செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

யோகப் புரட்டு



03. 04. 1932 - குடிஅரசிலிருந்து...

மூச்சடக்கிப் பலவகையாக யோகஞ் செய்வதன் மூலம் சிறிது சரீரம் திடம் பெறுவதற்கு ஏதாவது மார்க்கமிருக்குமேயொழிய அதில் வேறு தெய்வீகத் தன்மை யாதொன்றுமில்லை என்பதே நமது அபிப்பிராயமாகும். ஆகவே இதுவும் கழைக் கூத்து, சர்க்கஸ், ஜால வித்தை, முதலியவைகளைப் போல ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் நமது மக்கள் யோகத்தில் ஏதோ தெய்வீகத்தன்மை இருப்பதாக நம்பியிருப்பதால் அநேகர் யோகிகள் என்று கிளம்பி, சில ஜாலங்களைச் செய்து, பாமர மக்களை மலைக்கச் செய்து ஏமாற்றி வருகின்றனர். ஜன சமுகமும் இவர்கள் பால் பரம்பரையாகவே ஏமாந்து கொண்டும் வருகிறது.

இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கவனித்தால் விளங்கும். ஹட யோகம் என்பதில் சித்தி பெற்றவராகச் சொல்லப்பட்ட நரசிம்மசாமி என்பவர், சென்னை, கல்கத்தா முதலிய இடங்களில், பிரபல ரசாயன சாஸ்திரிகளின் முன்னிலையில், கொடிய விஷம், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் முதலியவற்றை விழுங்கி உயிரோடிருந்தாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசாயன சாஸ்திரிகள் எல்லோரும் மலைத்துப் போய் விட்டனர். ஆகவே யோகத்தின் மகிமைப்பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால் இதே நரசிம்ம சாமியார் சில தினங் களுக்கு முன் ரெங்கூனில் இரண்டாம் முறையாக விஷங்களையும் கண்ணாடித் துண்டுகளையும் விஷங்களையும் விழுங்கிய கொஞ்ச நேரத்திற்குள் மரண யோகம் பெற்று விட்டார். இதற்கு காரணம் விஷம் உண்டவுடன் ஹட யோகம் பண்ணுவதற்கு கொஞ்சம் நேரமாகிவிட்டது என்று பத்திரிகைகளில் சொல்லப்படுகின்றன. ஆனால் அவைகளை உட் கொள்ளும் சாதுரியத்திலோ அல்லது மாற்று மருந்தை உட்கொள்ளுவதிலோ அல்லது பழக்கப்பட்ட அளவை உட்கொள்ளுவதிலோ தவறிவிட்டார் என்று ஏன் சொல்லக் கூடாதென்று தான் நாம் கேட்கின்றோம்.

யோகத்தில் தெய்வத் தன்மை உண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை. சாதுரியத்தி னாலோ அல்லது பழக்கத்தினாலோ அல்லது மாற்று மருந்துகளினாலோ செய்யப்படும் காரியங்களை யெல்லாம் யோகமென்றும், மந்திரமென்றும், தேவதையென்றும், தெய்வசக்தியென்றும், சொல்லி ஒரு கூட்டத்தார் ஜன சமுகத்தை ஏமாற்றி வரு கிறார்கள் என்பதை அறிய வேண்டுகிறோம். ஆகை யால் இனியேனும் இதுபோன்ற மோசடியான காரியங்களைக் கண்டு ஏமாறாமலிருக்கும்படி எச்ச ரிக்கை செய்கிறோம்.

தந்தைபெரியார் பொன்மொழிகள்


உண்மையிலேயே ஜாதியின் பேரால் இந்தத் தொழிலாளி வர்க்கம் என்பது சிருஷ்டிக்கப்படவில்லை என்று சொல்லப்படுவது உண்மையானால் கக்கூசு எடுக்கிற தொழிலாளி மக்களிலும் நாலு பார்ப்பனர்கள் இருக்க வேண்டுமே. ஆனால் எந்தப் பார்ப்பானாவது கக்கூசு எடுத்ததாக யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தாழ்த்தப்பட்ட மகன்தானே அந்த வேலையைச் செய்கிறான்?

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள், நம்மை எப்படி மதிப்பார்கள் என்கின்ற எண்ணமே இருக்கக் கூடாது என்பதோடு அந்தப்படி நினைப்பவன் மனிதச் சமுதாயத் தொண்டுக்கு அருகனாகவே மாட்டான் என்றும் தைரியமாய்ச் சொல்லுவேன்.

-  விடுதலை நாளேடு, 1.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக