செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

சீர்திருத்தம்

09.08.1931 - குடிஅரசிலிருந்து...

சீர்திருத்தம் என்பதைப்பற்றிப் பேசுவதில் யாருக்குச் சீர்திருத்தம்?  எப்படிப்பட்ட சீர்திருத்தம்?  எதற்காகச் சீர்திருத்தம்?  எது சீர்திருத்தம்?  அவற்றை எப்படி நிர்ணயிப்பது?  அதற்கு முட்டுக்கட்டை எது?  பிறகு அவற்றை எப்படி அமலுக்கு கொண்டு வருவது?  என்பவைபோன்ற விஷயங்கள் சீர்திருத்தத்தலைப்பில் பேச வேண்டிய முக்கிய விஷயங்களாகும்.  அப்படிப்பார்த்தால் சீர்திருத்தம் இப்போது பேசுவது இந்திய மக்களுக்குத்தான் என்றும் அறிவுக்குட்பட்ட சீர்திருத்தம் என்றும், மனிதத் தன்மையும் சுதந்திரமும் அடைவதற்கு என்றும், உலக அக்கம் பக்கங்களை நோக்கி பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து உறுதியான மனதுடன் பழைமையுடன் போராடி சீர்திருத்தமடைய வேண்டுமென்றும்தான் சொல்லக்கூடும்.

எவ்வித சீர்திருத்தத்திற்கும் பலவிரோதிகள் உண்டு.  அவைபழைமை, முன்னோர்வாக்கு, மகான்வாக்கு, வேதத்தின் கட்டளை, சாஸ்திரசம்மதம், வெகுநாளாய் நடந்துவரும் பழக்கவழக்கம், நம்பியே ஒப்புக்கொண்டாக வேண்டியது என்பவைபோன்ற நிர்ப்பந்தம் முதலிய வைகள் எல்லாம் சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டையும் விரோதமானவை களுமாகும்.

தன்னைச் சீர்திருத்தக்காரன் என்று சொல்லிக்கொள்ளு கின்றவர்கள் மேற்கண்ட அவ்வளவையும் தங்கள் அறிவால் பிரதிட்சயக் கண்களால் அலசிப் பார்க்க உரிமையும் தைரியமும் உடையவர்களாக இருக்க வேண்டும்.  அதைவிட்டு விட்டு மற்றதெல்லாம் சரி ஆனால் மதத்தைப்பற்றி பேசலாமா?  கடவுளைப்பற்றி பேசலாமா?  தேசியத்தைப்பற்றி பேசலாமா?  புராணங் களைப் பற்றி பேசலாமா?  மகான்களைப்பற்றி பேசலாமா?  மகான்கள் அபிப்பிராயத்தைப்பற்றி பேசலாமா?  நமக்கு அவ்வளவு யோக்கியதை உண்டா என்பது போன்ற பிடிவாதகுணங்களும், தன்னம்பிக்கையற்ற குணங்களும், ஆனால் களும் உடையவர்களால் ஒரு நாளும் எவ்வித சீர்திருத்தமும் கைகூடாது.  ஆதலால் சீர்திருத்தக்காரருக்கு உரமும், தனது அறிவில் நம்பிக்கையும், பரீட்சிக்கும் தாராள தன்மையும் வேண்டும்.  இது சமயம் உலகமெல்லாம் சீர்திருத்த மடைந்துவிட்டது.

நாம் மாத்திரம் யாரைத் தொடலாம்?  யார் வீட்டில் சாப்பிடலாம்?  எதைச் சாப்பிடலாம்?  என்பது போன்ற வைகளில் இப்பொழுது , இந்த இருபதாவது நூற்றாண்டில் கவனித்து வருகின்றோம்.

உலக மக்கள் ஆகாயத்தில் பறக்கின்றார்கள்.  நம் மகான்கள் பிணங்கள்போல் மக்கள் தோள்களின் மீது சுமந்து செல்லப்படுகின்றார்கள்.  மற்ற நாட்டு மக்கள் புதிய, புதிய இயந்திரங்களை உற்பத்தி செய்து சீர்திருத்த மடைகின்றார்கள்.  நமது நாட்டு மக்கள் நம்பாட்டன் காலத்தில் இருந்த சாதனத்தைத் தேடிப் பிடித்து அட்டாலியில் இருந்து இறக்கி அமலுக்குக் கொண்டு வருகின்றார்கள்.

முன்னேற்றம், சீர்திருத்தம் என்கின்ற துறையே நமது நாட்டு மக்களுக்குத் தடைப்படுத்தப்பட்டு விட்டது.  அந்தப்பக்கம் திரும்புவதென்றால் உயிரை விடுகின்றேன் என்கின்றார்கள்.  ஏனெனில் இன்றைய இந்திய நிலைமை நமது பாட்டன் காலத்து நிலைமை.  ஆகிய எல்லாம் சோம்பேறிகள் வயிற்றுப் பிழைப் புக்கும் ஒருவர் பிழைக்க ஒருவர் உழைக்கும் முறைமைக்கும் அனுகூலமாய் கற்பிக்கப்பட்டிருப்பதால் அதிலிருந்து மாறுவதற்கு சோம் பேறிகளும், ஊரார் உழைப்பில் சாப்பிடுகின்றவர்களும் ஒரு நாளும் ஒப்பமாட்டார்கள் ஆதலால் நம் நாட்டு மக்களே நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக் கின்றார்கள்.  இந்தக் கூட்டம் ஒரு நாளும் இந்தியாவை - இந்து மக்களை முன்னேற விடவே விடாது.  சுதந்திரமாய் வாழவும் சம்மதிக்க மாட்டார்கள்.  அதனாலேயேதான் அவர்கள் பாமர மக்கள் கல்வி இல்லாமல் இருக்கும்படிக்கும், அவர்களுக்குச் செல்வம் சேராமல் இருக்கும் படிக்கும் பல தடைகளை மதத்தின் பெயரால், கடவுள் பெயரால் தேசியத்தின் பெயரால் ஏற்படுத்தி 100-க்கு 90-மக்களை 100-க்கு 10 மக்கள் ஏமாற்றி வருகின்றார்கள்.

இந்த சூழ்ச்சி மாறுதலடைய வேண்டுமானால் கடவுள், மதம், தெய்வீகம், தேசியம் முதலாகிய எல்லா புரட்டு களையும் வெளியாக்கி உடைத்தெரிய வேண்டும் அதற்கு மக்கள் சம்மதிப்பதென்பது மிகக் கஷ்டமான காரியமாகும். ஏனெனில் இவை சம்பந்தமான மூட நம்பிக்கையும், பிடிவாதமும் நம் மக்களது இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது.  அதுமாத்திரமல்லாமல் இந்த மூன்று துறைகளின் பிரசாரத் தையும், வயிற்றுப் பிழைப்பாய்க்கொண்ட மக்கள் நாளுக்கு நாள் வளர்த்து கொண்டுவருகின்றார்கள்.  அவர்களது தொல்லை அடியோடு ஒழிந்தாலல்லாது சீர்திருத்தமோ, முன்னேற்றமோ சுலபமான காரியமல்ல.

 

உதாரணமாக, மதம் என்கின்ற சாக்கின் பெயரால் அரைக்காசு அசலாகும் ஒரு இட்டலியை 6 காசுக்கு விற்கும் ஒரு பார்ப்பானிடம் சென்று ஜாதிவித்தியாசம் தப்பு, பழக்கம் வழக்கம் தப்பு என்றால் ஒப்புக் கொள் ளுவானா?  என்று பாருங்கள்.  அன்றியும் அவனது மதம், ஜாதி, உயர்வு தாழ்வு பாகுபாடு ஒழிவதற்கு முட்டுக் கட்டையாக இருப்பானா?  அல்லது இருக்க மாட்டானா?  என்று பாருங்கள், அன்றியும் மதப் பிரசாரம் செய்யவும் வெளிகிளம்பமாட்டானா?  என்றும் பாருங்கள்.  இதுபோலவே கடவுள், தேசியம் என்பதின் பயனாய் வயிறுவளர்க்கும் சோம்பேறிகள் அப்புரட்டை வெளியாக்க சம்மதிப்பார்களா?  என்றும் பார்ப்பதோடு அவர்கள் கடவுள் பிரசாரம், தேசிய பிரசாரம் செய்யமாட்டார்களா?  என்றும் யோசித்துப் பாருங்கள்.

(02-08-1931ஆம் தேதி செங்குந்தர் சாவடியில் கூடிய கூட்டத்தில் ஆற்றிய தந்தை பெரியார் சொற்பொழிவு)

- விடுதலை நாளேடு, 4 .8 .18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக