செவ்வாய், 29 அக்டோபர், 2024

காட்-அல்லா-பகவான் : தமிழில்? – தந்தை பெரியார்

 


அக்டோபர் 01-15

நாம் ஒரு தமிழர் என்கின்ற முறையில் கடவுள் என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோமானால், “கடவுள்” என்கின்ற பதமே கட+உள் = (கடவுள்) என்பதான இரண்டு சொற்கள் சேர்ந்த பகுபதமாக இருக்கின்றதே தவிர, வட மொழியிலும், ஆங்கில மொழியிலும் இருப்பது போன்ற பகவான் காட் (God) அல்லா என்பது போன்ற ஒரு தனி வார்த்தையோ அல்லது அந்த விதங்களான அர்த்தத்தைக் கற்பிக்கக் கூடியதான வாக்கியமோ, தமிழில் இல்லையென்பதை உணர வேண்டும். தமிழர்களுக்கு பாஷை தோன்றிய காலத்தில் “கடவுள்” உணர்ச்சி இருந்து இருக்குமானால் அதற்கு ஒரு தனி வார்த்தை இருந்திருக்கும்.

அது மாத்திரமல்லாமல், ஆங்கிலம் முதலிய பாஷைகளில் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதை உணர்த்துவதற்கு எப்படி எத்தீசம், எத்தீஸ்ட், நாஸ்திகம், நாஸ்திகன் என்கின்ற வார்த்தைகள் இருக்கின்றனவோ அவைபோலவே தமிழிலும் கடவுள் இல்லை என்று சொல்லுவதை உணர்த்துவதற்கும், கடவுள் இல்லை என்று சொல்லுபவனைக் குறிப்பிடுவதற்கும் அப்பொருள்கள் கொண்ட ஏதாவது ஒரு வார்த்தை இருந்திருக்கும். ஆகவே, அவற்றிலிருந்து தமிழர்களுக்கும் (அதாவது தமிழ்நாட்டாருக்கும்) கடவுளுக்கும் ஆதியில் எவ்வித சம்பந்தமுமிருந்ததில்லை என்பது ஒருவாறு புலப்படும்.

இறைவன் என்கின்ற பதத்தை கடவுளுக்கு உள்ள தமிழ்ப் பதம் என்று பண்டிதர்கள் சொல்லக் கூடுமானாலும் அது அரசனுக்கும், தலைவனுக்கும் ஏற்பட்டதே தவிர, கடவுளுக்காக ஏற்பட்ட தனிப் பொருளமைந்த சொல் அல்லவென்றே சொல்லுவோம். ஆனால், கடவுள் என்பது எப்பொருளுக்கும் தலைவன் என்கின்ற முறையில் வேண்டுமானால் இறைவன், பெரியவன் எனினும் பொருந்தும் என்று சப்புக் கட்டலாமேயொழிய அது அதற்கே ஏற்பட்ட தனி வார்த்தை ஆகாது.

நிற்க; தமிழ்நாட்டில் பலர் காலம்சென்ற பிதுர்க்களையும், செல்வாக்குள்ள பெரியார் களையும் அன்பினாலும், வீரர்களைக் கீர்த்தியாலும் வழிபட நினைத்து அவர்களை உருவகப்படுத்த என்று ஒரு கல் நட்டு அக்கல்லை வணங்கி வந்ததாக மாத்திரம் சொல்லப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். மற்றபடி இப்போதைய கடவுள்களான சிவன், விஷ்ணு, பிரமன், பிள்ளையார், சுப்பிரமணியன் முதலிய கடவுள்களையோ மற்றும் அது சம்பந்தமான குட்டிக் கடவுள்களையோ தமிழ் மக்கள் வணங்கி வந்தார்கள் அல்லது நம்பி இருந்தார்கள் என்றாவது சொல்லுவதற்குக்கூட இடமில்லை என்று கருதுகிறேன். இதற்கெனக்குத் தோன்றும் ஆதாரம் என்னவென்றால், இப்போது உள்ள கருப்பன், காத்தான் முதலிய பேர்கள் கொண்ட நீச்சக் கடவுள்கள் தவிர மற்ற கடவுள்கள் பெயர்களெல்லாம் வடமொழியிலேயே இருக்கின்றதென்பதே போதுமானதாகும்.

ஆனால், வடமொழிப் பெயருள்ள சில கடவுள்களின் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்த்து அந்தக் கடவுள்களைத் தமிழில் அழைப்பதைப் பார்க்கின்றோம். என்றாலும், இவை தமிழர்களுக்குள்ளும் ஆதியில் இருந்தது என்பதற்குத் தக்க சமாதானம் சொல்ல யாரும் முன் வருவதை நான் பார்க்கவில்லை.

இது மாத்திரமல்லாமல், சைவம், வைணவம் என்று சொல்லப்படும் சமயங்களாகிய தமிழ் மக்களைப் பிடித்த நோய்களான சைவ, வைணவ மதக் கடவுள்கள் எல்லாம் வடமொழிப் பெயர்கள் உடையதாகவும், அவற்றின் ஆதாரங்கள் முழுவதும் வடமொழி வேத சாஸ்திர புராண இதிகாசங்களாகவும்தானே இருக்கின்றதே அல்லாமல், தமிழ் ஆதாரத்தால் ஏற்பட்டதாகச் சொல்லக்கூடிய கடவுள் ஒன்றையுமே நான் கண்டதும் கேட்டதும் இல்லை. இவற்றுக்குச் செய்யப்படும் பூசை முதலியவையும், வடமொழி நூல்கள் ஆதாரப்படி, வடமொழிப் பெயர்கள் கொண்ட வஸ்துகளும் செய்கைகளுமாகவே இருப்பதையும் காணலாம். அதாவது அருச்சனை, அபிஷேகம், பலி, கற்பூரம், சாம்பிராணி, காணிக்கை முதலியவையாகும்.

தவிரவும், மேற்கண்ட இரண்டு சமயங்களின் பேரால் சொல்லப்படும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய சமயாச்சாரியார்களும், பக்தர்மார்களும் கும்பிட்டதும், தேவாரம், திருவாசகம், திருத்தாண்டகம், பிரபந்தம் முதலியவை பாடினதும், மற்ற மக்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்துவதும், ஆகிய எல்லாம் வடமொழிப் பேர் கொண்ட கடவுள்களைப் பற்றியும், அவர்களது செய்கைகளைப் பற்றிச் சொல்லப்பட்ட வடமொழிப் புராண இதிகாசங்களிலுள்ள கதைகளைப் பற்றியுமே இருக்கின்றனவே அல்லாமல் மற்றபடி அவை தமிழர்களோ அல்லது தமிழ்ப் பண்டிதர்களோ தமிழர்களுக்கு ஆதியில் இருந்தது என்று சொல்லத்தக்கதாக ஒன்றையுமே, ஒருவர் வாக்கையுமே நான் பார்த்ததும் இல்லை; பிறர் சொல்லக் கேட்டதும் இல்லை.

மற்றும், சமயக் குறிகள் என்று சொல்லப்படும் விபூதி, நாமம் முதலிய சின்னங்களின் பெயர்கள்கூட வடமொழியில் உள்ளதே தவிர, தமிழில் உள்ளவையல்ல என்பதே எனது அபிப்பிராயம். வேண்டுமானால் அதைத் தமிழில் _ விபூதியைத் திருநீறு என்றும், திருமண் என்றும் சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனாலும், அது சரியான மொழிபெயர்ப்பல்லவென்று சொல்வதோடு, விபூதி, நாமம் என்கின்ற பெயர்கள் எந்தக் கருத்துடன் சொல்லப்படுகின்றனவோ அந்தக் கருத்தும், பொருளும் அவற்றில் இல்லை என்றே சொல்லுவேன். விபூதி என்றும், நாமம் என்றும் சொல்லப்படும் வஸ்துகள் சாம்பலும், மண்ணுமாய் இருப்பதால் அந்தப் பெயரையே அதாவது, சாம்பலுக்குள்ள மாறு பெயராகிய நீறு என்றும், மண்ணை மண் என்றும் திரு என்பதை முன்னால் வைத்து திருநீறு, திருநாமம் என்று சொல்லப்படுகின்றதே ஒழிய வேறில்லை என்றே தோன்றுகின்றது.
ஆகவே, தமிழில் காட், அல்லா, பகவான் என்பவற்றைக் குறிப்பதற்கு ஒரே வார்த்தையாக ஒன்றுமே இல்லை என்பதும், அதன் சின்னங்களையும் குறிப்பிடுவதற்குத் தமிழில் வார்த்தைகள் இல்லை என்பதும், அனுபவத்திலுள்ள கடவுள்களும், பெயர்களும் அவற்றின் நடவடிக்கைகளும்கூட தமிழில் இல்லை என்பதும், மற்றபடி இப்போது இருப்பவை எல்லாம் வடமொழியில் இருந்து தமிழர்கள் எடுத்துக்கொண்டு தங்களுடையன வாக்கிக் கொண்ட மயக்கமே என்றும் எனக்குப் பட்டதை உங்களுக்குச் சொன்னேன்.

– கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜ ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்களின் தலைமை முடிவுரையிலிருந்து (குடிஅரசு, 29.6.1930).

தீபாவளி தத்துவமும் இரகசியமும் – தந்தை பெரியார்

 

அக்டோபர் 16-31

டேவிஸ்:- டேய்! ராமானுஜம் எங்கேடா புறப்பட்டுவிட்டாய்?

ராமானுஜம்: எங்கள் சொந்த ஊருக்குப் போகிறேன்.

டே—_ஸ்: உங்கள் சொந்த ஊருக்கா? எதற்காகப் போகிறாய்?

ரா—ம்: அடடே! என்ன இப்படிக் கேட்கிறாய். தீபாவளிப் பண்டிகை வருகிறதல்லவா?- அதற்காகப் போகிறேன்.

டே—ஸ்: என்ன பண்டிகை?

ரா—ம்: தீபாவளிப் பண்டிகை.

டே—ஸ்: தீபாவளியா? அது என்ன பண்டிகையப்பா? எதற்காக அதைக் கொண்டாடுவது?

ரா–_ம்: அப்படிக் கேளு, சொல்லுகிறேன். தீபாவளி என்பது உலகத்துக்குக் கேடு விளைவித்த ஒரு அசுரன், கடவுளால் கொல்லப்பட்ட நாளை மக்கள் கொண்டாடுவதாகும். அதை நீயும் கொண்டாடலாம். இப்பொழுது வெள்ளையனை ஒழித்த நாளை நாம் சுதந்தர நாளாகக் கொண்டாடவில்லையா அதுபோல்.

டே–ஸ்: அப்படியா அந்த அசுரன் யார்? அவன் எப்படி உலகுக்குக் கேடு செய்தான்? அந்தக் காலத்தில் அணுகுண்டு இருந்திருக்காதே. இந்தக் காலத்தில் அணுகுண்டு வைத்திருப்பவனையும், இன்னும் மக்கள் சமுதாயத்துக்கு என்ன என்னமோ கேடு செய்கிறவர்களையும் பற்றி நாம் ஒன்றுமே பேசுவதில்லை. அப்படி இருக்க அந்த அசுரன் யார்? அவன் என்ன கேடு செய்தான்?

ரா—ம்: அந்த அசுரன் பெயர் நரகாசூரன். அவன் பூமியிலிருந்து பிறந்தவன். அவன் தகப்பன் மகாவிஷ்ணு. அவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான். அதனால் மகாவிஷ்ணுவும் அவர் மனைவியும் சேர்ந்து அவனைக் கொன்றுவிட்டார்கள். இனி எவரும் தேவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதை மக்களுக்கு ஞாபகப்படுத்துவதற்கு ஆக அவன் செத்த நாளைக் கொண்டாடுவது, தெரிந்ததா? இதுதான் தீபாவளித் தத்துவம்.

டே-ஸ்: தெரிந்தது. ஆனால், அதை விளங்கிக்கொள்ள வேண்டும் என்று என் மனம் ஆசைப்படுகிறது. அதாவது, அவன் மகாவிஷ்ணுவுக்கும் பூமிக்கும் எப்படிப் பிறக்க முடியும்? பூமியானது மண்கல் உருவத்தில் இருந்தது. மகாவிஷ்ணுவுக்கு பூமியுடன் எப்படி கலவி செய்ய முடிந்தது? பூமி எப்படி கர்ப்பம் தரிக்கும்? அதற்கு எப்படி பிள்ளை பிறக்கும்? எனக்குப் புரியவில்லையே?

ரா—_ம்: அட பயித்தியக்காரனே! மகாவிஷ்ணு நேராகவா போய் கலவி செய்வார். அதற்கு அவருக்கு மனைவிகள் இல்லையா? ஆதலால் அவர் நேராகக் கலவி செய்யவில்லை; மகாவிஷ்ணு பன்றி உருவமெடுத்தார்.

டே-ஸ்: பொறு, பொறு. இங்கே கொஞ்சம் விளக்கம் தேவை; மகாவிஷ்ணு பன்றி உருவம் ஏன் எடுத்தார்? ரா—_ம்: அதுவா, சரி! சொல்லுகிறேன் கேள். இரண்யாட்சதன் என்று ஒரு இராட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.

டே-ஸ்: பொறு. பொறு; ஓடாதே; இங்கே எனக்கு ஒரு மயக்கம்.

ரா-ம்: இதிலென்னப்பா மயக்கம்? நான்தான் தெளிவாகச் சொல்லுகிறேனே;

பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு சமுத்திரத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டான் என்று.

டே-ஸ்: சரி, அது அர்த்தமாச்சுது.

ரா-ம்: பின்னே, எது அர்த்தமாகவில்லை? சும்மா தொல்லை கொடுக்கிறாயே?

டே-ஸ்: தொல்லை ஒன்றுமில்லை; உன் சங்கதிதான் என் மூளைக்குத் தொல்லை கொடுக்கிறது; தலை சுற்றுகிறது; அதாவது, ஒரு இராட்சதன் _அப்டீன்னா என்ன? அது கிடக்கட்டும். அவன் பெயர் இரண்யாட்சதன். அதுவும் போகட்டும். அவன் கதை அப்புறம் கேட்போம். அந்த இராட்சதன் பூமியை எப்படிச் சுருட்டினான்? பூமிதான் பந்து போல் இருக்கிறதே! அவன் அதைச் சுருட்டுவதானால் ஒரு சமயம் உருட்ட முடியுமே ஒழிய சுருட்ட முடியாது. அதுவும் போகட்டும்; சுருட்டினான் என்கிறாய். சுருட்டினான் என்றே வைத்துக் கொள்வோம். சுருட்டினானே அவன்; சுருட்டும்போது தான் எங்கே இருந்துகொண்டு சுருட்டினான்? சுருட்டிக் கொண்டு ஓடினானே, எதன்மேல் நடந்து ஓடினான்? ஆகாயத்தில் பறந்துகொண்டே சுருட்டி இருக்கலாம்! ஆகாயத்திலே பறந்துகொண்டே ஓடி இருக்கலாம்! கருடன் மகாவிஷ்ணுவையும் அவர் பெண்டாட்டியையும் தூக்கிக்கொண்டு பறப்பதுபோல் பறந்து இருக்கலாம்! ஆனால், அவன் சமுத்திரத்திற்குள் ஒளிந்துகொண்டான் என்றாயே; அந்த சமுத்திரம் எதன் மேல் இருந்தது? பூமியின் மேல் இல்லாமல் அதுவும் ஆகாயத்தில் தொங்கிக்கொண்டோ அல்லது பறந்துகொண்டோ இருந்தது என்றால் சமுத்திரம் தண்ணீர் ஆயிற்றே, அது ஒழுகிப்போய் இருக்காதா? அப்போது அடியில் ஒளிந்து கொண்டிருப்பவன் தொப்பென்று கீழே பூமியுடன் விழுந்திருக்க மாட்டானா? அல்லது அது வேறு உலகம், இது வேறு உலகமா? நமக்கு ஒன்றும் புரியவில்லையே? இதை எனக்குப் புரிய வைக்க வேண்டும்; நாமும் பி.ஏ., 2வது வருஷம் பூகோளம், வானநூல் சைன்ஸ் படித்தவர்கள்; ஆதலால் இந்த  சந்தேகம் வருகிறது. நாம் படிக்காத மடையர்களாய் இருந்தால் குற்றமில்லை. சற்று சொல்லு பார்ப்போம்.

ரா_ம்: இதெல்லாம் பெரியோர்கள் சொன்ன விஷயம். சாஸ்திரங்கள் சொன்ன விஷயம். மதத் தத்துவம் ஆதலால் இவைகளை இப்படியெல்லாம் கேட்கக்கூடாது. நாஸ்திகர்கள்தான் இப்படிக் கேட்பார்கள். கருப்புச் சட்டைக்காரர்கள்தான் இப்படிக் கேட்பார்கள். இத்தனை ஆயிரம் காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்களே, ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? சோஷியலிஸ்டுகளில் ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? நீதான் இப்படிக் கேட்கிறாய்; நீ கருப்புச்சட்டைக்காரன்தான் சந்தேகமில்லை.

டே_ஸ்: நீ என்னப்பா இப்படிப் பேசறே, பி.ஏ. படிக்கிறவனாகத் தெரியவில்லை; பூமிக்குப் பிறந்தான் என்றாய்! பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போனான் என்கிறாய்! எப்படிப் பிறந்தான்? எப்படித் தூக்கிக் கொண்டு எப்படிப் போனான்? என்றால், கோபப்படுகிறாய்! இந்தக் கதையைப் பண்டிகையாக வைத்துக் கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடுகிறார்கள் என்கிறாய். சர்க்கார் இதற்கு லீவு விடுகிறது. பல லட்சம் பிள்ளைகள் அன்று படிப்பதைவிட்டு தெரு சுற்றுகிறார்கள்; இவ்வளவு பெரிய சங்கதியைக் கேட்டால் என்னைக் கருப்புச்சட்டை என்கிறாய்; கருப்புச் சட்டை போடாதவனுக்குப் புத்தியே இருக்கக்கூடாதா? புத்தி கருப்புச் சட்டைக்குத்தான் சொந்தமா? சரி அதிருக்கட்டும் அப்புறம் அவன் ஓடிப்போய் சமுத்திரத்தில் ஒளிந்துகொண்டான்; அப்புறம்?

ரா_ம்: ஒளிந்துகொண்டான்; பூமியில் இருந்தவர்கள் எல்லாம் போய் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.

டே_ஸ்: இரு, இரு, பூமியைச் சுருட்டினபோது பூமியில் இருந்தவர்கள் ஓடிவிட்டார்களோ? நோட்டீஸ் கொடுத்துவிட்டுத்தான் சுருட்டினானோ?

ரா_ம்: நீ என்னப்பா சுத்த அதிகப் பிரசங்கியாக இருக்கிறே ஓடிப்போய் முறையிட்டார்கள் என்றால், எப்படிப் போனார்கள் வெங்காயம் வீசை என்ன விலை? கருவாடும் கத்தரிக்காவும் போட்டுக் குழம்பு வெச்சால் நல்லா இருக்குமா? என்பது போன்ற அதிகப் பிரசங்கமான கேள்விகளை முட்டாள்தனமா கேட்கிறாயே?

டே_ஸ்: இல்லை இல்லை கோபித்துக் கொள்ளாதே! சரி; சொல்லித்தொலை. முறையிட்டார்கள், அப்புறம்?

ரா_ம்: முறையிட்டார்கள், அந்த முறையீட்டுக்கு இரங்கி பகவான் மகாவிஷ்ணு உடனே புறப்பட்டார். சமுத்திரத்தினிடம் வந்தார். பார்த்தார் சுற்றி; எடுத்தார் பன்றி அவதாரம்; குதித்தார் தண்ணீரில்; கண்டார் பூமியை; தன் கொம்பில் அதைக் குத்தி எடுத்துக் கொண்டு வந்து விரித்தார் புரிஞ்சுதா?

டே_ஸ்: புரியாட்டா, கோபித்துக் கொள்ளுகிறாய்; அதிகப் பிரசங்கி என்கிறாய்; சரி புரிந்தது; விரித்தார் பூமியை; பிறகு என்ன நடந்தது?

ரா_ம்: பிறகா, பூமியை விரித்தவுடன் அந்தப் பூமிக்கு ஒரு சந்தோஷம் ஏற்பட்டது. ஒரு குஷால் உண்டாயிற்று. பூமி அந்தப் பன்றியைப் பார்த்தது. அந்தப் பன்றி இந்தப் பூமியைப் பார்த்தது, அந்தச் சமயம் பார்த்து மன்மதன் இரண்டு பேரையும் கலவி புரியச் செய்துவிட்டான். அப்புறம் சொல்ல வேண்டுமா! கலந்தார்கள்; பிறந்தது பிள்ளை.

டே_ஸ்: சரி; இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன், கோவிச்சுக்காதே.

ரா_ம்: சரி கேள்.

டே_ஸ்: வராகம் என்பது பன்றி. அது ஒரு மிருக ரூபம்: சரிதானா?

ரா_ம்: சரி.

டே_ஸ்: பூமி கல்மண் உருவம்; சரிதானா?

ரா_ம்: சரி.

டே_ஸ்: இது இரண்டும் எப்படிக் கலவி புரியும்? எப்படிக் கருத்தரிக்கும்?

ரா_ம்: பாத்தியா பாத்தியா; இதுதான் போக்கிரித்தனமான கேள்வி என்பது, கடவுள் பார்த்து எப்படி வேண்டுமானாலும் செய்யலாமல்லவா?

டே_ஸ்: என்னப்பா இராமானுஜம், பாத்தியா பாத்தியா என்று சாயபு மாதிரி பாத்தியா கொடுக்கிறே. இது ஒரு பெரிய செக்ஷுவல் சையன்சு சங்கதி இதைக்கேட்டால் போக்கிரித்தனமான கேள்வி என்கிறாய்; சரி! இதைப்பற்றி பிரின்ஸ்பாலைக் கேட்கலாம். அப்புறம் அந்தப் பிள்ளை என்ன ஆச்சுது?

ரா_ம்: அந்தப் பிள்ளைதான் நரகாசூரன்.

டே_ஸ்: இந்தப் பெயர் அதற்கு யார் இட்டார்கள் தாய் தந்தையர்களா?

ரா_ம்: யாரோ அன்னக்காவடிகள்! இட்டார்கள்? அதைப் பற்றி என்ன பிரமாதமாய் கேட்கிறாய்? எனக்கு அவசரம். நான் போகவேண்டும். என்னை விடு. டே_ஸ்: சரி போகலாம், சீக்கிரம் முடி. அப்புறம்?

ரா_ம்: அந்த நரகாசூரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான். அவனை மகாவிஷ்ணு கொன்றார்.

டே_ஸ்: அடப் பாவி! கடவுளுக்குப் பிறந்தவனா, தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான்? அப்படியென்றால் தேவர்கள் என்ன அவ்வளவு அயோக்கியர்களா?

ரா_ம்: இல்லேப்பா, இந்த நரகாசூரனின் பொல்லாத வேளை. தேவர்கள் கிட்டே அவன் வாலாட்டினான். அவர்கள் சும்மா விட்டுவிடுவார்களா?

டே-ஸ்: அதற்காக தகப்பன் மகனுக்குப் புத்தி சொல்லாமல் ஒரே அடியாகக் கொன்றுவிடுவதா?

ரா_ம்: அது அவர் இஷ்டம்; அதைக் கேட்க நாம் யார்? தேவரனையர் கயவர் அவரும் தாம் மேவன செய்தொழுகலான் என்று நாயனார் சொல்லி இருக்கிறார். ஆதலால் நாம், அது ஏன் இது ஏன் என்று கேள்வி கேட்கலாமா?

டே-ஸ்: சரி கொன்றார். அதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?

ரா_ம்:  அதைக் கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் என்றால் இனிமேல் எவனும் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காக, அதை ஞாபகத்தில் வைப்பதற்கு, அதை நினைவூட்டுவதற்கு நாம் அடிக்கடி கொண்டாட வேண்டியது.

டே-ஸ்: தேவர்கள் எங்கிருக்கிறார்கள்?

ரா-ம்: வான் தேவர்கள் வானத்தில் (மேல் லோகத்தில்) இருக்கிறார்கள்; பூதேவர்கள் இந்தப் பூமியில் இருக்கிறார்கள்!

டே_ஸ்: இந்தப் பூமியில் இருக்கும் தேவர்கள் யார்?

ரா-ம்:  அடமுட்டாள்! அதுகூடவா தெரியாது; அதுதான் பிராமணர்கள், பிராமணர்கள் என்றாலே பூதேவர்கள்தானே, அகராதியைப் பார்.

டே-ஸ்: பிராமணர்கள் என்பவர்கள் என்ன வகுப்பு?

ரா-ம்:  என்ன வகுப்பு? நாங்கள்தான்?

டே-ஸ்: நீங்கள் என்றால், நீ அய்யங்கார்; நீங்கள்தானா?

ரா-ம்: நாங்கள் மாத்திரம் அல்ல  அப்பா. நாங்களும், அய்யர், ஆச்சார், சாஸ்திரி, சர்மா, தீட்சதர் முதலியவர்கள்.

டே_ஸ்: அப்படி என்றால் பார்ப்பனர்கள் யாவரும் பூதேவர் என்கிறாய்.

ரா-ம்: ஆமா! ஆமா!! கல்லாட்டமா ஆமா!!!

டே-ஸ்: சரி, தொலைந்து போகட்டும். நீங்கள் தேவர்கள் என்றே வைத்துக்கொள்வோம்; உங்களுக்குத் தொல்லை கொடுக்க அசுரர், ராட்சதர் ஒருவரும் இந்த உலகத்தில் இல்லையே? இங்கிருப்பவர்களை எதற்கு ஆக பயப்படுத்த தீபாவளி கொண்டாட வேண்டும்?

ரா-ம்: இங்கேயே அசுரர் ராட்சதர் இல்லை என்கிறாய். இந்தக் கருப்புச் சட்டைக்காரர்கள் சு.மக்கள், தி.கழகத்தார்கள் இவர்கள் எல்லாம் யார்? பிராமணர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறவர்கள். குறை சொல்லுகிறவர்கள், அவர்களைப்போல் வாழவேண்டுமென்பவர்கள், வேதசாஸ்திர புராண இதிகாசங்களைப் பகுத்தறிவில் ஆராய்ச்சி செய்கிறவர்கள் முதலிய இவர்கள் எல்லோரும் இராக்கதப் பதர்கள், இரக்கமே இல்லாத அரக்கர்கள் தெரிந்ததா? அவர்களுக்குப் பயம் உண்டாவதற்கு ஆக தேவர்களுக்கு இடையூறு செய்தால் நாசமாய்ப் போய்விடுவாய் என்று அறிவுறுத்துவதற்கு ஆகத்தான் தீபாவளி கொண்டாடுவதாகும். இதுதான் இரகசியம், மற்றபடி கதை எப்படி இருந்தால் என்ன?

டே-ஸ்: அப்படியா? நீங்கள் 100க்கு 3 பேர், நீங்கள் அல்லாதவர்கள் 100க்கு 97 பேர், எப்படி எத்தனை நாளைக்கு இப்படி மிரட்டமுடியும்?

ரா-ம்:  அதைப் பற்றிக் கவலைப்படாதே. காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கிறது. அந்தத் தொண்ணூறு பேர்களில் ஒரு பகுதி விபீஷணர்களாக, அனுமார்களாக இருந்து பிராமணத் தொண்டாற்றவும் எதிரிகளை ஒழிக்கவும் பயன்படுத்துவதற்கு மற்றும் பண்டிதர் கூட்டம், படித்துவிட்டு உத்தியோகத்துக்குக் காத்துக்கிடக்கும் கூட்டம் கோவில் மடம் தர்மஸ்தாபனத்தில் இருக்கும் கூட்டம், புத்தகக் கடைக் கூட்டம், பூசாரிக் கூட்டம், பிரபுக் கூட்டம், பாதிரிக் கூட்டம், மேற்பதவி வகிக்கும் உத்யோகஸ்தர் கூட்டம், தாசிக் கூட்டம், சினிமாக் கூட்டம், நாடகப் பிழைப்புக் கூட்டம், கலைவித்துவான்கள் கூட்டம், அரசியல் பிழைப்புக்காரர் கூட்டம், தேசபக்தர்கள் தியாகிகள் கூட்டம் இப்படியாக இடறி விழும்படி சர்வம் பிராமண அடிமையாம் என்பதுபோல் இருக்கும்போது 100க்கு 3, 100க்கு 97 என்ற கணக்கு முட்டாள்தனமான கணக்கு ஆகும்.

டே-ஸ்: ஓஹோ! அப்படியா? சரி சரி, தீபாவளி என்பதன் தத்துவமும் இரகசியமும் தெரிந்துகொண்டேன், நன்றி வணக்கம்.

ரா-ம்: சரி நமஸ்தே, ஜே ஹிந்து!

(சித்திரபுத்திரன்  என்னும் பெயரில் தந்தை பெரியார் எழுதியது. விடுதலை 28.10.1956)

கடவுள் சக்தி – தந்தை பெரியார் (குசேலர்)

 


டிசம்பர் 16-31

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்து, குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணத்தில் சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாயிருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27 வருஷமாவது ஆகியிருக்க வேண்டும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்களா? இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்? 20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா?

அல்லது இந்தப் பிள்ளைகளுக்காவது மான அவமானமிருந்திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது, என்ன? பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளைத் தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே வெட்கமில்லையா? என்று கேட்கக் கூடிய புத்தி இருந்திருக்காதா?

 

கேள்வி:- என்னடா உனக்கு கடவுள் இல்லையென்று சொல்லுகின்ற அளவு தைரியம் வந்து விட்டதா?

பதில்:- அவர்தான் மனோ வாக்குக் காயங்களுக்கு எட்டாதவரென்று சொன்னாயே! அவரை நான் உண்டு என்று சொன்னால் நீயே உனக்கு எப்படித் தெரியும்? என்று கேட்பாயே. அதனால்தான் என் புத்திக்கு எட்டாததையும், தெரியாததையும் நான் ஒப்புக் கொள்வதில்லை என்று சொல்லிவிட்டேன். இதில் என்ன தப்பு?

கேள்வி:- கடவுள் கருணாநிதி அல்லவா?

பதில்:- கடவுளே நமது மனதுக்கும், காயத்துக்கும் எட்டாதவராயிருக்கும்போது அவர் கருணாநிதி என்பது உனக்கு எப்படித் தெரிந்தது?

– பகுத்தறிவு, ஜூலை – 1935.

நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும். அதாவது நமது கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்க முடியாதாம்.

*****

ஆனால், மக்கள் சந்து பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும் மனதினால் நினைத்த அக்கிரமங்களைப் பார்த்தும் ஒன்று கூட விடாமல் பதிய வைத்தும், அதற்குத் தகுந்தபடி தீர்ப்புக் கூறி, தண்டனை கிண்டனை கொடுக்கவும், அதற்காக நரகத்தில் ஆழ்த்தி வைக்கவும், மற்றும் பல ஜன்மங்கள் கொடுத்து, அவற்றில் கஷ்டப்படுத்தி வைக்கவும் முடியுமாம்.

*****

நமது கடவுள்கள் சக்தி எவ்வளவு அதிசயமானது!

*****

அதிலும் மகமதியர்களுடைய கடவுளும், கிறித்தவர்களுடைய கடவுளும் மனிதன் செத்த பிறகு எல்லோர் குற்றம் குறைகளையும் ஒன்றாய் பதிய வைத்திருந்து, ஏதோ அதற்கு இஷ்டப்பட்ட நாளில் அதாவது, ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களையும் அவர்கள் புதைக்கப்பட்ட புதை குழியிலிருந்து எழுப்பி கணக்குப் பார்த்து ஒரே அடியாய் தீர்ப்புச் சொல்லிவிடுமாம்.

*****

இந்துக்களுடைய கடவுள்கள் அதாவது, சைவர்கள் கடவுள்களும், வைணவர்களுடைய கடவுள்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியாகவே அவ்வப்போது அவனைச் சுட்டு எரித்த பின் கண்களுக்குத் தெரியாத அவனுடைய ஆத்மாவைப் பிடித்து வைத்து, அதற்கு ஒரு சூட்சம சரீரமும் கொடுத்து, அந்தச் சரீரத்திற்கு அதற்குத்தக்க தண்டனை கொடுக்குமாம். அது பெரிதும் அடுத்த ஜென்மத்தில் இன்னின்ன ஜந்துவாய் பிறந்து, இன்னின்ன பலன் அனுபவிக்க வேண்டும் என்று கட்டளையிடுமாம்.

*****

கிறித்து சமயத்தில் உள்ள கடவுள் சக்திப்படி எல்லா மனிதனும் பாவம் செய்தேதான் தீருவானாம்.

*****

அந்தப் பாவம் ஏசுகிறித்து மூலம்தான் மன்னிக்கப்படுமாம்.

*****

மகம்மதிய மார்க்கப்படி மகம்மது நபிகள் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம்.

*****

சைவ சமயப்படி சிவன் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம். அவருக்குத்தான் பரத்துவம் உண்டாம்.

*****

வைணவ சமயப்படி விஷ்ணு மூலமாகத்தான் முடியுமாம். விஷ்ணுவுக்குத்தான் பரத்துவம் உண்டாம்.

*****

ஆனால் சைவ, வைணவ சமயங்கள்படி மக்கள் பாவமே செய்வது மாத்திரமல்லாமல் புண்ணியமும் செய்யக்கூடுமாம்.

*****

அதற்காக சொர்க்கம், வைகுண்டம், கைலாசம் என்கின்ற பதவிகள் உண்டாம்.

*****

அப்புறம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஜன்மங்களும் உண்டாம்.

*****

இந்த அபிப்பிராயங்கள் எவ்வளவு குழப்பமானதாய் இருந்தாலும், பார்ப்பானுக்கு அழுதால் மேல் கண்ட மோட்சங்களோ அல்லது நல்ல ஜன்மமோ எது வேண்டுமோ அது கிடைத்துவிடுமாம்.

*****

ஆகவே, பொதுவாகக் கடவுளுடைய சக்திகள் அளவிட முடியாது என்பதோடு, அறிந்து கொள்ள முடியாது என்பது மாத்திரமல்லாமல் அதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதோ, சிந்திக்க முயற்சிப்பதோ மகாமகா பெரிய பெரிய பாவமாம்.
அதாவது, எந்தப் பாவத்தைச் செய்தாலும், எவ்வளவு பாவத்தைச் செய்தாலும், அவற்றுக்கெல்லாம் பிராயச்சித்தமும், மன்னிப்புமுண்டாம்.

*****

ஆனால், கடவுளைப் பற்றியோ, அவரது சக்தியைப் பற்றியோ ஏதாவது எவனாவது சந்தேகப்பட்டு விட்டானோ பிடித்தது மீளாத சனியன்.

*****

அவனுக்கு மன்னிப்பே கிடையாது. கிறித்துநாதரைப் பிடித்தாலும் சரி, மகம்மது நபி பெருமானைப் பிடித்தாலும் சரி அல்லது இவன் விஷ்ணு, மகேசன் ஆகிய எவரைப் பிடித்தாலும் சரி, ஒரு நாளும் அந்தக் குற்றம் (எந்தக் குற்றம்) கடவுளைச் சந்தேகிக்கப்பட்ட குற்றமா? மன்னிக்கப்படவே மாட்டாது.

*****

ஆனால், இந்த எல்லாக் கடவுள்களுக்கும் அவர்களால் அனுப்பப்பட்ட பெரியார்களுக்கும், அவர்களுடைய அவதாரங்களுக்கும், கடவுளைப் பற்றியும், அவர்களுடைய சக்தியின் பெருமைகளைப் பற்றியும் மக்கள் சந்தேகப்படாமல் இருக்கும்படிக்கோ அல்லது அவநம்பிக்கைப்படாமல் இருக்கும்படிக்கோ செய்விக்க முடியாதாம்.

*****

ஏனென்றால், அவ்வளவு நல்ல சாதுவான சாந்தமான கருணையுள்ள சர்வ சக்தி பொருந்திய சர்வ வியாபகமுள்ள கடவுள்களாம்.

*****

பாவம் நாம் ஏன் அவற்றைத் தொந்தரவு செய்ய வேண்டும்.

*****

எல்லாம் கடவுள் செயல் என்று சும்மா இருந்து விடுவோம்.
பகுத்தறிவு, செப்டம்பர் – 1935

கடவுள் கதை – தந்தை பெரியார் (கிருத்தவம்) -1

 


பிப்ரவரி 16-29

கதை சொல்லுகிறவன்:- ஒரே ஒரு கடவுள் இருந்தார்.

கதை கேட்கிறவன்:- ஊம், அவர் எங்கே இருந்தார்?

கதை சொல்லுகிறவன்:- ஆரம்பத்திலேயே அதிகப் பிரசங்கமாய்க் கேட்கிறாயே,

நான் சொல்லுவதை ஊம் என்று கேட்டால் தான் இந்தக் கதை சொல்ல முடியும்.

கதை கேட்கிறவன்:- சரி, சரி, சொல்லு – ஒரே ஒரு கடவுள். அப்புறம்?

கதை சொல்லுகிறவன்:- ஒரு நாள் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார்.

கதை கேட்கிறவன்:- சரி, எப்போ?

கதை சொல்லுகிறவன்:- பாரு, மறுபடியும் இரட்டை அதிகப் பிரசங்கமாய்க் கேட்கிறாயே.

கதை கேட்கிறவன்:- சரி, சரி. தப்பு; சொல்லப்பா சொல்லு.

கதை சொல்லுகிறவன்:- உலகத்தை சிருஷ்டிக்கலாம் என்று முடிவு கொண்டார்.

கதை கேட்கிறவன்:- அதற்கு முன் உலகம் இல்லை போல் இருக்கிறது. உலகம் இல்லாமலே ஒருநாள் உட்கார்ந்து கொண்டு யோசிக்கிறார் போல் இருக்கிறது. அந்தரத்தில் உட்கார்ந்திருப்பார், பாவம்! என்று நினைத்துக் கொண்டு (கொஞ்ச நேரம் பொறுத்து) சரி  அப்புறம்? (என்று சொன்னான்.)

கதை சொல்லுகிறவன்:- என்ன இந்த மாதிரி? நான் சொல்லுவதைக் கவனமாய்க் கேட்காமல் எங்கெங்கேயோ யோசனையாய் இருக்கிறாயே.

கதை கேட்கிறவன்:- இல்லை. நீ சொல்லுகிற போதே சில சந்தேகம் தோன்றின. அதைக் கேட்டால் கோபித்துக் கொள்ளுகிறாய், அதிகப் பிரசங்கி என்று சொல்லி விடுகின்றாய். ஆதலால், மனதிலேயே நினைத்து சமாதானம் செய்து கொண்டேன்.
கதை சொல்லுகிறவன்:- அப்படியெல்லாம் சந்தேகம் கூடத் தோன்றக் கூடாது. கதை பாட்டி கதையல்ல, கடவுள் கதையாக்கும். இதை வெகு பக்தி சிரத்தையுடன் கேட்க வேண்டும். தெரியுமா? கதை கேட்கிறவன்:- சரி, அப்படியே ஆகட்டும் சொல்லு பார்ப்போம்.

கதை சொல்லுகிறவன்:- எதிலே விட்டேன்? அதுகூட ஞாபகமில்லை, உன் தொந்தரவினால்.

கதை கேட்கிறவன்:- சரி, கோபித்துக் கொள்ளாதே. நீ விட்டது எதிலே என்றா கேட்கிறாய்? இரு, யோசனை பண்ணிச் சொல்லுகிறேன்.

ஒரே ஒரு கடவுள். அவர் ஒருநாள் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார். உலகத்தைச் சிருஷ்டிக்கலாம் என்று எண்ணினார் என்பதில் விட்டாய். அதில் தொட்டுக் கொள். என்னை அதிகப் பிரசங்கி என்கிறாய். எனக்காவது ஞாபகமிருக்கிறது; மகா பக்தனாகிய உனக்கு மறந்து போகிறது, பாவம். அப்புறம் சொல்லு.

கதை சொல்லுகிறவன்:- பாவம் என்ன எழவு, உன்னுடைய தொல்லையில் எதுதான் ஞாபகமிருக்கிறது. அப்புறம் என்ன பண்ணினார் என்பதுகூட மறந்து போய் விட்டது. யோசனை பண்ணிச் சொல்லுகிறேன். பொறு. (சற்று பொறுத்து) முதலில் வெளிச்சம் உண்டாக்கக் கடவது என்று சொன்னார்.

கதை கேட்கிறவன்:- உட்கார்ந்து கொண்டா இவ்வளவும் நினைத்தார்! பாவம் கடவுளுக்கு எவ்வளவு பிரயாசை நம்மால்? அவர் கருணாநிதி என்பதற்கு இதைவிட என்ன ருசுவு வேண்டும்!

கதை சொல்லுகிறவன்:- அதையெல்லாம் நீ தெரிந்து கொள்ளுவதற்குத் தானே இந்தக் கதை சொல்லுகிறேன். இந்த மாதிரி கவனமாய்க் கேள்.

கதை கேட்கிறவன்:- சரி, சரி சொல்லு. உடனே வெளிச்சம் உண்டாய் விட்டதாக்கும். கடவுளுக்கு ஏதோ போட்டி இருக்கும் போல் இருக்கிறது.

கதை சொல்லுகிறவன்:- என்ன போட்டி?

கதை கேட்கிறவன்:- இல்லையப்பா, வெளிச்சத்தைத் தான் கடவுள் சிருஷ்டித்தார். அதற்கு முன் இருந்த இருட்டை எவனோ அயோக்கியப் பயல் கடவுளுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டுமென்று போட்டிக்காக சிருஷ்டித்து விட்டு ஓடிப் போய் விட்டான் போலிருக்கிறது. நான் அவனைக் கண்டால் என்ன செய்வேன் தெரியுமா?

கதை சொல்லுகிறவன்:- தொலைந்து போகுது, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே; சொல்வதைக் கேளு.

கதை கேட்கிறவன்:- சரி சொல்லு.

கதை சொல்லுகிறவன்:- அப்புறம் மேடு பள்ளம் எல்லாம் சமன் ஆக வேண்டும் என்று கருதினார்; அதுபோலவே ஆயிற்று.

கதை கேட்கிறவன்:- கடவுளுக்கு முன்னால் இருந்த மேடு பள்ளங்களையெல்லாம் சமன் ஆக வேண்டும் என்று சொன்னாராக்கும், அதெல்லாம் சமனாய் விட்டதாக்கும். கடவுள், நல்ல கடவுள்! எவ்வளவு ஞானமும், கருணையும் உடைய கடவுள்! மேடு பள்ளம் இருந்தால் நம்ம கதி என்னாவது? இன்று போல் சமுத்திரமும், மலையும், குழியும், குன்றுமாகவல்லவா ஆகி இருக்கும். ஆதலால் கடவுள் நல்ல வேலை செய்தார்!

ஆனால், அப்புறம் எவனோ புறப்பட்டு மறுபடியும் பழையபடி இருட்டும், மேடும், பள்ளமும், குழியும், குன்றும் ஏற்படும்படி செய்து விட்டான் போலிருக்கிறது! இருக்கட்டும், அதைப் பற்றிக் கவலை இல்லை. கடவுள் செய்த நன்மைகளை நினைத்து மகிழ்ந்து அவருக்கு நன்றி செலுத்துவோம்! அப்புறம் என்ன செய்தார்?

கதை சொல்லுகிறவன்:- அப்புறம் அதாவது வெளிச்சம் உண்டாகி மேடு பள்ளம் நிரவப்பட்ட பிறகு மறுபடியும் யோசித்தார்.

கதை கேட்கிறவன்:- சரி, யோசித்தார்.

கதை சொல்லுகிறவன்:- அதற்குள் ஒரு நாள் முடிந்து போய்விட்டது. அடுத்த நாள் அதாவது இரண்டாவது நாள் காற்று உண்டாகக் கடவது என்று சொன்னார், உடனே காற்று உண்டாய் விட்டது.

கதை கேட்கிறவன்:- பிறகு என்ன செய்தார்?

கதை சொல்லுகிறவன்:- அதற்கும் ஒருநாள் ஆகிவிட்டது. பிறகு மூன்றாம் நாள் பூமி உண்டாகக் கடவது என்று நினைத்தார். பூமி உண்டாயிற்று. அன்றே சமுத்திரம், செடிகள் உண்டாகக் கடவது என்று நினைத்தார். உடனே சமுத்திரம், செடிகள் உண்டாயின.

கதை கேட்கிறவன்:- பிறகு?

கதை சொல்லுகிறவன்:- இதற்குள் மூன்று நாள் முடிந்து விட்டது. நான்காம் நாள் உட்கார்ந்து கொண்டு யோசித்தார், யோசித்தார், ரொம்ப கஷ்டப்பட்டு, என்ன செய்வது என்று யோசித்தார்!

கதை கேட்கிறவன்:- அய்யோ பாவம்; கடவுள் நமக்காக எவ்வளவு பாடுபட்டார், மனிதர்களுக்கு நன்றி விசுவாசம் இருக்கிறதா? போனால் போகட்டும். அப்புறம் என்ன செய்தார்? சொல்லு, சீக்கிரம்.

கதை சொல்லுகிறவன்:- அப்புறம் நான்காம் நாள் ஒரு முடிவுக்கு வந்தார். என்ன முடிவுக்குத் தெரியுமா?  சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை உண்டாக்க வேண்டும் என்று கருதி ஒரே அடியாய் இவ்வளவும் உண்டாகக் கடவது என்று சொன்னார். உடனே உண்டாகி விட்டன.

கதை கேட்கிறவன்:- சரி, சரி, இப்போது புரிந்தது, அந்தக் கடவுளின் பெருமை. நான் முன்பு சந்தேகப்பட்டதும், குறுக்குக் கேள்வி போட்டதும் அதிகப் பிரசங்கித்தனம் என்பதும் வெளியாயிற்று!

கதை சொல்லுகிறவன்:- பார்த்தாயா, நான் அப்பொழுதே சொல்லவில்லையா? கடைசி வரை பொறுமையாய்க் கேட்டால், எல்லாச் சந்தேகமும் விளங்கி விடும் என்று. எப்படி விளங்கிற்று? சொல்லு பார்ப்போம்.

கதை கேட்கிறவன்:- அந்தக் கடவுளின் பெருமை எனக்கு எப்படி விளங்கிற்று என்றால், பூமி உண்டாவதற்கு முன்பே மேடு பள்ளத்தையெல்லாம் சமன் செய்தது ஒன்று, மற்றும் சூரியன், பூமி ஆகியவை உண்டாவதற்கு முன்பே நாள்கள் கணக்கு எண்ணவும், முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் கண்டுபிடிக்கவும் முடிந்தது பார்! இது எவ்வளவு அற்புதமான செய்கை! அப்புறம் மேலே சொல்லு; மிகவும் ருசிகரமாகவும், மகிமை பொருந்தியதாகவும் இருக்கிறது, இந்தக் கடவுள் கதை.

கதை சொல்லுகிறவன்:- அதற்குள் என்ன தெரிந்து கொண்டாய்? இன்னும் கேள். எவ்வளவு அதிசயமாயும், ருசியாயும் இருக்கும் பார்! அப்புறம் அய்ந்தாவது நாள் ஆயிற்று. மீன்களும், பட்சிகளும் உண்டாகக் கடவது என்றார், உடனே ஆகிவிட்டன.

கதை கேட்கிறவன்:- இத்தனை கோடி, கோடி, கோடி மீன்களும் ஒரே நாளில் ஆய்விட்டன என்றால் கடவுள் சக்தியும், பெருமையும் எப்படிப்பட்டது பார்! அப்புறம்?

தந்தை பெரியார் அவர்கள் ‘சித்திரபுத்திரன்’ என்ற
புனைபெயரில் எழுதிய கட்டுரை (‘விடுதலை’ 27.12.1953.)

– தொடரும்

கடவுள் கதை – தந்தை பெரியார் (கிருத்தவம்)


மார்ச் 01-15

கதை சொல்லுகிறவன்:- அப்புறம்தான் விசேஷமான வேலை செய்கிறார். அதாவது ஆறாவது நாள் உட்கார்ந்து யோசித்து யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து மிருகங்களும், மனிதர்களும் உண்டாகக் கடவது என்றார்! உடனே மிருகங்களும், மனிதர்களும் உண்டாகி விட்டார்கள்!

கதை கேட்கிறவன்:- அப்பாடா? கடவுள் வெகு பிரயாசைப்பட்டிருக்கிறாரே? ஒரு வாரம் போல் ஆறு நாள் விடாமல் கஷ்டப்பட்டு வெளிச்சம், சமம், காற்று, சூரியன், நட்சத்திரங்கள், சந்திரன், மீன்கள், பட்சிகள், மிருகங்கள், மனிதர்கள் ஆகிய எவ்வளவு பண்டங்களையும், ஜீவன்களையும் சிருஷ்டித்திருக்கிறார்! என்ன கஷ்டம்? இதற்கு ஆக அவருக்கு களைப்பு, இளைப்பு ஏற்படவில்லையா?

கதை சொல்லுகிறவன்:- சொல்லுகிறேன், கேள். நமக்கு இருக்கிற புத்தி கடவுளுக்கு  இருக்காதா? ஏழாவது நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார்.  அதனால் தான் இப்போது கூட ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் ஆகக் கருதப்படுகிறது.

கதை கேட்கிறவன்:- சரி, புரிஞ்சுது. கடவுள் தயவினால், வேலை செய்யாதவன் கூட இப்பொழுது ஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுத்துக் கொள்ளுகிறான். கடவுள் எவ்வளவு கருணை உடையவர்? சரி, அப்புறம்.

கதை சொல்லுகிறவன்:- மனிதரைக் கடவுள் சிருஷ்டித்தாரென்றால் எப்படி சிருஷ்டித்தார் தெரியுமா?

கதை கேட்கிறவன்:- அதைக் கேட்க வேண்டும் என்று தான் நினைத்தேன். நீ அதை அதிகப் பிரசங்கக் கேள்வியென்று சொல்லி விடுவாயே என்று விட்டு விட்டேன். ஆனாலும், நல்லவேளையாய் நீயே சொல்லப் புறப்பட்டு விட்டாய். அதுவும் அந்தக் கடவுள் செயலாகத்தான் இருக்க வேண்டும். சொல்லு, சொல்லு.

கதை சொல்லுகிறவன்:- முதல் முதலில் ஒரே ஒரு மனிதனை சிருஷ்டித்தார். பிறகு அவனுடைய விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்து அந்த எலும்பிலிருந்து ஒரு பெண்ணை சிருஷ்டித்து இரண்டு பேரையும் ஷோக்காய் ஒரு நந்தவனத்தில் உலாவச் சொன்னார். அந்த நந்தவனத்தில் சில பழச்செடிகள் இருந்தன. அந்தப் பழச்செடிகளில் ஒரு பழச்செடியின் பழத்தைச் சாப்பிடக் கூடாது என்று கடவுள் அந்த ஆண், பெண் இருவருக்கும் சொல்லி வைத்தார்.  கடைசியாக அந்த ஜோடி, கடவுள் வார்த்தையைத் தட்டிவிட்டு பிசாசு வார்த்தையைக் கேட்டு அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விட்டது.

கதை கேட்கிறவன்:- நில்லு, நில்லு. இங்கே எனக்கு கோபம் வருகிறது. அந்தக் கோபம் ஆறினால் தான் மேல்கொண்டு கதை கேட்க முடியும்.

கதை சொல்லுகிறவன்:- என்ன கோபம்?

கதை கேட்கிறவன்:- அதெப்படி அங்கே சாத்தான் வந்தான்? அவனை யார் சிருஷ்டித்தது? மேல்படி ஆறு நாள் வேலையிலும் கடவுள் சாத்தானைச் சிருஷ்டிக்கவே இல்லையே! அந்தப் பயலை வேறு எந்தப் பயலோ சிருஷ்டித்தல்லவா கடவுளுடன் போட்டி போட அந்த நந்தவனத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும்? அந்தப் பயலைக் கண்டுபிடித்து அவனுக்குத் தகுந்த புத்தி கற்பிக்க வேண்டாமா? ஒருசமயம் கடவுளும் தனது பெருந்தன்மையில் அந்த சாத்தானையும் அவனைச் சிருஷ்டித்த மற்றொரு சாத்தானையும் சும்மா விட்டிருப்பார்! நமக்குப் புத்தியும், ரோசமும் வேண்டாமா? அந்த சாத்தானையும் அவனைச் சிருஷ்டித்தவனையும் கண்டுபிடித்து தகுந்தபடி புத்தி கற்பிக்கா விட்டால் நமக்கும் மற்ற மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்? இதுதான் என்னுடைய ஆத்திரம்! இதற்கு ஒரு வழி சொல்லு! எனக்குக் கோபம் வந்து வந்து போகிறது.
கதை சொல்லுகிறவன்:- ஆத்திரப்படாதே, நான் சொல்வதைப் பூராவும் கேள். பிறகு அதைப் பற்றி யோசிக்கலாம்.

கதை கேட்கிறவன்:- சரி, சொல்லித் தொலை. நமக்கென்ன மானமா, வெட்கமா, அறிவா? என்ன இருக்கிறது? அவன் வந்து என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டு சாமி மாடு மாதிரி தலையை ஆட்ட வேண்டியது தானே! அப்புறம்? கதை சொல்லுகிறவன்:- அந்தப் பழத்தைச் சாப்பிட்ட இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.

கதை கேட்கிறவன்:- சரி, அப்புறம் என்ன ஆச்சுது?

கதை சொல்லுகிறவன்:- என்ன ஆவது? பிசாசு பேச்சைக் கேட்டதால் பிறந்த பிள்ளை யோக்கியமாக இருக்குமா? அவை ஒன்றோடொன்று சண்டை இட்டுக் கொண்டு இளையது மூத்ததைக் கொன்று விட்டது.

கதை கேட்கிறவன்:- காலம் கலிகாலமல்லவா? மூத்தது மோளை, இளையது காளை! கொல்லாமல் இருக்குமா? அப்புறம்?

கதை சொல்லுகிறவன்:- இளையவனைக் கடவுள்  உன் அண்ணன் எங்கே? என்று கேட்டார். இளையவன் எனக்குத் தெரியாது என்று சொன்னான். உடனே கடவுள் கோபித்துக் கொண்டு அந்த ஆதி ஆண் பெண் ஆகியவர்களிடத்தில் மறுபடியும் ஒரு குழந்தை உண்டாகும்படிச் செய்தார்.

கதை கேட்கிறவன்:- எப்படியோ செய்தார்! அப்புறம்?

கதை சொல்லுகிறவன்:- இதற்குள்ளாக கொச கொசவென்று குழந்தைகள் பெருகிவிட்டன. இவற்றை எல்லாம் அயோக்கியர்களாக இருந்தன. இவை ஒன்று தவிர, மற்றவை எல்லாம் இறந்து போயின.

கதை கேட்கிறவன்:- அய்யய்யோ! அப்புறம் கடவுள் என்ன செய்தார்?

கதை சொல்லுகிறவன்:- என்ன செய்தார்? மிஞ்சின குழந்தையை ஒரு கப்பல் தயார் செய்யச் செய்து அதில் கடவுள் முன் உற்பத்தி செய்த பொருள்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு தண்ணீரில் மிதக்கச் சொன்னார். அந்தப்படியே மிதந்தன.  இந்தச் சந்தர்ப்பத்தில் பெரிய மழை பெய்து எங்கும் பிரளயமாக ஆகி உலகமே அழிந்துவிட்டது. இந்தக் கப்பல் மாத்திரம் மிஞ்சிற்று. மீதியான கப்பலினாலும் அதிலிருந்தவர்களாலும் இப்பொழுது காணப்படுகிற உலகமும் அதிலுள்ள சகலமும் உண்டாயின.

கதை கேட்கிறவன்:- அந்தக் கப்பலில் சந்திரன், சூரியன், நட்சத்திரம் முதலிய எல்லாம் ஏற்றப்பட்டு எல்லாம் முழுகிப் போச்சாக்கும்!

கதை சொல்லுகிறவன்:- ஆம்! எல்லாம் அடியோடு முழுகி விட்டது.

கதை கேட்கிறவன்:- போதுமப்பா, இன்னம் இதற்கு மேல் சொன்னால் என்னால் கேட்க முடியாது! நல்ல தங்கமான கதை இது!

கதை சொல்லுகிறவன்:- சரி, அப்படியானால் இப்போது நிறுத்தி விட்டு மற்றொரு நாளைக்கு இன்னொரு கடவுளுடைய கதையை நான் சொல்லுகிறேன், நீ கேளு!

– தந்தை பெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை (விடுதலை 27.12.1953.)

திராவிடர் கழகமா? தமிழர் கழகமா? – தந்தை பெரியார்

 

ஏப்ரல் 01-15

திராவிடர் கழகத்தில் மற்ற இயக்கங்களில் இல்லாத கொள்கைகள் இருக்கின்றன. காங்கிரஸ் வர்ணாச்சிரம தர்மத்தை ஆதரிக்கிறது. ஜாதிப் பிரிவுகளையும் பல உருவக் கடவுள்கள் ஆராதனையும் அழிக்க முற்படவில்லை. திராவிடர்களுக்குப் பல ஜாதிகளும், பல கடவுள்கள் ஆராதனையும் பண்டைக்காலத்திலே இருந்ததில்லை. இந்த நாட்டுச் சொந்த மக்கள் நாலாஞ் ஜாதியைச் சேர்ந்தவர்களென்றும், சூத்திரர்கள் (அடிமைகள், தாசி மகன்) என்றும்

இழிவுபடுத்தப்படுகிறார்கள். வடநாட்டு ஆதிக்கத்தால் நாடு பொருளாதாரத் துறையில் நலிவடைகிறது. வளம்மிகுந்த நாட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. நோய்நாடி, அதுமுதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி. ஆவனசெய்து திராவிட சமுகத்தைக் காக்கவே திராவிடர் கழகம் தோன்றிற்று.

திராவிடர் கழகம் பார்ப்பனரல்லாதார் அதாவது ஆரியரல்லாதாருடைய கழகம். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவு மொழிகள் பேசும் மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவைகள்; அவர்கள் வாழ்வதற்குரியதாக ஆக்குவதற்கு திராவிடர் கழகம் தோன்றிற்று. வேறு எந்தப் பெயரால் அழைத்தாலும் இவ்வியக்கத்தின் கொள்கைகளை விளக்கத் தவறும். இதை ஏன் தமிழர் கழகம் என்று அழைக்கக் கூடாது என்று சிலர் ஆராயாமல் கேட்டுவிடுகிறார்கள் தமிழர் கழகம் என்று அழைத்தால் மற்ற திராவிட மொழிகள் பேசும் மக்களை விலக்கி நிற்கும். பார்ப்பனர்களும் தமிழ் மொழி பேசுவதால் தமிழர் கழகத்தில் இடம் பெறுவார்கள். எனவே தமிழர் கழகம் ஆரியத்தையும் பார்ப்பனியத்தையும் அழிக்கத் தவறிவிடும். திராவிட மக்களைப் பார்ப்பனியப் பிடியிலிருந்து விடுவிக்க முடியாமல் போய்விடும். திராவிட மொழிகளுக்குள்ளே மிகவும் ஒற்றுமையிருக்கிறது. 5 மொழி பேசிவரும் திராவிட மக்களுக்குத் தனி நாகரிகம், தனி கலை, தனி வாழ்க்கை முறை இருக்கின்றன. திராவிட நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்படும் வரையில் தனித்தே இருந்தது. எனவே, திராவிட நாடு திராவிடருக்குரியதாகத் திராவிட நாட்டைத் திராவிடர் அடையவேண்டும். திராவிட நாட்டிற்குத் தனி அரசியல் உண்டு. திராவிட நாட்டில் மொழி வாரியாக தனி ஆட்சியிருந்தாலும் 5 மொழிகள் பேசும் மக்களின், பிரதிநிதிகள் கொண்ட ஒரு கூட்டுச் சபை அமைக்கவேண்டும். வெளிநாட்டு விவகாரங்களை இந்த கூட்டுச்சபையே கவனித்துவரும். எனவே திராவிட நாட்டிற்கும், திராவிட மக்களுக்கும், திராவிடர் கழகம் இன்றியமையாததாக இருக்கின்றது.

(01.05.1947 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் மாணவர் பிரசாரக் குழு பயிற்சிப்  பாசறையில் நடத்திய வகுப்பின் உரைத் தொகுப்பு.)

குடிஅரசு – சொற்பொழிவு – 03.05.1947

 

திராவிடம்  – திராவிடர் என்பது…

திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்கவேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக் கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டி ருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும்.

எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் ஹ,க்ஷ,ஊ ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4ஆம், 5ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டு மிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச் சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்து வருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர் களுக்குத்தான் (நமக்குத்தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப் படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக்கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறி யாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால் தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித்தள்ளுவதற்குத்தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக்கொள்ளுவதாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.

(09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு – சொற்பொழிவு – 14.07.1945