சனி, 25 ஜூலை, 2015

மதம் மனிதனுக்கு அவசியமா?


மதநம்பிக்கையாளன்:- மனிதனின்றும் மத நம்பிக்கையை ஒழிப்பதினால் என்ன பயன் ஏற்படப் போகின்றது? மத நம்பிக்கை புறக்கணித்த சமூகத்தினர் களையும், பாமர மக்களையும் சன்மார்க்க ஒழுக்கத்திலீடு படச் செய்யாதா?
மதநம்பிக்கையற்றவன்:- தங்களுடைய அபிப் பிராயம் சரியானதாகத் தோன்றவில்லை. உலகில் இன்று ஏற்பட்டிருக்கும் சகல சண்டை சச்சரவுகளுக்கும், குழப்பங்களுக்கும் மதமே காரண கர்த்தாவாக இருக் கின்றது. உலக சரிதத்தை ஊன்றி படிப்பின் மதத்தின் பெயரால் அனேக இரத்த ஆறுகள் பெருகியிருப்பதை காண்கிறோம்.
தற்போது அனுஷ்டானத்திலிருக்கும் ஜாதி வித்தியாசமும், அனுசார மூடநம்பிக்கைகளும் மதத்தி னின்றே தோன்றினவைகளாகும். இதை மதங்களே காப்பாற்றிக் கொண்டு வருகின்றன. எல்லா மதப் புரோகிதர்களும் எளிய மக்களை ஏமாற்றி இரத்த வியர்வை விட்டு உழைத்து சம்பாதிக்கும் சிறு பொருளை கவர்ந்துக் கொள்ளுவது பிரசித்தி பெற்ற விஷயமாகும்.
இப்படி மக்களுக்கு தீமை விளைவிக்கும் மதத்தை அழிப்பது ஒரு பெரும் உபகாரமாகும். சன்மார்க்கத்தில் மனிதனை ஈடுபடச்செய்வது மதமல்ல. ஆனால் பகுத்தறிவு தன்மையினால் ஆராய்ந்து நடப்பதாகும்.
நம்பிக்கையாளன்:- சத்தியத்துடனும் வெகு மதியுடனும், இன்பத்துடனும் ஜீவிதத்தை நடத்த வேண்டுமானால் ஒருவனுக்கு மதம் அவசியமில்லையா?
நம்பிக்கையற்றவன்:- ஒருக்காலுமில்லை. சத்திய மாகவும், மரியாதையுடனும் ஜீவிப்பதற்கு மத நம்பிக்கை அவசியமில்லை. அதற்கு ஒவ்வொருவனுடைய அறிவையும் சரியான முறையில் நடத்தினால் போதும், உலகப் பிரசித்தி பெற்ற சார்லஸ் பிராட்லா, இங்கர்சால் ஹக்ஸிலி, டார்வின் போன்றோர் மிக பிரசித்தியுடன், பொது ஜனங்களின் நன்மதிப்பை பெற்று உண்மையுடனேயே வாழ்ந்து வந்தனர்.
நம்பிக்கையாளன்:- வேத புத்தகங்களிலும், பைபிளிலும், குரானிலும் நம்பிக்கை கொள்வது மனிதனை சன்மார்க்கத்திலீடு படச்செய்யும் என்பதை தாங்கள் மறுக்கின்றீரா?
மதநம்பிக்கையாளன்:- அது மிகக்குறைவாகும். பொதுவாக மதநூற்களிலுள்ள தத்துவங்கள் மக்களுக்கு நன்மை பயப்பதாகும்.
நம்பிக்கையற்றவன்:- தாங்கள் கூறுவது சரியல்ல, சன்மார்க்கத்தை போதிக்கின்ற நம்பிக்கை மனிதனுக்கு இருக்கிறதென்றால் அது உலகில் பொதுவாக நன்மை பயக்க வேண்டியது தான்.
ஆனால் தற்போது நம்நாட்டில் எல்லா திருடர்களும், கொலையாளிகளும், அக்கிரமக் காரர்களும் கொடுங்கோன்மையாளர்களும் மதத்தில் நம்பிக்கை உடையவர்களாகவே காணப்படுகின்றனர்.
நம்பிக்கையாளன்:- தங்களுக்கு மத நம்பிக்கையோடு உலகிற்கு செய்யும் நன்மை, மத நம்பிக்கையில்லாமல் செய்வதை விட பதின் மடங்கு அதிகரித்ததாகும் என்பது தான் எமது அபிப்பிராயம். மத நம்பிக்கை இல்லாதவன் எனக்கூறுமாயின் தங்களை யாரும் அனுகூலிக்கவோ, அல்லது தங்களுடைய அபிப்பிராயங்களை எவரும் கவுரவிக்கவோ மாட்டார்கள்,
நம்பிக்கையற்றவன்:- பொது ஜன அபிப்பிராயத் திற்காக எமது மனத்திற்கு எதிராக எமது அறிவிற்கு பொருந்தாத எக்காரியத்தையும் செய்ய துணியவே மாட்டான். பொதுஜன பெரு வெள்ளத்தில் ஒழுக நான் என்னை அனுமதிக்க வில்லை.
எமக்கு சரியான தென்றும், நியாயமான தென்றும் தோன்றுவதை நான் செய்வேன். அதை பிறருக்கும் கூறுவேன். அது அநீதியென பிறர்கூறின் அதை பகுத்தறிவால் ஆராய்ந்து ஒப்புக்கொள்ள ஒருக்காலும் பின் வாங்க மாட்டேன்.
நம்பிக்கையாளன்:- தாங்கள் ஒரு மத நம்பிக்கை இழந்தவனெனக் கூறி மற்ற பொதுக்காரியங்களில் ஈடுபடினும் மக்கள் அதை ஆதரிக்க மாட்டார்கள்.
மதநம்பிக்கையற்றவன்: இது ஒரு பெருந்தவறு, பொது நன்மை பயக்கின்ற எல்லா காரியங்களுக்கும் எல்லா மத நம்பிக்கையாளர்களும் மத நம்பிக்கை இழந்தவர்களும் ஒன்று சேர்ந்து பிரயாசைப்படுவதில் என்ன தவறு. மகம்மதியர்களும், இந்துக்களும் பீகார் பூகம்பத்திற்காக பணத்தை சேகரிக்கக் கூடாதா? மது ஒழிப்பைப் குறித்து பிரசங்கிக்கக் கூடாதா?
நம்பிக்கையாளன்:- ஆமாம்! தங்களுக்கு மத நம்பிக்கை இல்லையே!
நம்பிக்கையற்றவன்:- மத பாகுபாடுகளை முன் நிறுத்தி மண்டையை உடைத்துக் கொள்ளும் கொடிய மதம் எனக்கு வேண்டவே வேண்டாம்.
நம்பிக்கையாளன்:- மதம் அவசியமில்லாதவர்களுக்கு தாங்கள் வேறு எதை அளிக்கின்றீர்?
நம்பிக்கையற்றவன்:- மனித வாழ்க்கையில் அனு சாரங்களுடனும், மூட நம்பிக்கைகளுடனும் பகிரங்கபோர் தொடுத்து ஜெயிப்பதற்குரிய பகுத்தறிவு.
(புரட்சி, 1934)


தந்தை பெரியார் பொன்மொழிகள்
  • கரைபுரண்டு போகும் சீர்திருத்த வெள்ளத்தை நாம் ஒரு புறமாகத் திருப்பி விட்டுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுவதெல்லாம் வெறும் மாறு பாட்டுக்காக மாறவேண்டுமென்றில்லாமல் பகுத்தறிவுக்கும், தன் மானத்திற்கும், வாழ்க்கை நலத்திற்கும் ஏற்ற முறையில் அச்சீர்திருத்த வெள்ளம் புறப்பட்டுப் பழைய குப்பைக் கூளங்களையும், துர்நாற்றத்தையும் அடித்துக் கொண்டு போவதுடன் மேடு பள்ளங்களையும் நிரவிக் கொண்டு போக வேண்டும்.
  • மதம், கடவுள், சாஸ்திரங்கள், விதி, பகவான் செயல் என்பவைகள் எல்லாம் முதலாளிகளுக்கு, அவர்களின் முதலாளித் தன்மை நீடூழி வாழ்வதற்கு, அழியாமல் இருப்பதற்கு ஆகத்தான் ஒரு கற்கோட்டையாக இருக்கிறது. அவைகள் அழியாமல், அழிக்கப்படாமல் முதலாளித் தன்மை அழியாது.

-விடுதலை,24.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக