வியாழன், 23 ஜூலை, 2015

தெய்வ நம்பிக்கைக்கு மரணம் காரணமா?- தந்தை பெரியார்


வினா: கடவுளைப் பற்றிப் பொது வாக ஜனங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை விளக்கிக்கூறு.
விடை:- கடவுள் வான மண்டலத் தையும், பூமியையும், அதிலுள்ள சகல சராசரங்களையும் படைத்தவன் என்று மக்களில் பெரும்பாலார் நம்புகிறார்கள்.
வினா:- அப்புறம்?
விடை:- கடவுள் சர்வ ஞானமுடைய வனாம், யாவற்றையும் பார்க்கிறானாம். பிரபஞ்ச முழுதும் அவனது உடைமை யாம், சர்வவியாபியாம்.
வினா:- கடவுள் ஒழுக்கத்தைப்பற்றி ஜனங்கள் என்ன சொல்லுகிறார்கள்.
விடை:- அவன் நீதிமானாம்; புனித னாம்.
வினா:- வேறு என்ன?
விடை:- அவன் அன்பு மயமான வனாம்.
வினா:- கடவுள் அன்பு மயமானவ னென்று ஜனங்கள் எப்பொழுதும் நம்புகிறார்களா?
விடை:- இல்லை. மக்கள் அறிவும், ஒழுக்கமும் உயர உயர, கடவுள் யோக் கியதையும் விருத்தியடைந்து கொண்டே போகிறது.
வினா:- உன் கருத்தை நன்கு விளக்கிக்கூறு.
விடை:- காட்டாளன் கடவுள், ஒரு காட்டாளனாகவும், திருடனாகவும் இருந்தான். அராபித் தலைவன் கடவுளான ஜாப், ஒரு கீழ் நாட்டு யதேச்சாதிகாரியாக இருந்தான். யூதர்கள் கடவுளோ வெறியனாயும், பழிக்குப்பழிவாங்கும் குணமுடைய வனாகவும் இருந்தான். கிறிஸ்தவர் கடவுளோ, அற்பாயுளுடைய மக்கள் செய்யும் குற்றங்களுக்கு நித்திய நரக தண்டனை வழங்கக் கூடியவனாக இருக்கிறான். வினா:- கடவுளைப் பற்றிய வேறு அபிப்பிராயங்கள் என்ன?
விடை:- மக்கள் மனோ, வாக்கு, காயங்களினால் செய்யும் காரியங்களில் அவன் சிரத்தையுடையவனாக இருக் கிறானாம்.
வினா:- ஏன்?
விடை:- அவனுக்கு விருப்பமான காரியங்களை நாம் செய்தால் பரிசளிக் கவும் விருப்பமில்லாத காரியங்களைச் செய்தால் தண்டனையளிக்கவும்.
வினா:- கடவுளுக்கு என்ன என்ன பெயர் வழங்கப்பட்டிருக்கின்றன?
விடை:- ஒவ்வொரு தேசத்தாரும் கட வுளை ஒவ்வொரு பெயரால் அழைக் கிறார்கள், கிரேக்கர்கள் யூயஸ் என்றும், ரோமர்கள் ஜோவ் என்றும், பார்சிகள் ஆர்முஸ்ஜித் என்றும், இந்துக்கள் பிரம்மம் என்றும், யூதர்களும் கிறிஸ் தவர்களும் ஜிஹோவா என்றும், முகம் மதியர் அல்லா என்றும் கடவுளை அழைக்கிறார்கள்.
வினா:- கடவுளுக்குக் கொடுக்கப்பட்டி ருக்கும் வேறு பெயர்கள் எவை?
விடை:- பரம்பொருள், அனந்தன், மூலகாரணன், பரமாத்மா, நித்தியசக்தி, பிரபஞ்சம், இயற்கை, மனம், ஒழுங்கு முதலியன.
வினா:- ஆனால், ஜனங்கள் சொல் லும் கடவுள் ஒரே பொருளைத்தானா குறிக்கிறது?
விடை:- இல்லை, சிலர் கடவுளை ஒரு ஆளாக பாவனை செய்கிறார்கள். சிலர் ஒரு கருத்தெனக் கூறுகிறார்கள். வேறு சிலர் சட்டம் என்கிறார்கள். மற்றும் அறிய முடியாத ஒரு சக்தி என்கிறார்கள். ஒரு கூட்டத்தார் கடவுள் பூரணன் என்கிறார்கள். பின்னும் சிலர் ஜடப் பொருளும் மனமும் அய்க்கியப்படும் நிலையே கடவுள் என நம்புகிறார்கள்.
வினா:- மக்கள் எப்பொழுதும் ஒரே கடவுளில் நம்பிக்கை வைத்து வந்திருக் கிறார்களா?
விடை:- மக்களில் பெரும்பாலார் ஒருகடவுள் அல்லது பல கடவுள்கள் இருப்பதாக நம்பியே வந்திருக்கிறார்கள்.
வினா:- ஒன்றுக்கு மேற்பட்ட கடவு ளுண்டா?
விடை:- பல கடவுள்களும் உண்டென்றே பொதுவாக நம்பப்படுகிறது.
வினா:- பல கடவுள்களை நம்புகிற வர்களுக்கு என்ன பெயர் அளிக்கப் படுகிறது?
விடை:- பல கடவுளை நம்புகிறவர் பல தெய்வவாதிகள், ஒரே கடவுளை நம்புவோர் ஏக தெய்வவாதிகள்.
வினா:- சில, பல தெய்வவாதிகளின் பெயர் சொல்லு.
விடை:- எகிப்தியர், இந்துக்கள், கிரேக்கர், ரோமர்.
வினா:- ஏக தெய்வவாதிகள் யார்?
விடை:- யூதர்கள், கிறிஸ்தவர்கள், முகம்மதியர்.
வினா:- இவர்கள் எல்லாம் எப்பொ ழுதுமே ஏக தெய்வவாதிகளாக இருந் தார்களா?
விடை:- இல்லை, ஆதியில் எல்லா ஜாதியாரும் பல தெய்வங்களையே வணங்கி வந்தார்கள்.
வினா:- பல தெய்வவாதிகளின் கடவுள்கள் எவை?
விடை:- சூரியன், சந்திரன், ஆவிகள், நிழல்கள், பூதங்கள், பேய் பிசாசுகள், மிருகங்கள், மரங்கள், மலைகள், பாறைகள், நதிகள் முதலியன.
வினா:- இவைகள் எல்லாம் கடவு ளாக நம்பப்பட்டதாய் உனக்கு எப்படித் தெரியும்?
விடை:- எப்படியெனில் ஜனங்கள் அவைகளை வணங்குகிறார்கள், அவை களுக்கு ஆலயங்கள் கட்டினார்கள், விக்கிரகங்கள் உண்டு பண்ணினார்கள், அவைகளுக்கு பூஜைகள் நடத்தி னார்கள்.
வினா:- இந்த தெய்வங்கள் எல்லாம் ஒரே மாதிரி மகிமையுடையன வென்று ஜனங்கள் நம்பினார்களா?
விடை:- எல்லாக் கடவுள்களுக்கும் மேலான ஒரு கடவுளுக்கு அவை அடிமைகள், அல்லது சின்னங்கள் என்று அறிவாளிகளான சொற்பப்பேர் நம்பினார்கள்.
வினா:- அறிவில்லாதவர்களோ?
விடை:- அவைகளில் சில அதிக சக்தி யுடையவை என்றும், சில கருணையுடை யவை என்றும், சில அழகானவை என்றும், சில அதிக புத்தியுடையவை என்றும் நம்பினார்கள்.
வினா:- கடவுள் உற்பத்திக்கு அவர் கள் என்ன காரணம் கூறுகிறார்கள்.
விடை:- கடவுள் உற்பத்திக்குப் பலவித மான காரணங்கள் கூறப்படுகின்றன.
வினா:- அவற்றுள் சிலவற்றை விளக்கு.
விடை:- முதற்காரணம், ஆதி கால மக்கள் அறிவில்லாதவர்களாக, குழந் தைகளைப் போல் பயங்காளிகளாயும் இருந்தார்கள். எனவே, தனக்கு அறிய முடியாதவைகள் மீது அவர் களுக்குப் பயமுண்டாயிற்று. கண்ணால் காண முடியாத ஏதோ ஒன்றே பயத்தை உண்டு பண்ணுகிறதென்று நம்பினார்கள்.
இரண்டாவது, மக்கள் பலவீனராயும், உதவியற்றவராயுமிருப்பதினால் அவர்களுக்கு உதவியளிக்கக்கூடிய சர்வ சக்தியுடையவொன்று இருக்க வேண்டுமென்று நம்பினார்கள்.
மூன்றாவது, மனிதன் இயல்பாக நேசமனப்பான்மையுடையவன், பிறருடன் கலந்து பழகவே அவன் எப்பொழுதும் விரும்புகிறான். எனவே, தன்னைச் சூழ்ந்திருக்கும் அறிய முடியாத சக்திகளை அறியவும், அவற்றுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளவும் விரும்புகிறான். இறுதியில் அறியமுடியாத சக்திகளைக் கடவுளாக உருவகப்படுத்திக் கொள்கிறான்.
நான்காவது, தெய்வ நம்பிக்கைக்கு மரணமே முக்கிய காரணம்.
வினா:- அது எப்படி?
விடை:- நமக்கு உலகத்தில் சிரஞ்சீவி யாக வாழ முடியுமானால் தெய்வங் களைப் பற்றியோ, தெய்வீக சக்திகளைப் பற்றியோ நினைக்கத் தேவையே உண்டாகாது. மரணம் உண்டு என்ற உணர்ச்சியினாலேயே மறு ஜென் மத்தைப் பற்றியும், பிறப்புக்கும் இறப் புக்கும் காரணமாக இருக்கும் ஒன்றைப் பற்றியும், யோசிக்க வேண்டியதாக ஏற் படுகிறது. பிராணிகளுக்கு மரணத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாததினால் கடவுளும் இல்லை.
வினா:- தெய்வங்களின் தொகை பெருகிக் கொண்டே இருக்கிறதா?
விடை: இல்லை. அது குறைந்து கொண்டே போகிறது.
வினா: ஏன்?
விடை:- மக்களது அறிவும், சக்தியும் வளர வளர தம்மைத்தாமே காப்பாற் றிக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை விருத்தியடைகிறது.
வினா:- அறிவில்லாதவர் கடவுள் களைவிட அறிவுடையோர் கடவுள் குறைவா?
விடை: ஆம். நாகரிகமில்லாதவர் களே பல தெய்வங்களை வணங்கு கிறார்கள்.
வினா:- ஏக தெய்வவாதிகள் நிலைமை என்ன?
விடை:- இப்போதும் பெரும்பாலோர் ஏக தெய்வ நம்பிக்கையுடையவர்களா கவே இருக்கிறார்கள்.
வினா:- கடவுள் நம்பிக்கையே இல் லாதவர்களும் இருக்கிறார்களா?
விடை: ஆம். அதிகம் பேர் இருக் கிறார்கள்.
- குடிஅரசு - கட்டுரை (உரையாடல்) 03.05.1936
-விடுதலை,26.7.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக