சனி, 26 அக்டோபர், 2019

பெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்

தந்தை பெரியார்

 தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து _ தேவர்கள் அசுரனைக் கொன்றதாகவும், அக் கொலையானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலை யென்பதும், அதற்காக மக்கள் அந்தக் கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும்.

சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை. அதாவது, வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப் படுகிறது. தீபாவளி பண்டிகை தினத்தை நரக சதுர்த்தசி என்றும் சொல்லுவதுண்டு. இதற்குக் காரணம், நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும், ஆரியர்களின் இழிநிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்காக அதையும் ஆரியர் புராணப்படியே சற்று சுருக்கமாக விளக்குவோம்.

அதாவது இரண்யாட்சன் என்னும் ராட்சசன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம்.

மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்தில் இருந்து வெளியாக்கிப் பூமியைப் பிடுங்குவதற்காக பன்றி உருவமெடுத்துப் போய், ராட்சசனைப் பிடித்து, பாய்போல் சுருட்டப்பட்டிருந்த பூமியைப் பிடுங்கி விரித்து  விட்டாராம்.

அந்தச் சமயத்தில் அந்தப் பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பிக் கலந்தாளாம். அக் கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக் குழந்தைக்குத்தான் நரகாசுரன் என்று பெயராம்.  இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும், இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணுவிடத்தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுரனைக் கொன்றாராம். நரகாசுரன், விஷ்ணுவை, தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். அதற்காக விஷ்ணு அந்தத் தினத்தை உலகம் கொண்டாடும்படி செய்தாராம். இதுதான் தீபாவளியாம். தோழர்களே! ஆரியரின் கதை ஜோடிக்கும் சின்ன புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை  எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில், பூமியை ஒரு ராட்சசன் பாயாகச் சுருட்டினான் என்றால், அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான்?

சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்து கொண்டான் என்றால், அப்போது சமுத்திரம் எதன்மேல் இருந்திருக்கும்? கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசுரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா? அப்படித்தான் வரவில்லையானாலும், நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவ உருவெடுக்காமல் மலம் சாப்பிடும் ஜீவ உரு எடுப்பானேன்?

அந்த அழகைப் பார்த்து பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டா ளென்றால், பூமி தேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது? நம் பாரதத் தாயின் கற்புக்கும், காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லிக் கொள்ளுவது? அவருடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாய் இருந்திருக்க வேண்டும்? பூமாதேவியும் சமுத்திரமும் என்றால், இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரத தேவியும் அரபிக் கடலும் வங்காள விரிகுடாக்கடலும் தானா? இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

இப்படிக் கொலை செய்யப்பட்ட நரகாசுரன் என்பவன் நமது தோழர்கள் முத்துரங்கம், ராமநாதன் முதலியவர்கள் போன்றார்களாய் இருந்திருந்தால்தானே கொலை செய்யப்பட்ட அவமானத்தை உலகம் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப்பான்? இவற்றையெல்லாம் தமிழர்கள், பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள் தமிழர்களை, தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், சண்டையில் சிறை பிடித்த கைதிகள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்ன என்னமோ சொல்லுவதில் உண்மை இருக்கிறது என்றுதானே அர்த்தமாகும்? அப்படித்தானே அந்நிய மக்கள் நினைப்பார்கள்?

ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், பார்ப்பன அடிமைகளான பல பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்களுக்குச் சுரணை இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டு இருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய் கவனித்துப் பார்த்து, பண்டிகை கொண்டாடாமல் இருந்து மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா என்று கேட்கின்றோம்.

இந்தி ஆரிய பாஷை என்றும், ஆரியப் புராணங்களை தமிழர்களுக்கு படிப்பித்து ஆரியக் கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்தியைக் கட்டாயமாய் ஆரியர்கள் புகுத்துகிறார்கள் என்றும், சொல்லிக் கொள்ளுவது உண்மையானால் _- அதற்காக தமிழ் மக்கள் அதிருப்தியும், மன வேதனையும் படுவது உண்மையானால் -_ தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடுவார்களா?

                                                - ‘குடிஅரசு’ - 31.10.1937

- உண்மை இதழ், 16-31.10.19

வெள்ளி, 25 அக்டோபர், 2019

கிருஸ்துவமதத்தலைவர் ஏசு கிருஸ்து

கிருஸ்துவமதத்தலைவர் ஏசு கிருஸ்து 
என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல்,
பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம்.
ஆகவே
அவர் கடவுளுக்கு மகனாம்
(தேவகுமாரனாம்) ஆகவே அவர்
சிலுவையில்
அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம்.
செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம்.
பல
அற்புதங்களைச் செய்தாராம்.
வியாதிகளைப் பார்வையால்
சவுகரியப்படுத்தினாராம். ஒரு
ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான
பேர்களுக்குக் கொடுத்துப்
பசியாற்றினாராம். குருடர்களுக்கு
கண்ணைக்
கொடுத்தாராம். இப்படி பல
காரியங்கள் செய்தாராம்.
இவற்றையெல்லாம்
நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க
முடியும். அறிவைக் கொண்டு
பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக்
குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை
மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்?
கடவுள் தோன்றி எத்தனையோ காலம்
ஆனபிறகு
அப்போது (2000 வருடங்களுக்கு முன்)
மாத்திரம் எதற்காக மகனை
உண்டாக்கினார்? அதற்கு முந்தின
காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை?
அப்போதெல்லாம் செத்தவர்கள்
இல்லையா? குருடர்கள் இல்லையா?
பசித்தவர்கள்
இல்லையா? அந்த (கி.பி. 1 – ஆவது)
வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது?
கடவுள்
செய்யவேண்டியதை – சொல்ல
வேண்டியதை ஒரு மனிதனைக்
கொண்டு மாத்திரம் ஏன்
சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு
சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன்
சொல்ல
வேண்டும்? அந்தக் காரியங்கள்
இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன்
அவர்
வரவில்லை? இப்போது கிருஸ்துவை
ஏற்காதவர்கள், நம்பாதவர்கள்,
வழிபடாதவர்கள்
ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு
இவ்வளவு தான் சக்தியா? இது
போலத்தானே
இஸ்லாம் மதம் என்பதும்
சொல்லப்படுகிறது? முகம்மது
கடவுளுக்கு (கடவுளால்
அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத்
தூதர் எதற்கு? குரான் கடவுளால்
தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட
செய்தியாம்.கடவுள் மக்களுக்குச்
செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு
மனிதர் (தூதர்) வாயினால் தான்
சொல்லச்
செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா
மனிதருக்கும் ஏககாலத்தில்
தெரியும்படிச்
செய்ய முடியாதா? உலகில் மனிதன்
தோன்றி எத்தனையோ இலட்சம்
ஆண்டுகளுக்குப்
பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு
சிலருக்கு மாத்திரம் சொல்லும் படி ஏன்
சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன்
தெரிவிக்கவில்லை? முகமது நபி
என்பதை
ஏற்றுக் கொண்டு, அவரை
நம்பினவர்களுக்குத்தானே குரான்?
மற்றவர்கள் அதை
ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப்
பயன்படுவதில்லையே! ஏன்? கடவுள்
சொல்,
அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு
மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும்
எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி
இருக்கிறது! இதுதான் கடவுள்
தன்மையா?
இவையெல்லாம் மனிதத் தன்மையா?
மனிதக் கற்பனையா?
தெய்வத்தன்மையா? ஒரு
சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால்
அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம்,
மகன், குமாரன், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை
வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம்,
தூதர்கள், சமயங்கள், மதங்கள்,
போதகர்கள் இருக்க வேண்டிய
அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால்
இவையெல்லாம்
மூட நம்பிக்கை, அதாவது அறிவைக்
கொண்டு சிந்திக்காமல்
கண்முடித்தனமாய்
நம்ப வேண்டியவை ஆகின்றனவா
இல்லையா? இது மனிதர்
என்பவர்களுக்கு ஏற்றதா
என்று கேட்கிறேன். இதற்காகக்
கோபிப்பதில் பயன் என்ன?
மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால்
மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட
கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய
முடியும்? அறிவுள்ளவர்களே!
பகுத்தறிவாதிகளே!
சிந்தித்துப்பாருங்கள்! இது சந்திர
மண்டலத்திற்கு
மனிதன் போய் வரும் காலம்;
காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே
சிந்தித்துப்பாருங்கள்! பின் சந்ததி
மக்களை மடையர்களாக்காதீர்கள்!
--------------14-06-1971 "உண்மை" இதழில்
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய
தலையங்கம். "பெரியார் களஞ்சியம்" -
தொகுதி: 2 … பக்கம்:57-62

பெரியார் போராட்டப் பாதையில் நான்



அய்ரோப்பா கண்டத்தை எடுத்துக் கொண்டால், நாட்டினுடைய விழிப்பிற்கு 50 ஆண்டுகள் - அமைந்த ஆட்சியை மாற்றுவதற்கு 50 ஆண்டுகள் - என்ற அளவில் ஒரு பகுத்தறிவு மனப்பான்மை யைத் தோற்றுவிப்பதற்காக ஒரு வால் டேர், ஒரு ரூஸோ இப்படித் தொடர்ச்சி யாகப் பலர் வந்து இரண்டு மூன்று நூற்றாண்டுகள் பாடுபட்டுத்தான் பகுத்த றிவுப் பாதையில் அந்த நாடுகள் செல்ல முடிந்தன. இப்படி இரண்டு நூற்றாண்டு களில் செய்யவேண் டிய காரியங்களைப் பெரியார் அவர்கள் இருபதே ஆண்டு களில் செய்து முடிக்க வேண்டுமெனக் கிளம்பினார்கள்; திட்டமிட்டார்கள்; அந்தத் திட்டத்தின் அடிப்படையில் பணி யாற்றிக் கொண்டு வருகிறார்கள். ஆங்கி லத்தில் சொல்லுவார்கள், “றிuttவீஸீரீ நீமீஸீtuக்ஷீவீமீs வீஸீ tஷீ நீணீஜீsuறீமீs” என்று சில மருந்துகளை உள்ளடக்கிச் சில மாத் திரை களிலே தருவதுபோல, பல நூற்றாண் டுகளை இருபது ஆண்டுகளில் அடைத்து அவர்கள் தம்முடைய வாழ்நாளிலேயே சாதித்துத் தீரவேண்டுமென்று அறிவோ டும், உணர்ச்சியோடும், நெஞ்சின் ஊக்கத் தோடும் யார் வருகிறார்கள், யார் போகி றார்கள் - என்பதைக்கூட இரண்டாந் தரமாக வைத்துக்கொண்டு - எந்த அளவு முன் னேறுகிறோம் என்பதைக் காண்பதி லேயே அவர்கள் வாழ்க்கை முழுவதும் போராட் டக்களத்தில் நின்றிருக்கிறார்கள்.

அந்தப் போராட்டக் களத்தில் பெரியார் அவர்கள் நின்றிருந்த நேரத்தில், சில பகுதி களில் நான் உடனிருந்து பணியாற்ற வாய்ப் புக் கிடைத்தமைக்காக மகிழ்ச்சியடைகி றேன். நான் கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் முதலில் அவர்களிடத்தில்தான் சிக்கிக்கொண் டேன். நான் சிக்கிக்கொண் டது வாலிபப் பருவத்தில்! எங்கெங்கோ போய்ச் சிக்கிக் கொண்டிருக்க வேண்டி யவன், அவர்களி டத்தில் தான் முதன் முதலில் சிக்கிக் கொண்டேன். நான் காஞ்சிபுரத்தில் கல்லூரியில் படித்த படிப்பையும், அதன் மூலம் என்னென்ன எண்ணங்கள் ஏற்படுமோ அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, ஈரோட்டில் போய்க் குடி யேறினேன்.

எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. இதுபற்றி என்னுடைய பாட்டியார் அப் போது அவரை ஒத்த மூதாட்டிகளோடு பேசும்போது அடிக்கடி சொல்லுவார்கள். ஆறுமாதம், அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காஞ்சிக்குச் செல்கிற நேரங்களில் அவர்கள் என்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல் லும்போது, “யாரோ ஈரோட்டிலிருந்து வந்த ஒருவன் என்னுடைய பிள்ளையைப் பிடித்துக்கொண்டு போய்விட்டான்” என்று பேசுவார்கள். அவர்களே ஒரு தடவை காஞ்சிபுரத்தில் ஆடிசன் பேட்டையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பெரியார் அவர்களுடைய பேச்சைக் கேட்டபிறகு சொன்னார்கள் - என்னைப் பார்த்து, “நீ ஈரோட்டிலேயே இரு” என்று. இத்தனைக்கும் அவர்களுக்கு அதிகமாகப் படிப்பு அறிவு இல்லை .

எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால், தொடக்கத்தில் அவர்களிடத்தில் இருந்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்சிகள் பலப்பல இருக்கின்றன; என்னுடைய வாழ்நாள் முழுவதும் எண்ணி எண்ணி மகிழத்தக்கவை அவை. இப்போது எனக்கு கிடைக்கக் கூடியது என்று எந்தப் பட்டிய லைக் காட்டினாலும் நான் ஏற்கெனவே பெற்றிருந் ததைவிட இவை யெதுவும் மகிழ் ச்சியிலோ பெருமை யிலோ நிச்சயமாக அதிகமானதாக இருக்க முடியாது.

- அறிஞர் அண்ணா

- - - - -

திராவிடத்தின் விடிவெள்ளி!

ஆம்! தென்னகம், திராவிடம் என்பது நிலைநாட்டப்பட்ட, சென்னை மாநிலம் ‘தமிழ்நாடு’ என்று பெயர் பெற, இந்தித் திணிப்பும், ஆதிக்கமும் ஓரளவில் நிறுத் தப்பட, திருக்கோயில் ஆண்டவர்கட்குத் தமிழும் ஏற்புடையதாக்கப்பட, புரோகித ஆதிக்கச் சட்டம் நொறுங்கிப்போக, நமை ஈன்ற தமிழ் செம்மொழித் தகுதி பெறுவதற்கான அடிப்படை, அமையப் பலவழியிலும் போராடும் துணிவைத் தந்தவர் திராவிடத்தின் விடிவெள்ளி தந்தை பெரியார் அன்றோ!

பெரியார் மட்டும் தோன்றியிராவிடில்....

நாமெல்லாம் எண்ணத்தால் எலியாக, முயலாக அல்லவா இருந்திருப்போம்!

புழுவாக, பூச்சியாக, புன்மைத் தேரை யாக அல்லவா எண்ணப்பட்டிருப்போம்!

இழிகழுதையாக, ஏரினில் கட்டிய மாடுகளாக அல்லவா நடத்தப்பட்டிருப் போம்!

நரியாக, பன்றியாக நடத்தினாலும் ஏன் என்று கேட்கும் துணிவின்றியல்லவா கிடந்திருப்போம்! ஜீனீ

இந்த நாட்டில் நாம் அந்நிய (ஆங்கி லேய) ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றோமென்றாலும், உள்நாட்டிலேயே தயாரான வைதிகக் கைவிலங்கு உடைக் கப்படாத நிலையிலும், மத மயக்க மருந்து தெளியாத நிலையிலும், சுயநினைவும், அறிவின் செயற்பாடும் இழந்த நடைப் பிணங்களாக அன்றோ உலவி இருப் போம்?

ஜாதிப் பித்தம் தெளிய மாமருந்து!

இந்த உண்மையை எண்ணிப்பார்க்கும் ஒரு கணம் எவரும் துணுக்குறாமல் இரார்! ஆம். அந்த இழிநிலையை மாற்றுவதற்கு - ஜாதிப்பித்தம் தெளிவதற்கு மாமருந்து கண்டவர்தான் தந்தை பெரியார். அத னால்தான் அண்ணா சொன்னார், “திராவி டத்தின் வாழ்வில் தந்தை பெரியார் ஒரு சகாப்தம்” என்று. அஞ்சா நெஞ்சமும், குழப்பமற்ற தெளிவும், அசையாத துணிச் சலும், அயராத உழைப்பும், எதையும் வரையறுத்துச் சிந்திக்கும் கூர்த்த மதியும், ஓயாது எண்ணி , நாளும் எழுதியும், பேசியும், பாடுபடும் ஆர்வம் வாய்ந்த பெரியாருக்கு ஈடும், இணையும் அவரே யன்றோ! தமிழ் மண்ணில் அவர் தோன்றா ததொரு நிலை அமைந்திருப்பின் அது எண்ணிப் பார்க்கவும் இயலாத இருள் நிலை அன்றோ!

- பேராசிரியர் க.அன்பழகன்,

நூல்: 'இவர்தாம் பெரியார்'

- - - - -

இது சுதந்திரத்தால் ஆகாது சுயமரியாதையால் தான் ஆகும்

தமிழர்களின் ஈராயிரமாண்டுச் சமு தாய வரலாற்றில் அங்கொன்றும் இங் கொன்று மாய் அறச்சீற்றங்கள் பதிவான துண்டு. “இரந்தும் உயிர் வாழ்தல் வேண் டின் பரந்து கெடுக உலகியற்றியான்” என்ற வள்ளுவர் குறள் வெறும் இலக் கியச்சினமாகவே வடிந்துவிட்டது.

“பறைச்சியாவ தேதடா?

பனத்தியாவ தேதடா?

இறைச்சி, தோல், எலும்பினுள் இலக்க மிட்டிருக்குதோ”

என்ற சிவவாக்கியம் வெறும் ஆன் மிகக் கோபமாகவே அடங்கிவிட்டது.

இவைபோன்ற கவிதைச்சினங்க ளெல்லாம் இலைகளின் மீது பூச்சிமருந்து தெளித்தனவே தவிர, வேர்ப்புழுக்களைச் சென்று விசாரிக்கவேயில்லை. அந்த வகை யில் தமிழ்ப் பெரும்பரப்பில் அநீதி யின் ஆணிவேர்களை அசைத்ததும் சமுகக் கேடுகளின் அடிவேர்களைக் கெல்லியதும் வருணாசிரமத்தின் கிளை களை வகிர்ந்ததும் பெரியாரின் பெருங் கோபம் மட்டும் தான்.

ஒரு மனிதன் கைநீட்டிப் பேசுகிறான்; ஒரு மனிதன் கைகட்டிப் பேசுகிறான். உற்றுப்பார்த்தால் ஒருவன் “பிராமணன்” இன்னொருவன் “சூத்திரன்”.

மாடத்தில் ஒருவனுக்குக் காலுக்கும் தலையணை. மண்குடிசையில் ஒருவனுக் குக் கையே தலையணை. உற்றுப்பார்த் தால் ஒருவன் செல்வந்தன்; இன்னொ ருவன் வறியவன். ஒருவன் அழுக்குப் படாமல் பொரு ளீட்டுகிறான்; இன்னொரு வன் புழுதியிலும் சகதியிலும் பொருள் தேடுகிறான். உற்றுப் பார்த்தால் ஒருவன் கற்றவன்; இன்னொ ருவன் கல்லாதவன்.

ஓர் உடல் கட்டற்ற சுதந்திரத்தை அனு பவிக்கிறது. இன்னோர் உடல் கட்டுண்டு கிடக்கிறது. உற்றுப்பார்த்தால் ஓர் உடல் ஆண்; இன்னோர் உடல் பெண்.

“பிராமணன் - சூத்திரன்”, “ஏழை - பணக்காரன்”, “கற்றவன் - கல்லாதவன்”, “ஆண் - பெண்” ஆகிய பேதங்களே மனித குலத்தின் முற்போக்குக்கும் முன் னேற்றத் திற்கும் தடையாயின.  இவற்றைக் கட்டமைத்த - கட்டிக்காக்கிற எல்லா நிறுவனங்களையும் உடைப்பதுதான் என் ஒரே வேலை என்று பேராக்கம் கருதிப் பேரழிவு செய்யப் போந்தவர்தாம் பெரியார். இது சுதந்திரத் தால் ஆகாது சுயமரியாதையால்தான் ஆகும் என்ற தொரு முற்றிய முடிவெடுத்து அரசிய லைத் துறந்த ஒரு சமூகத் துறவிதான் பெரியார்.

- கவிப்பேரரசு வைரமுத்து,

'கருஞ்சூரியன்'

 -விடுதலை ஞாயிறு மலர் 19 10 19

 

 

உண்மையான தமிழர்கள் (திராவிடர்கள்) தீபாவளி கொண்டாடக் கூடாது!

தீபாவளிப் பண்டிகை வரப்போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையை கொண்டாடப் போகின்றீர்களா?  என்பதுதான் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே சிறிதும் யோசனையின்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவமின்றி, சுயமரியாதை உணர்ச்சியின்றி சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக்கொள்ளுகின்றீர்களே யல் லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தை களையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலை யும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே அல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும் ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்துவரும் பழக்கம் என்கின்ற தான வியாதிக்கு இடங்கொடுத்துக்கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே அல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவை சிறிதுகூட செல வழிக்கச் சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாரா யிருக்கின்றீர்கள்.

சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்கத் தயங்குகிறீர்கள்.

அது விஜயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையி லிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது?

புராணக் கதைகளைப்பற்றி பேசினால் கோபிக்கிறீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்ளு கின்றீர்கள். எல்லாருக்கும் தெரிந்தது தானே; அதை ஏன் அடிக்கடி கிளறுகின்றீர்கள். இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா என்று கேட்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்குள்ள அறுபது நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்கள் ஆவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள். பண்டித, பாமர, பணக்கார ஏழை சகோதரர்களே!

அன்பர்களே! சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை என்று ஒன்று வரப்போகின்றது. இதைப் பார்ப்பனரல்லாத மக்களில் 1000-க்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள்.

தீபாவளிப் பண்டிகையைப் பெரிதும்  கொண்டாடப்போகின்றீர்கள். பொதுவாக எல்லோரும் - அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர் களும், பண்டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாத தானதுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடுவீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம் வாங்கி அதைப் பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்துகொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும் பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுக்காகக் கடன்படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன்படவேண்டியிருக்கின்றது என்பதுமான விஷயங்களொருபுற மிருந்தாலும், மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, அறிவியல்(சைன்ஸ்) பொருத்தமோ சொல்லுவதானாலும், தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும்  காரணம் (சமாதானம்) சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவிற்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது.

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக் கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இம்மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமா என்று கேட்கின்றோம்.

மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங் களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர் களைவிட,  பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத் தனமாகவும். பட்டணங்களில் இருப்பவர்களைவிட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூடசிகாமணிகளாகவும் இருந்து வருவதையும் பார்க்கின்றோம்.

உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, அவிட்டம் முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்தரங்களைவிட நகரங்களில் அதிக மாகவும். மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க் கின்றோம்.

இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக. ஏன் கொண் டாடுகின்றோம் என்பதே தெரியாதவர் களாகவேயிருக்கின்றார்கள்.

சாதாரணமாக மூடபக்தியாலும் குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ்நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லிவிடலாம்.

ஏனெனில், இன்றைய தினம் சென்னையில் எங்கு போய்ப் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணை யிலும் சரீரமில்லாத ஒரு தலைமுண்ட உருவத்தை வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயண காலட்சேபங்களும், பெரிய புராணக் காலட்சேபங்களும், பொதுஸ்தாபனங் கள் தோறும் கதாகாலட்சேபங்களும் நடை பெறுவதையும் இவற்றில் தமிழ்ப் பண்டிதர்கள் ஆங்கிலம் படித்த பட்டதாரிகள் கவுரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப் பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டி ருப்பதையும் பார்க்கலாம்.

பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத் தார்கள்தான் ஆரியர் வேறு தமிழ் வேறு என்பாரும், புராணங்களுக்கும் திராவிடர் களுக்கும் சம்பந்தமில்லை என்பாரும், பார்ப்பனர் சம்பந்தம் கூடாது என்பாரும், பார்ப்பனரல்லாத சமுகத்தாருக்கு நாங்கள்தான் பிரதிநிதிகள் என்பாரும், மற்றும் திராவிடர்கள் பழைய நாகரிகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள்.

ஆகவே, இம்மாதிரியான விஷயங்களில் படித்தவர்கள் பணக்காரர்கள் உத்தியோ கஸ்தர்கள் என்கின்றவர்கள் போன்ற கூட்டத் தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்தமான காரியங்கள் எதிர்பார்ப்பதைவிட, பிரசாரம் செய்வதைவிட உலக அறிவு உடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதே, பிரசாரம் செய்வதே பயன் தரத்தக்கதாகும்.

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண் டாடவோ கூடாது என்றே ஆசைப்படு கின்றோம்.

(குடிஅரசு -  16.10.1938)

 - விடுதலை நாளேடு 25 10 19

வியாழன், 24 அக்டோபர், 2019

ஜாதியை ஒழிப்பதால் மதம் அழிந்து விடுமா?(1)

ஓர் சமதர்மி

இந்துக்களுக்குள் இன்றைய பழக்கங்களில் உள்ள ஜாதிப் பிரிவுகளுக்கு இந்து மதத்தில் ஏதாவது ஆதாரமிருக்கின்றதா என்று பார்ப் போமானால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்து வேதத்தில் பிராமணன் பிராமணரல்லாதார் என்கின்ற ஜாதிகள் தான் காணப்படுகின்றது. ரிக் வேதத்தில் ஓரிடத்தில் நான்கு ஜாதிகள் கூறப்பட்டிருப்பதாகவும், அதுவும் இடையே பிற்காலத்தாரால் நுழைக்கப்பட்டதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

அந்த இரண்டு ஜாதியும் எப்படித் தெரிகின்றது என்று பார்ப்போமேயானால் பிராமணர்கள் இந்திரன் முதலிய தேவர்களிடம் செய்யும் பிரார்த்தனைகளில் தஸ்யூக்கள் என்ற ஒரு சமுகம் அந்த பிராமணர்களுக்கு விரோத மாய் இருந்து அவர்களைத் துன்பப்படுத்து வதாகவும், அவர்கள் பிராமணர்களுடைய சுகபோகங்களுக்கு விரோதமாய் இருப்ப தாகவும், ஆதலால் அந்த தஸ்யூக்களை அழிக்க வேண்டுமென்றும் பிரார்த்திப்பதே பெரிதும் அந்தப் பிரார்த்தனையில் இருந்து வருவதால் அப்பிரார்த்தனைகளே வேதத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருப்பதால் வேத காலத்திலும், வேத ஆதாரத்திலும் இந்தியாவில் ஆரியர், ஆரியர் அல்லாதார் என்கின்ற இரண்டு ஜாதிகள் மாத்திரமே இருந்ததாக விளங்கு கின்றது.

ஆகவே, ஜாதிப் பிரிவுகளுக்கு ஏதாவது ஆதாரங்கள் வேண்டுமானால் அவை மனுதர்ம சாஸ்திரம், பராசரர் ஸ்மிருதி ஆகிய பார்ப்பனர்களால் செய்யப்பட்ட ஆதாரங்களே முற்பட்டவை எனலாம்.

அவற்றிலும்கூட பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் அதாவது குரு, அரசன், முதலாளி, தொழிலாளி எனப்பட்ட நான்கு ஜாதிகள்தான் காணப்படுகின்றனவே தவிர, இன்றுள்ள ஆயிரக்கணக்கான ஜாதிகளுக்கு மனு தர்ம சாஸ்திரத்திலும் ஸ்மிருதியிலும் ஆதாரங்கள் காணக்கிடைப்பதில்லை.

அவைகளில் வேறு சில ஜாதிப் பிரிவுகளும் காணப்படுகின்றனவே என்று சொல்லப் படுமானால் அவை முற்கூறிய பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்கின்றதான 4 பிரிவுகளும் கலந்து போகாமல் இருப்பதற்கும், கட்டுப்பாடாக இருப்பதற்கும், கலப்படம் ஏற்படுத்து வதையும், ஏற்படுவதையும் மக்கள் வெறுக்கவுமான பந்தோபஸ்துக்காக கலப் படத்தினால் பிறந்த மக்களுக்கு பலவகை இழி வான பெயர்கள் கற்பிக்க ஏற்படுத்தின முறையில் வேறு சில ஜாதிப் பெயர்கள் காணப்படலாம்.

ஆனால், அவற்றிற்கும் இன்றுள்ள ஜாதிப் பிரிவுகளுக்கும் சம்பந்த மில்லை. இது தவிர வேறு ஜாதிகள் இருப்பதாகக் காணப்படு மானால் அவை தேசம், நிலம், பாஷை ஆகியவை களைக் குறிக்கும் முறையில் இருக்கலாமே ஒழிய பிறவியைக் குறிக்கும் முறையில் காணப்படுவது அதிசயமாகவே இருக்கும்.

மற்றபடி இன்று பிரத்தியட்சத்தில் பழக்கத்தில் உள்ள ஜாதி பாகுபாடுகளுக்கு எங்காவது ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்போமானால் அவை புராணங் களில் தான் காணப் படுகின்றன.

புராணங்கள் என்று சொல்லப்பட்டவைகள் பெரிதும் கற்பனைகள் என்பதும், அவை ஏற்படுத்தப்பட்டதின் கருத்தெல் லாம் பார்ப்பனர் களுக்கு உயர்வைக் கற்பிக்கவும், அவர்களுக்கு மற்ற மக்கள் மீது எப்பொழுதும் ஆதிக்கம் இருந்து வரவும், பொருளாதாரத் துறையில் பார்ப்பனர்களுக்கு பாடுபடாமல் செல்வம் வந்து சேரவுமான மார்க்கம் ஏற்படவும் கருத்துக் கொண்டேயாகும்.

இந்தக் கருத்துக்கள் புராணக் கற்பனையில் மாத்திரமல்லாமல் ஸ்மிருதிகள் ஏற்படுத்து வதிலும் இருந்திருக்கின்றன என்பதற்கு மனு நூலில் ஏராளமான அத்தாட்சிகள் இருக் கின்றன.

தந்தை பெரியார்

பொன்மொழிகள்

ஒரு தென்னாட்டான் வடநாட்டில் மகாத் மாவாக முடியாதபோது, ஒரு தென்னாட்டான் இந்தியாவின் முதன்மந்திரியாயிருக்க முடியாதபோது, ஒரு தென்னாட்டு இராம லிங்க சுவாமியும், திருவள்ளுவதேவரும் வடநாட்டானால் போற்றப்படாதபோது - இங்குக் காந்தியாரை மகாத்மா வென்றும், இராமகிருட்டினரை பரம அம்சரென்றும், சாயிபாபாவை அற்புத புருடரென்றும் தென்னாட்டவர்கள் போற்றி வருவார் களாயின் இவர்களின் இனஉணர்வு அற்ற தன்மைதான் இதற்குக் காரணமாகும்.

 - விடுதலை நாளேடு 18 10 19

மூட சிகாமணிகளே சிந்திப்பீர்! தீபாவளி பண்டிகை


-தந்தை பெரியார்

நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மை தத்துவ மின்றி, சுயமரியாதை உணர்ச்சி இன்றி, சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்-பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்தையும், கண்டு மயங்கி அறி விழந்து ஓலமிடுகின்றீர்களேயல்லாமல், மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம் என்கின்றதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப் போல் துடிக்கின்றீர்களேயல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செல வழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயி ருக்கிறீர்கள். சுதந்திரத்தையும், சமத்துவத் தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூட பயன் படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின் றீர்கள்? இந்நிலை-யிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்ப னரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத் திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக் கணக்கான மக்கள் ஞானமற்று, மானமற்று கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.

புராண கதைகளைப் பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்; அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்ளுகின்றீர்கள். எல்லாருக்கும் தெரிந்தது தானே! அதையேன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட் கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி, மூச்சுவிடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர் களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை, கொண்டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற் றிற்காக எவ்வளவு பணச் செலவும், நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப் பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர் களாவீர்களா? வீணாய் கோபிப்பதில் என்ன பிரயோஜனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லு கின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி, அவர் களது கண்ணையும், மூக்கையும், தாடியை யும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய் என்றால் அதற்கு நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன் என்று பதில் சொல்லி விட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப் பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள். துணி தேவை இருக்கின்ற வர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்-கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், பயனற்ற துமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம் பிச்சை என்று வீடுவீடாய், கூட்டங்கூட்டமாய்ச் சென்று, பல்லைக் காட்டி கெஞ்சி, பணம் வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர் விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து, அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து, அவைகளில் பெரும் பாகம் கண்டவர்களுக்கு கொடுப் பதும், வீணாக்குவதும் ஆறு: இந்தச் செலவு களுக்காக கடன் படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருப்பது என்பதும், பட்டாசு வெடிமருந்து ஆகியவை களால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொரு புறமிருந் தாலும் மற்றும் இவைகளுக் கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்த சைன்ஸ் பொருத் தமோ சொல்லுவதானாலும், தீபாவளி பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிது கூட எந்த விதத் திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதை யை அஸ்திவார மாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்தவிதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அனுபவத் திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது.

பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லா வற்றை யும் பொய்யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது.

அப்படியிருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பன்னாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத் திரம் மக்கள் இந்த நாட்டில், இந்தக் காலத்தில், இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய் தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன். அவனது இரண்டாவது பெண்-ஜாதியாகிய சத்தியபாமை ஆகியவை களாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை-யிருந்தாலும், இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டு-மென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம். பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமூகக்காரர்களென்றும், கலை களிலும் ஞானங்களிலும், நாகரிகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும், தட்டிப் பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்ட மாய்ப் பேசிவிட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ காளை மாடு கன்று போட்டிருக்கின்றது என்றால் உடனே கொட்டத்தில் கட்டி பால் கறந்து கொண்டுவா என்று பாத்திரம் எடுத்துக் கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர் களுக்குள்ளும், பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய, காளைமாடு எப்படி கன்றுப் போடும் என்று கேட்கின்ற மக்களை காண்பது என்பது அரிதாகவே இருக்கின்றது.

மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங் களிலும் கிராமாந்திரங்களில் இருப்பவர் களைவிட, பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத் தனமாகவும், பட்டணங் களில் இருப்பவர்களை விட சென்னை முத லான பிரதான பட்டணங்களில் இருப்ப வர்கள் பெரிதும் மூடசிகாமணி களாகவும் இருந்து வருவதைப் பார்க் கின்றோம்.

- குடிஅரசு -  01.11.1936

 - விடுதலை நாளேடு 24 10 19

புதன், 23 அக்டோபர், 2019

தீ நாள்!

- தந்தை பெரியார்

என்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை  பூலோகப் பிராமணர்களை எல்லாம் கொடுமைப்படுத்தினானாம். இதனால் தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.

செத்துப் போனதைப் பூலோக மக்கள் எல்லாரும் கொண்டாடிக் களிப்படைய வேண்டுமென்று செத்துப்போன அந்த அசுரன் கேட்டுக் கொண்டானாம். அந்தப் படியே ஆகட்டும் என்று மகாவிஷ்ணு திருவாய் மலர்ந்தாராம். ஆகவேதான் தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாடு கிறோம்; கொண்டாட வேண்டும் என்று இன்றைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு ஆதாரமான இந்தக் கதையின் பொய்த் தன்மையையும், இதனால் இந்த நாட்டு மக்களுடைய மானம்  சுயமரியாதை எவ்வாறு அழிக்கப்பட்டு வருகின்றன என்பதையும், இந்த அர்த்தமற்ற பண்டிகையால் நாட்டுக்கு எவ்வளவு பொருளாதாரக்கேடும் சுகாதாரக்கேடும் உண்டாகிறது என்பதைப் பற்றியும் சுயமரி யாதை இயக்கம் தோன்றிய நாளிலிருந்தே விளக்கப்பட்டு வருகிறது.

சுயமரியாதைக்காரர்கள்  திராவிடர் கழகத்தார்களுடைய இந்த விளக்கம், தவறானது என்றோ, நியாயமற்றதென்றோ, உண்மைக்கு அப்பாற்றட்டதென்றோ எப்படிப்பட்ட ஒரு பார்ப்பனன் கூட இன்றுவரை மறுத்தது கிடையாது. ஆனால் எல்லாப் பார்ப்பனர்களும் கொண்டாடத் தான் செய்கிறார்கள். பார்ப்பனர் அல்லாத வர்களிலும் பலர் கொண்டாடத்தான் செய்கிறார்கள். ஏன்?

பூமியைப் பாயைப்போல் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் ஒருவன் நுழைந்துகொள்ள முடியும் என்பதை எந்தப் பஞ்சாங்கப் புரோகிதன்கூட ஏற்றுக்கொள்ள மாட்டான்.

ஆனால் பஞ்சாங்க நம்பிக்கையுடை யவன் மட்டுமல்ல, பஞ்சாங்கத்தையே பார்க்காத  நம்பாத பார்ப்பனரிலிருந்து பூகோளத்தைப் பற்றிப் போதனைசெய்யும் பேராசிரியர்கள் வரை கொண்டாடி வருகிறார்களே ஏன்?

மகாவிஷ்ணு (?) பன்றியாக வேஷம் போட்டுக் கொண்டுதான் கடலுக்குள் நுழைய முடியும்! சுருட்டியிருந்த பூமியை அணைத்து தூக்கிவரும் போதே மகா விஷ்ணுக்கு காமவெறி தலைக்கேறி விடும்! அதன் பலனாக ஒரு குழந்தையும் தோன்றிவிடும்! அப்படிப் பிறந்த குழந்தை ஒரு கொடிய அசுரனாக விளங்கும்! என்கிற கதையை நம் இந்துஸ்தானத்தின் மூலவிக்கிரகமான ஆச்சாரியாரிலிருந்து ஒரு புளியோதரைப் பெருமாள் வரை யாருமே நம்பமாட்டார்கள்  நம்ப முடியாது.

ஆனால் இப்படி நம்பாத விஷ்ணு பக்தர்கள் முதல், விஷ்ணுவுக்கு எதிர் முகாமிலுள்ளவர்கள் வரை இந்த நாட்டில் கொண்டாடி வருகிறார்கள்.

ஏன்? சுயமரி யாதை இயக்கத்தின் தீவிரப் பிரசாரத்தினால், இன்று திராவிட நாட்டி லுள்ள பல ஆயிரக்கணக்கான திராவிடத் தோழர்கள் இந்த மானமொழிப்புப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்றாலும், படித்தவன்  பட்டதாரி  அரசியல் தந்திரி  மேடைச் சீர்திருத்தவாதி என்பவர் களிலேயே மிகப் பலபேர் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றார்கள் என்றால், இந்த அறிவுக்குப் பொருத்தமற்ற கதையை ஆதாரமாகக் கொள்கிறார்கள் என்றால் இவர்களுடைய அறிவுக்கும் அனுபவத் துக்கும் யார்தான் வயிற்றெரிச்சல் படாமல் இருக்கமுடியும்? ஆரியப் பார்ப்பனர்கள், தங்களுக்கு விரோதமான இந்நாட்டுப் பழங்குடி மக்களை  மக்களின் தலைவர்களை அசுரர்கள்  அரக்கர்கள் என்கிற சொற்களால் குறிப் பிட்டார்கள் என்பதையும், அப்படிப் பட்ட தலைவர்களுடைய பிறப்புகளை மிக மிக ஆபாசமாக இருக்கவேண்டும் என்கிற ஒன்றையே கருத்தில் கொண்டு புழுத்துப் போன போக்கினின்றெல்லாம் எழுதி வைத்தார்கள் என்பதையும், இந்த நாட்டுச் சரித்திரத்தை எழுதிவந்த பேராசிரியர்களில் பெரும்பாலோரால் நல்ல முறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இருந்தும் அந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுப்போக, இந்த நாட்டு அரசாங்கமும்  அதன் பாதுகாவலரான தேசியப் பார்ப்பனர்களும் இன்றைக்கும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய் கிறார்கள் என்றால் அதை எப்படித் தவறு என்று சொல்லிவிட முடியும்? திராவிடப் பேரரசன் (வங்காளத்தைச் சேர்ந்த பிராக ஜோதிஷம் என்ற நகரில் இருந்து ஆண் டவன்) ஒருவனை, ஆரியர் தலைவனான ஒருவன், வஞ்சனையால், ஒரு பெண்ணின் துணையைக் கொண்டு கொன்றொழித்த கதைதான் தீபாவளி.

இதை மறைக்கவோ மறுக்கவோ எவரும் முன்வர முடியாது. திராவிட முன்னோர்களில் ஒருவன், ஆரியப் பகைவனால் அழிக்கப் பட்டதை, அதுவும் விடியற்காலை 4 மணி அளவுக்கு நடந்த போரில் கொல்லப்பட்டதை அவன் வம்சத்தில் தோன்றிய மற்றவர்கள் கொண்டாடுவதா? அதற்காக துக்கப்படுவதா?

திராவிடர் இன உணர்ச்சியைத் தொலைக்க, ஆரிய முன்னோர்கள் கட்டிய கதையை நம்பிக்கொண்டு, இன்றைக்கும் நம்மைத் தேவடியாள் பிள்ளைகள் எனக் கருதும் பார்ப்பனர்கள் கொண்டாடு வதிலாவது ஏதேனும் அர்த்தமிருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், மானமுள்ள திராவிடன் எவனாவது இந்த பண்டிகையைக் கொண்டாடலாமா? என்று கேட்கிறோம்.

தோழர்களே! தீபாவளி திராவிடனின் மானத்தைச் சூறையாடத் திராவிடனின் அறிவை அழிக்கத் திட்டமிடப்பட்ட தீ நாள்! இந்தத் தீ நாள் திராவிடனின் நல்வாழ்வுக்குத் தீ நாள்.

இந்தத் தீயநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொள்வதா? யோசியுங்கள்!

குடிஅரசு , 15.10.1949

தீபாவளி தேவையா?

வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, சயின்ஸ் பொருத்தமோ - சொல்லுவதா னாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப் படுகிறது? - என்கின்றதான விஷயங் களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த 10 கோடியும் அனாவசியமாய் - துணி வாங்கிய வகை யிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும் கரியுமாக ஆக்கிய வகையிலும் செலவாகி இருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழை மக்கள்  கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசன் முதலிய வெறி தரும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந் திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்துபோயிருந்த - சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனதில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு அவர்களுடைய செல்வ மும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.

இவ்வளவு மாத்திரமல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய்த் தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப் பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு? தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப் பின் சில நாட்களும், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்கள் படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு? அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?

(குடிஅரசு,  22.11.1931)

- விடுதலை நாளேடு 23 10 19

செவ்வாய், 22 அக்டோபர், 2019

தீபாவளிக் கொள்ளை நோய்

* தந்தை பெரியார்

ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வரும் பெரிய கொள்ளை நோய் சமீபத்தில் வரப் போகிறது. மக்களுடைய  உயிரைக் கவர்ந்து செல்லும் கொள்ளை நோயானால் கூட அதிகக் கஷ்டமில்லை. ஆனால் மக்களை உயிரோடு வைத்து அவர்களுடைய இரத் தத்தையும், செல்வத்தையும், அறிவையும் உறிஞ்சி விடும். கொள்ளை நோய்களுக்கே அதிகமாக அஞ்ச வேண்டும். அத்தகைய கொள்ளை நோய்கள் இந்து மதத்தில் ஏராளமாக இருக்கின்றன. இவைகளில் எல்லாம் மிகவும் பெரியதாகிய கொள்ளை நோய் தான் இவ்வாரத்தில் வருகிறது. அக்கொள்ளை நோய் தீபாவளிப் பண்டிகையேயாகும். ஆகையால் எல்லா மக்களையும் ஜாக்கிரதையாயிருக்கும்படி எச்சரிக்க வேண்டும். என்பதற்காகவே  நாம் அக்கொள்ளை நோயின் கொடுமைகளை எடுத்துக் காட்ட முன் வந்தோம்.

இந்தியர்கள் அவர்களுக்குள்ளும் இந்துக்கள் என்பவர்கள் மற்ற சமூகத்தாரைக் காட்டிலும் செல்வத் திலும், அறிவிலும், வீரத்திலும் தாழ்ந்து அடிமை மனப்பான்மை மிகுந்தவர்களாயிருப்பதற்குக் காரணம் இந்துமதமும்  அதன்மூலம் ஏற்பட்டுள்ள பண்டிகை களுமே என்பதை நமது இயக்கம் நன்றாய் விளக்கி காட்டியிருக்கின்றது. இந்து மதமும், இந்து மதத்தின் பேரால் ஏற்பட்டு வழங்கிவரும் பண்டிகைகளும் இல்லாதிருக்கு மானால், நமது மக்கள் எவ்வளவோ உயர்ந்த நிலையிலும், சுதந்திரமுடையவர்களாகவும் அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் அய்யமில்லை. இன்று மதத்தையும், மதப் பண்டிகை களையும் லட்சியம் பண்ணாமல் தங்கள் சொந்த புத்தியின் வழியே நடந்து, இவ்வுலகத்தில், சுகமாக வாழ்வதற்கு வழியைக் கண்டு பிடிப்பதில் முனைந்து  நிற்கும் மக்களே பகுத்தறிவு உடையவர்களாகவும், அடிமைத் தன்மை இல்லாதவர்களாகவும், தரித்திரமில் லாதவர்களாகவும் வாழ்வதை நாம் கண்கூடாகக் காணக்கூடிய  நிலைமையிலிருக்கிறோம். இருந்தும் நமது நாட்டு முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதாக ஆர்ப்பாட்டம் புரிந்து கொண்டிருக்கும் எவரும், மற்ற நாட்டு மக்கள் சுதந்திரமடைவதற்குக் கைக்கொண்ட உண்மையான வழிகளைப் பற்றிச் சிந்திக்கவோ அது பற்றி நமது மக்களிடையே  பிரச்சாரம் பண்ணவோ முன் வராமலிருக்கின்றனர். ஆனால் நாம் மாத்திரம் ஆதி முதல், இந்து மதமும், இந்து மதப் பண்டிகைகளும் ஒழிந்தாலொழிய நமது மக்கள், செல்வத்திலோ,

அறிவிலோ, சமத்துவத்திலோ, ஒரு நாளும் முன்னேற முடியாது என்று சொல்லி வருகிறோம்.

இப்பொழுது நமது கண்முன் நிற்கும்  தீபாவளிப் பண்டிகையை எடுத்துக் கொள்ளுவோம். இப் பண்டிகையினால், நமது நாட்டு மக்களுக்கு உண்டாகும் பொருள் நஷ்டம் சரீரத் துன்பம் எவ்வளவு? அன்றியும் சிறுகுழந்தைகள் முதல், வயதானவர்கள் வரையுள்ள எல்லோர் மனத்திலும் பதியும் மூட நம்பிக்கை எவ்வளவு? இவற்றை எல்லாம் ஜன சமூகத்திற்கு எடுத்துக் காட்டி அவர்களைச் சீர்திருத்த எந்த தேசாபிமானியாவது முயற்சி எடுத்துக் கொள் கின்றானா?

முதலில் இப்பண்டிகை களால் மக்களுடைய அறிவு எவ்வாறு மழுங்க வைக்கப் படுகிறது என்பதைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். இதை அறிய வேண்டுமானால் இதன் பொருட்டு அதாவது இப்பண்டிகையை 'தெய்வீக' மானது என்று மக்கள் நம்ப வைக்கும் பொருட்டு ஏற்பட் டிருக்கும் புராணக் கதையை ஆராய்ந்தாலே இதன் உண்மை விளங்கும் ஆதலால் அக் கதையைக் கீழே குறித்துக் காட்டுகிறோம்.

'பூமிதேவி' என்னும் இந்த மண்ணுக்கும், 'மகாவிஷ்ணு' என்று சொல்லப்படும் ஒரு தெய்வத்திற்கும் 'நரகாசுரன்' என்னும் ஒரு மகன் பிறந் தானாம். அவன் அதிக பல சாலியாக இருந்து கொண்டு பார்ப்பனர்களுக்கு துணைவராகிய 'தேவர்கள்' என்பவர்களையெல்லாம் மிகவும் கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தானாம். ஆதலால், தேவர்களெல்லாம், தமிழர்குலமாகிய அசுரர் குலத்தைச் சேர்ந்தவனாகச் சொல்லப்பட்ட 'நரகாசுர'னுடைய கொடுமையைச் சகிக்க முடியாமல் 'மகாவிஷ்ணு' என்னும் அந்தத் தெய்வத்தினிடம் சென்று முறையிட்டார்களாம். மகா விஷ்ணு என்பவரும், அந்த நரகாசுரனைக் கொன்று தேவர்களுடைய கஷ்டத்தை நீக்குவதாகக் கூறினா ராம். அப்பொழுது பூமிதேவி, நரகாசுரனைக் கொல் லும் போது தன்னையும் உடன் வைத்துக் கொண்டே தன் மகனைக் கொல்லும் படி வேண்டிக் கொண்டாளாம். அதற்கு மகா விஷ்ணுவும் சம்மதித்தாராம்.

அதன் பிறகு மகாவிஷ்ணு கிருஷ்ணனாகப் பிறந்து, சத்தியபாமையாகப் பிறந்திருந்த பூமிதேவியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய். ஒரு தீவில்  வசித்து வந்த நரகாசுரனைக் கொன்றானாம். கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்ற போது, அவன், தான் இறந்த நாளை பூமியில் உள்ளவர்கள் கொண்டாட வேண்டுமென்றும் 'வரம்' கேட்டானாம். கிருஷ்ணனும் அவ்வாறே 'வரம்' கொடுத்தானாம்.

இது தான் தீபாவளிப் பண்டிகைகக்காகக் கற்பிக்கப் பட்டிருக்கும் கதை. இக்கதையை நம்பித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் மக்கள் சிறிதாவது புத்தியுள்ள வர்களென்று கூறமுடியுமா? என்பதை நன்றாய் யோசனை செய்துப் பாருங்கள்.

முதலில் நமது  கண்ணுக்குமுன் காணப்படும் இந்த மண் ஒரு பெண்ணாக இருக்க முடியுமா? இரண்டாவது 'மகாவிஷ்ணு' என்று ஒரு தெய்வம் கடைகளில் விற்கும் படங்களில் இருப்பதுபோல, பல பெண்ஜாதிகளுடன், ஒரு குருவியின் மேல் உட்கார்ந்து கொண்டோ, அல்லது பாம்பின் மேல் படுத்துக்கொண்டோ, சமுத்திரத்தில் மிதந்து கொண்டோ இன்று இருப்பதாகக் கூறப்படு வதும், இதற்குமுன் இருந்ததாகச் சொல்லப் படுவதும் அறிவுக்குப் பொருத்தமான செய்தியா?

இப்படிப்பட்ட தெய்வத்திற்கும் மண்ணுக்கும் ஒரு பிள்ளை பிறந்தது என்று சொல்லுவது எவ்வளவு புரட்டு? ஆரம்பமே புரட்டாயிருக்கும் போது மற்றவை களையெல்லாம் எப்படியிருக்குமென்பதை இன்னும் நாம் விரித்துக் காட்ட வேண்டியதில்லை ஆகவே, இத்தகைய அர்த்தமற்ற கதையைத் 'தெய்வீக'முள்ளதாக நம்பிக் கொண்டு, இதன் பொருட்டு ஒரு தேசம் கோடிக் கணக்கான பொருளை ஒரே நாளில் செலவு செய்யு மானால், அதை அறிவுடைய தேசமென்று சொல்ல முடியுமா?

இந்தக் கதையை நம்பியே 'நரக சதுர்த்தி' என ஒரு நாளை குறிப்பிட்டுக் கொண்டு அன்று விடியற் காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து முழுகுவதும், எண்ணெய் பலகாரங்களை வயிறு புடைக்கத் தின்பதும் பட்டாசுக் கட்டுகளைக் கொளுத்துவதுமான செயல் களைச் செய்து பண்டிகை கொண்டாடுகின்றனர்.

இவ்வாறு செய்வதனால் மக்களுக்கு மதப் புரட்டி லும் பண்டிகை புரட்டிலும், புராணப் புரட்டிலும் அவ தாரப் புரட்டிலும் பார்ப்பன வம்சத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பரிசுத்தமானவர்கள், உயர்ந்தவர்கள், தமிழர் வம்சத்தைசேர்ந்தவர்களாகிய அசுரர்கள் அனைவரும் அயோக்கியர்கள், தாழ்ந்தவர்கள் என்னும்புரட்டிலும் நம்பிக்கையுண்டாகி, அவர்கள் அறிவு குன்றிப் போகின்றது. அன்றியும், மக்கள், பண்டி தர்கள், புரோகிதர்கள், மத வாதிகள் என்னும் புரட்டர் களுக்கு இன்னும் அடிமை யாகவே இருக்கக் கூடிய நிலையையும் அடைகிறார்கள் என்பதை யார் மறுக்க முடியும்?

இனி இப்பண்டிகையினால் உண்டாகும் பொருள் நஷ்டத்தையும், சுகாதாரக் குறை வையும் கவனிப்போம். ஏழை முதல் பணக்காரன் வரையுள்ள எல்லா இந்துக் களும் இதையொரு 'தெய்வீக' மான பண்டிகையென்று கருது வதனால், எப்பாடுபட்டாவது எவ்வளவு பணத்தை செல வழித்தாவது, பணமில்லா விட்டால் கடன் வாங்கியாவது, இதைக் கொண்டாட வேண்டு மென்று தமது அறியாமையால் நினைக்கிறார்கள். இவர்களில் பணக்காரர்கள், இப்பண்டிகை யின் பொருட்டு எக்கேடு கெட்டாலும், எந்த சந்தியில் நின்றாலும் அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் ஏழை மக்களும், பணக்காரர்களை பார்த்தும், அர்த்தமற்ற தெய்வீ கத்தையும், புராணக் கதை களையும் நம்பியும் வீணாக அறிவின்றி கஷ்டப்படுகின்றார்களே என்றுதான் நாம் பரிதாபப்படுகின்றோம். ஏழை மக்கள், தீபாவளிப் பண்டிகை வர ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, பண்டிகை கொண்டாடுவதற்காக பலகாரம் தயார் செய்வதற்குக் கடைச் சாமான்கள் வாங்குவதற்கும், புது வேட்டிகள் புடவைகள் வாங்குவதற்கும், பட்டாசுக் கட்டுகள் வாங்குவதற்கும், பட்டினிக் கிடந்து பொருள் சேர்க்கின்றார்கள். அவ்வாறுசேர்த்து வைத்தப் பொருளும் போதாமல் கடன் வாங்குகிறார்கள். இவ்வாறு வாங்கிய கடனைக் கொடுப்பதற்கு வேறு வழியில்லாமல் இவர்கள் தேடி வைத்திருக்கும் நகைகளோ பாத்திரங்களோ விற்கப்படுகின்றன. இவ்வாறு ஏழைமக்கள் பொருள் வீண் நஷ்டமாகிறது.

இதற்கு மாறாக முதலாளிகளாக இருக்கும் ஜவுளி வியாபாரிகளும், மளிகைக் கடைக்காரர்களும், இத் தீபாவளியில் நல்ல லாபம் அடைகிறார்கள். அவர்கள் அடையும் லாபம் ஏழைமக்கள்கஷ்டப்பட்டு சம் பாதித்த பொருள் என்பதை யார் மறுக்க முடியும்!? ஆகவே இப்பண்டிகை ஏழைமக்களை இன்னும் பரம ஏழைகளாக்கவும், பணக்காரர்களை இன்னும் கொழுத்த பணக்காரர்களாக்கவும்,  ஒருவகையில் உதவி செய்கிறதென்பதையும் அறியலாம்.

அன்றியும் வீணாகக் கொளுத்திச் சுட்டு பொசுக் கப்படும், பட்டாசுகளும், வாணங்களும், எங்கிருந்து வருகின்றன. இவைகள் பெரும்பாலும் அயல் நாடுகளிலிருந்தே தீபாவளிக்கென்று நமது நாட்டிற்கு வியாபாரத்திற்காகக் கொண்டு வரப்படுகின்றன. சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமானமுள்ள பட்டாசுக் கட்டுகளும், வாணங்களுமாவது இத் தீபாவளியில் பொசுக்கப்படுமென்பதில் அய்யமில்லை. இந்த இரண்டு கோடியும் கரியும் புகையுமாக போவதைத் தவிர இதனால் வேறு யாருக்கு என்னபலன்? நமது தேசப் பணமாகிய இந்த இரண்டு கோடி ரூபாயும் அந்நிய நாட்டுக்குத் தானே போய்ச் சேருகிறது? இன்னும் அன்னிய நாட்டுத் துணிகள் வியாபாரத்தின் மூலம் அயல் நாடுகளுக்குச் செல்லும் பொருள் நாலைந்து கோடி ரூபாய்க்குக் குறையாது என்பது நிச்சயம். இந்த நாலைந்து கோடியில் நமது தேசத்திற்கு நஷ்டம் தானே.

இன்னும் அடை மழை பெய்து கொண்டிருக்கும் இந்த அய்ப்பசி மாதத்தில் விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து முழுகிவிட்டு எண்ணெய் பலகாரங்களைப் போட்டு வயிற்றை நிரப்புவது சாரீர சுகத்திற்கு ஏற்றதா? என்று தீபாவளியை நம்பும் எந்த முட்டாளாவது யோசித்துப் பார்க்கிறானா? சாதாரண மாக நமது நாட்டில் காலரா என்னும் விஷப் பேதி நோய் பரவுவது இந்த தீபாவளி முதல் தான் என்பதை எவரும் அறிவார்கள். எதனால் இந்த விஷப் பேதி உண்டாகிறது என்பதை அறிந்தவர்கள் இந்தத் தீபாவளிப் பண்டிகையினால் நமது ஜன சமுகத்திற்கு உண்டாகும் தீமையை மறுக்க மாட்டார்கள். சாதாரணமான அஜீரணமே இந்த விஷ பேதிக்கு முதற் காரணமாகும். விடியற்காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகி எளிதில் ஜீரணமாகாத மாவு பண்டங்களைப் போட்டு வயிற்றை நிரப்பினால் வயிற்றில் உள்ள ஜீரணக் கருவிகள் என்ன நிலை யடையும்? இதனால் பலவிடங்களில் நமது நாட்டில் விஷ பேதி உண்டாகி விடுகின்றது. இன்னும் பல வகையான நோய்களும் உண்டாகி விடுகின்றன. நாம் கூறுவதில் நம்பிக்கை யில்லையானால் தீபாவளியன்று மறுநாள் நமது நாட்டில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று பாருங்கள்! எத்தனை அஜீரண நோயாளிகள் வருகிறார்களென்பதைத் தெரிந்து கொள்ளலாம். இன்னும் சமாச்சாரப் பத்திரிகைகளைக் கவனித்துக் கொண்டிருப்பார்களானால் எங்கெங்கே விஷ பேதி உண்டாகியிருக்கிற தென்பதையும் அறியலாம். இதுவு மல்லாமல் பட்டாசுகளிலிருந்து எழும் விஷப்புகையினால் வரும் வியாதிகள் பல. இவ்வாறு தீபாவளி பண்டிகையானது மக்களுடைய மனத்திலும் மூடநம் பிக்கையை உண்டாக்குவதோடு அவர்களுடைய பொருளுக்கும் நஷ்டத்தை உண்டாக்கி சரீர சுகத் தையும் கெடுத்து உயிருக்குத் கூட உலை வைத்து விடுகிறதென்பதையும் அறியலாம்.

ஆனால், இந்தப் பண்டிகையைப் பற்றியும் இது போன்ற மற்ற பண்டிகைகளைப் பற்றியும் நமது நாட்டு தேசிய பத்திரிகைகளாவது, தேசியவாதிகளாவது கண்டித்துக் கூறி அவைகளில் உள்ள சூழ்ச்சிகளையும் புரட்டுகளையும் எடுத்துக் காட்டி, மக்களுடைய செல்வத்தை நஷ்டமாகாமற் செய்யவாவது, அவர் களுடைய மூடநம்பிக்கைகளைப் போக்கவாவது முயற்சி செய்கின்றார்களா என்று பார்த்தால் ஒரு சிறிதும் இவ்வாறு செய்வதாகக் காணோம். இதற்கு மாறாக, இதுபோன்ற பண்டிகைகளைப் பற்றியெல்லாம் விளம்பரப்படுத்துவதும், அவைகளின் 'பரிசுத்தத் தன்மை'களை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதும், அவைகளைக் கொண்டாடும்படி செய்வதும் ஆகிய காரியங்களையே செய்து வருகின்றார்கள். உதாரண மாக, இத்தீபாவளியைப் பற்றிச் சென்ற இரண்டு மாதங்களாகவே பிரச்சாரஞ் செய்யப்பட்டு வருவதை அறியலாம். அதாவது தீபாவளி பண்டிகை நமது தேசிய பண்டிகையென்றும் தேவர்களுக்கு விரோதியாயிருந்த நரகாசுரணைக்கொன்று அவர்கள் சுகமடையும் படி விடுதலையுண்டாக்கிய விடுதலை நாள் என்றும், ஆகையால் அன்று எல்லோரும் தேசிய விடுதலையைக் கருதி கதர் வாங்கிக் கட்ட வேண்டும் என்றும், கதர் பக்தர்களும், காங்கிரஸ் பக்தர்களும், தேசிய பக்தர் களும், கதரின் பேராலும், காங்கிரசின் பேராலும், தேசியத்தின் பேராலும் தீபாவளிப் பிரச்சாரம் செய்து விடுகின்றனர். இவர்கள் செய்யும் இந்த பிரச்சாரம், மக்களை இன்னும் மூடநம்பிக்கையுடையவர்களாகக் கவும், குருட்டு பழக்க வழக்கங்களையுடைய வர்களாக வும் செய்யப்படும் மதப் பிரச்சாரமா அல்லவா? என்று தான் நாம் கேட்கின்றோம்.

நமது நாட்டுத் தேசியவாதிகளுக்கு, இதுபோன்ற பண்டிகைகளின் பேரில் உள்ள பக்திதான் இன்று எடுத்தவைகளிலெல்லாம் அதாவது, தேசிய ராஜிய காரியங்களைக் கூட பண்டிகையாக்கி அவைகளைத், தேசிய மதம் என்னும் ஒரு புதிய மதத்தின் பேரால் கொண்டாடச் செய்ய வேண்டும் என்னும் எண்ணமுண்டாகி அவ்வாறே செய்தும் வருகிறார்கள். இதற்கு உதாரணமாக, காந்தி ஜெயந்தி, நேரு ஜெயந்தி, திலகர் ஜெயந்தி, தாஸ் ஜெயந்தி, லஜபதி நாள், சத்தியாக்கிரக நாள், தண்டி நாள், பூனா ஒப்பந்த நாள், உண்ணாவிரத நாள் என்பவை போன்ற பல நாட்களைக் குறிப்பிட்ட அவைகளைப் பண்டிகைகள் போலக் கொண்டாடும்படி செய்து வருவதைக் கூறலாம். ஆகவே இத்தகையவர்கள், புராதனமானதென்று சொல்லப்படும் தீபாவளிப் போன்ற பண்டிகைகளைப் பற்றி பிரச்சாரம் பண்ணாமல் விட்டு விடுவார்களா?

இன்று தீபாவாளி பண்டிகையின் விசேஷத்தைக் கூறிக் கதர்ப் பிரச்சாரம் பண்ணும் தேசியவாதிகள், உண்மையில், பகுத்தறிவுடைவர்களாயிருந்தால், நமது நாட்டுச் செல்வம் அன்னிய நாட்டுக்குச் செல்லக் கூடாது என்ற எண்ணமுடையவர்களாயிருந்தால், நமது மக்கள் அனைவரும் அறிவுடையவர்களாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்னும் நோக்கமுடை யவர்களாயிருந்தால் தீபாவளிப் பண்டிகையையும் இது போன்ற மற்ற பண்டிகைகளையும் ஒழிப்பதற்கே முயற்சி செய்ய வேண்டும். தீபாவளிப் பண்டிகையை ஒழிப்பதன் மூலம், அந்நிய நாட்டிற்குப் பட்டாசுகளின் மூலம் செல்லும் கோடிக்கணக்கான ரூபாய்களையும் துணிகளின் மூலம் செல்லும் கோடிக் கணக்கான ரூபாய்களையும் செல்லாமல் தடுப்பதனால் நமது நாட்டிற்கு லாபமுண்டா? அல்லது தீபாவளிப் பண்டி கையை கொண்டாடுவதன் மூலம் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்குக் கதர் விற்பனை புரிவதனால் லாபமுண்டாவென்று கேட்கிறோம்.

ஆகவே உண்மையாக ஆராய்ந்து பார்த்தால் நமது நாட்டில் உள்ள தேசிய வாதிகளோ சமயவாதிகளோ, புரோகிதர்களோ, பண்டிதர்களோ, காங்கிரஸ்வாதி களோ, அனைவரும் மக்களை இந்து மதத்தின் பேராலும், பண்டிகையின் பேராலும் ஏமாற்றி இன்னும் அடிமைகளாகவே வைத்திருந்து தங்கள் சுயநலத்தைச் சாதித்துக் கொள்ளவே முயற்சி செய்கிறார்கள் என் பதை அறியலாம்.

ஆதலால், உண்மையில் விடுதலை பெற நினைக் கின்றவர், மூடநம்பிக்கையினின்று நீங்க நினைக்கின்ற வர்கள், மதமும் பண்டிகைகளும் ஒழிந்து மக்களைப் பிடித்த பீடை நீங்க வேண்டுமென்று நினைப்பவர்கள் அனைவரும், தீபாவளிப் பண்டிகைகளை அடி யோடு ஒழிக்க வேண்டுகிறோம். தீபாவளிப் பண்டிகைக் கென்று, பணத்தையும் செலவு செய்து புத்தியையும் கெடுத்துக் கொள்ளாமல் அந்த நாளையும் மற்றச் சாதாரணமான நாளைப் போலவே, கழிக்கும் படி வேண்டுகின்றோம். ஆகவே இக்கொள்ளை நோய்க்கு இடங்கொடாமல், அதைத் தடுக்குமாறு எல்லோருக்கும் எச்சரிக்கை செய்கின்றோம்.

'குடிஅரசு'  - தலையங்கம் - 23.10.1932

- விடுதலை நாளேடு 20 10 19

தீபாவளிப் பண்டிகை

இவ்வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? அப்பண்டிகைக்கும், எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப் போகின்றீர்களா? என்பதுதான் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்பதன் தத்துவமாகும்.

நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவ மின்றி, சுயமரியாதை உணர்ச்சி இன்றி, சுய மரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல், மற்றும் சுய நலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப் பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர் களேயல்லாமல், மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடை யவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவ னற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம் என்கின்ற தான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப் போல் துடிக்கின்றீர்களேயல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக் கிறீர்கள். சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள்.

ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிதுகூட பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந் நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர் களாவது? பார்ப்பனரல்லாதார்களில் சில பண்டி தர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று, மானமற்று கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.

புராணக் கதைகளைப் பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்; அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்ளு-கின்றீர்கள்.

"எல்லாருக்கும் தெரிந்தது தானே! அதை யேன் அடிக்கடிக் கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி, மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின் றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை, கொண்டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும், நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்-பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோபிப்பதில் என்ன பிரயோஜனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி, அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியை யும், தலைமயிரையும் பற்றியும் பேசுவதால் என்ன பயன்? நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக் கின்றாய் என்றால் அதற்கு நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன் என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப் பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின் றீர்கள். துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற் கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப் படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், பயனற்றது-மான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம், பிச்சை என்று வீடுவீடாய், கூட்டங்கூட்டமாய்ச் சென்று, பல்லைக் காட்டிக் கெஞ்சி, பணம் வாங்கி அதைப் பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர் விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து, அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து, அவைகளில் பெரும் பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக் குவதும் ஆறு: இந்தச் செலவுகளுக்காக கடன்படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவா கின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருப்பது என்பதும், பட்டாசு வெடிமருந்து ஆகியவைகளால் அபாயம் நேரிட்டு பல குழந் தைகள் சாவதுமான விஷயங்களொருபுறமிருந் தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்த சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்-படுகிறது என்கின்றதான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்ட தாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ,பகுத்தறிவுக்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது.

பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய்விட்டது.

இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய்யென்று  சொல்லி,  அக்கசுமாலங்களைக் கசக்கிய வண்ணமாய் இருக்கிறார்கள்.

அப்படியிருக்க, ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக் கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில், இந்தக் காலத்தில், இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வ தென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ் ணன். அவனது இரண்டாவது பெண்ஜாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும், இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்த வர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்த மான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம். எப்படியானாலும், இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ, கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன். அன்றியும், இத் தீபாவளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இட மாயிருக்கிறது என்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.

தீபாவளியின்

கதைச் சுருக்கம்

ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும், பூமிக்கும் பிறந்தவனாம்.  அவன் தேவர்களையெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம். தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட் டார்களாம்.

உடனே, திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும், பூமிதேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத் துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று விட் டார்களாம்.

நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாட வேண்டு மென்று கேட்டுக் கொண்டானாம். கிருஷ்ணன் அப்படியே ஆகட்டுமென்று வாக்களித்தாராம். அதற்காக வேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்துவிட்டாராம். ஆதலால், நாம் கொண் டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டு மாம். இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம்.  முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்க முடியுமா?

எல்லா உலகங்களையும் உண்டாக்கிய, நான்முகனைப் பெற்றவரும், உலகங்களை-யெல்லாம் காத்துவருபவரும், தேவர்கள் தலைவருமாகிய திருமாலுக்கும், பூமிதேவிக்கும் எப்படிக் குழந்தை பிறக்கும்? பூமிதேவி என்றால் உலகம் அல்லவா? அப்படித்தான் பிறந்த அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம் பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய் தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்ல வேண்டுமோ? மேற்படி நரகாசூரனைக் கொன்ற போது அதன் தாயாகிய பூமிதேவியும் சத்தியபாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தையெல்லாம் காப்பாற்று கிறாளாம்! உலகமக்கள் செய்யும் பாவங் களையெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின் றாளாம்! பொறுமையில் பூமிதேவிபோல் என்ற உதாரணத்திற்குக்கூட பண்டிதரும், பாமரரும் இந்த அம்மையாரை உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமிதேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்க வேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!!

தமிழர்களாகிய நம்மையே அசுரர் களென்றும், ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவ -அசுரப் போராட்டத்-தோடு சம்பந்தப்பட்டிருக்கிற இந்தக் கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாக கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக் கதையை உண்மை யென நம்பி நாமே கொண்டாடி வீண்செலவு செய்வதென்றால், நமது சுயமரியாதையை என்னென்பது? நமது பகுத்தறிவை என்ன வென்று சொல்லுவது?

புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக் கொண்டு தமது பகுத்தறிவையிழந்து இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது?

சென்றது போக, இனிமேற்கொண்டாவது தீபாவளியை, அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை, நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக் கொள்ளும் செயலைக் குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிட நேரமாவது செலவு செய்ய வேண் டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

'குடிஅரசு' - 1.11.1936

 - விடுதலை நாளேடு, 22 10 19

திங்கள், 21 அக்டோபர், 2019

தீபாவளிப் பண்டிகை

- சித்திரபுத்திரன்

வருகுதப்பா தீபாவளி - வழமைபோல். நீ என்ன செய்யப் போகிறாய்.

தம்பீ! பழையகால சாஸ்திரம் இன்றைக்கு உதவாது இன்றைக்கு ஏற்றபடி அது மாறவும் மாறாது. அதை ஒருத்தன் எடுத்து வைத்தால்தான் அல்லது அது அசைக்கப்பட்டால்தான் ஓர் இடத்திலிருந்து ஓர் இடத்திற்கு மாறும் அல்லது அதை ஒருவன் எடுத்து நமக்கு வேண்டாததை அடித்து வேண்டியதை எழுதினால்தான் திருந்தும்.

ஏன் அப்படிச் சொல்லுகிறேன்? அதற்கு உயிரில்லை; அது ஏடு; காகிதம் போன்ற அசேதன வஸ்து; சிந்திக்கும் தன்மை அற்றது.

ஆதலால், சாஸ்திரம் சொல்லுகிறது அந்தப்படி செய்கிறேன் என்று நீ சொல்லுவா யானால் நீ சேதன (சிந்திக்கும் சக்தி உள்ள) வஸ்து ஆகிய மனிதனென்றோ, அறிவுள்ளவன் என்றோ சொல்லிக் கொள்ள உனக்கு சிறிதுகூட யோக்கியதை கிடையாது.

சாஸ்திரம் பெரியவாள் எழுதினது என்று சொல்லுவாயானால், நீ யாரு? சிறியவாளா? எந்தப் பெரியவாள்? அந்தப் பெரியவாள் காலத் தைவிட முட்டாள்தனமான காட்டுமிராண்டித் தனமான காலத்திலா நீ பிறந்தாய்? போக்குவரத்து சாதனமில்லாத, விஷயஞானம் பெற வாய்ப்பும் சாதனமும் இல்லாத நல்லாயுத காலத்திலா இருந்து வாழ்ந்து வருகிறாய்? ஆகவே, அந்தக் காலத்தைவிட  அந்தக் காலத்து பெரியாரைவிட நீ எந்த விதத்திலும் தாழ்ந்தவனாக இருக்க முடியாது. ஆதலால் சாஸ்திரம், பெரியவாள், வெகுகாலத்திற்கு முன் ஏற்பட்டது என்கின்ற முட்டாள் தனத்துக்குத் தாயகமாக இருக்கும் பித்தலாட்டத்தில் இருந்து முதலாவதாக நீ வெளியில் வா!

சாஸ்திரத்தைப் பற்றிக் கவலை இல்லை,  பெரியவாளைப் பற்றிக் கவலை இல்லை, ஆனால் அந்த சாஸ்திரங்கள் கடவுள்களால் சொல்லப்பட்டது; உண்டாக்கப் பட்டது என்று சொல்லுகிறாயோ? அப்படியானால் இப்படிச் சொல்லுகிறவனைப் போல் முட்டாள் மனித வர்க்கத்தில் ஒருவருமே இருக்க முடியாது என்ப தோடு இதைக் கேட்டு நம்பி நடக்க ஆரம்பிக் கிறானே அவனைப் போல் அடிமடையனும் வேறு இருக்க முடியாது என்று சொல்லுவதற்கு தம்பி, நீ மன்னிக்க வேண்டும்.

கடவுள் இருக்கிறார் என்று வைத்துக் கொள். கடவுள் சொன்னார் என்று வைத்துக் கொள். யாருக்குச் சொன்னார்? உனக்கா சொன்னார்? மனிதனுக்குச் சொன்னார் என்பாய். அப்படி யானால், கிறிஸ்துவருக்குச் சொன்னாரா? முஸ்லி முக்குச் சொன்னாரா? பார்சிகளுக்குச் சொன் னாரா? அவற்றை நம்பாத நாஸ்திகனுக்கு சொன் னாரா? யாருக்குச் சொன்னார்? எப்பொழுது சொன்னார்? அந்தக் காலத்தில் நீ இருந்தாயா? நீ பார்த்தாயா? அல்லது யார் பார்த்தது? கடவுள் சொன்னார் என்று இன்று உனக்குச் சொன்ன வர்கள் யார்? சொன்னவர்களுக்குச் சொன்ன வர்கள் யார்? சாஸ்திரம் கடவுளால் சொல்லப் பட்டது என்பதை சாஸ்திரமே சொன்னால் போதுமா? அதற்கு அடையாளமே வேண்டாமா? அச்சுப் புத்தகமும் அய்யர் பேச்சும், கிரு பானந்த வாரி, பண்டிதமணிகள் பிரசங்கங்களுமே போதுமா? இவைகளையெல்லாம் யோசித்த பிற கல்லவா சாஸ்திரம் சொல்லுகிறது என்பதையும், சாஸ்திரத்தை கடவுள் சொன்னார் என்பதையும் நீ மனிதனாய் இருந்தால் நம்ப வேண்டும். மாடாயிருந்தால் அல்லவா யோசியாமல் ஆம் என்று தலையாட்ட வேண்டும்? இந்த இருபதாம் நூற் றாண்டில் உனக்கு இதுகூடவா  தம்பி தெரிய வில்லை? சாஸ்திர காலத்தைவிட இன்று கடவுள்கள் அருமை என்று நினைக்கிறாயா? எண்ணி முடியாத கடவுள்கள் தோன்றி இருப்பதோடு, தோன்றிய வண்ணம்தானே இருக்கின்றன கடவுள்களுடைய அற்புதங்கள் இக்காலத்தில் நடக்காத நாள் ஏது? மனிதர்களிடத்தில் கடவுள்கள் பேசாத நாள் ஏது? பெசண்டம்மை இடம் பேசினார்; காந்தியாரிடம் பேசுகிறார்.

அசரீரியும், சோதனைகளும் நடக்காத நாள் ஏது? இப்படி எல்லாம் இருக்கும்போது இக்காலத் தில் கடவுள் நேரில் வந்து உன்னையோ அல்லது என்னையோ கூப்பிட்டு நேரில் அடே, மக்களா! நான்தாண்டா சாஸ்திரம் சொன்னேன்; சந்தேகப் படாதீர்கள்! என்று சொல்லித் தொலைத்தால் பிறகு உலகில் ஏதாவது கலவரம் இருக்க முடியுமா?

அல்லது ரமணரிஷிகள் என்ன, சாயி பாபாக்கள் என்ன, மகாத்மாக்கள் என்ன, மற்றும் தெய்வீக சக்தி பெற்றவர்கள் என்று சொல்லப்படும் மகான்கள் என்ன - இத்தனை பேர்களில் யாரிடமாவது ஒரு வார்த்தை சொல்லித் தொலைக்கக் கூடாதா?

இவ்வளவு தகராறு, வர்க்கம், கலகம் கடந்து ஒருத்தன்மேல் ஒருத்தன் கல்லு, சாணி, செருப்பு எறிந்து, அடிதடி நடந்து, போலிஸ் வந்து மக்கள் சீரழிகின்ற காலத்தில் தைரியமாய் அல்லது கருணை வைத்து வெளிவந்து நிலைமையை விளக்க முடியாத சுவாமிகள் இனி வேறு எந்தக் காலத்திற்குப் பயன்படப் போகிறார்கள்?

ஆகையால், கடவுள் சொன்னது - சாஸ்திரம் என்பதை கட்டி வைத்துவிட்டு உன் அனுபவத் தையும் அறிவையும் பயன்படுத்தி தீபாவளியைப் பற்றி யோசித்துப்பார் அப்பா - தயவு செய்து கோபியாதே தம்பீ!

கோபம் செய்தால் எமன் கொண்டோடிப் போவான் என்று சொன்னது சரியல்ல; கோபம் செய்தால் நீ ஏமாந்து போவாய் என்று நான் கூறுகிறேன். ஆகவே அறிவுக் கண்ணுடன் நாடு, இனம், மானம் ஆகியவைகளின்மீது பற்று வைத்து தீபாவளிபற்றி சிறிது சிந்தித்துப் பார்!

தீபாவளி கதை

தீபாவளி கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை. என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.

இது தீபாவளி கதை. மிகவும் அதிசயமானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத்தன்மையும் பொருந்தியதுமாகும்.

மகாவிஷ்ணுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளே விட மறுக்கப்பட்ட இரண்டு பிராமணர்கள் சாபத்தால் இரணியன், இரணியாட்சன் என்று இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டு விட்டதற்கிணங்க மூத்தவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். இளையவன் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி சமுத்திரத்திற்குள் நுழைந்து கொண்டான். தேவர்கள் வேண்டு கோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதாரமெடுத்து வந்து கொன்று விட்டார். இளையவனான இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதார மெடுத்து வந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து இரண்யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டு வந்து பழையபடி விரித்துவிட்டு போய்விட்டார்.

இதுவரை கதையில் அதிசயம் அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில்ஆபாசமில்லை. இனிமேல் நடப்பதுதான் ஆபாசம். என்னவென்றால் விஷ்ணு பலஅவ தாரம், பலரூபம் எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும் பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.

விஷ்ணு, அசுரர்களால் கடைந்து எடுக்கப் பட்ட அமிர்தத்தை வஞ்சித்து தேவர்களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதாரமெடுத்தார். அந்தக் காரியம் தீர்ந்த உடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத்தின் மீது ஆசை வந்து அவர் பின் திரிந்து, மோகினி இணங்காமல் போய் இருவரும் பலாத்காரம் செய்து, சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி தங்கமாக வேர் இறங்கிவிட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்.

மற்றொரு சமயம் சிவன் பத்மாசூரனுக்கு வரம் கொடுத்ததால் அவன் சிவன் தலையிலேயே கையை வைத்து சிவனைக் கொல்லவர சிவன் ஓடி ஒழிந்து விஷ்ணுவைக் கூப்பிட விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தந்திரம் செய்து பத்மாசூரனை இறக்கும்படி செய்து விட்டுத் திரும்புகையில் சிவன் அவளைப் புணர்ந்தானாம். அப்போது அய்யனார் பிறந்தார். இப்படியுள்ள கதைகள் போலவே விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட்சனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிற தென்று கருதி அந்தப் பூமியையே அந்த பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம்.

அக்குழந் தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள்?

இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத் துக்கும், அஸாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மா வின் மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத்தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித்தானாம். அதோடு தேவர்களுக்கு தொல்லை கொடுத் தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர்களுக்காக கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண்டாடுவதுதான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?

இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன?

பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்?

அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும்தானே பாயாக சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரமேது? வேறு சமுத்திரமி ருந்திருந்தால் அது எதன்மீது இருந்திருக்கும்?

அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரமெதற்கு? அப்போது அது ஆகாரமான எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.

இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப் படுவானேன்! கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியேதான் இருக்கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமிதேவி இணங் கலாமா? இது என்ன கதை? திராவிட மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதினதல்லாமல்  வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வருமுன்பு திராவிடர்கள்தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரியர்கள், திராவிடர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் மிருகங்களுடன் புணர்ந் தானாலும் சரி, மலத்தைத் தின்னாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான காரியத் தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற தர்மத்தை ஆரியர்களுக்கு போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு கோட் தானே ஒழிய இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்?

ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லாவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?

நம் தலைவனை கொன்றதை நாம் கொண் டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிடரல்லவா? நம் இன மக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப்பாய் கொண்டாடாதீர்கள். கொண்டாடு வதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்.

- 'குடிஅரசு‘ - 07.10.1944

 - விடுதலை நாளேடு 21 10 19

சனி, 19 அக்டோபர், 2019

கடவுள் சித்திரபுத்திரன்

12.05.1935  -குடிஅரசிலிருந்து...

கேள்வி : கடவுள் நன்மையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு.

பதில் : நல்ல காற்று, நல்ல தண்ணீர், வாசனையுள்ள புஷ்பம், ருசியுள்ள ஆகாரம், சத்துள்ள பழ வகை, மழை, நதி, நந்தவனம், பால், பசு, நல்ல பெண்கள், சந்திரன், சூரியன் முதலிய அனேக அருமையான வஸ்துக்களை உற்பத்தி செய்து நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆதலால் கடவுள் நன்மையே உருவாகக் கொண்டவர்.

கேள்வி: கடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு..

பதில்: கெட்ட காற்று, விஷப் புகை, நோய்க் கிருமிகள் உள்ள தண்ணீர், துர் வாடையுள்ள மலம், கசப்பான ஆகாரம், உபயோகமற்றதும் நோயை உண்டாக்குவதுமாக பழம், துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், கொடிய வியாதி, கடும் வெய்யில், இடி, பூகம்பம், முரட்டு வெள்ளம், இருட்டு, நோய் உள்ள பெண்கள், தரித்திரம், முள்ளுள்ள புதர்க்காடுகள் முதலானவை களையெல்லாம் கடவுள் உற்பத்தி செய்திருக்கிறார். ஆதலால் கடவுள் கெடுதியே உருவாய்க் கொண்டவர்.

கேள்வி: இந்தக் கெடுதிகளையெல்லாம், கடவுள் தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜு?

பதில்: முன் சொல்லப்பட்ட நன்மைகளை எல்லாம் கடவுள் தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜுவோ, அந்த ருஜுவைத்தான் கெடுதிகளையும் கடவுள்தான் உண்டாக்கினார் என்று சொல்வதற்கும் ருஜுவாக ஏற்றுக் கொள்ளக் கோருகிறேன். கடவுள் படைத்த படைப்பெல்லாம் மனிதனுக்காகவே.

மனிதனைப் படைத்தான் தன்னை வணங்க என்று ஒரு மதம் சொல்லு கின்றது. ஆகவே, கடவுளை வணங்குவதற்கு என்று கடவுளாலேயே மனிதன் படைக்கப்பட்டிருப்பானேயானால் கடவுளின் இழி தன்மைக்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்?

தன்னை வேறு ஒரு மனிதன் வணங்க வேண்டும் என்று ஒரு மனிதன் நினைத்தானேயானால் அவனை நாம் எவ்வளவு அயோக் கியன் என்றும், ஆணவக்காரனென்றும், இழிகுணம் படைத்தவ னென்றும், ஈனன் என்றும் சொல்லுகின்றோமா இல்லையா?

அப்படியிருக்க, ஒரு கடவுள் என்று சொல்லப்பட்டவர் தன்னை வணங்குவதற்கு என்று பலகோடி மக்களைப் படைப்பித்து அவர்களை பலவிதமான கஷ்டங்களும், குறை களும் அனுபவிக்க விட்டு வேடிக்கை பார்த்தால் அப்படிப்பட்ட கடவுள் நல்லவர், பெருந்தன்மை உள்ளவர், தயாபரர், கருணா மூர்த்தி, விருப்பு, வெறுப்பு, தற்பெருமை இல்லாதவர் என்றெல்லாம் அறிவுள்ள மனிதனால் சொல்லமுடியுமா?

அன்றியும், கடவுள் மனிதனைப் படைத்தது உண்மையாய் இருக்குமானால் அந்த ஒரு காரியமே பெரியதொரு அயோக்கியத் தனமும், அக்கிரமு மானதென்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், மனிதனால் மற்ற மனிதர்களுக்கும், மற்ற ஜீவராசி களுக்கும் எவ்வளவு துன்பங்கள் நிகழ்கின்றன?

மனிதன் எவராவது யோக்கியமாய் இருக்க முடிகின்றதா?

இவைகளையெல்லாம் மனிதனைப் படைப்பதற்கு முன் கடவுளுக்குத் தெரியாதா?

மனிதனுக்குக் கொடுத்திருக்கும் புத்தி, அறிவு என்பதை அவன் எப்படி உபயோகிப்பான் என்பதை கடவுளுக்கு ஆரம்பத்தில் அறிய முடியவில்லையா? அல்லது அறியும் சக்தி இருந்தும் கவலையீனமாய் இருந்து விட்டாரா?

இவைகளையெல்லாம் பார்த்தால் கடவுளின் யோக்கியதையும் அவர் இருக்கும் லட்சணமும் நன்றாய் விளங்கவில்லையா?

-  விடுதலை நாளேடு, 19 10 19

திங்கள், 14 அக்டோபர், 2019

நூற்றுக்கு நூறு உண்மையே இருக்க வேண்டும் என்று அறிவித்த பெரியார்

உண்மை என்றால் நூற்றுக்குநூறு உண்மை




நூற்றுக்கு நூறு உண்மையே இருக்க வேண்டும் என்று அறிவித்த பெரியார், அதை எவ்வளவு விழிப்பாகப் பின்பற்றி னார் என்பதைக் காட்டும் நிகழ்ச்சி இதோ:

1973ஆம் ஆண்டு ஜூன் திங்கள்; தந்தை பெரியார் திருச்சியில் தங்கியிருந்த நாள், வந்த பல பார்வையாளர்களில், டாக்டர் சற்குருதாஸ் ஒருவர். அவர், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வராக இருந்தவர்.

டாக்டர் தாசை, தமக்கே உரிய தனிப் பாசத்தோடு தந்தை பெரியார் வரவேற்றார். சில மணித்துளிகள் இருவர் நலம் பற்றி பேச்சு, பிறகு, டாக்டர் தாஸ், பெரியாரிடம் ஒரு சீட்டைக் கொடுத்தார். பெரியார் அதை நொடியில் படித்து முடித்தார். படித்து முடித் ததும், தாஸ் பெரியாரைப் பார்த்து, ‘அய்யா, இந்த பெண் என் மகள். மருத்துவக் கல் லூரிக்கு மனுப் போட்டிருக்கிறாள். அய்யா பார்த்து, சொல்ல வேண்டியவர்களிடம் ஒரு சொல் சொன்னால், அவளுக்கு இடம் கிடைத்துவிடும். அவள் எதிர்காலம் ஒளி மயமாகிவிடும். எங்களைப் போன்றவர் களுக்கு அய்யாவே அடைக்கலம்‘ என்று வேண்டிக் கொண்டார்.

அதற்கு ‘இந்த அம்மாள் வாங்கியிருக்கிற மதிப்பெண்ணுக்கு தானாகவே இடம் கிடைக்க வேண்டும். முந்தி வந்திருந்தால் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் சொல்லி யிருக்கலாம்.’ ‘என் யோக்கியதைக்கு நான் சொல்கிற பரிந்துரைக்காக, ஆண்டுக்கு இரண்டொரு இடம் கொடுப்பார்கள். ஏற் கெனவே, அதற்கு மேல் சொல்லிவிட்டேன்.

இதையும் நான் சொல்லி, இவ்வளவு மதிப்பெண் பெற்றவருக்கு இடம் தவறி விடக் கூடாதே’ என்பதே என் கவலை. ‘நிறைய மதிப்பெண் இருப்பதால், வேறு எவர் வழியாகவாகிலும் ஒரு பரிந்துரை யைப் பெறுங்கள்; இடம் உறுதியாகக் கிடைக்கும்‘ என்று பெரியார் பதில் அளித் தார். நம்பிக்கையுடைய கிறுத்துவராகிய டாக்டர் சற்குருதாஸ், ‘அய்யா தங்கள் வாழ்த்து பலிப்பது உறுதி, எதற்கும் இச்சீட்டு தங்களிடமே இருக்கட்டும் என்று சொல்லி விட்டு, விடை பெற்றுக் கொண்டார். சில வாரங்களுக்குப் பிறகு, எங்கெங்கோ பயணம் செய்துவிட்டு, தொண்டு செய்து பழுத்த பழமாகிய பெரியார், திருச்சிக்குத் திரும்பினார். சிறிது நேரத்தில், டாக்டர் சற்குருதாஸ், திருமதி, செல்வி சற்குருதாஸ் ஆகிய மூவரும் பெரியார் மாளிகைக்குச் சென்றார்கள்; வெறுங் கையோடா? இல்லை.

பெரிய மாலையும் தட்டு நிறையப் பழங்களும் கொண்டு போனார்கள். பெரியாருக்குக் காணிக்கையாக்கினார்கள். பெரியார், இந்த அம்மாளுக்கு நான் பரிந் துரைக்கவில்லை. அவர்கள் வாங்கிய மதிப் பெண்ணே இடம் தேடித் தந்திருக்கும். இல்லையென்றால் வேறு எவரோ உதவி யிருக்கலாம். என்னாலே இடம் கிடைக்க வில்லை’ என்று, குழந்தைகளுக்கே இயல் பான தன்மையில் உண்மையை வெளி யிட்டார். ‘இருந்தால் என்ன அய்யா! அப் போதே சொன்னேனே அய்யா! தங்கள் வாழ்த்தே பலிக்குமென்று, தாங்கள் தானே எங்களைப் போன்றவர்களுக்கு ஆதரவு, பாதுகாவல், நம்பிக்கை, வாழ்வு.’ நெஞ்சுருகக் கூறினார், டாக்டர் சற்குருதாஸ்.

இந்நிகழ்ச்சியை 6.1.74 அன்று திருச்சி யில் நடந்த பெரியார் இரங்கல் பொதுக் கூட்டத்தில் குறிப்பிட்டார், டாக்டர் தாஸ். ‘மற்றவர்களைப் போல, அமுத்தலாக இருந் திருக்கவில்லை பெரியார். எப்படியோ கிடைத்த வெற்றிக்கு தான் பொறுப்பில்லை என்று நன்றி சொல்லும் எங்களிடமே சொல்லத் தேவையில்லை. உண்மை ; முழு உண்மையில் பெரியாருக்கு இருந்த பற் றல்லவா அவரை அப்படிச் சொல்லச் செய் தது? பெரியாரின் வாய்மையை, நிகழ்ச் சியை நினைக்குந் தோறும் உள்ளம் உருகு கிறது’ என்று உருக்கத்தோடு உரையாற் றினார். நேரில் கேட்ட என் போன்ற பல்லா யிரவர் கண்கள் குளமாயின.

- நெ.து.சுந்தரவடிவேலு

நூல்:  புரட்சியாளர் பெரியார்

அகவுணர்வு


வளர்ந்து வரும் பேறு


இராமசாமிப் பெரியார் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். அவர்தம் புகழோ - தென்னாட்டிலும், வட நாட்டிலும், பிற * நாடுகளிலும் மண்டிக் கிடக்கின்றது! காரணம் என்ன? தோழர் ஈ.வெ.ரா.வின் உண்மையும், வாய்மையும், மெய்மையுஞ் செறிந்த அறத்தொண்டாகும்.

ஈ.வெ.ரா.விடம் ஒரு வித இயற்கைக் கூறு அமைந்துள்ளது. அதனின்றும் அவ ரது தொண்டு கனிந்தது. அஃதென்னை? அஃது அகவுணர்வு வளர்ந்து செல்லும் பேறு. இப்பேறு பலர்க்கு வாய்ப்பதில்லை; மிகச் சிலர்க்கே வாய்க்கும். தமிழ்ப் பெரியார்

- திரு. வி. கல்யாண சுந்தரனார்

நூல்: தமிழர் தலைவர்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்!


பெரியார் இராமசாமி அவர்கள், திராவிடருக்குப் பொதுவாயும், தமிழருக்குச் சிறப்பாயும், உரிமையும், பெருமையும் உண்டு பண்ண உழைக்கும் பெருந்தலை வர்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் போலிப் பெரியார் வரிசையில் சேராதவர். எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணிய முயற்சியுடையார். கிளைபகை கருதாமல், பொதுநலமொன் றையே பேணித் தம் உள்ளத்தாற் பொய் யாதொழுகும் நேர்மையாளர். புகழும் பழியுமிகுந்து, அச்சமறியா உரனுடைய உள்ளத்தராய், என்றும் ஒன்றுபோல் நின்று, உற்றாரிடத்துக் குறை காணில் மறையா துரைத்து, வலியார் மெலியாரை நலியாது எதிர்த்தது. எளியவர் தோழராய்ப் போரா டும் வீரர், தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளருள், தலையணி நிலையுடைத்தக்கார். அவரோடு கருத்து வேறுபாடுடையாரும், அவர் நேர்மையும், பகையற்ற உளப்பாங் கும், அஞ்சாமையும், பாராட்டும் தகவுடை யார்.

- நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், எம்.ஏ.,பி.எல். (1942)

நூல்: தமிழர் தலைவர்

எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் தூய்மை


இளமையில் இருந்தே நாணயம், நேரிய பார்வை, அறநெறி ஆகியவற்றை பின்பற்றி யவர் பெரியார். எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் தூய்மை (திரிகரணசுத்தி) என்பது அவருடைய ஆளுமையில் ஆழ மாகப் பொதிந்திருந்தது. எதிராளிகளின் மறுசெயல்களைப் பற்றிக் கவலைப்படாமல தமது கருத்துகளின் வெளிப்பாட்டிலும் செயற்பாடுகளிலும் தெளிவாக அவர் நடந்து கொண்டார்.

- நீதியரசர் பி.ஏஸ்.ஏ.சாமி,

ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம்

உண்மைக் களஞ்சியம்!


நம் பெரியார் அவர்கள் ஒரு மகாத்மா வல்ல. ஆனால், தாம் நினைத்ததைச் சாதிக்கும் ஒரு நேர்மைவாதி. அவருடைய அபிப்பிராயங்கள் ஆணித்தரமானவை. ஆனால், அவர் பிடிவாதக்காரரல்ல. தம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக, அவர் பட்டினி கிடப்பதில்லை; சாகும்வரை உண்ணாவிரதமிருப்பதில்லை. நேர்மையான வழியிலேயே பாடுபடுவார். காங்கிரஸ்காரருக்கு வார்தா எப்படியோ, அப்படியே திராவிடருக்கு ஈரோடு. அவர் கள் வார்தா போவதுபோல, நாம் அறிவுரை கேட்க ஈரோடு வருகிறோம். பெரியார் தமிழ்நாட்டின் உண்மைக் களஞ்சியம்!

- சர். ஏ.டி.பன்னீர்செல்வம்,

பார் அட் லா  (1938)

நூல்: தமிழர் தலைவர்

ஒவ்வொரு சொல்லும் உண்மையுணர்வோடு


வந்தது


பெரியாரது மனம், இதுபோது மிகவும் முக்கியமான சமுதாயத்துறையிலீடுபட் டிருக்கிறது. கோட்டயத்தில் நடைபெற்ற எஸ்.என்.டி.பி. மாநாட்டில் 10,000க்கும் அதிகப்பட்ட மக்கட்கு, இவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றிச் செய்த சொற்பொழிவை யான் கேட்டேன். சொற்பொழிவு எளியதாகவும், நேரானதா கவுமிருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும், உண்மையுணர் வோடு வந்தது. மிக்க கவனத்துடன் மக்கள் கேட்டனர்.

- முன்னாள் உயர்நீதிமன்ற

நீதிபதி எம்.கோவிந்தன்

பரிசுத்தத் தன்மையில் உள்ள அளவு கடந்த நம்பிக்கை


தோழர் நாயக்கரின் கொள்கைகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம்; அல்லது ஏற்றுக் கொள்ளாமலிருக்கலாம். ஆனால், அவர் முன்னிலையில் நீங்கள் இருக்கும் போது, தமது கொள்கையின் நேர்மையில் நம்பிக்கையுள்ள ஒரு மனிதர் இருக்கிறார் என்பதை மாத்திரம் உங்களால் மறுக்க முடியாது. அவரது சேவைகள் அனைத் திற்கும் ஊற்றுக் கண்ணாய் விளங்கும் அவரது திருத்தூதின் பரிசுத்தத் தன்மையில் உள்ள அளவு கடந்த நம்பிக்கையும் இது தான்.

பாரிஸ்டர். கே.பி. கேசவமேனன் (1939)

நூல்: தமிழர் தலைவர்

இரகசிய அறைகள்


கிடையவே கிடையாது


பெரியார் மறதியாகக்கூட பொய் சொன்னதில்லை. நான் யாருக்கு அஞ்ச வேண்டும்? ஏன் மறைத்துப் பேச வேண்டும் என்ற தன்மான உணர்வுகள் அவர் வாயி லிருந்து பொய்களை வரவிடுவதில்லை. பெரியாரின் இதயத்துக்குள் இரகசிய அறை கள் கிடையவே கிடையாது.

- கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன்

நூல்: பெரியார் ஈ.வெ.ரா

 - விடுதலை ஞாயிறு மலர், 21. 9.19