செவ்வாய், 2 மார்ச், 2021

ஆண்டாள் பற்றி தந்தைபெரியார்....



ஆண்டாள் பற்றி தந்தைபெரியார்....

சு-ம:- அப்படியானால் ஒரு சந்தேகம். ஆனால் நீர் கோபித்துக் கொள்ளக்கூடாது.

பு-ம:- கோபம் என்ன? சந்தேகத்திற்குக் கோபிக்கலாமா?

சு-ம:- உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு மல்லிகைச் செடியின் அடியில் ஒரு குழந்தை அப்பொழுதுதான் பிறந்ததாகக் காணப்படக் கூடியது அழுது கொண்டு கிடக்கக் கண்டீர்களேயானால் அதைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

பு-ம:- என்ன நினைப்பது? யாரோ பெற்றுத் திருட்டுத்தனமாய்க் கொண்டு வந்து போட்டு விட்டு போய் விட்டார்கள் என்றுதான் நினைப்பேன்.

சு-ம:- யார்? எப்படிப்பட்டவர்கள் பெற்றார்கள் என்று நினைப் பீர்களா?

பு-ம:- யாரோ “ திருட்டு கர்ப்பம் ” அதாவது விதவையோ, கல்யாணமாகாத பெண்ணோ புருஷன் ஊரில் இல்லாமல் தேசாந்திரம் போனவருடைய மனைவியோ,சோரத்தனமாய் கர்ப்பம் ஆகி, அதைப் பெற்று நமது தோட்டத்தில் கொண்டு வந்து போட்டுவிட்டாள் என்று தான் நினைப்பேன்.

சு-ம:- சரி. இதுதான் நல்ல பகுத்தறிவு என்பது.

பு-ம:- அதென்ன? அப்படிச் சொல்லுகிறீர்கள்? இதுகூடவா மனிதனுக்குத் தெரியாது? இந்தப்படி அல்லாமல் பின்னை என்னமாய் நினைக்க முடியும்? மல்லிகைச் செடியா பிள்ளை பெறும்? அல்லது ஆகாயத்தில் இருந்து வந்து விழுமோ? ஒரு மூடன் கூட இதற்கு மாறாக சொல்ல முடியாது.

சு-ம:- தாங்கள் சொல்லுவது நிரம்பவும் சரி. வேறு விசேஷம் ஒன்றும் இல்லை. மல்லிகைச் செடியின் கீழ் இருந்தால்தான் அப்படிச் சொன்னீர்கள். ஒரு சமயம் துளசிச் செடியின் கீழ் கிடந்தாலோ?

சு-ம:- எங்கும் அப்படித்தானே கிடக்கும். துளசிச்செடிக்கு மாத்திரம் என்ன கொம்பா முளைத்திருக்கும்? அல்லது அது கர்ப்பமாகி பிள்ளை பிறக்குமோ? இதென்ன சிறுபிள்ளைகள் மாதிரி கேட்கின்றீர்களே?

சு-ம:- இல்லை, ஏதோ ஒரு புராணத்தில் துளசிச்செடி அடியில் ஒரு குழந்தை கிடந்தது. அதைக்கடவுள் அவதாரமாய்க் கருதினார்கள். பிறகு அது கடவுளே ஆகிவிட்டது. இப்போதும் அது கடவுளாயிருக்கின்றது என்று பார்த்ததாக எனக்கு ஞாபகம். ஆதலால் அந்த புராணங்களை யெல் லாம் தாங்கள் நம்புவதுண்டா? அல்லது நம்பும்படி காலnக்ஷபம் செய்வ துண்டா? என்று தெரியலாம் என்பதாக ஆசைப்பட்டுத்தான் தங்களைக் கேட்டேன்.

பு-ம:- நீர் சு.ம. என்பது தெரிந்தும் உம்மிடம் நான் பேசியது சுத்தத் தப்பு. புராணத்தை சந்தேகப்படுகின்ற-தர்க்கம் செய்கின்ற-நாஸ்தீகர்களு டைய முகாலோபனமே செய்யக்கூடாது என்ற பெரியவாள் இதற்காகத் தானே சொல்லி இருக்கின்றார்கள். சு.ம.என்றாலே நாத்திகம் தானே. உம்மோடு பேசிய குற்றத்திற்காக நான் ஒரு முட்டாள் ஆக வேண்டியதும் நியாயம் தானே?

சு-ம:- இப்படிக் கோபித்துக் கொள்ளலாமா? நீங்கள் சொன்னதை உங்கள் வாயைக் கொண்டு, சொன்னதைக் கொண்டு உங்களை என்ன சொல்லுகின்றீர்கள் என்று தான் கேட்டேனே ஒழிய நான் ஏதாவது குற்றமான வார்த்தை சொன்னேனா? அல்லது என் அபிப்பிராயமாக ஏதாவது சொன் னேனா? ஏன் இவ்வளவு கோபம்?

பு-ம:- கோபம் ஒன்றும் இல்லை எனக்கு வேலையிருக்கின்றது. கொஞ்சம் அவசரம். நான் போய் விட்டு வருகின்றேன் (என்று சொல்லிக் கொண்டே நழுவிவிட்டார்.)

குடி அரசு - உரையாடல் - 06.09.1931
(சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை - சித்திரபுத்திரன் )

நன்றி: தோழர் வாலாசா வல்லவன் &
Arulmozhi Kathirvel.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக