வியாழன், 31 ஜனவரி, 2019

உதிர்ந்த மலர்கள்

02.03.1930- குடிஅரசிலிருந்து...

1. எந்த மதத்தில் இருப்பதினால் ஒரு மனிதன் தீண்டப்படாதவனாய் கருதப்படுகின்றானோ அவன் தனக்கு ஒரு சிறிதாவது சுயமரியாதை உணர்ச்சி இருக்குமானால் அவன்தான் எந்த மதத்தைச் சார்ந்தால் உடனே தீண்டப்படாதவனாக கருதப்படமாட்டானோ அந்த மதத்தை சாரவேண்டியது அவனது முதற்கடமையாகும்.

2. ஏதாவது ஒரு குறிப்பிட்ட மதத்தில் இருந்தால்தான்  கடவுள் அருளோ மோட்சமோ கிடைக்கும் என்கிற விஷயத்தில் எனக்குச் சிறிதும் ஒப்புதலும் நம்பிக்கையும் கிடையாது. அவ்விரண்டு வார்த்தைகளும் அர்த்தமற்றதும் மோசமும், பரிகாசத்திற்கு இடமானதும் என்பதே எனது அபிப்பிராயமாகும்.

3. மனுதர்ம சாத்திரத்தையும், அதற்கு ஆதாரமான வேதத்தையும் (மத ஆதாரத்தையும்) ஒரு கடவுள் சிருஷ்டித்திருப்பாரானால் முதலில் அக்கடவுளை ஒழித்து விட்டுத்தான் தாகசாந்தி செய்யவேண்டும்.

4. மனுதர்ம சாத்திரத்தையும் அதை ஆதரிக்கும் வேதத்தையும் ஒரு மதம் ஆதாரமாய்க் கொண்டிருக்குமானால் முதலில் அம்மதத்தை அழித்துவிட்டுத்தான் மனிதன் வேறுவேலை பார்க்கவேண்டும்.

5. இந்துமதம் போய்விடுமே! இந்துமதம் போய்விடுமே!! என்று சொல்லிக் கொண்டும் இந்துமத தர்மங்களை ஒன்றுவிடாமல் காப்பாற்றவேண்டும் என்று முயற்சி செய்துகொண்டும் வந்தவர்களாலேயே இன்று இந்தியாவில் இந்தியர்களில் மூன்றில் ஒரு பாகத்தினர்கள் வேறு மதத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள்.

6. மதத்தைக் காப்பதற்கு என்றும், மதக்கொள்கைகள் சிறிதும் விட்டுக் கொடுக்க முடியாதென்றும் இதுவரை செய்து வந்த முயற்சிகளும் கிளர்ச்சிகளும் எல்லாம் இரண்டொரு வகுப்புகளுடையவும் சில தனிப்பட்ட நபர்களுடையவும் சுயநலத்திற்காகச் செய்யப்பட்ட முயற்சிகளாகவே முடிந்ததல்லாமல், எவ்விதப் பொதுநலனும் ஏற்படவேயில்லை.

7. மேல்நாட்டாருக்கு ஒரு மாதிரியும் கீழ்நாட்டாருக்கு ஒரு மாதிரியுமான சுதந்திரங்கள், வித்தியாசங்கள் இருக்கக்கூடாது என்று சொல்லும் இந்திய தேசிய வாதிகள் தங்கள் நாட்டாருக்குள்ளாகவே பார்ப்பனருக்கு ஒரு மாதிரியும் பார்ப்பனரல் லாதார்க்கு ஒரு மாதிரியும் இடமும், தெருவும், குளமும் ஏன் பிரிக்கின்றார்கள்? பிரித் திருப்பதை ஏன் இன்னமும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்? இது யோக்கியமாகுமா?

8. சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவுக்கு இந்து மதத்திற்கு பிரதிநிதியாய் போகவில்லை. ஆனால் அவர் ஒரு வக்கீலாய் போனார்.

9. உன்னை சத்திரியன் என்றோ வைசியன் என்றோ நீ சொல்லிக் கொள்ளும்போது நீ பிராமணன் என்பவனுக்கு கீழ்ப்பட்டவனென்பதை நீயே ஒப்புக்கொண்டவனா கின்றாய்.

10. சென்ற வருஷத்திய ரயில்வே கெய்டை பார்த்துக்கொண்டு ரயிலுக்குப் போனால் வண்டி கிடைக்குமா?

தந்தை பெரியார் பொன்மொழிகள்


இன்று ஆறாம் ஜார்ஜ் மன்னருக்கு இதுவரை இருந்து வந்த சக்கரவர்த்திப் பட்டத்தை எடுத்துவிட்டார்களா இல்லையா? அரசர் கடவுளின் பிரதிநிதி என்ற பழைய கொள்கை இன்று என்னவாயிற்று? கோவணம் கட்டத் தெரியாத குழந்தைப் பிள்ளைகளெல்லாம் இன்று அவன் ஏன் பணக்காரன்? இவன் ஏன் மிராசுதாரன்? என்று கேட்க ஆரம்பித்து விட்டார்களா இல்லையா? அதேபோல், தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்திக்க வேண்டும் - நாம் எதனில் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்று. அப்போது தெரியும் - நாம் தாழ்த்தப்பட்டிருக்கக் காரணம் நாம் தழுவி நிற்கும் இந்து மதம்தான் என்று. எவனும் தன்னை ஓர் இந்து என்றே கூறிக்கொள்ளக் கூடாது.

ஜாதி ஒழியக் கூடாது; சூத்திரன் படிக்கக்கூடாது; சூத்திரன் பெரிய உத்தியோகத்திற்குப் போகக் கூடாது; சூத்திரன் வயிறார கஞ்சி குடிக்கக் கூடாது - என்பதற்காகவே மனுதர்மச் சாஸ்திரம் பார்ப்பனரால் எழுதப்பட்டது. இதுதான் இந்து லாவுக்கு அடிப்படையாக உள்ளது.

-  விடுதலை நாளேடு, 25.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக