வியாழன், 3 ஜனவரி, 2019

தந்தை பெரியாரின் சிந்தனைகளும் பண்பு நலன்களும்


(தந்தை பெரியார் நினைவு நாளன்று (24.12.2018) காலை 8.30 மணிக்கு ஆற்றிய உரை)


தந்தை பெரியாரின் சிந்தனைகளும் பண்பு நலன்களும்




1. தந்தை பெரியாரின் இலக்கு என்ன?


எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்ல. அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்ல. ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும், சமத்துவ மாகவும் இருக்க வேண்டும் என்பதே அதன் பொருள். இந்த நிலை ஏற்படச் சாதி ஒழிய வேண்டும். (விடுதலை 12-11-1961)

மனிதனுடைய சிந்தனா சக்தி இதுவரை மனிதனை மனிதன் சுரண்டவும், இழிவு படுத்தவும், வெறுக்கவுமான காரியங்களைச் செய்திருக்கிறது. பகுத்தறிவுள்ளவர்கள் இதற்கு இடம் தர முடியுமா? இடந்தரலாமா? அனைவரும் நலம் பெறும் ஒரு சமுதாய மாவதே அறிவுள்ளோர் விரும்புவதாகும். (விடுதலை 5-5-1964)

பேதமற்ற இடம்தான் மேலான திருப்தி யான இடமாகும். (குடிஅரசு 11-11-1944)

சுருக்கமாக தன் கொள்கை என்று எதைச் சொல்லுகிறார் பெரியார்?

ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கின்ற நான்கு தத்துவமும் அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமுகத்துக்கு சாந்தியும் சுகமும் கிடையாது. அந்த நிலையை அடைந்துதான் ஆகவேண்டும். அதுதான் என் கொள்கை. (குடிஅரசு

10-5-1936)

2. வர்ண - வர்க்க பேதம் பற்றி என்ன சொல்கிறார்?


தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிரு கங்கள்போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்குக் கண் வலியாய் இருப்பவர்கள். அவர்களைச் சம மனிதர்களாக ஆக்குவதுதான் என் கண் நோய்க்குப் பரிகாரம். (விடுதலை 15-10-1967)

ஏழை மக்களுக்கு உதவி செய்வது என்பது ஏழைத் தன்மையே மனித சமு தாயத்தில் இல்லாதிருக்குமாறு செய்வதே ஒழிய, அங்கொருவனுக்கும், இங்கொரு வனுக்கும் பிச்சைச் சோறு போட்டுச் சோம் பேறியாக்குவதல்ல. (விடுதலை 22-4-1950)

தனி மனித சொத்துரிமை ஒழிய வேண் டும். பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள் களுக்கு அதிபதியாய் இருப்பதும், பெருமையான வாழ்க்கை என்று கருதப் படுகின்ற மூடநம்பிக்கை ஒழிய வேண்டும். இதில் கவுரவமும், மரியாதையும் இல்லை என்பது தெளிவாக்கப்பட வேண்டும்.  (விடுதலை 9-10-1973)

3. ஆண் - பெண் சமத்துவம் பற்றி பெரியாரின் பார்வை என்ன?


பெண் அடிமை என்பது சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும், நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது. (குடிஅரசு 16.6.1935)

பெண்ணைக் கொள்ள ஆணுக்கு உரிமை இருந்தால் ஆணைக் கொள்ளப் பெண்ணுக்கும் உரிமை வேண்டும். ஆணைத் தொழுதெழப் பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால், பெண்ணைத் தொழுதெழ ஆணுக்கும் நிபந்தனை இருக்க வேண்டும். (குடிஅரசு 12-2-1928)

ஆண்கள், பெண்களின் விடுதலைக் குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத் தனம் வளருவதுடன், என்றும் விடுதலை பெறமுடியாத கட்டுப்பாடுகள், பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சிகளே ஒழிய வேறல்ல; எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளி களுக்கு விடுதலை உண்டாகுமா? (குடிஅரசு 12-8-1928)

பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத் திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள். (குடிஅரசு 8-3-1936)

இன்று நம்முடைய சமுதாயத்திற்கு இருக்கும் குறைகளுக்கும் அவமானத் திற்கும் நம் மூடநம்பிக்கைகளே பெரிதும் காரணமாகும். அதுவும் நம் தாய்மார்களிடம் இவ்வளவு இருக்குமானால் பிறகு அவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளின் நிலை என்னவாகும்? எந்தச் சீர்திருத்தமும் பெண் மக்களிடம் இருந்து வந்தால் அதற்கு வலிவு அதிகம். (குடிஅரசு 27-10-1940)

மற்றவர்கள் பெண்களின் உடல் நலத்தை உத்தேசித்தும், குடும்பச் சொத்து குறையாமல் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்தும், கர்ப்பத்தடை அவசியம் என்றும் கூறுகிறார்கள். பெண்கள் விடுதலை அடையவும், சுயேச்சை பெற வும், கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். (குடிஅரசு 6-4-1930)

4. முதலாளி - தொழிலாளி என்பது குறித்து பெரியார் என்ன சொல்லுகிறார்?


பாட்டாளிகளின் கவலையும், தொல் லையும் தொலைய வேண்டுமானால் முத லாளித்துவம் என்பது அடியோடு ஒழிந்தே தீர வேண்டும். (விடுதலை 7-4-1950)

தொழிலாளர் சங்கப் போராட்டம் என்றால் முதலாளிகளை ஒழித்து, முதலாளி - தொழிலாளி என்ற பேதமில்லாமல் செய்வது என்றால் சரி, நியாயம் - அதை விட்டுவிட்டு கூலி உயர்வைக் கருதியே ஒரு சங்கம் இருக்கிறது என்றால், அதற்குப் போராட்டம் எதற்கு?

முதலாளிக்கும், தொழிலாளிக்கும் எஜ மான் - அடிமை என்கிற தன்மை இல்லாமல் முதலாளியும் தொழிலாளியும் பங்காளிகள், கூட்டாளிகள் என்ற தன்மை ஏற்பட வேண்டும்.

- தென்பகுதி இரயில்வே மென் யூனியன் திறப்பு விழாவில் 10-9-1952

5. ஒழிய வேண்டும் என்று எவற்றைச் சொல்கிறார்?


மூடநம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி, அடி மையாகவும், சோம்பேறி ஆண்டவனாக வும் இருக்கும் நிலை வந்தது. (விடுதலை 5.11.1967)

மனித பேதம் ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும். பொருளாதார சமத் துவம் வேண்டுமானால் கடவுள் தன்மை ஒழிக்கப்பட வேண்டும். (குடிஅரசு 10-2-1945)

உலக மனித சமுதாயத்திற்கு ஒருவன் தொண்டு செய்ய வேண்டுமானால், முதல் தொண்டாக கடவுள் ஒழிப்பு வேலையில் இறங்கினால்தானே அவன் உண்மையான, யோக்கியமான, அறிவாளியான, தொண்ட னாக இருக்க முடியும்? (விடுதலை 18-10-1957)

பக்தி தனிச் சொத்து. ஒழுக்கம் பொதுச் சொத்து. மற்றவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறாமோ, அப்படியே நாம் மற்ற வர்களிடத்தில் நடந்துகொள்ள வேண்டும். அதுதான் ஒழுக்கம்.  (விடுதலை 7-2-1961)

6. தனது உணர்ச்சி என்று தந்தை பெரியார் எதைச் சொல்கிறார்?


ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில் - உடல்நிலையில் இளைத்துப் போய், வலுக் குறைவாய் இருக் கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான போசனையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரி சமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் அனைவருக்கும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும். (விடுதலை 1-1-1962)

திராவிடர் கழகம் அரசியல் இய லையோ, மத இயலையோ தன்னிடம் கொண்டிருக்கவில்லை. மனித இயல் ஒன்றேதான் முக்கியமாகக் கொண்டது. காரணம், மக்களுக்கு இருக்க வேண்டிய அளவு மனிதத் தன்மை, மானம் இல்லை. (விடுதலை 16-2-1949)

- விடுதலை நாளேடு, 28.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக