சனி, 19 அக்டோபர், 2019

கடவுள் சித்திரபுத்திரன்

12.05.1935  -குடிஅரசிலிருந்து...

கேள்வி : கடவுள் நன்மையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு.

பதில் : நல்ல காற்று, நல்ல தண்ணீர், வாசனையுள்ள புஷ்பம், ருசியுள்ள ஆகாரம், சத்துள்ள பழ வகை, மழை, நதி, நந்தவனம், பால், பசு, நல்ல பெண்கள், சந்திரன், சூரியன் முதலிய அனேக அருமையான வஸ்துக்களை உற்பத்தி செய்து நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆதலால் கடவுள் நன்மையே உருவாகக் கொண்டவர்.

கேள்வி: கடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு..

பதில்: கெட்ட காற்று, விஷப் புகை, நோய்க் கிருமிகள் உள்ள தண்ணீர், துர் வாடையுள்ள மலம், கசப்பான ஆகாரம், உபயோகமற்றதும் நோயை உண்டாக்குவதுமாக பழம், துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், கொடிய வியாதி, கடும் வெய்யில், இடி, பூகம்பம், முரட்டு வெள்ளம், இருட்டு, நோய் உள்ள பெண்கள், தரித்திரம், முள்ளுள்ள புதர்க்காடுகள் முதலானவை களையெல்லாம் கடவுள் உற்பத்தி செய்திருக்கிறார். ஆதலால் கடவுள் கெடுதியே உருவாய்க் கொண்டவர்.

கேள்வி: இந்தக் கெடுதிகளையெல்லாம், கடவுள் தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜு?

பதில்: முன் சொல்லப்பட்ட நன்மைகளை எல்லாம் கடவுள் தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜுவோ, அந்த ருஜுவைத்தான் கெடுதிகளையும் கடவுள்தான் உண்டாக்கினார் என்று சொல்வதற்கும் ருஜுவாக ஏற்றுக் கொள்ளக் கோருகிறேன். கடவுள் படைத்த படைப்பெல்லாம் மனிதனுக்காகவே.

மனிதனைப் படைத்தான் தன்னை வணங்க என்று ஒரு மதம் சொல்லு கின்றது. ஆகவே, கடவுளை வணங்குவதற்கு என்று கடவுளாலேயே மனிதன் படைக்கப்பட்டிருப்பானேயானால் கடவுளின் இழி தன்மைக்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்?

தன்னை வேறு ஒரு மனிதன் வணங்க வேண்டும் என்று ஒரு மனிதன் நினைத்தானேயானால் அவனை நாம் எவ்வளவு அயோக் கியன் என்றும், ஆணவக்காரனென்றும், இழிகுணம் படைத்தவ னென்றும், ஈனன் என்றும் சொல்லுகின்றோமா இல்லையா?

அப்படியிருக்க, ஒரு கடவுள் என்று சொல்லப்பட்டவர் தன்னை வணங்குவதற்கு என்று பலகோடி மக்களைப் படைப்பித்து அவர்களை பலவிதமான கஷ்டங்களும், குறை களும் அனுபவிக்க விட்டு வேடிக்கை பார்த்தால் அப்படிப்பட்ட கடவுள் நல்லவர், பெருந்தன்மை உள்ளவர், தயாபரர், கருணா மூர்த்தி, விருப்பு, வெறுப்பு, தற்பெருமை இல்லாதவர் என்றெல்லாம் அறிவுள்ள மனிதனால் சொல்லமுடியுமா?

அன்றியும், கடவுள் மனிதனைப் படைத்தது உண்மையாய் இருக்குமானால் அந்த ஒரு காரியமே பெரியதொரு அயோக்கியத் தனமும், அக்கிரமு மானதென்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், மனிதனால் மற்ற மனிதர்களுக்கும், மற்ற ஜீவராசி களுக்கும் எவ்வளவு துன்பங்கள் நிகழ்கின்றன?

மனிதன் எவராவது யோக்கியமாய் இருக்க முடிகின்றதா?

இவைகளையெல்லாம் மனிதனைப் படைப்பதற்கு முன் கடவுளுக்குத் தெரியாதா?

மனிதனுக்குக் கொடுத்திருக்கும் புத்தி, அறிவு என்பதை அவன் எப்படி உபயோகிப்பான் என்பதை கடவுளுக்கு ஆரம்பத்தில் அறிய முடியவில்லையா? அல்லது அறியும் சக்தி இருந்தும் கவலையீனமாய் இருந்து விட்டாரா?

இவைகளையெல்லாம் பார்த்தால் கடவுளின் யோக்கியதையும் அவர் இருக்கும் லட்சணமும் நன்றாய் விளங்கவில்லையா?

-  விடுதலை நாளேடு, 19 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக