புதன், 16 அக்டோபர், 2024

கெடுவான் கேடு நினைப்பான்

 


பிப்ரவரி 01-15

கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு பழமொழியாகும். இது இரு கட்சியாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.

எந்தெந்த இரு கட்சியார் என்றால் பஞ்சேந்திரியங்களுக்குப் புலனாவதைத் தவிர வேறு வஸ்து கிடையாது என்கின்ற முடிவைக் கொண்ட மெடீரியலிஸ்ட் (Materialist) என்னும்  கட்சியாரும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத ஒரு வஸ்து இருக்கிறது என்கின்ற முடிவைக் கொண்ட ஸ்பிரிச்சுவலிஸ்ட் (Spiritualist) என்னும் கட்சியாரும் ஆகிய இரு கட்சிக்காரர்களும், அதாவது நாஸ்திகர்களும், ஆஸ்திகர்களும் ஆகிய இரு கட்சிக்காரர்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.

 

இந்தப் பழமொழியின் கருத்து என்னவென்று தெரிந்திருக்கின்றோம் என்றால், அன்னியருக்குக் கேடு செய்ய வேண்டுமென்றோ, கேடு உண்டாக வேண்டுமென்றோ நினைப்பவன் கெட்டுப் போவான் என்பதாகும்.

இதை ஆஸ்திகர்கள் எந்த முறையில் ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், மனிதர்களில் ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும்,  எண்ணங்களையும் தனித்தனியே கவனித்து அந்தந்த நடவடிக்கைக்கும், எண்ணத்துக்கும் தகுந்த பலனைக் கொடுப்பதற்குச் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ, ஒரு சக்தியோ உண்டு என்றும், அது பிறருக்குக் கேடு செய்தவனையும், கேடு நினைத்தவனையும் அறிந்து அப்படிப்பட்டவனுக்குத் தண்டனையாக கெடுதி செய்வதனால் அவன் கெடுவான், கெட்டுப் போவான் என்றும் கருதுகிறார்கள். நாஸ்திகர்கள், அதாவது சர்வசக்தியும் சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ அல்லது ஒரு வஸ்துவோ, ஒரு ஆவியோ இருந்து கொண்டு மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் கவனித்து அதற்கேற்ற பலன்களை அவரவர்களுக்குக் கொடுத்து வருகிறார் என்பதை முழுதும் நம்பாதவர்களின் வர்க்கம், இந்த கெடுவான் கேடு நினைப்பான் என்கின்ற பழமொழியை எப்படி ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், சமூக வாழ்வில் பிறருக்குக் கேடு செய்கின்ற மனிதனும், கேடு நினைக்கின்ற மனிதனும் பிற மனிதர்களால் கேடு செய்யப்படுவதும், மற்றும் இவனது கெட்ட செய்கையைக் கண்ட, கேட்ட பிறரால் வெறுக்கப்படுவதும், துவேஷிக்கப்படுவதும் பெரிதும் சகஜமான சம்பவங்களல்லவா? ஆகவே, பிறருக்குக் கேடு செய்ய நினைத்து, பிறரால் வெறுக்கப்படவும், துவேஷிக்கப்படவும் ஆன மனிதன் பகட்டிற்கு ஆளாவதும் சகஜமாகும்.

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே என்ற பிரத்தியட்ச பழமொழிப்படியே நன்மையும் தீமையும் தான் தர வருமே என்பதும் யாவராலும் ஒப்ப முடிந்த விஷயமாகும்.

– குடிஅரசு 12.11.1933



 

மதம், அரசாங்கம், பிரபுத்துவம் ஆகிய மூன்றும் நாட்டை வருத்துகின்றது!

மதம், அரசாங்கம், பிரபுத்துவம் ஆகிய மூன்றும் சேர்ந்துதான் நாட்டை (அதாவது நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களாகிய ஏழைகளை) வருத்துகின்றது. ஆதலால், நாட்டுக்கு உண்மையாக விடுதலை வேண்டுமானால், இம்மூன்று துறையிலும் முறைப்படி பெரும் புரட்சி ஏற்பட்டால்தான் விடுதலை அடைய முடியுமேயல்லாமல், வெறும் அரசியலைப் பற்றி, அதன் அஸ்திவாரத்தை விட்டுவிட்டுக் கூச்சல் போடுவதாலும், அரசாங்க ஆதிக்கத்தின் மீது கண் மூடிக்கொண்டு குறை கூறுவதாலும் ஒரு காரியமும் நடந்துவிடாது. நிற்க,

மேற்கண்ட இம்மூன்று விஷயங்களிலும் புரட்சி ஏற்படும்போது, இம்மூன்றிற்கும் உதவியாக இருக்கின்ற ஆயுதங்களையும் முதலில் நாம் பிடுங்கிக் கொள்ள வேண்டும். அதென்னவென்றால், அதுதான் கடவுள் என்பதாகும். எப்படியெனில், ஆட்சி ஆதிக்கக்காரன் உங்களை ஆளும்படி கடவுள் எங்களை அனுப்பினார் என்கின்றான். மத ஆதிக்கக்காரன், உங்களுக்காக உங்களை மோட்சத்திற்கு அனுப்ப கடவுள் இந்த மதத்தை ஏற்படுத்தி, அதைக் காப்பாற்ற எங்களை அனுப்பினார் என்கின்றான்.  செல்வ ஆதிக்கக்காரன், முன் ஜென்மத்தில் நான் செய்த புண்ணியத்தினால் இந்தச் செல்வத்தைக் கடவுள் எனக்குக் கொடுத்தார் என்கின்றான். ஆகவே, இம்மூன்று கொடியவர்களுக்கும் (மக்கள் விரோதிகளுக்கும்) ஆயுதங்களாக இருப்பது கடவுளாகும். ஆகவேதான், அதை நாம் முதலில் ஒழிக்க வேண்டி இருக்கின்றது. ஏனெனில், அம்மூவருக்கும் கடவுள் அனுகூலமாயிருப்பதால், அக்கடவுளை அவர்கள் எப்படிக் காப்பாற்ற முயலுகின்றார்களோ, அதுபோலவே நமக்கு அக்கடவுள் விரோதமாயிருக்கிறபடியால், நாம் விடுதலை பெறக் கடவுளை முதலில் ஒழிக்க வேண்டியவர்களாயிருக்கின்றோம். அதாவது, அம்மூவரையும் பார்த்து நாம், உங்களைக் கடவுள் அனுப்பினாரோ, கடவுள் உண்டாக்கினாரோ, உங்களுக்குக் கடவுள் கொடுத்தாரோ என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்கு இல்லாமல் செய்து கஷ்டப்படுத்தி, உங்களுக்குக் கொடுத்து இருக்கும் கடவுளை நாங்கள் அரை நிமிஷமும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று சொல்லிவிட்ட பிறகுதான், உங்கள் ஆதிக்கங்களையும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று சொல்லி ஆகவேண்டும் என்கின்றோம்.

இந்தக் கொள்கையைக் கொண்டுதான் ரஷ்யர்களும் சமதர்மம் ஏற்பட வேண்டுமானால், முதலாவது கடவுள் ஒழிய வேண்டும் என்று நினைத்து, அதற்காக முதன்முதலாக கடவுளைக் காட்டும் மதத்தின் பேரில் போர் புரிந்து வெற்றி பெற்று பிறகே அவர்கள் மற்ற காரியங்களும் செய்து கொள்ளத்தக்கவர்களானார்கள் என்பது விளங்குகிறது.

– சித்திரபுத்திரன்  என்னும் புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது (குடிஅரசு 1.6.1930

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக