அறிவைக் கெடுத்த கடவுள்!
சுயமரியாதை இயக்கம் கடவுள் உண்டா - இல்லையா? என்கின்ற விஷயத்தில் சற்றும் கவலை எடுத்துக்கொள்வதே இல்லை. மற்றபடி நமது மக்கள் கடவுளுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் குணங்களைப்பற்றியும், கடவுள்களுக்கு என்று செய்யப்படும் பூசை, அபிஷேகம், உற்சவம் முதலிய செலவுகளைப்பற்றியும்தான் நான் மிகுதியும் ஆக்ஷேபிக்கின்றேன். கடவுளுக்கு இவ்வளவு பெரிய கோவில் எதற்கு? உற்சவத்திற்கு லக்ஷக்கணக்கான ரூபாய்கள் செலவு எதற்கு? மேல்நாட்டார் நம்மைவிட காட்டுமிராண்டிகளாய் இருந்தவர்கள், இப்போது உலகத்தில் பெரும்பகுதியை ஆளச் சக்திகொண்டுவிட்டதற்கு இம்மாதிரியான பெரிய கோவில்களும் உற்சவமும் செய்வதில் பணம் செலவழித்ததாலா? அல்லது இவற்றிற்குப் பணம் செலவழிப்பதை நிறுத்திக்கொண்டு அவற்றைக் கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் செலவழித்ததாலா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
நமது நாட்டில் உள்ள கற்கள் எல்லாம், சாமிகள், மரஞ்செடிகள் எல்லாம் சாமிகள், ஆறு, மலை, குளம், குட்டை, இடி, மின்னல், மழை, நட்சத்திரம், வானம், சந்திரன், சூரியன், காற்று, நெருப்பு, தண்ணீர், பிளேக்கு, பேதி, அம்மை முதலிய காணப்படும் பொருள்கள் _ குணங்கள் எல்லாம் சாமிகளாய்க் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இது மக்களுக்கு அறிவு வளர்ச்சி இல்லாத காலத்தில், காரண காரியங்கள் அறிய முடியாத காலத்தில், சைன்ஸ் என்னும் விஞ்ஞான அறிவு இல்லாத காலத்தில், காட்டுமிராண்டிப் பருவத்தில் ஏற்பட்ட நிலைமையாக இருக்கலாம்.
உதாரணமாக வேதகாலம், புராண காலம் என்று சொல்லப்பட்ட காலம் - மனிதனுக்கு சற்றுக்கூட அறிவு வளர்ச்சியும், பகுத்தறிவும் விசாரமும் இல்லாத காலம் என்பதற்கு உதாரணம் வேண்டுமானால் எனக்குத் தோன்றுவதைச் சொல்லுகிறேன். உலகம் என்பதைப்பற்றிச் சொல்லும்போது இந்தியாவுக்கு அப்புறம் ஒன்றையுமே வெகுவாய்க் கண்டதாக எவருமே எதிலுமே குறிக்கவேயில்லை. வேதக்காரர்களுக்கு இமயமலையோடு உலகம் முடிந்துவிட்டது. அதன்மீது செல்ல முடியாததால் அதுவே கைலாயமாகிவிட்டது.
இமயமலையின்மீது பனிக்கட்டிகள் உறைந்து கலந்து மலையையே அடியோடு மூடிக்கொண்டதாலும் சூரிய வெளிச்சத்திற்கு அது வெள்ளையாய்ப் பளிங்குபோல் காணப்பட்டதாலும் அதை வெள்ளியங்கிரி என்றும் அங்கிருந்து நதி (கங்கை) வருவதால் சிவனின் தலையில் இருந்து வருவதாகவும் இம்மாதிரி சிறு குழந்தைகளுக்குச் சோறு ஊட்ட பாட்டிகள் கதை சொல்லுவதுபோல் மூடக் கதையாய் உளறிக் கொட்டிவிட்டார்கள்.
வெள்ளைக்காரர்கள் வந்த பிறகுதான் இமயமலைமீது ஏறிப் பார்த்து வருகின்றார்கள். இமயமலை இன்னது என்று உணரமுடியாத, சென்று பார்க்க முடியாத மூடங்கள், மேல் ஏழுலோகம் கீழ் ஏழுலோகம் இருக்கின்றது என்பதும், கங்கையின் உற்பத்தியைக் கண்டுபிடிக்க முடியாத மூடங்கள், பாற்கடல், தயிர்க்கடல் இருப்பதாகக் சொல்லுவதும் எவ்வளவு மடமை என்பதும் அதை நம்புவது அதைவிட எவ்வளவு முட்டாள்தனம் என்பதும் நான் உங்களுக்கு எடுத்துக்கூற வேண்டியதில்லை.
மற்றும் கல்வியைக் கடவுளாக மதித்து அதற்காகக் கோடிக்கணக்காய்ப் பணம் செலவு செய்துவரும் நாட்டில் ஆண்களில் 100-க்கு 10 பேர்கூட, பெண்களில் ஆயிரத்திற்கு 10 பேர்கூட படித்தவர்கள் இல்லையானால் உண்மையிலேயே கல்வி என்பதாக ஒரு கடவுள் இருந்து நமது பூஜையை ஏற்றுக்கொண்டு வருகின்றது என்று நம்புகிறீர்களா? காளி, கருப்பன், வீரன் என்று வீரத்தன்மைக்குக்கூட கடவுள்களைச் சிருஷ்டித்து அதை வணங்கி வரும் மக்கள் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டவுடன் காய்ச்சல் வருவதானால் ஒரு வீரக் கடவுள் இருந்து பூஜைகளை ஏற்கின்றது என்று நம்புகிறீர்களா? வியாதிகளையெல்லாம் தெய்வமாகக் கும்பிட்டு அவற்றிற்குக் கோவில், பூஜை, உற்சவம் செய்து வந்ததும் நமது நாட்டில் வியாதிகளும், சாவு கணக்குகளும் மற்ற நாட்டாரைவிட ரெட்டிப்பாய் இருந்து வருகின்றது. இந்த வியாதி, தெய்வங்கள் என்பவைகள் உண்மையிலேயே நமது பூஜை, உற்சவம், செலவு ஆகியவைகளை ஏற்றுக்கொண்டது உண்மையானால் இப்படி நடக்குமா என்று கேட்கின்றோம்!
மற்றும் இதுபோலவே தொட்டதற்கெல்லாம் கடவுளை ஏற்படுத்தி பூஜை, உத்வசம் செய்வதில் நமது பக்தியும், பணமும், நேரமும், ஊக்கமும் பாழாகின்றதே அல்லாமல் காரியத்தில் ஏதாவது கடுகளவு பயன் உண்டா என்று கேட்கின்றேன்!
விவசாய விஷயத்திலும் மாடு கடவுள், ஏர்கடவுள், உழவுகடவுள் ஆகிய கடவுள்களுக்கு பூஜை, உத்சவங்கள் செய்து பணம் செலவழிக்கின்றோமே ஒழிய காரியத்தில் என்ன பலன் அடைகின்றோம்? ஏரும், உழவும், மாடும் கடவுளாகக் கருதப்படாத ஆஸ்திரேலிய தேசத்தில் ஒரு ஏக்ராவில் 3,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வேளாண்மை எடுக்கின்றார்களாம். நாம் இன்னும் ஏர் பூட்ட அய்யரைக் கூப்பிட்டு நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
இன்னும் எவ்வளவோ வழிகளில் நாம் மூடர்களாகவே, காட்டுமிராண்டிகளாகவே இருக்கின்றோம். ஒரு மனிதனுடைய ஒழுக்கத்தைத் திருத்தப்பாடு செய்வதற்கு மாத்திரம், அதுவும் அறிவில்லாதவனுக்குப் பயத்தை உண்டாக்கி அவனுடைய நடவடிக்கைகளைத் திருத்த என்று கடவுள் என்கின்ற உணர்ச்சி வேண்டுமானால் எனக்கு ஆட்சேபணையில்லை. மற்றபடி மக்களின் பணத்தையும், நேரத்தையும், அறிவையும் கொள்ளை கொண்டுவிட்டு யாதொரு பயனும் இல்லாமல் கல்லைப் போல் நெட்டுக்குத்தாய் நின்று கொண்டிருக்க மாத்திரம் கடவுள் உணர்ச்சியும், உருவமும் வேண்டுமானால் அதை நான் அரை வினாடியும் ஒப்புக்கொள்ள முடியாது. இதைப்பற்றி நீங்கள் எப்படி நினைத்துக் கொண்டாலும் எனக்குக் கவலை இல்லை. என் அபிப்பிராயத்தை உங்களுக்குத் தெரிவித்து விட்டேன்.
ஏற்கவும் தள்ளவும் உங்களுக்குப் பூரண சுதந்திரம் உண்டு. ராமசாமி என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன், அதுவும் எழுத்து வாசனை இல்லாதவன், பள்ளிக்கூடத்தில் படிக்காதவன் சொல்லுகின்றான் என்பதாகக் கருதி, நான் சொன்னவற்றை உங்கள் சொந்த புத்தியைக் கொண்டு அலசிப் பார்த்து சரி என்று தெரிந்தால் நடவுங்கள்!
- (குடிஅரசு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக