“நாமெல்லோரும் அறிஞர் அண்ணா அவர்கள் முடிவெய்தியதை முன்னிட்டு நமது அனுதாபத்தைக் காட்டிக் கொள்வதற்காக இங்கே கூடியிருக்கிறோம். அண்ணா அவர்களைப் பத்தி இரண்டு வார்த்தைகள் சொல்லுவது பொருத்தமாகும். பெரும்பாலும் அவரைப் புகழ்வதற்காகவே நாம் இங்கே கூடவில்லை. “அவருடைய தொண்டுக்கு நன்றி காட்டவும், அவரைப் பின்பற்றி அவர் கூறியுள்ள கொள்கைகளைப் பரப்பவும் கூடியிருக்கிறோம்.’’
“அண்ணா அவர்கள் மாபெரும் பகுத்தறிவுவாதி. இரண்டாவது, அவர் காரியத்திலேயும் அதைக் காட்டிக் கொண்டார். மூன்றாவது, அவர் பகுத்தறிவை வைத்துக் கொண்டு மூட நம்பிக்கைகள் தனக்கு இல்லை என்று அதைக் காட்டுவதற்கு எங்குமில்லாத திருமண விஷயத்திலே, கடவுள், மதம், ஜாதி, சம்பிரதாயக் காரியங்கள் இருக்கக்கூடாது என்று, அதில் கூடாது என்று, கருத்து கொண்ட ‘சுயமரியாதைத் திருமணம்’, ‘சீர்திருத்த திருமணம்’ என்பதைச் சட்டமாக்கினார். சட்டமாக்கினாரென்றால், திருமணத்தைச் சட்டமாக்கியதே, முக்கிய கருத்துமல்ல.’’ “அதிலே கொண்டு வந்து கடவுளை, மதத்தை, சாஸ்திரத்தைப் புகுத்தக் கூடாது என்ற கருத்திலே.’’
இப்படிப் பல விஷயத்திலேயும் அவர், தான் பகுத்தறிவுவாதி என்பதையும் உண்மையாக அவர் மக்களுக்கு எடுத்துக் காட்டி மக்களை எல்லாம் அந்தப் பக்கத்துக்குக் கொண்டு வரவேண்டுமென்று ரொம்பப் பாடுபட்டார். அவ்வளவு செய்த மகானுக்கு இன்று இங்கு இவ்வளவு பெரிய மாபெரும் கூட்டம் அவர் காலமான அன்றைக்கும், “அவரின் இறுதி ஊர்வலத்திலும் 30 லட்சம் மக்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள் என்றால் அவர் தன்னுடைய கருத்தை மட்டிலும் காட்டினார் என்பதல்லாமல் இந்த நாட்டு மக்களையே ஓரளவுக்கு அவர் பண்படுத்தி விட்டார் என்பது தான் அதனுடைய கருத்தாகும். முடித்துக் கொள்ளுகிறேன்.’’
(6.2.1969 அன்று நடைபெற்ற அண்ணா இரங்கல் கூட்டத்தில்
பெரியார் ஆற்றிய உரை - நூல்: பெரியார் சிந்தனை திரட்டு.)
- உண்மை இதழ், 1-15.2.21
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக