ஜனநாயகம்
மக்கள் மடையர்களாக, மூடநம்பிக்கைக் காரர்களாக, சிந்தனா சக்தி இல்லாதவர்களாக உள்ளவரைதான் கடவுளுக்கும் அரசனுக்கும் மதிப்பு இருக்க முடியும்; அவர்களிடத்தில் மக்களுக்கு பயம் இருக்க முடியும்.
ஏனெனில் இவர்களுக்கு இயற்கையான சக்தி கிடையாது. இவர்களது ``சக்தி'' செயற்கைச் சக்திதான். அதாவது புருஷனுக்குப் பெண்டாட்டி பயப்படுவதுபோல ஒரு கட்டுப்பாட்டினால் தேவையைப் பொறுத்து ஏற்படும், ஏற்படுத்திக் கொள்ளும் சக்திதான்.
உதாரணமாக, கடவுள் பயம் மக்களுக்கு நாளுக்கு நாள் குறைந்து வந்து இன்று சம்பிரதாயத்துக்காக அல்லாமல் மற்றபடி எவருக்குமே இன்று கடவுள் பயமோ - நம்பிக்கையோ அடியோடு இல்லாமல் போய்விட்டதுடன் இன்று மடையர்களிடமும் அயோக்கியர்களிடமுமே தேவையைப் பொறுத்து இருந்து வருவதையே பார்க்கிறோம். அதாவது, ஒரு பூசாரிக்கு அர்ச்சகனுக்கு இருந்து வருகிற நம்பிக்கைப்படி.
அதுபோலவேதான் - அரசன் நிலைமையும் இன்று அடியோடு மறைந்துவிட்டது. உலகில் இன்று எங்குமே உண்மையான அரசன் இல்லை; உலகில் எங்குமே இன்று அரசனை மதிக்கும் மக்களும் இல்லை.
அரசர்களை ஒழிப்பதற்கென்று பல நாளாக கிளர்ச்சிகள் குடிமக்களாலேயே செய்யப்பட்டு, சில அரசரைக் கொன்றும் சிலரை விரட்டியும் விட்டு, அரசனல்லாத ஆட்சியையே உலகில் பெரும்பாகத்தில் மக்கள் ஏற்படுத்திவிட்டார்கள் என்றாலும், அதாவது அரசன் ஒழிக்கப்பட்டு விட்டான் என்றாலும், அரசன் செய்து வந்ததுபோல் மக்களை அடக்கி ஆளும் ஆட்சி என்பதாக ஒன்று இன்று மக்களுக்கு அவசியம் வேண்டியதாகவே இருக்கிறது.
இப்படி தேவையிருக்கும் ஒரு ஆட்சிக்கு ``அரசன் என்பதாக ஒருவன் தேவை இல்லை. மக்களாகிய நாமே ஆட்சித் தலைவனாக இருந்து கொண்டு ஆட்சி நடத்திக் கொள்ளலாம்'' என்று மக்கள் கருதியது அல்லது யாரோ சிலர் கருதியது என்பது மாபெரும் முட்டாள்தனம் அல்லது அயோக்கியத் தனமேயாகும். இதன் பயன் என்னமாய் முடியுமென்றால், மக்களுக்கு ஏற்கெனவே இருந்து வரும் கெட்ட குணங்கள், கூடாத குணங்கள் என்று சொல்லப்படுபவையான பொய், புரட்டு, பித்தலாட்டம், ஏமாற்றுதல், வஞ்சித்தல், கொலை, கொள்ளை, பலாத்கார காலித்தனம், அமைதி இன்மை, குழப்பம் முதலிய சமுதாய வாழ்வுக்குக் கூடாததான காரியங்கள் நடைபெறவும், நாளுக்குநாள் மக்கள் இவற்றில் ஈடுபடவுமான, மக்களின் சமூக வாழ்வுமுறை கெடவுமான நிலை ஏற்பட்டுத் தாண்டவமாடு வதுதான் விளைவாக இருக்கும், இருந்தும் வருகிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை எவ்வளவு முட்டாள் தனமானதோ அவ்வளவு முட்டாள்தனமான கருத்தும் காரியமுமேயாகும் ஜனநாயகம் என்பதும். ஆனால், சில அயோக்கியர்களுக்கும், கீழ்த்தர மக்களுக்கும் இதில் பயன், சுயநலம் இருப்பதாக இவர்களால் எளிதில் மக்களை ஏமாற்றிப் பயன்பெற முடிகிறது.
இன்று உலகில் எந்த நாட்டில் ஜனநாயகம் ஒழுங்காக யோக்கியமாக நடைபெறுகிறது என்று சொல்ல முடியும்?
அரசன் நாயகன், அரசன் ஆட்சி என்று சொல்லப்படுவதற்கு சக்தி இருப்பதற்குக் காரணம்,
1. அரசன் என்கின்ற மதிப்பு
2. அரசன் நடுநிலை உள்ளவன் என்கின்ற நம்பிக்கை
3. அரசனது அதிகார பலம், இவற்றோடு
4. பரம்பரையாக யார் தயவுமில்லாமல் பதவிக்கு வரும் இயற்கை உரிமை.
இந்தக் காரணங்களால் அரசனது ஆட்சியை குடிகள் யாரும் எதிர்க்கவும் குறை கூறவும் முடியாமல் இருக்க முடிந்தது.
ஜனநாயக ஆட்சியாளருக்கு இவ்விதத் தகுதி ஏதாவது உண்டோ? மக்களுக்காவது இதற்கேற்ற பண்பாடு ஏதாவது உண்டோ?
கடவுளுக்கு சோறு போட்டு கல்யாணம் செய்து வைத்து கடவுள் பெண்டாட்டியின் தலையையும், சேலையையும் திருட்டுக் கொடுத்துவிட்டு வந்த ஒருவன் மற்றவனைப் பார்த்து, ``அடே, கடவுள் கெடுத்து விடுவாரடா'' என்று சொல்லி மிரட்டுகிறதைப் போல்தானே இருக்கிறது நமது ஜனநாயக அமைப்பு!
1. காசு கொடுத்து ஓட்டுப் பெறுகிறான்.
2. காசு பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடுகிறான்.
3. பொய்யும் புரட்டும் கூறி மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுகிறான்.
4. ஓட்டின் பலன் என்ன, அதை எப்படி, எதற்குப் பயன்படுத்துவது என்ற அறிவே இல்லாமல் ஓட்டுப் போடுகிறான்.
இவ்வளவுதானா?
ஜாதிப் பெயர் சொல்லி ஓட்டுக் கேட்கிறான்; (தன்) ஜாதியான் என்பதற்காக ஓட்டுப் போடுகிறான். இவை ஜனநாயக பிரதிநிதித்துவ நிலைமை என்றால் நாட்டின் நிலைமையோ மக்கள் ஒருவனை ஒருவன் தொட முடியாத நான்கு ஜாதி, ஒருவருக்கொருவர் உண்ணல் கொடுக்கல் வாங்கல் இல்லாத 400 உள்பிரிவு, ஒருவருக்கொருவர் வெறுப்புக் கொண்ட பல மதம், கடவுள்கள், பல வேதங்கள், பல தர்மங்கள், இவற்றுள் பல ஜாதித் தொழில்கள், அவற்றின்படி ஒருவரை ஒருவர் அடக்கி ஆள பல இலட்சியங்கள், சூழ்ச்சிகள் இவை மாத்திரமேயல்லாமல் பெரிதும் கொள்கையே இல்லாத பல பதவி வேட்டைக் கட்சிகள்; இவற்றிற்கு ஏற்ற பத்திரிகைகள்; சாக்கடை கழுவுகிறவன் முதல் அய்க்கோர்ட் ஜட்ஜ், சீப் செகரட்டரி வரை ஜாதி உணர்ச்சி, ஜாதி அகம்பாவம், மற்ற ஜாதியை ஆள வேண்டுமென்கிற உணர்ச்சியை மூச்சாகக் கொண்ட சிப்பந்திகள், பதவியாளர்கள், பதவியையும் சம்பளத்தையும் வருவாயையுமே முக்கிய இலட்சியமாகக் கொண்ட மந்திரிகள், பிரசிடென்ட்கள், சட்டசபை, பார்லிமென்ட் மெம்பர்கள்.
இந்த நிலையில் ஜனநாயகம் என்றால் இதற்குப் பொருள் கடவுள் என்பதற்கு உண்டான பொருள் அல்லாமல் ஜனநாயகத்தை நம்புகிறவர்கள் கடவுளை நம்புவது போன்றவர்கள் என்பது அல்லாமல் வேறு என்ன? ஆகவே, ஜனநாயகம் ஒழிந்து கொடுமையான சர்வாதிகாரம் ஏற்பட்டாலும் குடிமக்களுக்கு ஒருவனுடைய தொல்லைதான், ஒருவனுடைய நலத்திற்கு ஏற்ற கேடுதான் இருக்கலாமே ஒழிய ஜனநாயகப்படியான முள்ளுப் பீப்பாயில் போட்டு உருட்டுவது போன்ற தொல்லைகள் குடிமக்களுக்கு இருக்க முடியாது.
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்
(விடுதலை, 3.11.1968).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக