள்ளை போகின்றதே என்று கூச்சல் போடுகின்றோம். ஜவுளிக்கடையில் போய் மறியல் செய்து ஜெயிலுக்குப் போவதைப் பெரிய தேசபக்தியாய்க் கருதுகிறோம். ஆனால் இந்த மாதிரி நமது செல்வம் நாசம் போவதைப் பற்றி நமக்கு சிறிதும் கவலையில்லை. அதைப் பற்றி நினைப்பது மில்லை. அதைப் பற்றிப் பேசுவதே மதத் துரோகமாகவும், நாத்திகமாகவும் சொல்லப்படு கின்றது. இம்மதிரி செல்வம் நாசமாவதை விட்டுக் கொண்டு வருவதால் எத்தனை பத்து லட்சக்கணக்கான மக்கள் தலைமுறை தலைமுறையாக முட்டாள்களாகிக் கொண்டு வருகின்றார்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை.

ஆகவே ஆங்காங்குள்ள சுயமரியாதைத் தொண்டர்கள் இதை கவனித்து இம்மாதிரியான மூடத்தனங்களும், நாசகார வேலைகளும் சிறிதாவது குறையும்படியாக வேலை செய்வார்களானால் அது மற்ற எல்லா முயற்சி களையும்விட எத்தனையோ மடங்கு பயன்தரக் கூடியதும் பல வழிகளிலும் அவசியமானதுமான முயற்சிகளாகும் என்பதை ஞாபகமூட்டுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.11.1930

* * *



ஜாதியை ஒழிக்க எண்ணுகிறவர்களுக்கு பகுத்தறிவு வேண்டும்

எனக்குத் தெரிய எனது 14 வயது முதல் ஜாதிக்கு எதிரியாகவே இருந்து வந்து உள்ளேன். எனக்கு நினைவு தெரியாத காலமாகிய 7 வயது முதலே ஜாதிக்கு எதிர்ப்பாகவே இருந்து வருகின்றேன் என்றுதான் கூறவேண்டும்.

நான் பள்ளிக்குப் போகும் போது குறவர் முதலிய கீழ்ஜாதிக்காரர்கள் என்பவர்கள் வீட்டில் எல்லாம் சோறு தின்று உள்ளேன். இது காரணமாகவே எங்கள் வீட்டில் என்னை வெளியில் வைத்து சாப்பாடு போட்டு இருக்கின்றார்கள். இம்மாதிரி செய்கையே என்னை ஜாதி ஒழிப்பு முயற்சியில் சிந்திக்கத் தூண்டியது.

தோழர்களே! ஜாதியை ஒழிக்க எண்ணுகிறவர்களுக்கு கொஞ்சம் தத்துவ ஞானம் வேண்டும். தத்துவ ஞானம் என்றால் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் கூறுகின்றாரே குப்பைத் தொட்டி தத்துவ ஞானம் அது அல்ல. தத்துவ ஞானம் பகுத்தறிவு வேண்டும் என்றுதான் குறிப்பிடுகின்றேன்.

ஜாதியை ஒழிக்கின்றவன் முன்னோர்கள் நடந்தது, சொன்னது, எழுதி வைத்தது என்பன போன்றவற்றை எல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டும்.

நமக்கு எவனும் முன்னோர்கள் அல்லர். நாம்தான் வருங்காலத்தவர்களுக்கு முன்னோர்கள் என்று கருதி காரியம் ஆற்ற வேண்டும். நமக்கு யார் முன்னோர்கள்? எதில் முன்னோர்கள்? எது முதல் முன்னோர்கள்?

தோழர்களே! தமிழர்களுடைய சரித்திரத்துக்கு கால வரையறையே இல்லையே! நமக்கே என்றால் பார்ப்பனப் புராணங்களைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?

திரேதா யுகம், கிரேதா யுகம் என்று எல்லாம் கூறி யுகத்துக்கு 1,00,000, 10,00,000 வருஷங்கள் என்று கணக்குப் போட்டுப் புளுகுவான்!

புத்தருக்குப் பிறகுதான் இந்த இராமாயண _ பாரதங்களும், புராணங்களும் ஏற்பட்டன. இராமாயணத்தில் பல இடங்களில் புத்தரைப் பற்றி பேசப்படுகின்றது. பாரதம், விஷ்ணு புராணம், தேவி பாகவதம் முதலியவற்றிலும் பேசப்படுகின்றது. ஏன் இப்படி என்றால் சங்கராச்சாரியார் கூறுகின்றார். இது ஒன்றும் முரண் அல்ல _ நாட்டின் ஒவ்வொரு யுகத்தின் போதும் ஒவ்வொரு புத்தர் தோன்றுவது உண்டு. இராமாயணத்தில் உள்ள புத்தர் அந்த யுகத்துப் புத்தர், பாரதத்தில் உள்ள புத்தர் பாரதகால யுகத்துப் புத்தர் என்று கூறுகின்றார்.

அப்படியே அந்த யுகங்கள் எல்லாம் உண்டு என்று வைத்துக் கொண்டு பார்த்தாலும், அந்தக் காலத்து மனிதர்களுக்கு எப்படி அறிவு மேலாக இருக்க முடியும்? இவன் குறிப்பிடும் யுககாலத்தில் மனிதன் புல்லாய் புழுவாய் இருந்தானோ? அல்லது குரங்காக இருந்தானோ?

நமக்கு வரும் எதிர்ப்பு எல்லாம் முன்னோர்கள் சங்கதி பற்றித்தான் வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சுயமரியாதைக் கலியாணம் செல்லாது என்று அய்க்கோர்ட்டில் தீர்ப்புக் கூறினான். இது செல்லாது என்பதற்கு எதை ஆதாரம் காட்டினான் தெரியுமா? நாரதர் இப்படிச் சொல்லி இருக்கின்றார். பராசரர் இப்படிச் சொல்லி இருக்கின்றார். ஆபத்ஸ்தம்பர், யாக்ஞவல்கியர் அப்படிச் சொல்லி இருக்கின்றார்கள். இவர்களுடைய முறைக்கு இந்தத் திருமணம் மாறாக இருப்பதால் இது செல்லாது என்று கூறியிருக்கின்றார்!

இது எவ்வளவு முட்டாள் தனம்! இவர்கள் எல்லாம் யார்? இவர்கள் எந்தக் காலத்துப் பசங்கள்? இவர்களில் அனேகர் மனிதனுக்கே பிறக்கவில்லையே! கழுதைக்கும், கோட்டானுக்கும், மாட்டுக்கும், கிளிக்கும், மற்ற மற்றதுகளுக்கும் பிறந்த பசங்களா நம்முடைய முன்னோர்கள்? இவர்கள் காலத்தில் மனிதனுக்கு எவ்வளவு அறிவு இருந்து இருக்க முடியும்? மக்கள் சிந்திக்க வேண்டும்.

பாவம், புண்ணியம், முன் பின் பிறவிகள் என்பன எல்லாம் கடைந்தெடுத்த முட்டாள் தனமானது _ ஒழிக்கத்தக்கது என்று உணர வேண்டும். இவை பற்றி மக்களுக்குத் தெளிவு உண்டாக்கும், பணியில் தீவிரமாக ஈடுபட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுகள் சம்பந்தமான அறிவு நூல்களைப் படித்து உணர வேண்டும்.

இன்றைக்கு உள்ள புரட்டுகள் எல்லாவற்றையும்விட பெரிய புரட்டு இந்த 20ஆம் நூற்றாண்டிலும் ஜாதிக்கு ஆதாரமாக கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பான் இவற்றை வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிக்க முடியும் என்று நம்புவதாகும்.

15.12.1962 அன்று திருச்சி மாவட்டத்தில் கரூர் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு - விடுதலை, 23.12.1962

-  உண்மை இதழ், 16-30.11.18

வியாழன், 14 பிப்ரவரி, 2019

அறிவார்ந்த ஆட்சி நடத்தியவர் அறிஞர் அண்ணா!

தந்தை பெரியார்




இந்தியாவிலேயே வேறு யாராலும் சாதிக்க முடியாத காரியத்தை அண்ணா அவர்கள் சாதித்துக்காட்டினார். நமக்குத் தெரிந்த வரையில் வேறு யாரும் அந்த அளவுக்கு சாதிக்கவே இல்லை. என்னைப் பொறுத்தவரை நான்  காரியம் அதிகம் சாதித்திருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். அதன்  பலன்  அந்த அளவுக்கு ஏற்படவில்லையே இனிமேல்தான்  ஏற்படவேண்டும் ஏற்படும் என்று ஆசைப்படுகிறேன். என்  முயற்சி எதுவும் வீண் போகவில்லை. தரவேண்டிய அளவுக்குப் பலன்  தரவில்லையே தவிர வேறு ஒன்றுமில்லை. எனது அருமைத் தோழர்கள் என்னைப் பின்பற்றி முயற்சிக்கிறார்கள். அவர்கள் அதில் வெற்றியும் அடையக்கூடும் என்று நாம் நம்புகிறோம்.

அண்ணா அவர்கள் செயற்கரிய காரியம் செய்தவராவார். இந்நாட்டில் நமக்குச் சரித்திரம் தெரிய எவன்  எவனோ ஆண்டிருக்கிறான். சேர, சோழ, பாண்டியன், நாயக்கர், துலுக்கன்,  வெள்ளைக்காரன், காங்கிரஸ்காரன்  வேறு எவன்  எவனோ ஆண்டிருக்கிறான் என்றாலும், அண்ணா அவர்கள் சாதித்த காரியம்போல வேறு எவருமே சாதித்ததில்லை. இந்தியாவை ஆண்ட எவரும் இதுமாதிரி செய்ததில்லை. ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை கடவுள் வேண்டாம், மதம் வேண்டாம், சாதி வேண்டாம், சாஸ்திரம் வேண்டாம் என்ற ஒரு கொள்கையுடைய ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை அண்ணா அவர்கள் தோற்றுவித்தார் என்றால், அது சாமானிய காரியமல்ல பிரம்மாண்டமான சாதனையாகும். நம் மக்களுக்கு இது சரியாகப் புரிகிறதோ இல்லையோ, எதிரிகளுக்கு இது தெளிவாகப் புரியும். அண்ணா செய்த காரியம் இதற்கு முன்னால் ஆண்டவர்கள் பலரும் செய்ததற்கு மாறான காரியத்தை அல்லவா அண்ணா செய்தார்கள்!

சேர, சோழன், பாண்டியன்  வெங்காயம் எல்லாம் என்ன செய்தார்கள். அதற்குப் பிறகு வெள்ளைக்காரர்கள்தான் ஆண்டார்களே அவர்களால் பெரும் மாற்றத்தைச் செய்ய முடிந்ததா என்றால் இல்லையே!

அண்ணா நேற்று செய்ததற்கு மாறாகத்தானே அவர்கள் செய்தார்கள்! மக்களிடையே மூடநம்பிக்கைகளைப் புகுத்தி அந்தக் காரியங்களைப் பாதுகாப்பதுதான்  அரசியல் ஆட்சியின்  லட்சியம் என்று அல்லவா அவர்கள் காலத்தில் கருதப்பட்டது! மூவேந்தர்கள் செய்தது என்ன? கோவில்களைக் கட்டினார்கள். கடவுள்களை உற்பத்தி செய்தார்கள். பார்ப்பானுக்கு அரசர்கள் தன் மனைவிகளை விட்டுக் கொடுத்தாகிலும் புண்ணியம் சம்பாதிக்க வேண்டும் என்று நடந்து கொண்டார்கள். பார்ப்பன நலத்தைத்தான் கொள்கையாகக் கொண்டு இருந்தனர்.

பறையன்  பறையனாகவும், சக்கிலி சக்கிலியாகவும், சூத்திரன் சூத்திரனாகவும் இருக்கத்தான்  ஆட்சி பயன்பட்டது. தவிர மனுஷன் மனுஷனாக வாழுகிறான் என்று பார்க்கப் பயன்படவே இல்லையே! முடியவில்லையே! தப்பித் தவறி ஓர் ஆட்சி அப்படித் திரும்ப முயற்சித்தாலும் ஒழித்திருப்பார்களே! முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள் என்றாலும், அவர்களும், பழைய இராஜாக்கள் காலத்து ஆட்சியைப் போல் கடவுள், மதம், சாதி, சாஸ்திரம், சம்பிரதாயம் -இவற்றில் கை வைக்காமல் ஆட்சி புரியும்படி பார்ப்பான்  ஆக்கி வைத்துக் கொண்டானே! வெள்ளைக்காரன்  சில மாற்றங்களை செய்ய ஆரம்பத்தில் முன்வந்தான்  என்றாலும் மாற்றவிடாமல் மிரட்டி சரிப்படுத்திக் கொண்டார்கள் அவனும் நமக்கெதற்கு வம்பு, நமக்கு சிக்கியது வரை சரிதான்  என்றல்லவா ஆண்டான்? அண்ணா அவர்கள் அமைத்த அரசாங்கம்தானே இவற்றில் துணிந்து கை வைக்கக்கூடிய அளவுக்கு பகுத்தறிவாளர் ஆட்சியாக உள்ளது.

அண்ணா ஆட்சி வருகிற வரைக்கும் முன்புள்ள ஆட்சிகள் மதத்தை சாஸ்திரத்தைப் பாதுகாக்கவும் மக்களது மூடநம்பிக்கைகளைப் பத்திரமாகப் பாதுகாப்பதையும்தான்  தமது தொழிலாகக் கொண்டிருந்தன. மனித சமூகத்தைச் சின்னா பின்னப்படுத்தி அமைப்பு சாதி, மூடநம்பிக்கை இவற்றை, அழிக்கவோ, போக்கவோ அவைகள் முன்  வரவில்லையே! இந்த நிலையில் இருந்த ஆட்சியை திருப்பி துணிந்து பகுத்தறிவுக் கொள்கையை புகுத்திய ஆட்சியை அண்ணா அவர்கள் உண்டாக்கினார். என்னைப் போன்றவர்கள்கூட வாயினால்தான் பேச முடிந்தது. புத்தரின் காலத்தில்கூட இப்படி ஓர் ஆட்சியை அவரால் உண்டாக்க முடியவில்லையே. அண்ணா ஒருவர்தான்  இதைச் சாதித்தார். கடவுள், மதம், சாதி இவைகளை ஒழித்து அந்தக் கொள்கையின்  பேரால் ஓர் ஆட்சியை- பகுத்தறிவாளர் ஆட்சியை உண்டாக்கினார்.

தி.மு.க. என்றால் என்ன? திராவிடர் கழகத்துக் கொள்கைகளை உடைய கட்சி; ஆனால் அதைவிட சற்று வேகமாக தீவிரமாகச் செல்லும் கட்சி என்பதுதானே பொருள்? தி.க. என்றால் சுயமரியாதை இயக்கம், சுயமரியாதை இயக்கத்தினை நாங்கள் தோற்றுவித்துப் பிரச்சாரங்களும் செய்தோம். கடவுள் ஒழியவேண்டும்; மதம் ஒழிய வேண்டும்; காங்கிரஸ் ஒழிய வேண்டும்; பார்ப்பான்  ஒழிய வேண்டும், காந்தி ஒழிய வேண்டும் என்பதுதானே அதன்  கொள்கைகள். அதே கொள்கை அடிப்படையில் காங்கிரசை ஒழித்து, கடவுள் இல்லாமல் மதம் இல்லாமல், பார்ப்பான் இல்லாமல், ஒரு ஆட்சியை அண்ணா உண்டாக்கிக் காட்டிவிட்டாரே! அண்ணா அவர்கள் மத்தியில் காலமானார் என்றாலும் இன்னமும் அந்தக் கொள்கையைக் கொண்ட ஆட்சிதானே நிலையாக இருந்து அதற்கான காரியத்தை செய்கிறது? பச்சையாகவே அண்ணா சொன்னாரே, எனக்கு இந்த அமைச்சரவையையே காணிக்கை ஆக்குகிறேன்  என்று அதற்குப் பொருள் என்ன?

கடவுள் பெயரால் பிரமாணம் எடுக்கவில்லை - அதற்கு கடவுள் நம்பிக்கை அற்ற ஆட்சி என்பதுதானே! ஆட்சியில் கடவுள் மதத்திற்கு வேலையில்லை என் பதைத்தானே அது காட்டுகிறது. சுயமரியாதைத் திருமணங்களை செல்லும்படியாக்கும் சட்டம் கொண்டு வந்தார். இது எதைக் காட்டுகிறது? கடவுளுக்கோ, மதத்துக்கோ, மதத்தினர் சம்பிரதாயத்துக்கோ சாஸ்திரங்களுக்கோ வேலையில்லை. ஒரு ஆணும் பெண்ணும் பார்த்து நாங்கள் இருவரும் சிநேகிதர்கள் என்றால் தீர்ந்தது. அவ்வளவுதானே இதன் தத்துவம் என்ன? கடவுள், மதம், சாதி, சாஸ்திரம், பார்ப்பான்  எதுவும் வேண்டாம் என்று ஆக்கப்பட்டு விட்டது என்பதுதானே!

கல்கத்தாவைச் சார்ந்த ஒரு வங்காளக் கம்யூனிஸ்டு எம்.பி. கேட்கிறார் எங்களால் முடியவில்லை. இவ்வளவு புரட்சி பேசும் என் வீட்டில் அதைச் செய்ய முடியவில்லை. உங்களால் இவ்வளவு சல்லீசாக எப்படிச் செய்ய முடிகிறது என்று? இம்மாதிரி இந்தியாவில் உள்ள பலரும் ஆச்சரியப்படும்படி அல்லவா அண்ணா அவர்கள் காரியங்களைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்! அண்ணா ஜெயித்தவுடன்  நான்  இது பார்ப்பான் ஆட்சியாகத்தான்  இருக்கும் முன்னேற்றக் கழக ஆட்சியாக இருக்காது. பார்ப்பான்  காலடியில் உள்ள ஆட்சியாகத்தான்  இருக்கும் என்று நினைத்தேன், எழுதினேன்.

இவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக பார்ப்பனரும் வெகுபாடுபட்டார்கள். பார்ப்பனத் தலைவர் ராஜாஜி அவர்களும் அதற்கு ரொம்ப பாடுபட்டார். தி.மு.க. ராமசாமியிடம் இருந்த கட்சி என்றாலும், பெருங்காயம் இருந்த டப்பா, ஆனால் இப்போது காலி டப்பா, நான் வழித்து எறிந்து விட்டேன்  என்று கூறினார். அண்ணா இவற்றை ஏதும் மறுக்கவே இல்லை. இந்த இரண்டையும் பார்த்த நான்  இதற்காகவே எதிர்த்தேன் .அண்ணா வெற்றி பெற்றவுடன்  என்னை வந்து பார்த்தார். எனக்கு யோசனை சொல்ல வேண்டும் என்றார். நானும் ஆகட்டும் என்றேன். பார்ப்பனரும் ராஜாஜியும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை சபாநாயகர் தேர்தல் முதற்கொண்டே காட்ட ஆரம்பித்தனர்.

ஆனாலும், அண்ணா அவர்கள் அவரது கொள்கைகளை அமல்படுத்தும் ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சியை நடத்த ஆரம்பித்தார். அதன்  காரணமாக மக்கள் ஆதரவும் அதற்குப் பெருக ஆரம்பித்ததுடன், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிறப்பான ஆட்சி என்று பலரும் அதிசயப்பட்டு பாராட்டத்தக்க ஆட்சியாக அது இன்று வளர்ந்திருக்கிறது. மற்ற ஆட்சிகளைப் பார்க்கிறோமே மரியாதை கெட்டு, மானம்கெட்டு, ஒருவரை ஒருவர் செருப்பால் அடித்துக் கொள்வது, கட்சி விட்டு கட்சி மாறுவது, கொலை, கொள்ளை சர்வசாதாரணம் என்றும் தானே ஆட்சிகள் எல்லாம் நடைபெறுகிறது? மற்ற ஆட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் தி.மு.க. ஆட்சி எவ்வளவு சிறப்பானது என்பது எவருக்கும் சுலபமாக விளங்கும்.

1.11.1970 அன்று பம்பாயில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து...(‘விடுதலை’ 12.11.1930)

-  உண்மை இதழ், 1-15.2.19