ஞாயிறு, 19 ஜூலை, 2015

பெரியாரைத் தோற்கடிக்க முடியாது-பேராசிரியர் தொ.பரமசிவன்



தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில், பேராசிரியர் தொ.பரமசிவன் தவிர்க்க முடியாத பெயர். வெகுமக்கள் வழக்காறுகள் மற்றும் நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்தவை இவரது ஆய்வுகள். அழகர் கோயில், பண்பாட்டு அசைவுகள் போன்ற இவரது நூல்கள் பரவலான கவனத்தைப் பெற்றவை. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரிடம் உரையாடியதிலிருந்து...
(மற்ற பகுதிகள் நீக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதி மட்டும்)
சமீபகாலமாக, தமிழகத்தில் சாதி அமைப்புகள் வலுவடைந்து வருகின்றன. மதவாத சக்திகளும் இவற்றை ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்த நிலை யில், அரை நூற்றாண்டுக்கு மேலாக சாதி ஒழிப்பு போராட்டத்தை முன்னெடுத்த பெரியாரின் முயற்சி கள் தோல்வியடைந்து விட்டதாக விமர்சனங்கள் எழுகின்றனவே?

பெரியார் தோற்றுப்போகவில்லை என்பது மட்டுமல்ல, பெரியாரைத் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால், அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லா தவர். அவர் மனிதகுலத்தின் விடுதலைக்கு இந்தியாவின் தென்பகுதியில் முதல் நிபந்தனையாக முன்வைத்தது சாதி ஒழிப்பு என்பதைத்தான்.
எனவே, அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்று சொல்ல முடியுமே தவிர, தமிழர்களின் விடுதலையைத் தேடியவர் என்றுகூட சொல்ல முடியாது. அந்த விடுதலைக்கான வழியாக அவர் சாதி ஒழிப்பை முன்வைத்தார்.
கடவுள் ஒழிப்பு, மத ஒழிப்பு அல்ல, சாதி ஒழிப்புதான். சாதி புகல்கிற கோயில்கள், சாதி புகல்கிற இலக்கியங்கள், சாதி புகல்கிற மொழி என்று அவர் அதை முன்வைத்தார்.
சாதிக்கு அங்கீகாரம் தருகிற எல்லாவற்றுக்கும் அவர் அங்கீகாரம் தர மறுத்தார். பெரியாரைப் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்குக் காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள்தான். நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டதால்தான் பெரியாரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. ஊழல், அரசியல் ஒழுக்கமின்மை காரணமாக, பெரியாரை திராவிடக் கட்சிகளால் முன் வைக்க முடியவில்லை. பெரியாரை, சமூகத்திடம் கொண்டு செல்வதற்கான திறனை அவர்கள் இழந்து விட்டார்கள்.
- சந்திப்பு: என். கவுரி
- நன்றி: தி இந்து (தமிழ்), 17.5.2015
-விடுதலை,17.5.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக