வெள்ளி, 11 ஜனவரி, 2019

ஏன் அவர் பெரியார்? பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்...(2)

***வழக்குரைஞர் கிருபா முனுசாமி****




சென்ற வாரத் தொடர்ச்சி....

"ஒரு காந்தியாருடைய உயிரைவிட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் உமது கையில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்" என்று அய்ரோப்பாவி லிருந்து டாக்டர்அம்பேத்கர் அவர்களுக்கு பெரியார் தந்தி அனுப்பியதே இதற்கு ஆதாரமாகவும், சமூக நீதியின் மீதான பெரியாரின் தீர்க்கமான பார்வையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது.

கல்வி - வேலைவாய்ப்பு - மொழி:

ஜாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பு, அரசியல் சமூக உரிமைகளோடு சேர்த்து, உரிமை மீட்பையையும் ஓர் இயக்கமாக கட்டமைக் கிறார் தந்தை பெரியார். அதென்ன உரிமை மீட்பு என்றால், சமஸ்கிருதம் மற்றும் இந்தி திணிப்பால் ஒழிக்கப்பட்டுவரும் தமிழ் மொழியையும், தமிழ் அடையாளத்தையும் மீட்பது, ஜாதிய தீண்டாமை காரணமாக கல்விமறுக்கப்பட்டு அதன் விளைவாக வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றிற்கு எதிராக கல்வி கொள்கைகள் என நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க பல  போராட்டங்களையும் முன்னெ டுத்தார் தந்தை பெரியார் அவர்கள்.

1920 ஆம் ஆண்டிற்கு முன்பு பார்ப்பனர் அல்லாத மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. கல்லூரிகளில் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படு வதும், வெற்றி பெறுவதும் என்ற நிலை இருந்தது. பொதுப் பணியிடங்களிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தினர். எனவே, எல்லாச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில், மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு உத்தி யோகங்களை வழங்க வேண்டும்" என்ற வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை ஒன்றை அப்போதைய சென்னை மாகாண முதல்வ ராக இருந்த பனகல் அரசர் பிறப்பித்தார். மேற்குறிப்பிட்ட ஆணை, 1921-இல் வந்தி ருந்தாலும், செயல்படுத்தும் அதிகாரிகளாக பார்ப்பனர்களே இருந்தமையால் அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.

அதோடு மட்டுமில்லாமல், வருணா சிரமக் கொள்கையை பார்ப்பனரல்லாதோர் மீது கட்டாயப்படுத்தும் விதமாக, சமஸ் கிருதத்தையும், இந்தியையும் திணித்து வந்த பார்ப்பனர்கள், தமிழ்வழி கல்வியை முற்றிலுமாக மறுத்ததோடு, நமது கல்வி உரிமையை மறுக்க பலவித சூழ்ச்சிகளையும் செய்தனர். அதற்கு திருவையாறு தமிழ்கல்லூரியே ஒரு சிறந்த உதாரணம்.

திருவையாறு தமிழ்க் கல்லூரியைப் பற்றி நாம் அறிந்திருப்போம். இன்று அது, கலை அறிவியல் கல்லூரியாக இருந்தாலும், ஒரு காலத்தில் வெறும் சமஸ்கிருதக் கல்லூரியாக மட்டும் இருந்தது என்பதை நம்மில் பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தான் கொடுத்துள்ள இடமும், பணமும் சமஸ்கிருதத்திற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்று மன்னர் தன் உயிலில் எழுதிவைத்திருப்பதால் அங்கு அம்மொழி மட்டுமே கற்பிக்கப்படுவதாக கூறியிருக் கின்றனர்.

தமிழவேள் உமாமகேசுவரம் பிள் ளையும், செல்வகேசவராய முதலியாரும், மன்னர் ஏன் அவ்வாறு எழுதினார் என்று அவரது உயிலை படிக்க முயற்சித்தனர். அது முழுக்கமுழுக்க வடமொழியில் எழுதப் பட்டிருந்ததால், அவர்களால் படித்தறிய இயல வில்லை. தமிழும், வடமொழியும் நன்கறிந்த புலியூர் ஞானியார் அடிகளிடம் அதனைக் கொடுத்து கேட்டபொழுது, உயிலைப் படித்த ஞானியார் சிரித்துவிட்டு கூறினாராம், இடமும், நிதியும் கல்விப் பயன்பாட்டிற்கு மட்டுமே என்று தான் கூறப்பட்டிருக்கிறதே தவிர, சமஸ்கிருதத்திற்கு மட்டும் என்று கூறப்படவில்லை என்று.

அதற்கும் பார்ப்பனர்கள் விடை கூறினார். என்ன தெரியுமா? கல்வி என்றால் சமஸ் கிருதம், சமஸ்கிருதம் என்றால் கல்வி. இதில் உங்களுக்கு என்ன குழப்பம் என்று. தமிழ் வேளும், செல்வகேசவராயரும் அடங்கா சினம் கொண்டு இச்செய்தியை சர் ஏ.டி.பன்னீர் செல்வத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பின் அவரது முயற்சியால் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி தமிழும் அங்கு படமாகியது. பிறகு படிப்படியாக, பல்வேறு தமிழ் படிப்புகளைக் கொண்ட தமிழ்க் கல்லூரி ஆயிற்று.

ஆக, பார்ப்பனர்களின் இத்தகைய சூழ்ச்சிகளை முறியடிக்க, நீதி கட்சி ஆட்சியால் கொண்டுவரப்பட்ட வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை நடைமுறைப் படுத்த, கல்வி தொடர்பான தீர்மானங்கள் பலவற்றையும் தனது மாநாடுகளில் கொண்டுவந்த வண்ணமே இருந்தார் பெரியார். இந்தியாவின் வருங் காலத்து அரசியல் திட்ட அமைப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்ற கொள் கையை வற்புறுத்தியதோடு, பார்ப்பன ரல்லாத மாணவர்கள் என்று மட்டுமில் லாமல், தாழ்த்தப்பட்ட சிறுவர், சிறுமி களுக்குப் புத்தகம், உடை, உணவு முதலியவற்றை இலவசமாக வழங்கி மற்ற வகுப்பு சிறுவர்களைப் போலவே உயர்த்த வேண்டும், உயர்கல்விக்கு வகுப்புவாரி விகிதப்படி மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், காலியாகும் பணியிடங்களை நிரப்பும்போது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் 1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றி னார். கட்டாய தாய்மொழி வழிக் கல்வி, வேண்டுமானால் பொது மொழியாக ஆட்சி மொழியை கற்பிக்கலாம், இரு பாலருக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி போன்ற தீர்மானங் களும் அடுத்தடுத்த சுயமரியாதை மாநாடு களில் நிறைவேற்றப்பட்டன.

பெண்ணுரிமை


பொது சமூக - கல்வி நிலை இவ்வா றென்றால், அக்காலத்தில் பெண்களின் நிலையை சொல்ல வேண்டியதில்லை. தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய பகுத்தறிவுஇயக்கத்தில், ஜாதி ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மத ஒழிப்பு போன்ற பல பணிகள் இருந் தாலும், பெண்ணுரிமை பணிகளுக்கு என் றுமே முன்னுரிமைவழங்கப்பட்டு வந்தது.

1910 - 1911 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் ஆடவர் கல்லூரிகளில் பயின்ற பெண்கள் 30 பேர். சென்னை மாகாணம் என்பது தமிழகம், கேரளம், ஆந்திரம், கன்னடம் ஆகிய நான்கு பகுதிகளும் அடங்கியதாகும். இதில்,

மாநிலக்கல்லுரியில் பயின்ற பெண்கள் - 17 கள்ளிக்கோட்டை ஜமாரின் கல்லூரி - 4

கள்ளிக்கோட்டை ஜெர்மன் மிசினரி கல்லூரி - 2 திருச்சி எஸ் பி ஜி கல்லூரி - 1 ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி - 1 மொத்தம் - 25.

எப்படி தேடிப்பார்த்தாலும், இங்கும் 25 பேர் பற்றிய கணக்கே கிடைக்கின்றது. எனவே தான், பெண்களின் கல்வி விகித சூழ்நிலையைக் கண்டு, முதல் சுயமரியாதை மாநாட்டிற்கு முன்பிருந்தே கூட பெண் களின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய உரிமைகளை வலியுறுத்தி தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார் தந்தை பெரியார்.

பிறப்பால் ஆண், பெண் என்ற பால் பேதம்  ஒழிக்கப் பட வேண்டும்; எல்லா பொதுப் பள்ளிக்கூடங்களிலும், ஆண்-பெண், உயர்வு-தாழ்வு வித்தியாச மில்லாமல் இருபாலருக்கும் ஆரம்பக் கட்டாய இலவச தாய்மொழி வழிக்கல்வி; பெண்களின் கல்வியை 11 வயதிலேயே நிறுத்திவிடாமல், முதலில் 16 வயது வரையிலும் பள்ளிக்கு செலவிட வேண்டுமென்றும், பின்பு 30 வயது வரை படிக்க வைக்க வேண்டுமென்றும்; ஆண் களுக்கு நிகரான எந்த தொழிலையும் பெண்களும் மேற்கொள்ள சம உரிமையும், நேரமும்கொடுக்கப்பட வேண்டும்; பள்ளிக்கூட ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கு அதிக இடம்; ஆரம்பக் கல்வி ஆசிரியர் பணியிடங்கள் முழு வதிலும் பெண்களையே நியமிக்க வேண்டும்; பெண்களை மருத்துவத் தொழிலுக்கு, ஆசிரியர் தொழிலுக்கு மட்டும் தற்பொழுது எடுப்பது போதாது, காவல்துறையிலும் இராணுவத்திலும் சேர்க்கவேண்டும்; சங்கத்திற்கு போதிய பண உதவி பெற்று, படித்த பெண்களை சம்பளத்திற்கு அமர்த்தி, சிற்றூர்களில் உள்ள படிக்காத, விழிப்புணர்வு இல்லாத பெண் களுக்குகல்வியை கற்பிப்பதுடன், நமது இயக்கக் கொள்கைகளையும் கற்பிக்க வேண்டும் என முதல் சுயமரியாதை மாநாட்டிலும், அடுத்தடுத்த சுயமரியாதை, மகளிர், இளைஞர்மாநாட்டிலும் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டு வந்தன. இவற்றிற்கெல்லாம் தடையாக இருக் கின்றவைகளை போக்கும் வகையிலும், பெண்கள் விடுதலைக்காகவும், பெண்களின் திருமண வயது 16 ஆகவும், ஆண்களின் திருமண வயது 19 ஆகவும் சட்டப்படி நிர்ணயிக்க வேண்டும்; ஜாதி-மத பேதமின்றி தங்கள் இணையரை தேர்ந்தெடுக்கும் உரிமை ; வாழ விருப்பமில்லாதவர்களின் விவாகரத்து உரிமை; கைம்பெண்கள் மறுமணம்; அதற்கேற்ற சட்டங்களை இயற்ற வேண்டும்

ஆண்களைப் போலவே பெண் களுக்கும் சமமான சொத்து மற்றும் வாரிசு உரிமை; பாகம் பிரியாத குடும்பங்களில் கணவன் இறந்துபோனால், அக் கண வனுக்கு உள்ள சகல உரிமைகளும், சொத்துக்களும் அவனது மனைவி முழு சுதந்திரத்துடன் அனுபவிக்கும் உரிமை; ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் குழந்தைகளின் காப்புநிலை, அதாவது கார்டியன் உரிமை மற்றும் தத்தெடுக்கும் உரிமை.

தொடர்ச்சி அடுத்த வாரம்...

- விடுதலை ஞாயிறு மலர், 22.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக