பெண்ணின் அணிமணி, அலங்காரத்திற்கு வரம்பு தேவை - தந்தை பெரியார்
வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த நிகழ்ச்சியானது இதுவரை நடைபெற்று வந்த நிகழ்ச்சிக்கு மாறுதலாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி சமீப காலத்தில் 40, 50 ஆண்டுகளுக்கு முன் மனித சமுதாய முறைகளில் சில மாற்றங்கள் செய்த போது இந்நிகழ்ச்சியும் மாற்றியமைக்கப்பட்டது என்பதோடு பழைய முறையில் பெண்ணடிமையை நிலைநிறுத்தும் படியாகவும் மனிதனின் மூட நம்பிக்கையை வளர்ப்பதாகவும், ஜாதி அமைப்பைக் காப்பாற்றுவதாகவும் இருந்ததால் இவற்றை ஒழித்து புது முறையைக் காண வேண்டியதாயிற்று. தமிழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி இருந்தது கிடையாது. ஆணும் பெண்ணும் கூடி வாழ்கிற இந்த முறையானது ஆரியனுக்குத்தான் உண்டு. தமிழனுக்குக் கிடையாது. பார்ப்பானுக்காக பார்ப்பானால் ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இக்கூட்டு வாழ்க்கை முறையாகும்.
பார்ப்பனர் களிடையே ஒழுக்கக்கேடுகள் ஏற்பட்டபின் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவைதான் சடங்குகள், முறைகள் யாவுமாகும். இதைத் தொல்காப்பியன் தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளான்.
சூத்திரர்கள் என்பவர்களுக்கு நாலாம் ஜாதி மக்களுக்கு சதி, பதி முறை இல்லை. சூத்திரர்கள் என்பவர்கள் பார்ப்பானுக்கு தாசி புத்திரர்கள். தாசி புத்திரர்களுக்குத் திருமண உரிமை கிடையாது. இது மனுதர்ம சாஸ்திரம் மட்டுமல்ல, இந்துச் சட்டமுமாகும்.
இதை மாற்ற வேண்டுமென்று, மனித சமுதாயத் தொண்டு செய்த எவருமே முற்படவில்லை. நான் ஒருவன்தான் இதற்காகப் பாடுபட்டு வருகின்றேன். எனது இயக்கம் பாடுபட்டு வருகிறது.
நம் நாட்டில் தோன்றிய எந்த மனிதச் சமுதாயத் தொண்டு செய்தவர்களும், புலவர்களும், நீதி சொன்னவர்களும் பெண்கள் என்றால் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று சொன்னார்களே தவிர, பெண்கள் ஆண்களைப் போல் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்று எவருமே சொல்லவில்லை. திருத்தப்பட்ட இம்முறையிலும் பெரும்பாலோர் நம் கருத்துப்படி நடந்து கொள்வது கிடையாது. இதன் மூலம் பாப்பானையும், சடங்குகளையும் தவிர்த்திருக்கிறார்களே ஒழிய, மற்ற செலவுகளில் எதையும் குறைத்ததாகத் தெரியவில்லை. தாலி கட்டுவதில் உள்ள இழிவைப் பெண்கள் உணராதிருக்கிறார்கள். தாலி என்பது பெண்கள் அடிமைகள் என்பதை எடுத்துக்காட்டக்கூடிய விளம்பரச் சின்னமாகும். இதை உணராது பெண்களே தாலி கட்டிக் கொள்ள முன் வருவதற்குக் காரணம் அவர்களுக்குப் போதிய கல்வி அறிவு இல்லாததாலேயே ஆகும்.
எனது கருத்து கணவன் - மனைவி என்கின்ற இம்முறையையே சட்டவிரோத மாக்க வேண்டும். பகுத்தறிவுள்ள மனிதன், சுதந்திரமாக வாழ வேண்டிய மனிதன், இல்லறம் என்கின்ற பெயரால் தன் சுதந்திரத்தை இழப்பதோடு தொல்லைக ளுக்கும் ஆளாகின்றான். குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தனது சுயமரியாதையை மனிதன் இழக்கின்றான். பெண்கள் தங்களின் அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்கள் அவர்களுக்கு அணிமணிகள் வாங்கிக் கொடுத்து அணியச் செய்கின்றனர். நம்நாட்டுப் பெண்களைப் போன்று வேறு எந்த நாட்டுப் பெண்களும் நகை அணிவது கிடையாது. சிங்காரித்துக் கொள்வது கிடையாது. ஆண்களைப் போன்று சாதாரண வாழ்வே வாழ்கின்றனர்.
நல்ல அரசாங்கமாக இருந்தால் நான்கு முழத்திற்கு மேல் பெண்கள் சேலை கட்டக் கூடாது, தலை முடியை கிராப் செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் போடும். எதற்காக ஒரு பெண்ணுக்கு 18 முழம் புடவை? இதைப் பெண்களும் சிந்திக்க வேண்டும். நாம் இன்னும் உலகத்திலுள்ள பகுத்தறிவில் கால் பகுதி கூட பெறவில்லை. மற்ற நாட்டு மக்கள் சந்திரனுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருக்கிற காலத்தில் நம் மக்கள் கோயிலையும், குழவிக் கற்களையும் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலை மாறி பெண்கள் நல்ல வண்ணம் கல்வி கற்க வேண்டும். நம் சமுதாயத்தைத் திருத்தி அமைக்கும்படியான நல்ல அரசாங்கம் அமைய வேண்டும்.
சமுதாய அமைப்பைப் பற்றி நல்ல திட்டம் போட வேண்டும். எப்படி சொத்திற்கு உச்சவரம்பு போட்டிருக்கிறார்களோ, அதுபோன்று பெண்களின் அலங்காரத்தைக் குறைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பெண்கள் கிராப் செய்து கொள்ள வேண்டும். முடியை அலங்கரிப்பதில் அதிக நேரத்தை பெண்கள் வீணாக்குகின்றனர். நாலு பேர் போற்றும்படியான பெண்கள் நம் நாட்டில் எவருமில்லையே! பெண்களுக்கு மூட நம்பிக்கை, முட்டாள்தனத்தில் உள்ள சுதந்திரத்தைக் குறைக்க வேண்டும். தமிழர் சமுதாயம் உலகத்தின் தலைசிறந்த சமுதாயமாக வாழ வேண்டுமானால் பெண்கள் கல்வி பெற வேண்டும். பகுத்தறிவு பெற வேண்டும். பொதுவாக பெண்கள் 20 வயது வரை படிக்க வேண்டும். படித்து ஒரு தொழிலில் ஈடுபட்ட பின்பே பெண்கள் திருமணத்திற்கு முன்வர வேண்டும். மணமக்கள் குடும்பம் நடத்துவதோடு சமுதாயத்திற்குத் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்.
(விடுதலை 30.11.1970)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக