சனி, 29 ஆகஸ்ட், 2015

அய்ரோப்பிய தொழிலாளர் போராட்டங்களும் பெரியாரும்

அய்ரோப்பிய சுற்றுப்பயணத்தின்போது தொழிலாளர் போராட்டங்களுடன் பெரியாருக்கு ஏற்பட்ட தொடர்பும் அனுபவங்களும்

- ஆ.இரா.வேங்கடாசலபதி

பெரியாரின் அய்ரோப்பிய சுற்றுப்பயணம்
பெரியார் ஈ.வெ.ராமசாமி 1931 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அய்ரோப்பிய சுற்றுப்பயணமாகப் புறப்பட்டுச் சென்றார். அடுத்த ஒராண்டில் சோவியத்ரஷ்யா, ஜெர்மனி, ஸ்பெயின்,  போர்ச்சுகல், இங்கிலாந்து முதலான அய்ரோப்பிய நாடுகளில் எல்லாம் பயணம் மேற் கொண்டார். அக்காலத்தில் ஓங்கியிருந்த பல முற்போக்கு இயக்கங்களுடன் தொடர்பு கொள்வதற்கு இந்தச்சுற்றுப் பயணம் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. உலகமே பொருளாதார மந்தத்தில் சிக்கித்தவித்து வந்த சமயத்தில், தொழில்துறையிலும் சமூகக்களத்திலும் சோவியத் குடியரசு நிகழ்த்தியிருந்த சாதனைகளை, அவர் அந்நாட்டில் தங்கியிருந்த மூன்று மாதங்களில் கண்ட பெரியாருக்கு அந்நாட்டைப் பற்றிய ஒரு பெருமிதமான உணர்வை அளித்தது. காலனி ஆதிக்கத்திற்கு எதிராக உலகெங் கும் நேரு உள்ளிட்ட தேசியவாதி களிடையே உணர்வை ஊட்டி வளர்த்து வந்த கம்யூனிசக் கொள்கைகளால் கவரப்பட்ட, முதலாளித்துவத்திற்கு எதிரான என்ற லீக் ஆகெய்ன்ஸ்டு இம்பீரியலிஸ்டு அமைப்பினரை பெரியார் ஜெர்மனியில் சந்தித்தார். மேலும் இந்தப்பயணத்தின்போது, நிர்வாணிகள், சுதந்திரச் சிந்தனையாளர்கள், நாத்தி கர்கள், புலம்பெயர்ந்த புரட்சியாளர்கள், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் என்று பற்பலரைப் பெரியார் சந்தித்தார்.. இச் சந்திப்புகள் மனக்கிளர்ச்சி தருபவையாக இருந்தன என்பதில் அய்யமேதுமில்லை. இந்த சுற்றுப்பயணத்தின் போதுதான் முதன் முதலாக இனப்பிரச்சினையைப் பற்றி பெரியார் எதிர்கொள்ள நேர்ந்தது என்பது இதுவரை எவரும் அறியாதது.
இங்கிலாந்து நாட்டில் பெரியார்
1932 ஆம்ஆண்டு கோடைகாலத்தில் இங்கிலாந்தில் 20 நாட்கள் பெரியார் தங்கி இருந்தபோது, இங்கிலாந்து நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப் பினரான ஷாபூர்ஜிசக்லத்வாலா அவர் களையும்,  இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி யில் பங்காற்றிய செல்வாக்கு செலுத்திய புகழ் பெற்ற ரஜனிபாமிதத் என்பவரின் அண்ணனும், இங்கிலாந்தில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவ ருமான க்ளமென்ஸ்பாமிதத் என்ப வரையும் பெரியார் சந்தித்தார். முதலாளித் துவத்திற்கு எதிரான கூட்டமைப்பு,  தொழிலாளர்களுக்கான அனைத்துலக நிவாரண சங்கம், இங்கிலாந்து கம்யூனிஸ் கட்சியின் நாளிதழான டெய்லி வொர்க்கர் அலுவலகம் போன்ற பல்வேறுபட்ட கம் யூனிச அமைப்புகளின் அலுவலகங்களுக் கும் பெரியார் சென்றிருந்தார்.
இங்கிலாந்தில் காலடி எடுத்துவைத்த நான்காவது நாள் பெரியார் (பிரபல கம்யூனிஸ்ட் தலைவர்) சக்லத்வாலாவைச் சந்தித்தார். அதுமுதற் கொண்டு, போலீஸ் கெடுபிடியால் இங்கிலாந்தை விட்டு வெளியேறும்வரை பெரியார் சக்லத் வாலாவுடனேயே தனது பெரும் பகுதி நேரத்தைச் செலவழித்தார். ஒருமாபெரும் தொழிலாளர் பேரணியில் பேசிய பெரியார் இங்கிலாந்து தொழிற்கட்சியின் தலைவர் ஜார்ஜ்லேஸ்ட்பரியைக் கடுமையாகச் சாடி விமர்சித்தார்.
இங்கிலாந்தில் பெரியார் தங்கியிருந்த இந்தக் குறுகியகாலத்தில்தான், புகழ்பெற்ற ஸ்காட்ஸ்பரோ சிறுவர் வழக்கைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. டூ கில் எ மாக்கிங் பேர்டு என்ற ஹார்பர்லீயின் புகழ்பெற்ற புதினத்தை எழுதுவதற்கு இந்தவழக்குதான் தூண்டுதலாக அமைந்தது என்று கூறப் படுகிறது.
அநீதிக்கு உள்ளான அமெரிக்க கருப்பின இளைஞர்கள்
அமெரிக்க நாட்டு டென்னசி மாநிலத் தின் சட்டனூகாரயில் நிலையத்தில் இருந்து 1931 மார்ச் 25 அன்று ஒன்பது ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞர்கள் ரயில் ஏறினர். ஆண்களைப்போல் உடைஉடுத்தி பராரி யான இரண்டு வெள்ளைப் பெண்களைக் கற்பழித்த குற்றத்திற்காக விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இனப் பாகுபாடு தலைவிரித்தாடிய அந்தக் கால கட்டத்தில் நீதிபதி வெள்ளையர்; ஜூரிகள் அனைவரும் வெள்ளைக்காரர்கள்; குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருப்பினத்தவரானால வழக்கு ஜோடிக்கப்படுவது வழக்கம். நீதிமன்ற வாசலில் கருப்பின கைதிகள் அடித்துக் கொல்லப்படுவது சாதாரணம். இந்த வழக்கில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் மரணதண்டனை விதிக்கப் பட்டது. என்றாலும், இந்த விவகாரத்தில் தலையிட்ட அமெரிக்க கம்யூனிஸ்டுகட்சி தண்டனை வழங்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பும் நீதியும் கிடைப்பதற்காக பெரும் பங்காற்றியது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவரான 14 வயது ராய், 17 வயது ஆண்டி ஆகி யோரின் தாய் ஆடாரைட் என்ற பெண் மணியை அணுகிய கம்யூனிஸ்டு கட்சி, நீதிமன்றத்தில் சட்டப்படியான போராட் டத்தை மேற்கொள்ள துணை நின்றது. மரணதண்டனை அளிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவியஒரு மாபெரும் பிரச்சாரம் துவக்கப்பட்டது. ஸ்காட்பரோவிலிருந்து முனிச்வரை - 1930 களில் இங்கிலாந்தில் நிலவிய இன, அரசியல் கலாச்சாரம் என்ற நூலில் இதை விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர் சூசான்டி. பென் னிபேக்கர் இதை விரிவாகப் பகுத்தாய்வு செய்திருக்கிறார். இந்தப் பிரச்சாரத்தின் நட்சத்திரமாக ரைட் அம்மையார் அமைவார் என்று எவருமே கருதியிருக்க மாட்டார்கள். 1890 பிறந்த அவர் ஒரு அடிமையின் பேத்தியா வார். ஹார்பர்லீயின் புதினத்தில் வரும் கல்புரினாபோல இவரும் வீட்டு வேலைக் காரியாவார். ஆழ்ந்த கிறித்துவமதப்பற்று கொண்டவர். அதுவரை அரசியல் என்றால் என்ன என்பதையே அறிந்திராதவர். சூழ லின் கட்டாயத்தின் காரணமாக, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை இழந்தவரும், அதுவரை சொந்த மாகாண எல்லையைக் கூடததாண்டியிராதவருமான அந்த அம்மையார் அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம்மேற்கொள்ளத் தொடங் கினார். இங்கிலாந்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தகாலத்தில்,  அவருக்கு ஆதரவளிக்க இங்கிலாந்து கம்யூனிஸ்டு கட்சிபல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்தது. சக்லத்வாலா இதில் முக்கியப் பங்காற்றினார்;  பென்னிபேகர் தனது நூலில் அவருக்கென ஒருதனி அத்தியாயத்தையே ஒதுக்கியிருக்கிறார். 1932மே 7 அன்று ஸ்காட்ஸ்பரோநாள் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்று டெய்லி வொர்க்கர் நாளிதழில் ரைட்அம்மையார் வருகை தருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே செய்தி வெளியிடப்பட்டது. ஜூன் 19 ஆம் தேதியன்று டிரபால்கர் சதுக்கத்தில் ஒரு மாபெரும் கண்டனப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டது.  நீக்ரோநலவாழ்வு சங்கம், முதலாளித்துவத் திற்கு எதிரானகூட்டமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர்களும் இப்பேரணியில் பங்கேற்க விருந்தனர். ஆனால், ரைட் அம்மை யாரினால் அவ்வளவு எளிதாக இங்கிலாந்து மண்ணில்காலடி வைக்க முடியவில்லை. முதலில் அனுமதி மறுத்த அயல் துறை அதிகாரவர்க்கத்தினர் பின்னரே மனமிள கினர். கடைசியில் 10 நாள் விசா மட்டும் வழங்கப்பட்டது.
பெரியார் இங்கிலாந்திலிருந்த கால கட்டத்தில் தான்ரைட் அம்மையாருக்கு விசாவழங்கப்பட்ட பத்துநாட்களும் அடங்கி இருந்தன. பாரிசிலிருந்துரைட் அம்மையார் இங்கிலாந்து வந்தவுடனேயே, ஸ்காட்ஸ் பரோ சிறுவர்களுக்கு ஆதரவாக ஒரு தொழி லாளர் கூட்டம் லண்டன்க்ளர்கன்வெல் பகுதியில் இருந்த க்ளப்அன்ட் இன்ஸ்டிடி யூட் மன்றத்தில்  1932 ஜூன் 28 இல் நடத்தப்பட்டது. ரைட் அம்மையார் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய போது, மனதைநெகிழச் செய்யும்பல காட்சிகள் நடந்தேறின. பேசுவதற்காக மேடைக்கு அவர் சென்றபோது, அவருக்கு பாதுகாப்பாகக் கருப்பின மக்களும், இந்தியர்களும் உடன்சென்றனர். பெரும் உணர்ச்சிவயப்பட்ட பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று வெகு நேரத்துக்கு கரவொலி எழுப்பியதுடன், சர்வதேசத் தொழிலாளர் கீதத்தைப்பாடத் துவங்கினர். உழைத்து ஓடாகிப்போன அந்த கருப்பின அம்மையார், ஒரு தாயார் என்ற நிலையில் தனது கதையை மனம் உருகும் படி கூறினார். வீட்டில் சாதாரணமான ஒருவாழ்க்கை, வேலை தேடி மகன்கள் சென்றது, அவர்கள் அநியாயமாக சிறையில் இடப்பட்டது, அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மரணதண்டனை என்ப தாக அவர் கதை விரிந்தது.
500 பேருக்கும் மேலானவர்கள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் 53 வயது பெரியார்,  சக்லத்வாலாவுடன் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசப் பட்ட ஒவ்வொரு சொல்லையும் அவர் மிகவும் உன்னிப்பாகக் கேட்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. ரைட்அம்மை யாரின் தனது மென்மையான, இழுத்து இழுத்து அமெரிக்க தென்பகுதியினரின் பாங்கில் பேசியதில்இருந்து பெரியார் எவ்வளவு புரிந்து கொண்டிருப்பார் என்பது தெரியவில்லை.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எனது இருமகன்களையும் அவர்களுடன் தண்டிக்கப்பட்ட ஏழுபேரையும் விடுவிக்க இன்றிரவு இங்கு கூடியிருக்கும் நீங்கள், உங்களால் இயன்ற உதவியைச்செய்ய வேண்டும்என்று வேண்டிக்கொள்கிறேன்; ஸ்காட்பரோ சிறுவர்களுக்காக நீங்கள் போராடிக் கொண்டிருக்கும் போது,  உலகெங்கும் உள்ளவர்க்கப் போர்க் கைதிகளுக்காகப் போராடிக் கொண்டிருக் கிறீர்கள் என்று ரைட்அம்மையார் பேசியது பார்வையாளர்கள் மனத்தை வெகுவாகநெகிழச் செய்தது.
ஸ்காட்பரோவுக்கு இணையான இந்தியப் போராட்டங்கள்
சக்லத்வாலா அக்கூட்டத்தில் உரை யாற்றும் போதுஸ்காட்பரோவைப் போன்ற பல ஸ்காட்பரோக்கள் (போராட்டங்கள்) இந்தியாவில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். கறுப்பினத் தொழிலாளர் களை உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளாத அமெரிக்க தொழிற்சங்கங் களை வெகுவாகச் சாடிய அவர்,  இனவேறுபாடு இன்றி அனைத்துத் தொழிலாளர்களையும் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் சேர்த்து வருவது பற்றிப் பெருமையுடன் பேசினார். இங்கிலாந்து கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்தவர்கள் பலரும் அக்கூட்டத்தில் பேசினர். இக்கூட்டத்தின் தீர்மானத்தைத் தெரியப்படுத்துவதற்காக அமெரிக்க தூதரகத்திற்கு செல்வதற்காக ஒரு பிரதிநிதிக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு பேசிய அனைவரது பேச்சுக் களிலும், அனைத்துலக தொழிலாளர் நிவாரணஅமைப்பின் இசபெல்பிரவுன் அவர்களதுபேச்சே பெரியாரை வெகு வாகக் கவர்ந்தது. இப்போராட்டத்தை தொழிற்சங்கங்களால் எத்தகைய நடை முறை சாத்தியமான முறைகளில் மேற் கொள்ள இயலும் என்பதை அடிக் கோடிட்டுக்காட்டி அவர் தனது உரையை முடித்தார்.
அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய லண்டன் கருப்பின கடற்பணியாளர்கள் அமைப்பின் ஜிம்ஹீட்லி, ரைட் அம்மை யாரின் போராட்டத்திற்கான நிதி வழங்கு மாறு கோரிக்கை ஒன்றை விடுத்தார். மொத்தம் 13 கினியாக்கள் நன்கொடை கிடைத்தது. அதனைத்தொடர்ந்து பொருள்கள் ஏலம் விடப்பட்டன. எப்போதுமே செலவு செய்வதில் மிகுந்த சிக்கனமாக இருக்கக்கூடிய பெரியார்கூட ஜெர்மானிய வெள்ளிச் சங்கிலி ஒன்றை அரை பவுனுக்கு ஏலம் எடுத்தார்.
உலகெங்கும் உள்ள முற்போக்கு இயக்கங்களுடன் தொடர்பு கொள் வதன்மூலம், புதியதாகத் துவங்கப் பட்டுள்ள தனது சுயமரியாதை இயக் கத்திற்கு வளம் சேர்க்கும் நோக்கத்தி லேயே இந்த அய்ரோப்பிய சுற்றுப் பயணத்தைப் பெரியார் மேற் கொண்டார். ஆனால், ரைட் அம்மை யாருடனும் மற்றும் ஸ்காட்பரோ சிறுவர்களின் வழக்குடனும் பெரியார் தொடர்பு கொள்ள நேர்ந்தது தற்செயலாக நிகழ்ந்ததேயாயினும் இந்த உலகைத் துன்புறுத்திக் கொண் டிருந்த சமத்துவமின்மை களைப் பற்றி மற்றொரு கோணத்தைப் பெரியார் புரிந்துகொள்வதற்கு இது வாய்ப்பளித்தது.
நன்றி: தி ஹிந்து (ஆங்கில நாளேடு)  22-8-2015
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
-விடுதலை,28.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக