ஞாயிறு, 6 ஜனவரி, 2019

சிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை பெரியார் எழுதியது



02. 03. 1930 - குடிஅரசிலிருந்து...

சிருங்கேரி மடாதிபதி உயர்திரு ஸ்ரீஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள் அவர்களிடமிருந்து நமக்கு வந்த ‘ஸ்ரீமுக’ அழைப்பை இவ்விதழில் வேறு ஒரு பக்கத்தில் பிரசுரித்திருக்கிறோம் (2.3.1930 குடிஅரசில் இந்த செய்தி உள்ளது)  திரு மடாதிபதி அவர்கள் அந்த ஸ்ரீமுகம் நமக்கு அனுப்பியதற் காகவும் மற்றும் அதில் நம்முடையவும் நமது மனைவியாருடையவும் ஒரு சிறு தொண்டை மிகுதி யும் பாராட்டித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்த தற்காகவும் நாம் நம் சார்பாகவும் நமது மனைவி யாரின் சார்பாகவும் நமது மனப்பூர்த்தியான நன்றி யறிதலை தெரிவித்துக் கொள்ளக் கடமைபட்டி ருக்கின்றோம்.

நிற்க, அந்த ‘ஸ்ரீமுக’த்தில் “சனாதன தர்மத்தைக் கெடுக்காமல் கரும காண்டத்தில் உள்ள அவரவர்கள் கடமைகளைச் செய்து சாஸ்திரங்கள் இடம் கொடுக்கும் வரையில்” என்கின்ற நிபந்தனைகள் கண்டு அதற்கு விரோதமில்லாமல் சில சுதந்திரங்கள் அளிக்கப்படும் என்கின்ற வாசகங்கள் காணப்படு கின்றபடியால் நாம் அங்கு செல்வதால் ஏதாவது பயன் ஏற்படுமா என்கின்ற விஷயம் நமக்கு சந்தேகமாகவே இருக்கின்றது.

ஆயினும் பொறுப்புள்ள ஒரு பதவியை வகிப்பவரும், பல கொள்கைகளுக்கு அபிப்பிராய கர்த்தாவாய் இருப்பவரும், பல மக்களால் வணங்கி கொண்டாடி மதிக்கத்தக்கவராக இருப்பவருமான ஒரு பெரியாரின் அழைப்பை மதித்து அதற்கு இணங்கி அங்கு சென்று வரவேண்டியது மிக்க நியாயமாகுமென்றே நமக்குத் தோன்றுகின்றது, ஆயினும் நமது நண்பர்களின் விருப்பத்தை அறிந்து சென்று வரலாமென்றே கருதியிருக்கின்றோம்.

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்


1.  புராணங்களுக்கு மதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் என்னவென்றால் அவைகள் எவ்வளவு ஆபாசமாகவும் காட்டு மிராண்டித்தனமாகவும் எழுதி இருந்தாலும் முதலிலும் கடைசியிலும் இப்புராணத்தைப் படித்தோருக்கு மோட்சம், படிக்க வைத்தோருக்கு மோட்சம், கேட்டோருக்கு மோட்சம், கேட்டவரைக் கண்டோருக்கு மோட்சம், கண்டவரைக்  கண்டால் மோட்சம் கிடைப்பதுடன் வாழ்கையில் பணமும் பொருளும் சேருமென்றும் செத்த பிறகு இராஜாவாய் பிரபுவாய் மறுஜென்மம் எடுக்கப்படும் என்னும் எழுதி வைத்ததே காரணமாகும்.

2. எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப்பற்றிச் சொல்லும் மதக் கொள்கைகளிடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவைகளுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதம் வாயினால் உச்சரிக்கக்கூட யோக்கியதை அற்றவனாவான்.

3. புராணங்களின் ஆபாசங்களை நன்றாய் உணர்ந்தவர்கள் எல்லாம் அவற்றை வெளியில் சொல்லுவதற்குப் பயப்பட்டுக் கொண்டிருந்ததற்குக் காரணம் என்னவென்றால் பார்ப்பனர்கள் தனக்கு நாத்திகன் என்று பட்டம் கட்டி ஒழித்து விடுவார்கள் என்கின்ற பயம்தான். ஜாதி மத வித்தியாசங்களும், அவற்றின் உயர்வு தாழ்வு நிலைகளும், சிறிதும் அழியாமல் அப்படியே இருக்கவேண்டும் என்று சொல்லுகின்றவர்கள் ஜாதிகளின் பேராலும், மதங்களின் பேராலும் கேட்கப்படும் விகிதாச்சார உரிமைகளை ஏன் ஆட்சேபிக்கின்றார்கள் என்றும் அப்படி ஆட்சேபிப்பதில் ஏதாவது நல்ல எண்ணமோ, நாணயமோ, நியாயமோ இருக்க முடியுமா என்றும்தான் கேட்கின்றேன்.

- விடுதலை நாளேடு, 4.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக