பேராசையும் சோம்பேரித்தனமுமே பிரார்த்தனையின் அடிப்படை
பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும், அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று இருந்தும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாட்டிலும், எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது.
பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும், பெயர்களும் சொல்லுவதுண்டு.
இவையெல்லாம் கடவுளை வணங்கி தங்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவதேயாகும்.
தனக்கு வேண்டியவற்றை எல்லாம், அதாவது இம்மையில் இவ்வுலகில் புத்தி யுத்தி, செல்வம், இன்பம், ஆயுள், புகழ் முதலியவையும், மறுமையில் மேல் உலகத்தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவையும் கிடைக்க வேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்து வரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வமும் அறியும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என்பதுமானவைதான் பிரார்த்தனைக் காரர்களின் கருத்தாயிருக்கிறது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன் பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.
அதாவது கடவுளுக்கு இன்னது செய்வதாக நேர்ந்து கொள்ளுவது, ஜீவபலி கொடுப்பது, கோயில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப்படுவனவாகும். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால், பேராசை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது; வேலை செய்யாமல் கூலி பெறுவது.
படித்து பாஸ் செய்ய வேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால், பணம் வேண்டியவன் பிரார்த்தனையில், பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால், இவற்றுக்கெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித் தனமும், மோசடியும் என்று சொல்லுவதும்தான் மிகப் பொருத்தமாகும்.
பேராசையும், சோம்பேறித்தனமும் ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால், பிரார்த்தனைக்கு இடமே இல்லை.
சற்று முன் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஆக பிரார்த்தனை செய்வதும், பிரார்த்தனையில் அவற்றை அடையப் பார்ப்பதும் முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளை சுத்த முட்டாள் என்று கருதி, கடவுளை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கூட சொல்லி ஆக வேண்டியிருக்கிறது.
எந்த மனிதனும் தகுதியானால் எதையும் அடையலாம். அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து, தகுதியாக்கிக் கொண்டு பலனடைய எதிர்பாராமல் காரியத்தைச் செய்யாது, பிரார்த்தனையில் பலன் அனுபவிக்க வேண்டும் என்று கருதினால், கடவுள், வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு அறிவற்றவர் என்றும், தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக்கும், ஒரு தற்புகழ்ச்சிக்காரர் என்றும் தானே சொல்ல வேண்டும்.
தவிர, இந்தப் பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனைச் சோம்பேறியாக்குவதோடு சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் லைசன்சு, அனுமதிச் சீட்டுக் கொடுப்பது போலாகிறது. விதை நட்டு, தண்ணீர் பாய்ச்சாமல், அறுப்பு அறுக்க கத்தி எடுத்துக் கொண்டு போகிறவனுக்கும், யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.
கடவுள் சகலத்தையும் உணர்ந்து அதற்குத் தகுந்தபடி கர்மபலன் கொடுக்கக் கூடிய சர்வசத்துவம் உள்ளவர் என்று ஒருவன் கருதியிருப்பானேயானால் அவன் கடவுளைப் பிரார்த்தனை செய்யும் வேலையில் ஈடுபடவோ, அதற்காக நேரத்தைச் செலவு செய்யவோ ஒரு பொழுதும் துணிய மாட்டான்.
ஏனென்றால், சகல காரியமும் கடவுளால்தான் ஆகும் என்று நினைத்துக் கொண்டு கடவுள் யாருடைய முயற்சியும், கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும், எண்ணத்துக்கும், தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்து விட்டார் என்றும் (அதாவது விதியின்படிதான் முடியும் என்றும் தெரிந்து இருந்த ஒருவன் அந்தத் தெளிவில் நம்பிக்கை இருந்தால்) பிரார்த்தனை செய்வானா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
சாதாரணமாக மக்களில் 100-க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான - அறிவற்ற வியாபாரத்தனமான முறையில் இருந்து வருகிறது. அதாவது, எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு இன்ன காரியம் செய்கிறேன்; அல்லது உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன். அதற்குப் பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய் என்கின்ற முறையிலே பிரார்த்தனை இருந்து வருகிறது.
இப்படியேதான், இதையேதான் பிரார்த்தனையைத் தூண்டும் ஆதாரங்களும், சாஸ்திரங்களும், கரும காண்டமும் கூறுகின்றன.
இதைப் பார்த்தால், இவர்கள் எல்லோரும் அதாவது இந்தப் பிரார்த்தனைக்காரர்கள் எல்லோரும் கடவுள் புத்திசாலி என்றோ, சர்வசக்தி உள்ளவன் என்றோ, பெரிய மனிதத் தன்மை உடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லி ஆக வேண்டும்.
சிலர் சொல்லுகிறார்கள், மனிதன் பாவி, அவன் பாவ கர்மத்தைச் செய்துதான் தீருவான்; ஆதலால் மன்னிப்புக் கேட்டுத்தான் தீர வேண்டும் என்கிறார்கள்.
நான் பாவம் செய்துதான் தீருவேன்; நீ மன்னித்துத்தான் ஆகவேண்டுமென்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள்ளுவதானால் மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்பட வேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாவத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம்தான் என்ன?
ஆகவே, கடவுள் கற்பனையைவிட இந்தப் பிரார்த்தனைக் கற்பனையானது மிக மிக மோசமானது என்றுதான் சொல்ல வேண்டும்.
பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் போய்விடும்.
மனிதன் பூஜையும், பிரார்த்தனையும் செய்து லாபம் அடைவதற்குத்த ன் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, கடவுளுக்கு ஆக பூஜையும், பிரார்த்தனையும் ஏற்படுத்தப் படவில்லை.
குரு - (பாதிரி), புரோகிதன் (பார்ப்பான்) ஆகியோர் பிழைப்புக்கு ஆகவே பிரார்த்தனையும், கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய்விட்டது. இந்த இரண்டு காரியமும் இல்லாவிட்டால் பார்ப்பானுக்கோ, பாதிரிக்கோ, முல்லாவுக்கோ ஏதாவது வேலை உண்டா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆஸ்திகர்கள் கொள்கைப்படி மனிதனுடைய செய்கையும், எண்ணமும், சித்திரபுத்திரனுக்கோ, கடவுளுக்கோ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்கு ஆக பலன் கொடுக்க தீர்ப்பு நாளும், எமதர்மராஜாவும் இருந்தே இருக்கிறான்.
மத்தியில் பிரார்த்தனை பூசனை என்பது, மேல்கண்ட இரண்டையும் ஏமாற்றவா? அல்லது குருவும், புரோகிதனும் பிழைக்கவா? என்பது யோசித்தால் விளங்காமற் போகாது.
பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப் போல, மனிதன் வீணாய் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம்.
சில சோம்பேறிகள் பிழைப்பதற்கு ஆக மக்கள் புத்தி எவ்வளவு கெடுறது? மக்களுக்கு அயோக்கியத்தனம் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டுவிடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகிறது?
என்பவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ, பயனற்ற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமற் போகாது.
[பூசைப் புரட்டு குறித்து பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை (விடுதலை 20.11.1953.)]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக