ஞாயிறு, 27 ஜனவரி, 2019

ஏன் அவர் பெரியார்? பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்...(3)

வழக்குரைஞர்


கிருபா முனுசாமி




சென்ற வாரத் தொடர்ச்சி....

குழந்தை திருமணத்தை தடை செய்யும் சாரதா சட்டத்தை எல்லாப் பகுதிகளிலும் அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்; எதிர்கால வாழ்க்கையை உணர்ந்து கொள்ள முடியாத சிறுமிகளை கடவுளின் பேரால் பொட்டுக்கட்டி, பொரு ளுக்காக நிர்பந்தக் காதலில் ஈடுபடுத்தும் அநாகரிகமான பழக்கத்தை ஒழிக்க வேண்டும்; சிறுவயதுப் பெண் குழந்தைகளை பொதுவில் ஆடவும், பாடவும் விட்டு பொருள் சம்பாதிக்க தேவடியாள்களாக தயாரிக்கும் வழக்கத்தை கண்டிப்பதோடு, இந்தியசட்டசபையில் திரு.ஜெயகர் கொண்டு வந்திருக்கும் பொட்டுக் கட்டும் வழக்கத்திற்கு எதிரான மசோதாவையும், சென்னை சட்டசபையில், டாக்டர் முத்துலட்சுமி கொண்டு வந்த மசோதாவையும் முழுமன தாக ஆதரித்து, அவை சீக்கிரம் சட்டமாக ஆக்கப்பட வேண்டுமென்றும் வேண்டுகிறது; தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்; விபச்சார விடுதிகளை ஒழிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றியதோடு,

"இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதாயி ருந்தால், மறுமண விருப்பம் கொண்ட கைம்பெண்களையே திருமணம் செய்ய வேண்டும்; விபச்சாரத்திற்கு அடிப்படையாய் அர்த்தமற்ற முறையில் கட்டப்பட்ட பொட்டுக்களை அறுத்தெறிந்து விட்டு வரும் சகோதரிகளை ஆதரித்து திருமணம் செய்துகொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும்" என்றஅறைக் கூவலை யும் விடுத்தார்.

பெண்களின் சமத்துவ - அரசியல் உரிமை களையும் வலியுறுத்தி வந்த நிலையில், அவர்களுக்காக போராடி வீட்டை விட்டு வெளியேறும், வெளியேற்றப்படும் பெண் களுக்கு பாதுகாப்பாக தங்க 'பெண்கள் நிலையம்' ஒன்றை ஏற்படுத்த வேண்டு மென்றார். இன்றைய காலத்தில், வீட்டை விட்டு வெளியில் வருவதோ, கிடைத்த அடிப்படை கல்வியைக்கொண்டு வேலை தேடிக்கொள்வதோ, பெண்களுக்கான தங்கு மிடங்களோ எளிமையாக இருந்தாலும், இவற் றையெல்லாம் நினைத்து கூட பார்க்கமுடியாத காலத்தில், 3 வயதுகுழந்தை களும் விதவை களாக ஆக்கப்பட்ட 1920 - 30களில் இவற்றை யெல்லாம் தந்தை பெரியார் பேசினார் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

பெண்களின் சமத்துவ உரிமைகளையும், பெண் கல்வியையும், விடுதலையையும், பெண்களுக்கான பாதுகாப்பு மய்யத்தையும், அதே 1938 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் இந்தி எதிர்ப்பு போரில் சிறை சென்ற ஆண்களை பாராட்டி தீர்மானம் நிறை வேற்றப்படும் போது, "ஆண்கள் சிறை சென்றதை பாராட்டிவிட்டால் நீங்கள் வீரப் பெண்மணிகள் என்று அர்த்தமா? நீங்கள் 400 பேர் சிறைசென்று அதை ஆண்கள் அல்லவா பாராட்ட வேண்டும்?" என்று பேசி, பெண்களை போராட தூண்டிய குற்றத் திற்காக கைது செய்யப்பட்டு, சிறைக்கும் செல்கிறார் பெரியார்.

இவற்றையெல்லாம் செய்துவந்த பெரியார், பெண் விடுதலைக்கு தடையாக இருப்பவைகளை தகர்க்கும் வகையில், கர்ப்பத்தடையையும், கருத்தடை சாதன பயன் பாட்டையும் எப்போதும் வற்புறுத்தி வந்திருக்கிறார்.

இன்றைய அறிவியல், மருத்துவ ஆராய்ச்சிகளிலும் கூட பெண்களின் கர்ப் பப்பை தொடர்பான, மாதவிடாய் வலி ஆகியவற்றிற்கு கருத்தடை சாதனமே சிறந்த நிவாரணமாககையாளப்படுகிறது. மேற்கத் திய நாடுகளில், இளம் பெண் களுக்கும் கூட இது பொருத்தப்படும். இதனை பொருத்திய ஓர் ஆண்டிற்குள் ளாகவே பெண்களின் மாதவிடாய் முற்றிலுமாக நின்றுவிடும். ஒரு வேளை, குழந்தை பெற்றுக்கொள்ள விரும் பினால், அதனை எடுத்துவிட்டு, பிள்ளைப் பேறுக்கு பிறகு மீண்டும் பொருத்திக் கொள்ளலாம். இதைதான் அன்றே கர்ப்பப் பையை அறுத்தெறியுங்கள் என்றார் தந்தை பெரியார். அறுத்தெறியுங்கள் என்றால் அதை அப்படியே பொருள் கொள்ள கூடாது. பெண்களின் சுதந்திரவாழ்வுரி மையை முழு மையாக அனுபவிக்க தடை யாக இருக்கும் கர்ப்பப்பை தொடர்பான இன்னல்களையும், தொல்லைகளையும் அறுத்தெறியுங்கள் என்று பொருள். புதுமைகளை வரவேற்பதிலும், விஞ் ஞானத்தை ஒரு தொலைநோக்கு பார்வை யிலிருந்து முன்னுணர்ந்து, நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்பாட்டை ஊக்கு விப்பதிலும், அவற்றை மக்களிடம் வலி யுறுத்துவதிலும் முதல் நபராக இருந்தார் பெரியார்.

ஆனால், இந்தியாவில், 'கற்பு' என்ற மூடத்தனத்தின் காரணமாக, திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு கருத்தடை சாதனத்தை பொருத்துவதில்லை. இதையும் பெரியார்விட்டு வைக்கவில்லை. பெண் விடுதலை வேண்டுமானால், "ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்பந்தக் கற்புமுறை ஒழிந்து, இரு பிறப்பிற்கும் சமமான கற்புமுறை வேண்டும்" என்கிறார்.

பெரியார் இன்றிருந்திருந்தால், "கன்னிப் பெண்களும் கருத்தடை சாதனத்தின் பயனைப்பெற்று, வலி இல்லாத, கட்டுப் பாடுகள் இல்லாத முழுமையாக வாழ்க் கையை அனுபவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருப்பார். இதை இனிவரும் உலகின் நீட்சியாகவே நான் பார்க்கிறேன்!

சுயமரியாதை திருமணம்


தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதன் ஒரு படியாக, ஆண் பெண் இருபாலரின் சரிநிகரான உரிமை களையும், சுதந்திரங்களையும் பாதுகாக்கும் வகையில், தாலி இல்லாத ஜாதி-மத மறுப்பு சுயமரியாதை திருமணங்களை வலியுறுத் தினார்.

இன்று அய்ரோப்பிய நாடுகள், அமெ ரிக்கா போன்ற பற்பல நாடுகளில் நண்பர்களாக வாழும் முறையே பெரிதும் காணப் படுகிறது. அதுபோல, நம் நாட்டிலும், "திருமணம் செய்துகொள்ளாமலேயே நண்பர்களாக வாழும் முறை வர வேண்டும் என்றார்.

1928-இல் அருப்புக்கோட்டை சுக்கில நத்தத்தில் நடந்த சுயமரியாதை திருமணப் புரட்சியை அதன் தொடக்கமாகவே பார்க்கிறேன். அச்சிற்றூரில் சுயமரியாதை நெறியில்வளர்ந்த அரங்கசாமி ரெட்டியார் பார்ப்பனரை விடுத்து பெரியாரை கொண்டு திருமணம் செய்து கொள்ள விரும்பினார். பெரியாரும் சம்மதிக்க, அரங்கசாமிக்கும், நாகம்மாள்மற்றும் இரத்தினம்மாள் ஆகி யோருக்கும் திருமண ஏற்பாடுகள் செய் யப்பட்டன. இதனை அறிந்த ஆவல்சூரன்பட்டியை சேர்ந்த கோபால்சாமி ரெட்டியாரும் பெரியார் முன்னி லையில் சுயமரியாதை திருமணம் செய்துக் கொள்ள விரும்பினார். முதல் திருமண மேடையிலேயே இரண்டாவது திரும ணமும் முடிவாயிற்று.

காலை முதல் திருமணத்தையும், முற்பகல் 11 மணிக்கு இரண்டாவது திருமணத் தையும் பார்த்துக்கொண்டிருந்த மாரி ரெட்டியார், சுயமரியாதை திருமணத்தின் நடைமுறை யையும், சிறப்பையும் கண்டு ணர்ந்து அதே நாளில் பார்ப்பனரைக் கொண்டு செய்வதாய் இருந்த அவரது திருமணத்தை நிறுத்தி, அதே மேடையில் பகல் 12 மணிக்குமூன்றாவது சுயமரியாதை திருமணமாக செய்துக் கொண்டார்.

இதன் நீட்சியாக இனி 116 ஊர்களில் சடங்குகளை நீக்கி, பார்ப்பனர்கள் நீக்கி நம்மவர்களைக் கொண்டு திருமணங்களை செய்விக்க உறுதிபூண்டார்.

சமூக - அரசியல் உரிமைகள், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகள் மட்டுமில்லாமல், அன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் குறித்த சிந்தனை பெரியாரைத் தவிர வேறு எந்த தலைவருக்கும் தென்னகத்தில் இருந்ததில்லை. ஜாதியை குறித்து பேசும்போதெல்லாம், பெண்ணடி மைத்தனம் இருப்பதே ஜாதியை காப்பாற்றத் தான் என்றுஅம்பேத்கர் பேசி வந்திருந்தாலும், தென்னாட்டை பொறுத்தவரை, ஜாதியும், பெண்ணடிமைத்தனமும் குறித்த பன்முகப் பட்ட பார்வையோ, அதன் ஊடறுத்தன்மை குறித்தநுணுக்கமான அறிவோ, பெரியாரை தவிர வேறு எவருக்கும் இருக்கவில்லை என்பதே உண்மை. பார்ப்பனரல்லாதார் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பல்வேறு சமூக நீதிஉரிமைகளையும், பெண் விடுதலை யோடு ஒரு சேர முன்னிறுத்தி வந்ததே பெரியாரின் தனிச் சிறப்பாக இருந்தது.

இதன் காரணமாகவே, அன்றைய தினம் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் கூடிய பெண்களெல்லாம் அவர்மீது கொண்ட அன்பிற்காக, அவருக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கினர்.

எது அதிகக்கெடுதி?


மக்களைக் கோவிலுக்குப் போக வேண்டாம் என்று சொல்லுகிறவர் களால் ஜனங்களுக்குக் கெடுதி என்று சொல்வதானால் கோவி லுக்குப் போகும் படி சொல்லுகின்ற வர்களால் அதை விட அதிகமான கெடுதி என்றே சொல்லலாம்.

கோவிலை இடிக்கின்றவர்களை விட, கோவில் கட்டுகின்றவர் களாலேயே மக்களுக்கு நஷ்டமும், கஷ்டமும் ஏற்படுகின்றன.

கடவுள் கல்லிலும், செம்பிலும், படத்திலும் இருக்கிறார் என்று சொல்லுகின்றவர்களை விட, கடவுள் இல்லை என்று சொல்லு கின்றவர்கள் நல்லவர்கள்.

குடிஅரசு, 21.12.1930
- விடுதலை ஞாயிறு மலர், 29.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக