திங்கள், 20 ஜூலை, 2015

தெலுங்கு மொழியில் பெரியார் திரைப்படம்

அய்தராபாத்தில் தெலுங்கு மொழியில் பெரியார் திரைப்படம் கோலாகலத்துடன் வெளியீடு!
அய்தராபாத்தில் பெரியார் சிலை அமைத்திடவேண்டும் தமிழர் தலைவர் வேண்டுகோள்
கலைஞரின் அனுமதி பெற்று சிலை வழங்கிடுவோம் தமிழக துணை முதல்வர்
மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஆந்திர மாநிலத்தில் உரிய இடம் வழங்கப்படும்
ஆந்திர அமைச்சர் மாணிக்கவரப்பிரசாத ராவ்
தந்தை பெரியார் பற்றிய பெரியார் தெலுங்கு திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று (9.8.2010) திங்கள்கிழமை மாலை ஆந்திர மாநில தலைநகர் அய்தராபாத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழகத் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆந்திர மாநில மேல்நிலைப்பள்ளி கல்வி அமைச்சர் டி. மாணிக்க வரப்பிரசாத ராவ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லு ரவி, திரைப்படத்தில் நடித்துள்ள சத்யராஜ், குஷ்பு, ஆந்திர மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் சி.எஸ். மாதவராவ் (அய்.ஏ.எஸ்.), திரைப்படத்தின் இயக்குநர் ஞானராசசேகரன் மற்றும் திரைப்பட துறை சார்ந்தோர் கலந்துகொண்டனர்.
அய்தராபாத், ஆக. 10- சமூகநீதி தத்துவத்தின் சின்னமாய் விளங்கிடும் பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் பற்றிய பெரியார் தெலுங்கு திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று (9.8.2010) திங்கள்கிழமை மாலை ஆந்திர மாநில தலைநகர் அய்தராபாத்தில் வெகு விமரிசையாகக் கொண்டா டப்பட்டது. தமிழகத் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆந்திர மாநில அமைச்சர் டி. மாணிக்க வரப்பிரசாத ராவ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகநீதி அமைப்பின் தலைவர்கள், திரைப்படத்தில் நடித்துள்ள சத்யராஜ், குஷ்பு மற்றும் திரைப்பட துறை சார்ந்தோர் கலந்து கொண்டனர்.
கலந்துகொண்ட தலைவர்களின் - அமைப்பு களின் விருப்பத்தின் பிரதிபலிப்பாக நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழர் தலைவர் கி. வீரமணி - அய்தராபாத் நகரில் தந்தை பெரியார் அவர்களுக்கு சிலை வைத்திட வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
தமிழக அரசும், ஆந்திர அரசும் ஆவன செய்திட வேண்டும் எனும் விருப்பத்தினைத் தெரிவித்தார்.
நிறைவுரையாற்றிய தமிழக துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிறுவப்பட இருக்கும் தந்தை பெரியாரின் சிலை பங்களிப்பினை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள, தமிழக முதல்வர் கலைஞரின் அனுமதி பெற்று ஆவன செய்திட உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆந்திர மாநில மேல்நிலைப்பள்ளி கல்வி அமைச்சர் டி. மாணிக்க வரப்பிரசாத ராவ், சிலை வைத்திட இடம் வழங்கல் மற்றும் அது தொடர்பான ஏற்பாடுகளை மேற் கொள்ள மாநில முதல்வருடன் கலந்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளும் அறிவிப்பினை தெரிவித்தார்.
தெலுங்கு மொழியாக்க பெரியார் திரைப்பட முன்னோட்ட வெளியீட்டு விழா அய்தராபாத் நகரின் நெக்கலஸ் சாலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசாத் அய்மேக்ஸ் திரையரங்கில் பெருந்திரளாகக் குழுமியிருந்த மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. மாலை 7 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி, 8.30 மணிக்கு நிறைவுற்றது. அதைத் தொடர்ந்து, பெரியார் தெலுங்கு திரைப்படம் மக்களுக்கு முன்னோட்டமாகத் திரையிட்டுக் காட்டப்பட்டது.
தமிழர் தலைவர் கி. வீரமணி
நிகழ்ச்சிக்கு விருந்தினராக (Guest of Honour ) கலந்துகொண்டு சிறப்பித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி தனது வாழ்த்துரையில், குறிப்பிட்டதாவது:
தந்தை பெரியார் எப்பொழுதும் மக்கள் மத்தி யிலே வாழ்ந்தவர். அவர்களது வாழ்க்கை மேம் பாட்டுக்கு, சுயமரியாதை வாழ்விற்கு சமூகத்தில் உரிய அந்தஸ்துடன் வாழ்ந்திட, தனது வாழ்நாள் முழுக்க பாடுபட்ட அருந்தலைவர். நாம் மொழியால் மாறுபட்டாலும், நாம் சார்ந்துள்ள திராவிடர் இனத்தால் ஒன்றுபட்டவர்கள். திராவிடத் தந்தை பெரியாரின் தலைமாணாக்கர் தமிழகத்தின் முன் னாள் முதல்வர் அறிஞர் அண்ணா தனது திராவிட நாடு இதழில் குறிப்பிட்டார் - திராவிட மேம் பாட்டிற்கு பாடுபட்டு வரும் தலைவர்கள் இரண்டு ராமசாமிகள். ஒருவர் ஆந்திர மாநிலம் - நெல் லூரைச் சார்ந்த ராமசாமி சவுத்ரிகாரு; மற்றொருவர் பெரியார் ஈரோட்டு ராமசாமி ஆவார்.
ராமாய ணத்தின் திராவிட இன இழிவை விமர்சித்து பிரச் சாரம் செய்தவர் நெல்லூர் ராமசாமி சவுத்ரி. பெரியார் ராமசாமி திராவிட இன மேம்பாட்டிற்கு ராமாயண எதிர்ப்பினை ஓர் அணுகுமுறையாகவே அமைத்து பிரச்சாரம் செய்தவர். அப்படிப்பட்ட பெரியார் இன்று ஆந்திர மாநிலத்திற்கு வந்துள்ளார். ஆம்! பெரியார் திரைப்படம்மூலம் பரந்துபட்டு மக்களைச் சென்றடைகின்ற வகையில் தெலுங்கு மொழியில் ஆக்கம் செய்யப்பட்டு இன்று வெளி யிடப்படுகிறது.
பெரியாரும் - அம்பேத்கரும்
இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக - அறிவியல் மனப்பான்மை, எதையும் கேள்வி கேட்டுத் துளைத்து ஆராயும் அணுகுமுறை, சீர்திருத்தம், மனிதநேயம் ஆகிய வற்றை வலியுறுத்துகிறது. அந்த அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத் கரும், தந்தை பெரியாரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். அம்பேத்கர் அரசியல் அதிகாரத்திற்குச் சென்று சேவை ஆற்றினார். தந்தை பெரியாரோ அரசியல் அதிகாரத்தின் பக்கம் செல்லாமலேயே தொண்டாற்றினார்.
இவ்விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள தமிழகத் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தத் தலைமுறையின் எழுச்சி வடிவ மாக வருகை தந்துள்ளார்கள். தமிழகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டுச் சூழலை முற்றிலும் மாற்றிவரும் அரசியல் வித்தகராக விளங்கி வருகிறார். திராவிடர் இயக்கத்தினை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல் மிக்க மு.க. ஸ்டாலின் பெரியார் திரைப்பட வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருப்பது மிகவும் கொள்கைப் பொருத்தமான நிகழ்வாகும்.
அய்தராபாத்தில் பெரியார் சிலை
பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமான வரல்லர்; இந்தியா முழுமைக்கும் மட்டும் உரியவர் அல்லர்; உலகளாவிய தலைவர் தந்தை பெரியார் ஆவார். பெரியார் எல்லோருக்கும் சொந்தம். ஒடுக் கப்பட்ட, அடக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரியவர். இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள பல்வேறு சமூகநீதி அமைப்புகளின் தலைவர்கள் விரும்புகின்ற வாறு தந்தை பெரியாரின் சிலை அய்தராபாத் நகரிலேயே நிறுவப்படவேண்டும். சிலை அமைப் புக்கு உரிய இடம் மற்றும் இதர ஏற்பாடுகளைச் செய்ய ஆந்திர மாநில அரசு முன்வரவேண்டும்.
திராவிடர் இயக்கத்தின் வாழும் வரலாறாக விளங்கிக் கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ள தமிழக அரசு பெரியாரின் சிலையினை வழங்கிட முன்வரவேண்டும். இங்கு குழுமியுள்ள அனைவரது விருப்பத்தினையும் விரைந்து முடித்திடவேண்டும். தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் குடியேறி யுள்ள புரட்சிகர சமத்துவபுரங்களை தொடர்ந்து தொடக்கி வைத்து, அச்சமத்துவபுரங்களில் பெரியாரின் சிலையினையும் திறந்து வைத்துவரும் தமிழக துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆந்திர தலைநகர் அய்தராபாத் நகரிலும் தந்தை பெரியாரின் சிலையினைத் திறந்திட உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் எனும் உரிமை யான வேண்டுகோளை இந்த நிகழ்வில் முன் வைக்கிறோம் என்று கூறி விளக்கவுரையாற்றினார்.
தமிழக துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
பெரியார் தெலுங்கு திரைப்பட வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழகத் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
தந்தை பெரியாரை ஒரு திரைப்படத்திற்குள் அடக்கி முழுமையாக்கி விட முடியாது. பெரியார் ஒரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமானவரல்லர்; இந்தியா முழுமைக்கும் சொந்தமானவர். மத நம்பிக்கை, மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடியவர் பெரியார். ஒவ்வொரு மனிதருக் குள்ளும் பகுத்தறிவு உள்ளது. பகுத்தறிவைப் பயன்படுத்துவதன் தேவையை எடுத்துக்காட்டியவர் தந்தை பெரியார். ஒவ்வொருவரும் தன்மானத்துடன் வாழவேண்டும்; ஆணுக்கு நிகராகப் பெண்களும் சமமாக வாழ்ந்திடவேண்டும்; பெண்களை அடக்கி ஆளும் போக்கு மறைந்திடவேண்டும் என வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திட்டவர் தந்தை பெரியார். அவரது வாழ்க்கையே ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்கான ஓர் அறைகூவலாகும்.
மட்டற்ற மகிழ்ச்சி
திராவிட இன மொழிக் குடும்பத்தினைச் சார்ந்த தெலுங்கு மொழி பேசும் ஆந்திர மாநிலத்தில் திராவிடத் தந்தை பெரியார் திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
லிபர்ட்டி கிரியேசன்ஸ் தயாரித்த பெரியார் திரைப்பட உருவாக்கத்திற்கு தமிழக அரசு 95 லட்ச ரூபாயினை நன்கொடையாக வழங்கியது. ஆந்திர மாநில அரசு பெரியார் தெலுங்கு பட வெளி யீட்டிற்கு வரிச் சலுகை அளிக்க முன்வரவேண்டும். தமிழக அரசு அளித்த வரிச் சலுகையில் தமிழகத்தில் ஏறக்குறைய பள்ளி மாணவர்கள் அனைவரும் பெரியார் திரைப்படத்தினை பார்த்திடும் வாய்ப்பு கிட்டியது. அப்படிப்பட்ட ஒரு நல்ல வாய்ப்பினை ஆந்திர மாநில சிறார்கள், பள்ளி மாணவர்கள் பெற்றிட வேண்டும். அதற்கு ஆந்திர மாநில அரசு ஆவன செய்திடவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
கலைஞரின் அனுமதி பெற்று...
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் சிலையினை அய்தராபாத் நகரில் நிறுவிடவும், அதற்கான சிலை பங்களிப்பினை தமிழக அரசு வழங்கிடவேண்டும் எனும் வேண்டுகோளாக இங்குள்ள பல்வேறு அமைப்புகளின் விருப்பத்தினை தெரிவித்தார். தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு தந்தை பெரியாருக்கு சிலை அமைப்பதில் கிட்டும் மகிழ்ச்சியைவிட வேறு மகிழ்ச்சி கிடையாது. எனினும் முறையாக தமிழக முதல்வரின் சம்மந்தம் பெற்று ஆவன செய்வோம் என்பதை இந்த விழாவில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உரையாற்றினார்.
ஆந்திர மாநில அமைச்சர் டி.மாணிக்க வரப்பிரசாத ராவ்
திரைப்பட விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய ஆந்திர மாநில அரசின் மேல்நிலைப்பள்ளி கல்வி அமைச்சர் டி. மாணிக்க வரப்பிரசாத ராவ் தனது உரையில் குறிப்பிட்ட தாவது:
பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு இயக்கம் என்பது இந்நாட்டு வரலாற்றோடு பின்னணிப் பிணைந்தது. புத்தர் காலம் தொடங்கி சாருவாகனர் முதலிய பல முற்போக்காளர்கள் முயன்று முழுமையாக வெற்றியடையாத வரலாறே அதிகம். பார்ப்பன ஆதிக்கத்தை முறியடித்து வெற்றி கண்ட வரலாறு இரண்டு இயக்கங்களுக்கு உண்டு. ஒன்று அம்பேத்கர் இயக்கம்;
மற்றொன்று பெரியார் தலைமையிலான திராவிடர் இயக்கம். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒற்றுமைக்கு பாடுபட்டவர் தந்தை பெரியார். இந்து மதப் பிடியிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் பணியில் பெரியாரின் பங்கு மகத்தானது.
இந்து மத ஆதிக்க அடக்குமுறை உணர்வினை சுட்டிக்காட்டுகின்ற வகையில், வடபுலத்தில் ராமஜென்ம பூமி பிரச்சினையில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மக்களுக்குப் பயன்படும் விதத்தில் தொழிற்சாலைகள், கழிப்பறைகள் கட்டலாமே என அன்று கன்சிராம் கருத்துத் தெரிவித்தார். இன்று தென்புலத்தில் சேது சமுத்திரத் திட்டத்தினை செயல்படுத்திட இந்துத்துவா சக்திகள், ராமன் கட்டிய பாலத்தினை இடிக்கக் கூடாது என குரல் கொடுத்தபொழுது, தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், ராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்து பாலம் கட்டினான் என இடித்துரைத்தார். இப்படிப்பட்ட ஆதிக்க எதிர்ப்பு உணர்வுகள் இன்றைய பெரியார் திரைப்படம்மூலம் பெருகவேண்டும்.
அய்தரா பாத்தில் பெரியார் சிலை அமைக்க உரிய இடம் தெரிவு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து ஆந்திர முதலமைச்சருடன் கலந்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று உரையாற்றினார்.
திரைப்பட நடிப்புக் கலைஞர்கள்
திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சியில் பெரியாராக நடித்த சத்யராஜ், மணியம்மையாராக நடித்த குஷ்பு, பெரியாரின் தந்தையாக நடித்த கைகல சத்யநாராயணா ஆகியோர் உரையாற்றினர். இயக்குநர் ஞான.ராசசேகரன் படத்தின் சிறப்பு களை எடுத்துக் கூறினார்.
அரசியல், சமூகநீதித் தலைவர்கள்
நிகழ்ச்சியில், ஆந்திர மாநில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் மல்லுரவி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் மற்றும் தமிழ்நாடு-நாமக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜெயக்குமார், ஆந்திர மாநில அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் காகி மாதவராவ், விஜயவாடா நாத்திக மய்யத்தின் தலைவர் முனைவர் கோரா விஜயம், மகாத்மா ஜோதிராவ் பூலே சமூகநீதி நிறுவனத்தைச் சார்ந்த பி. சுதாகர் (மறைந்த நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமியின் மருமகன்), தெலுங்கு பெரியார் திரைப்பட உரையாடல் மற்றும் பாடலாசிரியர் முனைவர் கட்டி பத்மராவ், லிபர்ட்டி கிரியேசன்ஸ் இயக்குநர் வீ. அன்புராஜ் ஆகியோர் மேடையில் அமர்ந்து சிறப்பித்தனர் - உரையாற்றினர்.
நிகழ்ச்சியினை ராஷ்ட்டிர தலித் சேனா தலைவர் ஜே.பி. ராஜு தொகுத்து வழங்கிட, பெரியார் தெலுங்கு பட தயாரிப்பாளர் பி. சுனில் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ. குமரேசன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் த.வீரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெற்றி உறுதி
முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட சமூகநீதி உணர்வாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட அமைப்பினர், திரைப்படத்தினை பார்த்திட்ட பார்வையாளர்களின் பிரதிபலிப்பினை பார்க்கும் பொழுது பெரியார் தெலுங்கு திரைப்படத்தின் வெற்றி உறுதி என்பது கண்கூடாகத் தெரிந்தது.

நான் ஒரு பெரியாரிஸ்ட்! நடிகை குஷ்பு அறிவிப்பு
அய்தராபாத்தில் நேற்று பெரியார் திரைப் படம் தெலுங்கு மொ ழியில் வெளியீட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் இனமுரசு சத்ய ராஜ், தான் ஒரு பெரியார் கொள்கைப் பற்றாளன் என்பதை ஏற்கெனவே பிரகடனப்படுத்தியவர்.
அய்தராபாத்தில் நடைபெற்ற பெரியார் தெலுங்கு திரைப்பட முன்னோட்ட நிகழ்வில் பெரியார் திரைப்படத்தில் அன்னை மணியம் மையாராக நடித்த நடிகை குஷ்பு தன்னுடைய உரையில், அன்னை மணியம்மையாரைப் பற்றி எந்த படச் சுருளையும் தான் பார்க்கவில்லை. அவர் இயல்பாக இருக்கின்ற போட்டோக்களை மட்டுமே பார்த்தேன். அன்னை மணியம்மை யாரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை மட்டுமே படித்தேன். திராவிடர் கழக தலைவர் வீரமணி அவர்கள் அன்னை மணியம்மையாரைப் பற்றித் தெரிந்து கொள்ள பல செய்திகளைக் கூறினார். அதுதான் நான் மணியம்மையாராக சிறப்பாக நடிப்ப தற்குக் காரணமாக இருந்தது.
நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதை இந்த நேரத்தில் பிரகடனப்படுத்திக் கொள்வதில் பெருமை அடைகின்றேன் என்றும் குஷ்பு கூறினார்.
குஷ்பு இவ்வாறு அறிவித்ததை மேடையில் இருந்தவர்களும், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தவர்களும் மகிழ்ந்து கைதட்டி வரவேற்றனர்.
அய்தராபாத்தில் நடைபெற்ற பெரியார் தெலுங்கு திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்வில் பங்கேற்ற பார்வையாளர்கள் (9.8.2010)
விடுதலை 10.8.2010
தெலுங்கு மொழியில் பெரியார் திரைப்படம் நாளை வெளியீடு!
தமிழர் தலைவர் வீரமணி, துணைமுதல்வர் மு.க. ஸ்டாலின்
ஆந்திர அமைச்சர், சத்யராஜ், குஷ்பு பங்கேற்கின்றனர்
சென்னை, ஆக.8 தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்ட பெரியார் திரைப்படம் ஆந்திர மாநிலம் அய்தராபாத்தில் நாளை (9.8.2010) முன்னோட்ட மாகத் திரையிடப்படுகிறது.
கி. வீரமணி - ஸ்டாலின்
முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கின்றனர். என்ஏஜி என்ட்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் பெரியார் திரைப்படத்தை தெலுங்கு மொழியில் மொழியாக்கம் செய்து ஆந்திர மாநிலம் முழுவதும் வெளியிடுகிறது. பெரியார் படம் தெலுங்கு மொழியில் வெளியிடுவதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி நாளை (9.8.2010) மாலை 6.30 மணிக்கு அய்தராபாத் நெக்லஸ் சாலையில் உள்ள பிரசாத் அய்மேக்ஸ் தியேட்டரில் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.
ஆந்திர அமைச்சர்
ஆந்திரப் பிரதேச மேல்நிலைப்பள்ளி கல்வி அமைச்சர் டி. மானிக்ய வரப்பிரசாதராவ் நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கிறார்.
முன்னாள் தலைமைச் செயலாளர் காகி மாதராவ் அய்.ஏ.எஸ்., (ஓய்வு) சமூகநீதிக்கான மகாத்மா, ஜோதிராவ் புலே நிறுவனத்தைச் சார்ந்த பி. சுதாகர், ராஷ்ட்ர தலித் சேனாவைச் சேர்ந்த ஜே.பி. ராஜு விஜயவாடா நாத்திக கேந்திரத்தைச் சேர்ந்த டாக்டர் கோரா விஜயம், பெரியாராக நடித்த இனமுரசு சத்யராஜ் மணியம்மை யாராக நடித்த குஷ்பு, பெரியாரின் தந்தையாக நடித்த கைகல சத்திய நாராயணா, பெரியார் படத்தின் இயக்குநர் ஞானராஜ சேகரன், லிபர்ட்டி கிரியேசன்ஸ் நிறுவன இயக்குநர் வீ. அன்புராஜ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். நாக் எண்டர் பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் பி.சுனில் விழா ஏற்பாட்டினை செய்துள்ளார். தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் அரசு சார்பில் செய்த நிதி உதவி, தமிழக மக்கள் வழங்கிய உதவியின் காரணமாக பெரியார் படம் தமிழகமெங்கும் திரையிடப்பட்டு நூறு நாட்களைத் தாண்டி ஓடிய வெற்றிப்படம் என்ற பெயரைப் பெற்றது. பெரியார் படம் இந்தி, மலையாள மொழிகளிலும் வெளிவர டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெரியார் கொள்கை பரப்பலில் இது ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
விடுதலை 8.8.2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக