வெள்ளி, 18 ஜனவரி, 2019

யந்திரங்கள் (3)

14.12.1930-  குடிஅரசிலிருந்து...

இப்படி இருக்க பகுத்தறிவு இருக்கும் காரணத்திற்காக மனிதன் 100க்கும் 90பேர் ஆகாரத்திற்கே வேலை செய்ய வேண்டியது என்பதும் அதுவும் காரண்டி இல்லாத  அடிமை யாய் இருந்து வேலை செய்வது என்பதும்; அதுவும் சரியாய் கிடைக்காமல் பட்டினியாய் கஷ்டப்படுவது என்பதும் இயற்கைக்கு மாறுபட்ட ஒரு பெரிய அக்கிரமமாகும். ஆகவே வேலையில்லாக் கஷ்டம் ஏற்பட்டு ஜனங்கள் பட்டினி கிடந்து பரிதவிக்க ஆரம்பித்தால்தான்  தங்களுக்குப் பகுத்தறிவும் வன்மையும் இருந்தும் தாங்கள் முட்டாள்தனமாய் பாடுபடு வதும் தங்களைப் போன்ற பிறரால் ஏய்க்கப் படுவதும் ஏன்? என்கின்ற காரணத்தை உணர முடியும். உணர்ந்து சம நிலையை அடைய முயற்சிக்கவும் முடியும்.

அதை விட்டு விட்டு முதலாளி தொழிலாளி நிலைமையும், மிராசுதாரர் உழவன் நிலை மையும் உலக வாழ்க்கையின் சவுகரியத்திற்கு அவசியம் என்பதாகச் சொல்லி அதுவும் கடவுள் செயலால் முன் ஜென்மத்தின் கர்ம பயனால் தலைவிதியால் ஏற்பட்டது என்று சொல்லிக் கொண்டு அவற்றை நிலை நிறுத்திக் கொண்டே எவ்வளவுக் கூலி வாங்கிக் கொடுத் தாலும் மனித வர்க்கத்தினரில் பெரும்பான்மை யானவர்களின்  கவலையும், தொல்லையும், கொடுமையும் ஒழியவே ஒழியாது. எப்படி எனில் ஜாதி வித்தியாசத்தை வைத்துக் கொண்டு  எவ்வளவு சமத்துவம் கொடுத்தாலும் அது எப்படி பயன்படாதோ அது போலவே முதலாளி தொழிலாளி முதலிய பாகுபாடுகளை வைத்துக் கொண்டு அவர்களுக்குக் கொடுக்கும் எவ்வித சுதந்திரமும் பயன்படாமலேயே போய்விடு வதோடு கீழ்நிலை மேல்நிலை என்பதும் மாற்ற முடியாததாகிவிடும். ஏனெனில் தொழிலாளி, முதலாளி, உழவன், ஜமீன், மிராசுதாரன் என்பவைகளும் ஒருவித வருணாசிரம தர்மமே தவிர வேரல்ல. ஆச்சிரமங்கள் என்றாலே படிகள் நிலைகள் என்பதுதான் கருத்தாகும்.

நமது நாட்டில் பிறவியிலேயே  பல படிகள் இருப்பதாலும் அதனாலேயே நாம் சதா கஷ்டப்படுவதாலும் தொழில், வாழ்க்கையில், உள்ள படிகளை நாம் கவனிக்கவே நேரமும், ஞாபகமும் இல்லாதவர்களாய் இருக்கின்றோம். மனிதன் உண்மையான சமத்துவமடைய வேண்டுமானால் பிறவிப் படிகளையும் தொழில் படிகளையும் கடந்தவனாகத் தான் இருக்க வேண்டும். அவ்விரண்டு படிகளையும் ஒழிந்த நிலைதான் சமதர்ம நிலையென்று சொல்லப் படுவதாகும்.

நிற்க, இவற்றிற்கெல்லாம் முக்கியமாக இன்னொரு விஷயமுண்டு. அதைச் சரியாக உணர்ந்து கவனித்தோமானால் மேல்கண்ட கஷ்டங்களைப் பற்றிய கவலைகள் கூட நாம் அதிகம் பட வேண்டிய அவசியமிராது. அதென்ன வெனில், யோசனை யில்லாமல் கண்ட கண்டபடி ஜனத்தொகையை விருத்தி செய்வதாகும். பிள்ளைகளைப் பெருவதாகும். 2 ஏக்கரா பூமி உள்ளவன் 100 மாடுகளை வாங்கி வளர்ப்பானேயானால் எப்படி அவனால் அந்த மாடுகள் போதிய தீனி கிடைத்து ரட்சிக்கப்பட முடியாதோ அதுபோலவே மனித சமுகமும் தேவைக்கும் தன்னால் தாங்குவதற்கும்  அதா வது காப்பாற்றக் கூடியதற்கும் அதிகமாகவும் தேசத்தின் கால நிலைமைக்கு மேலாகவும் பிள்ளைகளைப் பெற்று கஷ்டப்பட்டு தனது ஆகாரத்தில் பங்கு கொடுத்து கடைசியில் இருவருக்கும் போதுமான ஆகாரமில்லாமலும், போதுமான ஆதரிப்பு இல்லாமலும் கஷ்டப் பட்டுக் கொண்டிருப்பதை ஒழிக்காமல் வீணாய் எண்ணிக்கையை அதிகப்படுத்தவதில் என்ன பயன்? என்பது முக்கியமாய் கவனிக்கத் தக்கதாகும்.

இந்திய நாட்டு நிலைமை நமக்குத் தெரிய சுமார் 40, 50 வருஷ காலமாகவே மக்களுக்கு வேலையில்லாமல் வெளிநாடுகளுக்குக் கூலி யாகச் செல்வதே வழக்கமாக இருந்து வந்திருக் கின்றது. இது மாத்திரமல்லாமல் அடிக்கடி பஞ்சமும் கொள்ளை நோயும் வந்திருக்கிறது. இது இந்த நாட்டு சுயமரியாதைக்கே மிகவும் கேடானதாகும். அளவுக்கும், சக்திக்கும் மீறி பிள்ளைகளைப் பெறுவதால் யாருக்கு என்ன லாபம்? என்று யோசிக்க  வேண்டும்.

உலகம் விர்த்தியாக வேண்டாமா என்கின்ற சொல் சுத்த முட்டாள் தனமானதும் சிறிதும் பொருளற்றதுமான  சொல்லே ஒழிய அது ஒரு கவனிக்கத்தகுந்த சொல் அல்லவென்பதே நமது அபிப்பிராயம். சம்போக விஷயங்களில் கவலையற்றும், முரட்டுத்தனமாயும், அளவுக்கு மீறியும் நடந்து கொள்வதால் மனிதர்களுக்கு ஏற்படும் வியாதிகளைப் போலவே  தான் குழந்தைகள் ஏற்படுவதும் என்பதே தவிர அதற்கும் இதற்கும் சிறிதும் வித்தியாசமே இல்லை. சமபோக உணர்ச்சி இந்த உலகத்தில் உள்ள ஜீவஜந்துக்களில் மனிதனைத் தவிர, வேறு எந்த ஜீவனுக்கும் குழந்தை பெறுவதற்காக என்கின்ற எண்ணத்தின் மீது தோன்றுவதே கிடையாது. மனிதன் பகுத்தறிவுக்காரன் என் கின்ற ஆணவத்தால் அவனுக்கு ஏற்படும் அநேக முட்டாள்தனமான செய்கைகளைப் போல் குழந்தை பெறவேண்டும் என்கின்ற முட்டாள்தனமும் ஏற்பட்டு அது ஒரு ஆசையாகி; பிறகு அது ஒரு சொத்தாகி பிறகு மோட்சத்திற்கு உதவும் காரியமாகவுமாகி கடைசியாய் வீண் கஷ்டமும் தொந்தரவும் பட்டு மற்றவர்களுக்கும் தொந்தரவு கொடுத்ததைக் கொடுப்பதைத் தவிர, வேறு ஒரு பயனும் இல்லாததாய் முடிந்து விடுகிறது.

மேலும் பிள்ளை பெறுவதினாலேயே மொத்த ஜன சங்கியையில் பகுதியான பெண்கள் சமுகம் அடிமையாகி அநேக ஆபத்துகளுக்கும் வியாதிக்கும் உள்ளாகி அற்ப ஆயுளுடன் கஷ்டமும் படவேண்டிய தாகி அவர்களது வாழ்வே மிக்க பரிதவிக்கத்தக்க வாழ்வாக முடிகின்றது. பெண் அடிமைக்குக் காரணம் அவர்கள் பிள்ளை பெறுவதும், அதிலும் அதிகமான பிள்ளைகளைப் பெறு வதும் அதனால் உடல் நலிந்து பலவீனமு டையவர்களாவதும் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்கே என்று கருது வதால் சுதந்திரமும், வீரமும் இன்றி அடிமை யாவதுமான காரியங்களுக்கு ஆளாக வேண்டி யவர்களுமாகிறார்கள். பெண்கள் விஷயம் இப்படி இருப்பதோடு பொதுவில் வேலையில்லா கஷ்டத்தை நீக்கவும் மக்கள் கவலையும் தொல்லையும் கஷ்டமும் இல்லாமல் இருக் கவும் பிள்ளைப்பேற்றைக் குறைப்பது என்பது ஒரு தக்க வழியாகும்.

தொடரும்...
-  விடுதலை நாளேடு, 11.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக