சனி, 15 ஆகஸ்ட், 2015

பூகம்பம் கடவுள் சித்தமா?


சென்ற ஆண்டில் பீகாரில் நடந்த பூகம்பத்தின் அதிர்ச்சி இன்னும் நமது மனதைத் திடுக்கிடச் செய்து கொண்டி ருக்கிறது; அதனால் ஏற்பட்ட கஷ்டங்களினின்றும் மக்கள் இன்னும் விடுபட வில்லை; நஷ்டங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.
இதற்குள் திடீரென்று சென்ற 31.05.1935 காலை நான்கு மணிக்கு மக்கள் அயர்ந்து உறங்குகிற சமயத்தில் பலுஜிஸ்தானத்தைச் சேர்ந்த குவெட்டா நகரத்திலும், அதைத் சுற்றியுள்ள கிராமங்களிலும் பூமி அதிர்ச்சி உண்டாகி ஆயிரக்கணக்கான மக்களை அவர்கள் பெண்டு, பிள்ளை, தாய், தந்தை, சகோதர, சகோதரி, உறவினர், வீடு, சேர்த்து வைத்திருந்த சொத்து முதலியவைகளுடன் விழுங்கி விட்டது.
பூகம்பத்தின் போதும், அதன் பின்னும் மக்கள் பட்ட அவதிகளை நினைக்கும் போதும் எத்தகைய கல் மனதும் உருகாமற் போகாது.
சென்ற ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தைக் கடவுள் சித்தம் என்று தோழர் காந்தியாருள்ளிட்ட சிலர் கூறினார்கள். வைதிக பிண்டங்களும் தலையசைத்தார்கள். இவ்வாண்டு ஏற்பட்ட இந்த பூகம்பத்தை யாருடைய சித்தம் என்று சொல்லு வார்களோ தெரியவில்லை.
கடவுள் சித்தத்தால் உண்டான இந்தப் பூகம்பத்தில் மக்கள் மாத்திரம் மடிந்து போக இல்லை; அவர்கள் சொத்துச் சுகங்கள் மாத்திரம் அழியவில்லை; அந்த கடவுளின் இருப்பிடம் என்று கருதப்படுகின்ற கோயில்கள் இடிந்தன; சர்ச்சுகள் தகர்ந்தன; மசூதிகள் விழுந்தன; ஆதலால் எந்தக் கடவுளின் கோபத்தால் இந்த பூகம்பம் நிகழ்ந்ததென்று தெரியவில்லை; இந்துக்கள் மடிந்தனர்; முஸ்லிம்கள் மடிந்தனர்; கிறிஸ்தவர்கள் மடிந்தனர்; வெள்ளையர்கள் மடிந்தனர்; பார்சிகள் மடிந்தனர். இன்னும் எந்தெந்த மதத்தினர் அங்கு இருந்தார்களோ அவர்கள் எல்லோரும் மடிந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயம் பட்டனர்; காலொடிந்தனர்; கையிழந்தனர்; கண்ணிழந்தனர்; மூளை சிதறினர் - இவ்வாறாக எல்லா மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும், எல்லா மதக் கடவுளும் சேர்ந்து துன்பத்தைக் கொடுத்தார்களா? ஏன் அந்தக் கடவுள்களுக்கு இவ்வளவு கோபம்? அங்கிருந்த மக்கள் எல்லோரும் நம்மைப் போல கடவுள்களுக்கு விரோதமான சுயமரியாதைக்காரர்களா? இல்லையே!
ஆனால், பூகம்பம் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிந்தவர்கள் இந்தக் கடவுள் சித்தம் என்று சொல்லி மக்களை மூடர்களாக ஆக்க இதையும் ஒரு சந்தர்ப்பமாக உபயோகப் படுத்திக் கொள்வதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பூகம்பத்தைப் பற்றி விஞ்ஞானிகள் கூறுவதை கவனிப்போம்.
பூமியின் அடியில் நெருப்புக் குழம்பு இருந்து கொண்டிருக்கின்றது. அதில் குளிர்ச்சி பட்டால் உடனே கொதிப்பு உண்டாகிறது. சாதாரணமாக எரியும் விளக்கில் சிறிது தண்ணீர்த் துளி தெறித்தால் அவ்விளக்கின் ஜூவாலை எப்படி குதிக்கிறதோ அது போலவே இக்கொதிப்பும் உண்டாகிறது. இவ்வாறு கொதிப்பு உண்டானவுடன், அதனால் பூமியின் மேலுள்ள மலைகள் அசைய ஆரம்பிக்கின்றன. இந்த அசைவி னாலேயே பூகம்பம் உண்டாகிறது. பூமியின் அடியில் நெருப்புக் குழம்பின் கொதிப்பு அதிகப்பட்டால், பூமி வெடித்து அதன் வழியே நெருப்புக் குழம்பு மேலே வருவதும் உண்டு. இதுதான் எரிமலை என்று சொல்லப்படுவது.
ஆகவே பூகம்பம், எரிமலை முதலியவைகள் தோன்றுவதற்கு உண்மைக் காரணங்கள் இதுவேயாகும். இந்த இயற்கை நிகழ்ச்சி யாருடைய சித்தத்தினாலும் உண்டாவதல்ல, யாருடைய கருணை யினாலும் நிறுத்தப்படுவதல்ல.
இயற்கையின் வேறுபாடே பூகம்பம் போன்ற தீமைகள் நேருவதற்குக் காரணமாக இருக்கின்றது. இப்படிப்பட்ட இயற்கையின் கோளாறினாலேயே சென்ற ஆண்டில் பீகார் பூகம்பம் நிகழ்ந்தது. இப்பொழுதும் குவெட்டாவில் நடந்திருக் கின்றது. அதனால் உண்டான முழுச் சேதத்தையும், பற்றி வேறு ஓரிடத்தில் பிரசுரித்திருப்பதை படித்தால் உண்மை விளங்கும்.
ஆதலால் இயற்கையில் நிகழ்ந்த இந்தப் பூகம்பத்தை யாரும் கடவுள் என்ற அர்த்தமற்ற சொல்லின் மேல் பழி போட்டுச் சும்மாவிருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். கடவுளால் நிகழ்ந்ததென்றால், அதனால் உண்டான கஷ்ட நஷ்டங்களை நிவர்த்திப் பதற்கு நமக்கு எப்படி முடியும்? அந்தக் கடவுள் தானே நிவர்த்திக்க முன்வர வேண்டும்? கடவுள் கஷ்டத்தை நிவர்த்தி செய்து விடுவாரென்று நாம் சும்மா விருந்தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. மக்கள் இன்னும் கஷ்டப்பட்டுத்தான் ஆகவேண்டும். ஆதலால் இந்த முட்டாள் தனத்தைக் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டுக் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து காப்பாற்றுவதற்கு முன் வருவது மனிதாபிமானமுள்ள மக்களின் கடமையாகும்.
இறந்து போனவர்களைப் பற்றி நாம் கவலைப்படுவதில் பயனில்லை. 35 கோடி மக்களில் - அதுவும் அடிமைகளாகவும், தரித்திரர்களாகவும், சதா கஷ்டத்தையே அனுபவிப்ப வர்களாகவும் மனதிருப்தியற்ற வாழ்க்கை நடத்துபவர்களாகவும் இருக்கின்ற மக்களில் ஒரு அறுபதினாயிரம் மக்கள் இறந்தார்களென்றால் - அறுபதினாயிரம் மக்கள் விடுதலைப் பெற்றுக் கஷ்டத்தினின்றும் நீங்கினார்கள் என்றுதான் நாம் நினைத்துச் சந்தோஷப்பட வேண்டுமேயொழிய துக்கப்பட வேண்டுமென்று நமக்குத் தோன்றவில்லை. இவ்வாறு கஷ்டப் படுகின்ற மக்கள் எவ்வளவுக் கெவ்வளவு இறக்கின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு லாபந்தான். நமது வருத்தமெல்லாம், இப்பொழுது குவெட்டாவில் இறந்து போகாமல் உயிருடன் இருப்பவர்களைப் பற்றியது தான். அவர்கள் உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி, தங்க இடமின்றி அங்கஹீனர்களாய், உதவியற்றவர்களாய்ப் பரிதவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதே நமது கடமையாகும்.
நமது அரசாங்கம் முழு மனது வைக்குமாயின், வறுமைப்பட்டுத் தவிக்கும் மக்களை இன்னும் வறுமைப்பட விடாமல் தாங்களே முன் வந்து இக்கஷ்டத்தை நிவர்த்தி செய்து விட முடிமாயினும், அவர்கள் அவ்வாறு உதவி செய்யப் போவதில்லை. அத்தகைய முறையிலும் நமது அரசாங்க அமைப்பு இல்லை. ஆதலால் ஓரளவாவது அரசாங்கத்தார் செய்வதற்கு முன்வரும் உதவியைப் பாராட்டிப் பொது ஜனங்களுக்கும் குவெட்டாவில் உள்ள மக்களின் கஷ்டத்தை நீக்குவதற்கு உதவி செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
குடிஅரசு - 09.06.1935
-விடுதலை,7.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக