வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வாழ்வு என்பது மானத்துக்கு! ஈனத்துக்கு அல்ல!

தந்தை பெரியார்

 


 

ஜாதி ஒழிய வேண்டும் என்பவர்கள் முதலில் நாத்திகர் ஆகுங்கள்.

நாத்திகம் என்பது அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் கொண்டு தெளிவடைவதுதான். இத்தெளிவு அடைந்த இடத்தில் இம்மூன்றும் (கடவுள், மதம், சாஸ்திரம்) தலைகாட்டாது.

ஆகையால், இப்படிப்பட்ட நீங்கள் நாத்திகர் என்று சொல்லிக் கொண்டாலும் ஒன்றுதான் - பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டாலும் ஒன்றுதான்.

தோழர்களே! ஜாதி ஒழிப்புக்காரர்கள் வீட்டில் கடவுள் உருவச் சின்னங்களோ, மதக்குறியோ, சாத்திர சம்பிரதாய நடப்போ இருக்கக் கூடாது. கண்டிப்பாய் இருக்கக் கூடாது.

இவ்விஷயங்களில் ஒருவன் ‘நம்பிக்கையுடைவனாகவும்’, ‘அறிவுவாதியாகவும்’ இருப்பது என்பது 4ம் 4ம் பத்து என்பது போன்ற முட்டாள்தனம். தோழர்களே! நாம் 100க்கு 97 பேர்கள் இருக்கிறோம். பார்ப்பனர் 100க்கு 3பேர் இருக்கிறார்கள். 97 பேர் சூத்திரர்கள் - கீழ்மக்கள் - அடிமைகள்! 3 பேர் பிராமணர்கள், மேன்மக்கள் எஜமானர்கள் ஆளுகிறவர்கள்! எதனால் அஹிம்சா தர்மத்தாலா? அன்பினாலா? இல்லவே இல்லை.

சட்டத்தால் - ஜெயிலினால் - தடியினால் - துப்பாக்கியினால் இது அஹிம்சையா? அன்பா?

இது அஹிம்சையும் அன்புமென்றால், அது நமக்கு மட்டும் ஏன் பொருந்தாது? ஆட்சி, சட்டம், துப்பாக்கி அவன் கையிலிருப்பதால் தானே? இதை நீங்கள் ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது?

ஆகவே, நாம் நியாயமான வழியில் அவசியமான முறையைக் கையாண்டு நமது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அன்பு வேண்டும் என்பது, இம்சை கூடாது என்பது, சட்டமல்ல, நீதியல்ல, தர்மமுமல்ல. எந்த எந்தச் சந்தர்ப்பத்தில் எந்த எந்தக் காரியத்திற்கு எதை எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் நீதியும் தருமமுமாகும்.

என்னுடைய நண்பர் இராஜாஜி ஒருகாலத்தில் சொன்னார் - என்ன? கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து அடித்து காரியம் சாதித்துக் கொண்டேன் என்று, அவசரத்திற்கு ஆயுதத்தைத் தேடிக் கொண்டிருப்பது மடமை என்றும் சொன்னார்.

இது அகிம்சையானால் நமக்கு ஏன் பொருந்தாது?

தவிர ஜாதி ஒழிப்புத் தொண்டு இம்சையைக் கொண்டதாக இருக்கக் கூடாது என்பதும் அறிவுடைமை ஆகாது. ஏன்? நான் இம்சை என்று சொல்லுவது விஷம் சாப்பிட வேண்டும் என்று சொல்லுவதற்கு ஒப்பானது. கத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுவதற்கு ஒப்பாகும். மனிதனது வியாதி சவுக்கியமடைய விஷத்தைக் கொடுப்பது இல்லையா? மனிதனின் புண், நோய் சவுக்கியமாவதற்கு கத்தி சிகிச்சை செய்வது இல்லையா? அதுபோல் நோய்க்கு மற்ற வைத்தியம் (முயற்சிகள்) பயன்படாவிட்டால் இரண்டில் ஒன்றை எதிர்பார்த்து விஷப் பிரயோகம், கத்திப் பிரயோகம் நோயாளிக்குப் பயன்படுத்துவதில் பின்வாங்குகிறோமா? அதுபோல் இந்த ஜாதி நோயைத் தீர்க்க மற்ற வழிகளில் தோல்வி அடைந்து அதைத் தவிர வேறு வழி இல்லை என்று கண்டால் அதைப் பயன்படுத்தாதவன் மக்கள் துரோகியே ஆவான் என்று தோன்றுகிறது. இது சட்ட விரோதமாகலாமே ஒழிய சத்தியமான விரோதமோ பாவ (கெட்ட) காரியமோ ஆகாது.

உதாரணமாகச் சமணக் கொள்கைகளையும், புத்த கொள்கைகளையும் அழிக்க நம் முன்னோர்களை என்ன என்னமோ செய்து பார்த்தார்கள். ஒன்றிலும் பலன் காண முடியவில்லை என்று கருதியவர்கள் பார்ப்பனர் அரிவாள், கொடுவாள், கழுமரம், நெருப்பு வைத்துக் கொல்லுதல், நெருப்பில் போட்டுக் கொளுத்துதல். அவர்கள் பெண்களை மானபங்கப்படுத்துதல் முதலிய காரியத்தைச் செய்து வெற்றி பெறவில்லையா? இவை வரலாற்றில் நடந்த காரியங்கள்தானே.

மற்றும் இராமாயணம், பாரதம், கந்தபுராணம் முதலியன என்ன சொல்லுகின்றன? சூது, சூழ்ச்சி, கொலை, பெண்களை விட்டு மயக்கி ஒழித்துக் கட்டுதல் முதலிய காரியங்களைத் தானே காரிய சித்திக்கு கையாளப்பட்டிருக்கிறதாகக் காண்கிறோம். இராமனும், கிருஷ்ணனும், கந்தனும் நரகத்திற்குப் போக வில்லையே? அவர்களால் பயன் பெற்ற மக்களுக்கு, மானமற்ற முட்டாள்களும் இன்றும் அவர்களைக் கடவுள்களாகத்தானே கொண்டாடுகிறார்கள்? ஆனதால் நான் அதனைச் செய்ய நேரிட்டால் மாத்திரம் நாம் எப்படி பாவி ஆவோம்? சாவு நேரிடலாம், அந்தச் சாவு யாருக்கு நேரிடும்? என்றாவது ஒரு நாளைக்கு சாக வேண்டியவனுக்குத்தானே சாவு நேரிடும். சிரஞ்சீவிக்கு ஒருக்காலும் சாவு நேராதே? அவனை யார் என்ன பண்ணினாலும் சாவு நேராதே. ஆதலால் மனிதன் நல்ல காரியம் செய்வதில் ஏன் சாவுக்குப் பயப்பட வேண்டும். அப்படி பயந்த காரணந்தானே இன்னும் ஜாதியும், மடமையும், மானங்கெட்ட தன்மையும் நம்மிடம் இருந்து வருகிறது?

நீங்கள் சாகத் துணியாமல் இந்த உங்கள் ஜாதியையும் முட்டாள்தனத்தையும், மானங்கெட்ட ஈனத்தன்மையையும் ஒழிக்க வேறு வழி இருக்குமானால் சொல்லுங்கள். நான் உங்கள் அடியார்க்கடியனாய் இருந்து தொண்டு செய்யக் காத்திருக்கிறேன்.

உயிர் என்ன மாணிக்கமா? வெறும் காற்றுத்தானே? அட மட ஜன்மமே! அதை விட்டுவிடப் பயந்தா? இவ்வளவு பெரிய முட்டாளாய் - ஈனப்பிறவியாய் வாழ்வது?  வாழ்வு என்பது மானத்துக்கு ஈனத்துக்கு அல்ல! வாழ்வு அறிவுக்கு!! மடமைக்கு அல்ல!

இவை என் கருத்து நீங்கள் அப்படியே ஒப்புக் கொள்ளாதீர்கள். சிந்தித்து உங்களுக்கு நேர்மை என்று பட்டால், கேடு இல்லாதது என்று தெரிந்தால் அருள் கூர்ந்து ஆலோசியுங்கள்! என்று வேண்டிக் கொள்கிறேன்.

(12.08.1962 அன்று புதுவையில் நடைபெற்ற ‘ஜாதி ஒழிப்பு மாநாட்டில்’ தந்தை பெரியார் சொற்பொழிவு)

- ‘விடுதலை’, 17.08.1962   

 - உண்மை இதழ், 1-15.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக